தந்தை விழுந்தபோது...
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4489
என் வாப்பாவும் உம்மாவும் என்னை அடித்திருக்கிறார்கள். அவை அனைத்தும் நியாயமான காரணங்களுக்குத்தான். நான்தான் மூத்த மகன். மிகவும் செல்லமாக வளர்த்தார்கள். வாப்பாவுடன்தான் என்னை படுக்கச் செய்தார்கள். நான் போக்கிரியாக இருந்தேன். நிறைய சேட்டைகள் செய்வேன். தாயும் தந்தையும் கூறும் அறிவுரையைப் பொருட்படுத்தியதேயில்லை. அதற்காக என்னை தண்டித்தார்கள்.
எங்களை அடிப்பதற்காக நல்ல ஸ்பெஷல் பிரம்பைத் தயார் பண்ணி வைத்திருந்தார்கள். வாப்பா வீட்டிற்குள் நுழைந்தவுடன் முதலில் கேட்பது "அவன்” எங்கே போயிருக்கிறான் என்பதைத்தான். விடுமுறை நாட்களில் நான் வீட்டில் இருக்க மாட்டேன். நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்கோ ஆற்றில் குளிப்பதற்கோ போய் விடுவேன். பிள்ளைகளில் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பார்கள் அல்லவா? கெட்ட பிள்ளை நண்பர்களுடன் சேராமல் வீட்டில் இருந்து கொண்டு படிக்க வேண்டும். நான் எந்தச் சமயத்திலும் அதைச் செய்ததில்லை. என் பக்கம் தவறுகள் நிறைய இருந்தன. அவற்றிற்கெல்லாம் தண்டனைகள் கிடைக்கும். வாப்பா மரத்தடிகளை விற்றுவிட்டு வரும்போது, எங்களுக்கென்று பொருட்களை வாங்கிக் கொண்டு வருவார். பேனாக்கள், படங்கள், புத்தகங்கள், ஆடைகள், செருப்புகள், குடை, தொப்பி... வாப்பா ஒரு பெட்டி நல்ல வாசனை கொண்ட சுருட்டுகளை வாங்கிக் கொண்டு வந்து வைத்திருந்தார். அவற்றில் ஒன்றை நான் திருடிப் பற்ற வைத்து புகைத்து இருமி கண்களும் முகமும் சிவக்கச் செய்தேன். உம்மா பார்த்தாள். வாப்பா பார்த்தார். எனக்கு நல்ல அடி கிடைத்தது. அதில் எனக்கு எதிர்ப்பு தோன்றியது. வாப்பா புகைக்கிறார் அல்லவா? பிறகு நான் புகைத்தால் என்ன?
ஒவ்வொரு தண்டனைக்கும் உள்ள நியாய அநியாயங்களைப் பற்றி நான் சிந்தித்தேன்.
கிணற்றிலிருந்து நீரை எடுத்து தூரத்தில் இருக்கும் இன்னொரு பெரிய பாத்திரத்தில் ஊற்றித்தான் நான் குளிப்பேன். ஆறு மிகவும் அருகிலேயே இருந்தாலும், நேரமில்லாமை. அப்போது நான் வைக்கம் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் முதல் ஃபாரத்திலோ இரண்டாவது ஃபாரத்திலோ படித்துக்கொண்டிருந்தேன். நான்தான் சொன்னேனே, நான்கைந்து மைல்கள் நடந்தே செல்ல வேண்டும். இப்போது இருப் பதைப் போல ஒவ்வொரு வீடுகளுக்கு முன்னாலும் என்பதைப் போல உயர் நிலைப் பள்ளிகள் இல்லை. கார்கள் இல்லை. பேருந்துகள் இல்லை. எட்டு மணி ஆனாலும், நான் எழுவதில்லை. உம்மா நீரைத் தெளித்து என்னை எழச் செய்வாள். பிறகு ஒரு பரபரப்பில், வேகத்தில் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். பற்களைத் தேய்த்து, குளித்து, எதையாவது எடுத்துப் போட்டு வாரித் தின்று, புத்தகங்களுடன் பள்ளிக்கூடத்திற்கு ஐந்து மைல்கள் ஓட