மாது - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5263
(பெரியவர் என்ன சிந்தித்திருப்பார்? மாதுவை அப்பர் பெர்த் என்ற விமானத்தில் ஏற்றி, தப்பிக்க வைப்பதைப் பற்றி இருக்குமோ? கிட்டு அண்ணன் தமிழனின் தோளைத் தொட்டார். தழிழன் கண்களைக் கொண்டு பேந்தப் பேந்த விழித்தான். சிவந்த உருண்டையான கண்கள்.
மேலே சுட்டிக் காட்டியவாறு கிட்டு அண்ணன் தமிழனிடம் கூறினார் :
‘நீ அங்கே படுத்துக்கோ... நான் இங்கு உட்கார்ந்து கொள்கிறேன்.’
தமிழனுக்கு விஷயம் புரியவில்லை. அப்படியே புரிந்திருந்தாலும், நம்புவதற்கு முடியவில்லை.
கிட்டு அண்ணன் கதகளிக்காரனைப் போல கையால் சைகை காட்டி, கூறியதை இன்னொரு முறை திரும்ப கூறினார் : ‘நீ அங்கே படுத்துக்கோ... நான் இங்கு உட்கார்ந்து கொள்கிறேன்.’
தமிழன் சிந்தித்திருக்க வேண்டும்-அழகான மலையாளி இளம் பெண்ணைப் பார்த்தவாறு உறக்கத்தை இல்லாமற் செய்வதா, அல்லது குஷன் மெத்தையில் சுகமாக படுத்து உறங்குவதா என்று. வண்டி ஈரோட்டை அடைவது அதிகாலை 5 மணிக்கு...
தமிழன் மெத்தையில் தூங்குவது என்று தீர்மானித்தான். நாலரை ரூபாய்க்கான நல்ல ஒரு பெர்த் ஓசியில் கிடைக்கிறது.
‘ரொம்ப தேங்க்ஸ்’ தமிழன் வீங்கிய பையுடன் அப்பர் பெர்த்திற்குப் பயணமானான்.
தமிழன் மேலே சென்று மறைந்தவுடன், கிட்டு அண்ணனும் மாதுவும் முகத்தோடு முகத்தைப் பார்த்து சிரித்தார்கள்.
சிறிது நேரம் மாது ஒரு தர்மசங்கடமான நிலையில் சிக்கிக் கொண்டிருந்தாள். கிட்டு அண்ணன் அவளுக்காக தன்னுடைய குஷன் மெத்தையை அந்த தமிழனுக்கு தானம் செய்ய வேண்டியதில்லை என்று கூறியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு கூறி, கிட்டு அண்ணன் தவறாக எடுத்துக் கொண்டால்...? இந்த கொங்கு நாட்டுக்காரனை முன்னால் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதுதான் பெண்ணின் எண்ணம் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டால்...? அதனால் அவள் தொண்டையில் முந்திரிப் பழம் மாட்டிக் கொண்டதைப் போல, பேசாமல் வெளியே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.
கிட்டு அண்ணனும் மாதுவும் ஊர் விஷயங்களைப் பற்றி உரையாடி நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தார்கள். தேங்காய் வியாபாரத்தைப் பற்றி கிட்டு அண்ணன் பேசிக் கொண்டிருந்தார். தேங்காய்க்கு விலை அதிகரித்திருந்தாலும், விளைச்சல் மோசம்... கடந்த விளைச்சலின்போது கிடைத்ததே அதிகபட்சம் பத்தாயிரம் தேங்காய்கள்தான்...
(கிட்டு அண்ணன் யார் என்று தெரிந்து விட்டது. ஒரு தேங்காய் முதலாளி)
பெரியவருடனும் குழந்தைகளுடனும் சேர்ந்து மெரீனா கடற்கரைக்குச் சென்ற செய்தியை மாது கூறினார். தொடர்ந்து நடைபெற்ற உரையாடல்களிலிருந்து ஶ்ரீதரனுக்குப் புரிந்தது கதாநாயகி, சென்னையிலிருக்கும் ஸ்டேட் பாங்கில் பணியாற்றும் ஒரு மலையாளி அதிகாரியின் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் என்பது.
