Lekha Books

A+ A A-

மாது

மாது
எஸ்.கெ. பொற்றெக்காட்
தமிழில் : சுரா

செ

ன்னை சென்ட்ரல் ஸ்டேஷனை விட்டு கிளம்பிய மங்களாபுரம் மெயில் ஒன்றே கால் மணி நேரம் ஓடி அரக்கோணத்தை அடைந்திருந்தது.

     மூன்றாவது வகுப்பு டூ டயர் தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் நிறைய பயணிகள் இருந்தார்கள். சாளரம் இருந்த பக்கத்தில் உள்ள அப்பர் பெர்த்திலிருந்து கறுத்து மெலிந்த ஒரு நடுத்தர வயது மனிதர் தட்டுத் தடுமாறி கீழே இறங்கிக் கொண்டிருந்தார்.

     அருகிலிருந்த அப்பர் பெர்த்தில் சிகரெட் பிடித்தவாறு படுத்திருந்த ஶ்ரீதரன் முதலில் அந்த மனிதரை அந்த அளவிற்கு கவனிக்கவில்லை­யாரென்று தெரியாத பல பயணிகளில் ஒருவர். ஆனால், சிறிது நேரம் கடந்ததும் அந்த மனிதரை கவனிக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. கீழே சாளரத்திற்கருகிலிருந்த தனி இருக்கையில் வெளுத்து, தடிமனான ஒரு இளம் பெண் அமர்ந்திருந்தாள். நடுத்தர வயது கொண்ட மனிதர் நேராக இறங்கி, அந்த இளம் பெண்ணுக்கு முன்னால் தன் கால்களை தரையில் ஊன்றினார். அவர் அணிந்திருந்த மெல்லிய ஒற்றை மடிப்பு வேட்டி சற்று விலகி, உள்ளே அணிந்திருந்த கோவணம் சிறிது வெளியே தெரிந்தது­தனி கிராமத்து பெரியவர்!

     ‘மாது...தேநீர் வேணுமா?’ ­ நடுத்தர வயது மனிதரின் கேள்வி ஒரு  கொஞ்சல் சிரிப்பின் அலங்காரத்துடன் ­ அந்த இளம் பெண்ணிடம்.

     ‘வேண்டாம், கிட்டு அண்ணா, ­ அவளுடைய பதில் ஒரு புன்னகை நிறைந்த அறிவிப்புடன்­மேலேயிருந்து ஒரு கந்தர்வனைப் போல இறங்கி வந்த நாயகனிடம்.

     ஶ்ரீதரனின் ஆர்வம் அதிகமானது, கோடை காலம்... பெர்த்தில் விரிப்பை விரித்து உறங்க தயார் பண்ணிக் கொண்டிருந்தாலும், உறக்கம் வரவில்லை என்று தெரியும். நேரம் ஒன்பதரையே ஆகியிருந்தது. ரயில் இலாகாவின் மின் விசிறி திடீரென்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அசையாமல் இருந்தது. தட்டியும், அடித்தும் சில சோதனைகளை நடத்தி பார்த்தான். அதன் கம்பி, நரம்புகளில் எந்தவொரு விளைவையும் உண்டாக்கவில்லை. அப்போதுதான் மாதுவும் கிட்டு அண்ணனும் காட்சிக்குள் நுழைகிறார்கள்.

     (யார் இந்த மாது? யார் இந்த கிட்டு அண்ணன்?)

     ‘இது அரக்கோணம் ஸ்டேஷன். இங்கு நல்ல தேநீர் கிடைக்கும், மாது.’

     அவள் சற்று முனகினாள். அந்த முனகலுக்கான அர்த்தம் தெரியவில்லை.

     ஶ்ரீதரன் மாதுவையே கூர்ந்து பார்த்தான், ரோஸ் நிறத்திலிருந்த ஒரு டெரிலின் புடவையை அவள் அணிந்திருந்தாள். அந்த நிறத்துடன் பொருத்தமே இல்லாத அடர்த்தியான மஞ்சள் நிறத்திலிருந்த ஒரு ரவிக்கையையும்... காலில் புதிய செருப்புகள் இருந்தன. ஆனால், மாதுவிற்கு தவறு நேர்ந்து விட்டது. ஆண்கள் அணியக் கூடிய புதிய ஃபேஷனிலிருந்த செருப்பு அது.

