குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6450
சற்று மன்னிப்பு கேட்கிற குரலில் கான் சொன்னார்: “காலில் ஒரு முறிவு உண்டாயிடுச்சு. அதனால் முழுமையான பெட்ரெஸ்ட்ல நான் இருக்கேன்.”
வலது காலில் கணுக்காலுக்கு அருகில் ஒரு கட்டு போடப்பட்டிருந்தது. படுக்கையையொட்டி ஒரு உலோகத்தாலான ஊன்றுகோல் இருந்தது.
“எப்படி வந்தது இது?”-பிரசாந்த் வெறுமனே விசாரித்தான்.
“படிகளில் இறங்குறப்போ வழுக்கி விட்டிருச்சு. இரண்டு மாதங்களா இப்படியொரு கொடுமையான நிலைமை. இந்தப் பழைய வீடு உண்டாக்கின பாதிப்பு... இனி ஒருவாரம் இப்படியே ஓய்வுல இருக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காரு”-திடீரென்று ஞாபகத்தில் வந்ததைப்போல அவர் கேட்டார்: “தேநீரா, காபியா?”
“காபி”
அறையின் மூலையில் நின்றிருந்த அந்த இளம்பெண்ணிடம் கான் சொன்னார்: “சாரா, ரெண்டு காபி கொண்டு வா.”
திரும்பத் தொடங்கிய அவள் ஒரு நிமிடம் தயங்கி நின்றாள். அதைப் பார்த்து கான் சிரித்தார்.
“புரியுது. இன்னைக்கு இதற்குமேல் இல்ல.”
“இன்னைக்கு இது ஆறாவது காபி”-அவள் குறை கூறுவதைப்போல நினைவூட்டினாள்.
“பரவாயில்ல... அதுதான் சொல்லிட்டேனே இதற்குமேல் வேண்டாம்னு...”
அவள் போனபிறகு, மெல்லிய ஒரு புன்சிரிப்புடன் கான் சிகரெட் பாக்கெட்டை எடுத்தார்.
படுக்கையில் புத்தகங்களும் எழுதும் பேடுகளும் சிதறிக் கிடந்தன. ஆஷ்ட்ரேயிலிருந்து சிதறிய சாம்பல் படுக்கை விரிப்புல் இங்குமங்குமாக விழுந்திருந்தது. படுக்கைக்கு அருகில் கை எட்டும் தூரத்தில் ஒரு தபலா இருந்தது. சாளரத்திற்கு அருகில் ஒரு சித்தாரும் ரெக்கார்ட் ப்ளேயரும் இருந்தன. சுவரில் ஒன்றிரண்டு ஓவியங்கள் தொங்கிக்கொண்டிருந்தன.
கானின் முன்னோர்களாக இருக்க வேண்டும்.
புகைப்படம் என்று ஒன்றே ஒன்றுதான் இருந்தது-ஒரு குதிரையின் முகம்.
3
முதல் சந்திப்பலேயே அந்த மனிதர் உண்டாக்கிய ஆச்சரியம் நேரம் செல்லச் செல்ல அதிகமாகிக் கொண்டேயிருந்தது.
முதலாவது விஷயம் - ஏற்கெனவே மனதில் நினைத்திருந்ததைப்போல ஷாநவாஸ்கான் மிகவும் வயதான ஒரு மனிதராக இல்லை. அவருக்கு அதிகபட்சம் போனால் நாற்பத்தாறு அல்லது நாற்பத்தேழு வயதுதான் இருக்கும். நல்ல நிறமும், ஆழமான பார்வையும், எப்போதாவது அபூர்வமாக வெளிப்பட்டு மறையும் திருட்டுத்தனமான சிரிப்பும் - இவை அனைத்தும் சேர்ந்து அவருக்கு ஒரு அழகைப் பரிசாக அளித்திருந்தன. அவர் எழுந்து நின்றிருப்பதைப் பார்க்காததால் அவரின் உயரம் என்ன என்பதைக் கூற முடியவில்லை. எனினும் நீளமான கைகளையும் கால்களையும் பார்க்கும்போது, அவர் ஆறடியை நெருங்கியிருக்க வேண்டும் என்று தோன்றியது. உதட்டுக்குக் கீழே சிறிது சிறிதாக கீழ்நோக்கிக் கோடு போட்டதைப்போல் பிரிந்து பிரிந்து போய்க் கொண்டிருந்த நரை அவருடைய முகத்திற்கு ஒரு தனி மரியாதையைக் கொடுப்பதாக பிரசாந்த் உணர்ந்தான். கண்களையும், கண்களுக்குக் கீழே குழி விழுந்து காணப்பட்ட மடிப்பையும் பார்க்கும்போது ஒரு குடிகாரரின் அடையாளம் தெரிந்தது.
கானுடன் தொழில்ரீதியான விஷயங்களைப் பற்றிப் பேசுவது என்பது மிகவும் எளிதான ஒரு விஷயமாக இருந்தது. “செலவாகும் பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்க ஒரு புதிய வீட்டைக் கட்டுவதாக நினைச்சு, வேலையை ஆரம்பிங்க. எப்படிப்பட்ட மாறுதல்களையும் நீங்க தாராளமா செய்யலாம். பெரிய மாற்றங்களைச் செய்வதாக இருந்தால், அதைப்பற்றி என்னிடம் கலந்து ஆலோசிக்கணும். முடிந்தவரையில் பழைய பொருட்களை வீணாக்காமல் பயன்படுத்தப்பாருங்க. அத்துடன் புதிதாக என்ன வேணும் என்றாலும் வாங்கிக்கலாம்” என்றார் அவர்.