‘கிட்டு அண்ணா... வண்டி நம்மை எப்போ தலசேரிக்குக் கொண்டு போய் சேர்க்கும்?’
‘மதியம் ஆகி விடும், மாது... மதியம் ஆகி விடும்.’
‘ஓ... அப்படியென்றால்... நாயகியும், நாயகனும் தலசேரிக்குச் செல்கிறார்கள்.’
வண்டி காட்பாடி ஸ்டேஷனில் சென்று நின்றது.
கிட்டு அண்ணன் சிரமப்பட்டு வெளியே இறங்கிச் சென்றார்.
திரும்பி வந்தபோது, கிட்டு அண்ணனின் கையில் தாள் பொட்டலம்... பொட்டலத்தை மாதுவிடம் நீட்டினார்.
‘இது என்ன கிட்டு அண்ணா?’
‘சாத்துக்குடி... மாது’.
கிட்டு அண்ணன் பொட்டலத்தை அவிழ்த்து காட்டினார்.
‘வேண்டாம்... கிட்டு அண்ணா.’
‘நீ இதை அங்கு வச்சிக்கோ மாது.’
மாது சாத்துக்குடியை வாங்கி மடியில் வைத்தாள்.
‘புளிக்குமான்னு தெரியல மாது. ஒண்ணை உரிச்சு தின்னுப் பாரு’ கிட்டு அண்ணன் மாதுவிடம் கூறினார்.
மாது நகத்தால் சாத்துக்குடியின் தடிமனான தோலை உரிக்க ஆரம்பித்தாள் (உளியைப் போன்ற நகம்).
வண்டி சேலம் ஸ்டேஷனை அடைந்தபோது, மணி மூன்றரையைத், தாண்டியிருந்தது. வண்டி முனகியவாறு நின்றதும், கிட்டு அண்ணன் சிரமப்பட்டு இறங்கி ஓடியதும் நடந்தன.
அப்போது மேலேயிருந்து கறுத்த இரண்டு கால்கள் தொங்கி வந்து கொண்டிருந்தன. தமிழன் இறங்கிக் கொண்டிருந்தான்.
பையைத் தேடி எடுத்து, அவன் மாதுவிற்கு முன்னாலிருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான் எனக்கு என்னுடைய இடம்தான் வேண்டும் என்னும் அதிகார தோரணையில்.
இலவச மெத்தையில் படுத்துக் கிடந்து, அவனுக்கு உறக்கம் வரவில்லை என்று தோன்றியது.
மாது அவனை வெறுப்புடன் சற்று பார்த்தாள். தொடர்ந்து அவனுடைய வெறித்த பார்வையிலிருந்து விலகுவதற்காக கிட்டு அண்ணன் சென்ற வழியைப் பார்ப்பதற்காக ப்ளாட்ஃபாரத்தை நோக்கி பார்வையைப் பதித்தாள்.
கிட்டு அண்ணன் வருவதாக தெரியவில்லை. ‘ஹ்ஹுங்...’ திடீரென்று தமிழனின் ஒரு முனகல் சத்தம் ஒலித்தது. அவன் வலது காலை தூக்கிப் பிடித்தவாறு இளித்தான்.
மாது எதுவுமே தெரியாத மாதிரி வெளியே தலையை நீட்டி அமர்ந்திருந்தாள்.
நடந்தது என்ன என்பது ஶ்ரீதரனுக்குப் புரிந்தது. தமிழனின் கருவண்டு போன்ற கால், இருக்கைக்கு அடியில் நகர்ந்து... நகர்ந்து... மாதுவின் பாதத்தைத் தொட்டதும், மாது மெதுவாக கையை இறக்கி தன் உளி போன்ற நகத்தால் அழுத்தி ஒரு கிள்ளு கிள்ளியிருக்கிறாள்.
