குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6450
பயணி மிகவும் பிரபலமான ஒரு இந்தி நடிகையின் பெயரைச் சொன்னான். அவளுடைய தாய்தான் அந்த தேவதாசி.
நடந்து சென்றது முடிந்து திரும்பி வந்தபோதும், வாசலில் இங்குமங்குமாக விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. எங்கேயோ இடி இடிக்கும் சத்தம் கேட்டது. வீட்டின் பின்பகுதியில் இருக்கும் கான் சாஹிப்பின் அறையிலிருந்து வருவதாக இருக்க வேண்டும். தபலா, சித்தார் ஆகியவற்றின் மெல்லிய சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
பிரசாந்த் திரும்பி வருவதை, எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப்போல ஒரு வயதான மனிதன் வெளியில் நின்றிருந்தான். அவனுடைய ‘சலாம்’ போடுவதிலும், மரியாதைச் செயல்களிலும் பழைய ஆங்கிலேய பணியாட்களின் ஒழங்கு தெரிந்தது.
“அறையைத் திறந்தால் இன்னும் கொஞ்சம் பீர்களை ஃபிரிட்ஜுக்குள் வைக்கலாம்.”
பிரசாந்த் மகிழ்ச்சியுடன் அறையைத் திறந்தான்.
“உங்க பெயர் என்ன ?”
“தாமு”
“சொந்த ஊர்”
“தலைசேரிக்குப் பக்கத்தில்...”
“இங்கே எவ்வளவு காலமாக வேலை செய்றீங்க?”
“எவ்வளவோ வருடங்களாக”
சிறிது தயங்கினாலும், இறுதியில் பிரசாந்த் கேட்டான்: “முன்னால் இங்கு தான் பார்த்த அந்த இளம்பெண்.... சாரா?”
“அவங்க போயிட்டாங்க. இனிமேல் காலையில்தான் வருவாங்க.”
போவதற்கு முன்னால் தாமு கேட்டான் : “இரவில் சாப்பவதற்கு என்ன வேணும்.”
“என்ன இருக்கு”
“நீங்க சொல்லுங்க”
“சப்பாத்தி வெஜிட்டபள் கூட்டு...”
“சார்... சிக்கன்?”
“இருந்தா இருக்கட்டும்.”
“சார்”
பணிவை மேலும் சற்று அதிகமாகக் காட்டிக் கொண்டு தாமு கேட்டான்: “ஹாட்டா என்ன வேணும்னு கேட்கும்படி சாஹிப் கட்டளை இட்டிருக்காரு.”
“விஸ்கியா இருக்கட்டும்” - விருந்தோம்பலின் வெப்பம் படர்வதை உணர்ந்த பிரசாந்த் சொன்னான்.
அந்த விஸ்கி வந்து சேர்ந்ததும், அதைப் பருகும்படியான குழ்நிலை உண்டாகவில்லை. அதற்கு முன்னால், உள்ளே கானின் அறைக்கு அவன் அழைக்கப்பட்டான்.
விளக்குகளின் வெளிச்சத்தில் பார்த்தபோது, கானின் அறை பகலில் பார்த்தபோது இருந்த அறையைவிட மிகவும் அழகாக இருப்பதைப்போல் பிரசாந்திற்குத் தோன்றியது. தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள் எல்லாம் முற்றிலும் மாறியிருந்தன. பெர்ஃப்யூம், ஸ்காட்ச், சிகரேட் - எல்லாம் சேர்ந்து உண்டாக்கிய மணம் அறைக்குள் நிறைந்திருந்தது.
ஷாநவாஸ்கான் குளித்து வேறு ஆடைகளை அணிந்திருந்தார். காப்பித்தூள் நிறத்தில் இருந்த சில்க் ஜிப்பாவையும் பைஜாமாவையும் அவர் அணிந்திருந்தார்.
அறையில் இருந்தவர்களை அவர் அறிமுகம் செய்து வைத்தார்: “இவர் டாக்டர் பிள்ளை. என்னை இந்தக் கட்டுக்குள் இருக்கும்படி செய்திருப்பது இந்த வித்துவான்தான்.”
சிறிது நேரத்திற்கு முன்னால் மாருதி காரை ஓட்டிக் கொண்டு வந்தவர் பிள்ளைதான் என்பதை பிரசாந்த் புரிந்து கொண்டான். அவருக்கு வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். கம்பீரமான பருமனான உடலைக் கொண்ட மனிதர்.
பட்டாளி என்றோ பாக்கிஸ்தானி என்றோ நினைத்த இளைஞனின் பெயர் நியாஸ். அவன் பாட்டு பாடுபவன்.
தலையில் தலைப்பாகை அணிந்திருந்த வயதான மனிதர் தபலா இசைப்பவர். அவரை அறிமுகப்படுத்தும்போது கான் றிறையவே பேசினார். “ ‘ஹைதராபாத் டைகர்’ என்றுதான் கமாலை இசை உலகத்தில் எல்லாரும் கூறுவாங்க. தபலா வாசிப்பதில் அற்புதத்தை உண்டாக்குபவர். அல்லாரக்காவின் நிலையை அடைந்திருக்க வேண்டியவர். என்ன செய்வது. இவருக்கு அது எதுவும் வேண்டாம், மது இருந்தால் பொதும். அப்படித்தானே டைகர்.”
டைகர் சிரித்தார். தொடர்ந்து தனக்கு முன்னால் இருந்த விஸ்கி க்ளாஸை எடுத்து உயர்த்திக் கொண்டு இரண்டு வரிகள் கஸல் சொன்னார்.