பிரசாந்த் தனக்குக் கிடைத்ததற்காக நிறுவனத்திற்கு கான் நன்றி சொன்னார், “உங்களைத்தான் அனுப்பி வைக்கணும் என்ற விஷயத்தில் நான் மிகவும் பிடிவாதமாக இருந்தேன் என்ற கான் தொடர்ந்து சொன்னார், உங்க முதலாளி எப்படி யெல்லாமோ இதைத் தவிர்க்கப் பார்ட்தார் முதல் ஒரு வாரமஙதிற்கு அனுப்பிவைக்கிறேன், அதற்குப் பிறகு அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்ளச் சொல்றேன் என்றார். வேலை ஆரம்பிச்சு முடிவது வரையில் நீங்க இங்கே இருந்தால் மட்டுமே நான் இந்த வேலையை ஆரம்பிப்பேன்னு அவரிடம் கறாரா சொன்னப் போதான். அவர் கடைசியா சம்மதிச்சாரு.”
“எனக்கு அந்த விஷயம் தெரியும்” என்றான் பிரசாந்த் அலுவலகத்தில் தன்னுடைய பெயரை மேலும் ஒருபடி உயர்த்திய அந்த கடிதத் தொடர்புகளைப் பற்றி பிரசாந்திற்கு நன்றாகவே தெரியும்.
உங்களுடைய சில வேலைகளை தான் பார்த்திருக்கேன். பல வேலைகளைப் பார்த்து நான் ஈர்க்கப்பட்டிருக்கேன். பழைய டில்லியில் கெ.கெ.யூ மேனனின் வீட்டைக் கட்டியதும், செக்கந்திராபத்தில் காதர் பாஷாவின் மாளிகையைப் புதுப்பித்ததும் என்னை மிகவும் கவர்ந்த விஷயங்கள்.
எப்போதாவது ஒருமுறை மட்டுமே திரையை நீக்கிக் கொண்டு வெளிப்படும் அந்தத் திருட்டுத்தனமான புன்சிரிப்புடன் கான் சொன்னார்: “பிறகு… யார் இதை டிசைன் பண்ணியது என்று கேக்குறப்போ, சொல்றதுக்கு தேசிய அளவில் ஒரு பெயர் இருப்பதுகூட கவுரவமான ஒரு விஷயம்தானே.
பிரசாந்த் தங்குவதற்காக கட்டிடத்தின் முன் பகுதியில் காலியாகக் கிடந்த ஒரு மூலையில் ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு போவதற்கான வழியை இளம்பெண்தான் காட்டினாள்.
அவளுக்கும் கானுக்குமிடையே இருக்கும் உறவு என்ன என்பதைப் பற்றி பிரசாந்தால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை அவள் அவரை ‘ஸாப்’ என்று அழைத்தாள். கான் அவளை ‘சாரா’ என்று அழைத்தார்.
ஒரு மகளோ அல்லது தங்கையோ எடுத்துக் கொள்ளக்கூடிய சுதந்திரத்தை அவள் கானிடம் எடுத்துக் கொள்கிறாள் என்பதை பிரசாந்த் கவனித்தான். இதற்கிடையில் வினோதமான அந்த மரியாதை நிமித்தமான வார்த்தைகள் சிறிதும் பொருத்தமில்லாமல் இருப்பதைப்போல் அவனுக்குத் தோன்றியது.
“குளியலறையில் வெந்நீர் இருக்கு”- சாரா ஸ்விட்ச்சைக் காட்டினாள், “ஏதாவது தேவைன்னா, அதோ, அங்கே பெல் இருக்கு.”
கானின் அறை அளவிற்கு இல்லையேன்றாலும், அந்த அறையும் விசாலமாகத்தான் இருந்தது. அவனுக்காக தூசிகளைப் பெருக்கி, புதிய படுக்கை விரிப்புகளை விரித்து தயார் பண்ணிவைத்ததைப்போல அறை இருந்தது. சுவரில் ஒன்றிரண்டு பழைய ஓவியங்கள் இருந்தன. அறையின் மூலையில் ஒரு சிறிய ஃப்ரிட்ஜ் இருந்தது மின் பாத்திரத்தில் வெந்நீர் இருந்தது.
பிரசாந்த் ஃப்ரித்ஜைத் திறந்து பார்த்தான். குளிர்ந்த நீர் இருந்த புட்டிகளுக்கு மத்தியில் முன்று பீர் புட்டிகள் இருந்தன.
அவற்றிலிருந்து கண்களை எடுத்து சாராவைப் பார்த்தபோது உதட்டில் வேண்டுமென்றே ஒரு புன்னகையை அவன் வரவழைத்துக் கொண்டான். அவள் அதைப் பார்த்தது மாதிரி காட்டிக் கொள்ளவில்லை.
“ஏதாவது தேவைப்பட்டால் பெல் அடிச்சால் போதும் ஆள் வருவாங்க.”
“வர்றது யாராக இருக்கும்.?”
“பகல்ல பெரும்பாலும் நான்தான் வருவேன் இரவு நேரத்தில் ஒரு வயதான கிழவர் வருவார்.” தனக்கு இனிமேல் அங்கு நிற்க வேண்டிய தேவையில்லை என்பது மாதிரி அவள் வேகமாக நடந்து சென்றாள்.
அறைக்கு ஏற்றபடி குளியலறை மிகவும் விசாலமாக இருந்தது பழமையைப் பறைசாற்றும் குழாய்களும், மேற்கூரையும், சுவர் கண்ணாடியும், துணிகள் தொங்கக்கூடிய மர ஸ்டாண்டும் உள்ளே இறங்கிக் குளிப்பதற்கு பெரிய அளவைக் கொண்ட பீங்கான் குளியல் தொட்டியும்...