     ‘தேநீர்...தேநீர்...’ ­ மாடுகளை ஓட்டுவதைப் போன்ற கிட்டு அண்ணனின் குரல். தகரத் தொப்பி அணிந்த குவளையில் ரெடிமேட் தேநீர் வந்து சேர்ந்தது.

     தேநீரைச் சுவைத்து பருகும் மாதுவின் முகத்தையே புன்னகைத்தவாறு பார்த்து நின்று கொண்டிருந்தார் கிட்டு அண்ணன்.

     டெரிலின் துணியால் ஆன அரைக்கைச் சட்டையை கிட்டு அண்ணன் அணிந்திருந்தார். சட்டையின் வலது கையில் வெற்றிலை-பாக்கு எச்சில் பட்ட-சிவந்த அடையாளம் தெளிவாக தெரிந்தது. சிவப்பு நிறத்தில் கல் பதிக்கப்பட்ட கடுக்கன் காதில் கிடந்து  மின்னியது.

     சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் வைத்து ஒரு மலையாளியான கிழவர் ‘மாதுவைச் சற்று பார்த்துக் கொள்ளணும்’ என்று இந்த மனிதரிடம் கூறியதை ஶ்ரீதரன் நினைத்துப் பார்த்தான். கிட்டு அண்ணன் மாதுவை நன்றாகவே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

     தேநீர்காரன் காசுக்காகவும் காலியான குவளைக்காகவும் வந்தபோது, கிட்டு அண்ணன் சட்டைப் பையில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கறுத்த ரோமங்களால் ஆன மணிபர்ஸை வெளியே எடுத்து திறந்தார். கொஞ்சம் பத்து ரூபாய் கரன்ஸி நோட்டுக்களை முதலில் வெளியே எடுத்து தெரியாத மாதிரி ஒரு காட்சியை நடத்தி விட்டு, அடியிலிருந்து சில்லறை நாணயங்களை தேடி எடுத்து தேநீர்காரனுக்குக் கொடுத்தார்.

     (கிட்டு அண்ணன் ஒரு கிராமத்து முதலாளியேதான்-ஶ்ரீதரன் புரிந்து கொண்டான்.)

     கிட்டு அண்ணன் என்னவோ சிந்தித்தாக, பிறகு... எதுவும் கூறாமல் வெளியேறி ஒரு நடை... (எங்கோ?

     மாது சாளரத்தின் வழியாக வெளியே பார்த்தாள். ப்ளாட்ஃபாரத்திலிருந்த வாழ்க்கையின் அசைவுகளை கூர்ந்து கவனித்தாள். (மாதுவின் அடர்த்தியான மஞ்சள் நிற ரவிக்கையின் கழுத்துப் பகுதி சற்று பிரிந்திருந்தது. ரோஸ் நிற புடவை புதியதாக இருந்தாலும், ரவிக்கை பழையது.)

     கையில் ஒரு தாள் பொட்டலத்துடன் கிட்டு அண்ணன் திரும்பி வந்தார். பொட்டலத்தை மாதுவின் கையை நோக்கி நீட்டினார்.

     ‘இது என்ன கிட்டு அண்ணா?’

     கிட்டு அண்ணன் பொட்டலத்தை அவிழ்த்து காட்டினார். கறுத்த முந்திரிக் குலை!

     ‘வேண்டாம், கிட்டு அண்ணா’.

     ‘இதை இங்கு வச்சுக்கோ, மாது.’

     மாது முந்திரிப் பொட்டலத்தை வாங்கி, மடியில் வைத்தாள்.

     மாதுவின் எதிர் பக்கத்திலிருந்த இருக்கை காலியாக கிடந்தது. கிட்டு அண்ணன் அங்கு அமர்ந்தார்.