வேண்டும். வாப்பா சுத்தத்திலும் தோற்றத்திலும் கறாராக இருப்பவர். தினமும் காலையில் குளிக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது. அன்றொரு நாள் நான் பற்களைத் தேய்த்து விட்டு, குளிப்பதற்காக கிணற்றிலிருந்து நீரை இரைத்துக் கொண்டிருந்தேன். கயிறு அறுந்து பாத்திரம் கிணற்றுக்குள் விழுந்து விட்டது. நான் ஒரு ஏணியைக் கொண்டு சென்று கிணற்றில் இறங்கி மூழ்கினேன். இரண்டு மூன்று முறை மூழ்கிய பிறகே பாத்திரம் கிடைத்தது. பாத்திரத்தை எடுத்து விட்டு நான் கிணற்றிலேயே குளித்து முடித்து வேட்டியைப் பிழிந்து தலையைத் துவட்டி பாத்திரத்துடன் ஏறி வந்தபோது, மேலே வாப்பா கோபத்துடன் நின்று கொண்டிருந்தார். குடிப்பதற்குப் பயன்படுத்தும் கிணற்றில் குளித்ததற்காக வாப்பா என்னை அடித்தார். கிணற்றில் ஏற்கெனவே நான் இரண்டு மூன்று முறை மூழ்கினேன். அத்துடன் மேலும் இரண்டு மூன்று முறை மூழ்கியதற்கு அடி! நியாயம்தானா?
மறுநாள் சனிக்கிழமை. வீட்டிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் எங்களுடைய வயல் இருந்தது. வரப்புகள் புதிதாக உண்- டாக்கப்பட்டிருந்தன. நீருக்கு மேலே நெற் கதிர்கள் பச்சைப்பட்டு விரித்ததைப்போல உயர்ந்து நின்றிருந்தன. அவற்றையெல்லாம் கண்ணன் புலையனுடன் சேர்ந்து நாங்கள் பார்த்தோம். கண்ணன் புலையனிடம் ஒரு கறுப்பு நிற வேட்டி மட்டுமே இருந்தது. எத்தனை வயதுகள் ஆகியிருக்கும் என்று யாருக்கும் தெரியாது. பற்கள் எதுவும் போகவில்லை. முடி நரைக்கவில்லை. வாப்பாவை எடுத்து வளர்த்த மனிதன். என்னையும் நியாயமான விதத்தில் கண்ணன் புலையனும் என்னைத் திட்டுவது உண்டு. கண்ணன் புலையனுக்கு என்னுடைய வீட்டில் பெரிய அதிகாரம் இருந்தது. நாங்கள் பயிர்கள் அனைத்தையும் பார்த்து முடித்தபோது, நேரம் மாலை ஆகிவிட்டது. கண்ணன் புலையனின் வீட்டிலிருந்து ஒரு கட்டு பந்தம் வாங்கி எரிய விட்டு வீசிக்கொண்டே நான் வரப்பில் முன்னால் நடந்தேன். உறுதி இல்லாத வரப்பு. வாப்பா வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார். மடித்து தேய்க்கப்பட்ட வெள்ளைத் தொப்பி தலையில். நாங்கள் அப்படியே பேலன்ஸ் பண்ணிக் கொண்டு நடந்து போகும்போது ஒரு விபத்து உண்டானது. அதோ கிடக்கிறார், வாப்பா கால் வழுக்கி சேற்றில்!
வாப்பாவின் அந்த கிடப்பைப் பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது. நான் பந்தத்தை எரிய வைத்துக் கொண்டு சிரித்தேன். நிறுத்தாமல் சிரித்தேன். வாப்பா தானே எழுந்தார். சட்டையும் வேட்டியும் தொப்பியும் சேற்றுக்குள் புதைந்திருந்தன. நாங்கள் நேர் வழியில் செல்லவில்லை. வழியில் யாராவது பார்த்து விட்டால்? குறுக்கு வழிகளின் மூலம் நாங்கள் வீட்டிற்குச் சென்றோம். குளியலும் தொழுகையும் முடிந்து வாப்பா என்னைத் தூணில் பிடித்துக் கட்டி வைத்து பன்னி ரண்டு அடிகளைத் தந்துவிட்டு சொன்னார்.
"சிரிடா!'