தமிழன் இரண்டு கால்களையும் இருக்கையில் தூக்கி வைத்து, வீங்கிய பையை மார்போடு சேர்த்து வைத்துக் கொண்டு மிகுந்த மரியாதை உள்ளவனாக அமர்ந்திருந்தான்.
நிமிடங்கள் கடந்தன. கிட்டு அண்ணன் வருவதாக தெரியவில்லை.
வண்டி புறப்படப் போகிறது என்பதற்கான இரண்டாவது மணியும் அடித்தது.
கிட்டு அண்ணனைக் காணவில்லை.
கார்டு விசில் ஊதினார். மாது பதைபதைப்புடன் தலையை வெளியே நீட்டி பார்த்தாள். கிட்டு அண்ணன் ஓடி வந்து கொண்டிருந்தார். நிம்மதி தோன்றியது.
கிட்டு அண்ணன் எப்படியோ ஆபத்து நேராமல், நகர்ந்து கொண்டிருந்த வண்டியில் தாவி ஏறினார். மாதுவின் முகத்தில் சந்தோஷம், ஒளியைப் பரப்பியது.
ஆனால், கிட்டு அண்ணனின் முகத்தில் தெரிந்த உணர்ச்சியைப் பார்த்ததும், மாது பதைபதைத்துப் போய் விட்டாள். டெரிலின் சட்டையின் மார்புப் பகுதியைத் தொட்டவாறு கிட்டு அண்ணன் விக்கி விக்கி கூறினார் : ‘தவறு நடந்து விட்டதே, மாது!’
கிட்டு அண்ணனின் டெரிலின் சட்டையின் பை காலியாக இருந்தது! சேலம் ப்ளாட்ஃபாரத்திலிருந்த கூட்டத்திற்கு மத்தியில் கிட்டு அண்ணனின் பர்ஸ் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டு விட்டது!
பயணச் சீட்டும் போய் விட்டது, மாது’ தமிழனின் இருக்கையையே வெறித்துப் பார்த்தார் கிட்டு அண்ணன். கவலையும் ஏமாற்றமும் செயலற்ற நிலையும் அவமானமும் கோபமும் பொறாமையும் ஒன்று சேர்ந்த ஒரு பார்வை...
‘போனது போகட்டும் கிட்டு அண்ணா........ பயப்பட வேண்டாம்’ - மாது கிட்டு அண்ணனைத் தேற்றுவதற்காக முகத்தில் ஒரு புன்னகையைப் பரவ விட்டாள். தொடர்ந்து கழுத்துப் பகுதி பிரிந்திருந்த அடர்த்தியான மஞ்சள் நிற ரவிக்கைக்குள் கையை நுழைத்து, ஒரு சிறிய ப்ளாஸ்ட்டிக் பர்ஸை உருவி எடுத்து, ஸிப்பைத் திறந்து, ஒரு நூறு ரூபாய் நோட்டை வெளியே எடுத்து கிட்டு அண்ணனின் கையை நோக்கி நீட்டினாள். தொடர்ந்து மாது தமிழனைப் பார்த்து கண்களை உருட்டியவாறு ஒரு கட்டளை...’ மேலே ஏறி படுத்துக்கோ.’
சொன்னபடி நடக்கக் கூடிய ஒரு நாயைப் போல தமிழன் தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு அப்பர் பெர்த்தை நோக்கி ஊர்ந்து ஏறுவதை பரிதாபமாக பார்த்தவாறு படுத்திருந்தான் ஶ்ரீதரன்.
அப்போது தேம்பித் தேம்பி அழும் ஒரு சத்தம் கேட்டது...
‘கிட்டு அண்ணா... ஏன் அழுறீங்க?’மாதுவின் இனிய குரல்...