“உன் அதரங்களில் இருக்கும் முந்திரிச் சாறும் என் கையில் இருக்கும் மதுவும் ஒரே நேரத்தில் தீர ஆரம்பிக்கும் இந்த புலர்காலைப் பொழுதில்- நான் நினைக்கிறேன் - இவை இரண்டும் மட்டும் இல்லாமல் போயிருந்தால் என் இரவு எந்த அளவிற்கு ஒன்றுமே இல்லாமல் வீணாகிப் போயிருக்கும் என்று.”
“வாஹ்... வாஹ்... டாக்டர் பிள்ளை உரத்த குரலில் சத்தம் போட்டுச் சிரித்தார்.”
பிரசாந்தை அறிமுகப்படுத்தும்போதும் கரணின் வார்த்தைகளில் தாராளம் நிறைந்திருந்தது.
“நாங்க முன்னாடியே ஆரம்பிச்சிட்டோம்.” - டாக்டர் பிள்ளை மன்னிப்பு கேட்கிற மாதிரி சொன்னார்.
“அந்த நேரத்தில் நாங்கள் உங்களைத் தேடினோம்.” கான் இடையில் புகுந்து சொன்னார்: “அந்தச் சமயத்துல நீங்க நடக்கப் போயிருக்கீங்கன்னு தெரிஞ்சது.”
கானைத் தவிர, எஞ்சியிருந்த மூன்று மனிதர்களுக்கு முன்னாலும் க்ளாஸ்கள் இருந்தன.
கான் மது அருந்துவதில்லை. மது அருந்துவதை நிறுத்தி இரண்டு மாதங்களுக்குமேல் ஆகிவிட்டன. கீழே விழுந்ததிலிருந்து அதை அவர் நிறுத்திவிட்டார்.
இவர் என்னை ரொம்பவும் பயமுறுத்தி வச்சிருக்காரு. டாக்டர் பிள்ளையைச் சுட்டிக் காட்டியவாறு கான் சொன்னார். இவர் பச்சைக் கொடியை காட்டாமல் குடிக்க ஆரம்பித்தான். நான் செத்துப் போயிடுவேனாம்.
“ஒரு மனிதனின் ஆயுள் காலத்தில் இருக்க வேண்டிய கோட்டா முழுவதையும் குடிச்சுத் தீர்த்துட்டாரு. இப்போ குடிக்கலைன்றதுனால. எந்தப் பிரச்சினையும் உண்டாகப் போறது இல்ல...”
பிரசாந்த் க்ளாஸை எடுத்தான்.
அந்த இரவு இசைமயமான இரவாக ஆனது. நியாஸ் எதிர்பார்த்திருந்ததைவிட மிகவும் சிறப்பாகப் பாடினான். டைகரின் விரல்கள் தபலாவுடன் இரண்டறக் கலந்து விட்டன. எனினும், அவர்கள் இருவரையும்விட ஆச்சரியப்படக்கூடிய ஒரு மனிதராக மாறியவர் கான்தான். சித்தார் அவருக்காகவே படைக்கப்பட்ட கருவியோ என்றுகூட சில நேரங்களில் தோன்றியது. இடையில் ஒருமுறை எல்லாரும் சேர்ந்து கட்டாயப்படுத்தியபோது கானும் ஒரு கஸலைப் பாடினார்.
“நிலவு சிவப்பு நிறத்திலிருக்கும் ஒரு கிண்ணத்தைப்போல உருகிமறையப் போகிறது. கடலில் இருந்து வீசும் இரவுக் காற்றில் உன்தலைமுடிகள் அலைகளாக மாறுகின்றன. இனிமேல் கண்ணே உன் முகம் இன்னொரு நிலவாக உதயமாகட்டும். இனிமேல் கண்ணே, உன் மேனி இன்னொரு கடலாக மாறட்டும்.”
அவருடைய கம்பீரமான குரலில் அந்த வரிகளுக்கு ஒரு இனிமை வந்து சேர்ந்தது.
கைத்தட்டல்கள் முடிந்தபோது டாக்டர் பிள்ளை தனிப்பட்ட முறையில் கூறுவது மாதிரி சொன்னார்: “இனிமேல் நீங்க எழுதக்கூட செய்யலாம். கஸல்கள்... பிறகு ஆங்கிலத்தில் கவிதைகள்.”
வெளியே ஒரு ஜீப் வந்து ப்ரேக் போட்டு நிறுத்தப்படுவதன் சத்தத்தைக் கேட்டபோதுதான் இசை மட்டுமே ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த உலகத்தில் சிறிது மாற்றம் உண்டானது. ஜீப் நின்றவுடன், ஏதோ விழுந்து உடையும் சத்தமும் கேட்டது. செடிகள் இருந்த சட்டிகளாக இருக்க வேண்டும்.
“ஜப்போய் வந்தாச்சு.” கான் மகிழ்ச்சியுடன் சொன்னார்.
பிரசாந்த் கடிகாரத்தை பார்த்தான். மணி பதினொன்றரை ஆகியருந்தது. இந்த நேரத்தில் ஒரு விருந்தாளி!
“நான் போயி அழைச்சிட்டு வர்றேன்.” - டாக்டர் பிள்ளை வேகமாக வராந்தாவை நோக்கி ஓடினார் : “இல்லாட்டி சண்டை போடுறதுக்கு இந்த ஒரு விஷயம் போதும்.”