     மாது முந்திரிப் பழத்தைச் சாப்பிடுவதைப் பார்த்தவாறு கிட்டு அண்ணன் கண்களை அகல திறந்து வைத்திருந்தார்.

     ‘கிட்டு அண்ணா, உங்களுக்கு வேண்டாமா?’ ­ மாதுவின் இனிமையான கேள்வி.  

     ‘எனக்கு வேண்டாம், மாது. நான் எம்.பி.யின் வீட்டில் நிறைய பலகாரங்களைச் சாப்பிட்டு, வயிற்றை நிறைத்து விட்டுத்தான் வர்றேன். வயிற்றைப் பாரு.’

     கிட்டு அண்ணன் டெரிலின் சட்டையைத் தூக்கி வயிறைக் காட்டினார். (வயிற்றில் பெரிய ஒரு கோடு......... அறுவை சிகிச்சை செய்த அடையாளமாக இருக்க வேண்டும்.)

     (யார் இந்த எம்.பி.? பாராளுமன்ற மெம்பரா? சென்னையில் முக்கிய மலையாளி பிரமுகராக இருக்கும் எம்.பி.யா?)

     காக்கி ஆடை அணிந்த பயணச் சீட்டு பரிசோதகரும், அவருக்குப் பின்னால் தடிமனான கொம்பு மீசையை வைத்திருந்த ஒரு தமிழனும் கடந்து வந்தார்கள். பயணச் சீட்டு பரிசோதகர் கிட்டு அண்ணன் அமர்ந்திருந்த இருக்கையை தமிழனுக்கு சுட்டிக் காட்டியவாறு கொடுத்தார்.

     கிட்டு அண்ணன் தயங்கினார்.

     ‘எழுந்திருக்கணும். இது இவருக்கான இருக்கை’­பயணச்சீட்டு பரிசோதகரின் கட்டளை.

     கிட்டு அண்ணன் எழுந்தார்.

     வெளியே பெருங்காயத்தின் விளம்பரம் அச்சடிக்கப்பட்டு வீங்கி காணப்பட்ட துணிப் பையை தன் மடியில் வைத்தவாறு, கொம்பு மீசை வைத்திருந்த கருப்பு நிற தமிழன் அங்கு இடத்தைப் பிடித்தான்.

     கிட்டு அண்ணனின் முகத்தில் நாய் சிறுநீர் கழித்ததைப் போல தோன்றியது.

     கிட்டு அண்ணன் தன் அப்பர் பெர்த்திற்குச் சென்றார்.

     மாது முந்திரியைச் சாப்பிட்டு முடித்து, தாளைச் சுருட்டி வெளியே எறிந்தாள். வெளியே இருட்டை கண்களை அகல திறந்து வைத்து பார்த்தவாறு அவள் அமர்ந்திருந்தாள். தமிழன் அவ்வப்போது தந்திரமாக முன்னால் அமர்ந்திருந்த மலையாளி மங்கையை கண்ணடித்துக் கொண்டு  நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தான்.

     பத்து நிமிடங்கள் தாண்டியவுடன் கிட்டு அண்ணனின் கால்கள் அப்பர் பெர்த்திற்குக் கீழே தொங்கி வந்து கொண்டிருந்தன. இறங்கி சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்குச் சென்றார்.

     திரும்பி வந்து, தமிழனுக்கு முன்னால் நின்றார்.

     ‘எங்கே போறீங்க?’­தமிழனிடம் ஒரு கேள்வி.

     ‘ஈரோடு’­தமிழனின் பதில்.

     ‘அங்கே எப்போ போய் சேர்வீங்க?’

     கிட்டு அண்ணனின் மொழி தமிழனுக்குப் புரியவில்லை. தமிழன் வீங்கிய பையைத் தூக்கிப் பிடித்தவாறு, தூக்கம் வருவதைப் போல காட்டிக் கொண்டு பேசாமல் இருந்தான்.

     கிட்டு அண்ணன் பின் பகுதியைச் சொறிந்தவாறு சிறிது நேரம் சிந்தனையில்  மூழ்கினார்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel