முழு படத்தையும் தோளில் சுமந்தார் ரஜினி
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 3027
எண்ணியதை எழுதுகிறேன் - சுரா (Sura)
முழு படத்தையும் தோளில் சுமந்தார் ரஜினி
நான் சமீபத்தில் 'லிங்கா' படம் பார்த்தேன். எனக்கு படம் பிடித்திருக்கிறது. கே. எஸ். ரவிகுமார் நல்ல திரைக்கதையுடன் விறுவிறுப்பான ஒரு படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார். அதில் முழுமையான வெற்றியும் பெற்றிருக்கிறார்.
ராஜா லிங்கேஸ்வரன், திருடன் லிங்கா என்ற இரு கதாபாத்திரங்களிலும் ரஜினி வருகிறார். இரண்டையும் மிக அருமையாக பண்ணியிருக்கிறார். பாடல் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் சுறுசுறுப்பும், ஸ்டைலும் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன.
ஏ. ஆர். ரஹ்மான், வைரமுத்து இருவரும் ரஜினி ரசிகர்களுக்கு எவையெல்லாம் பிடிக்குமோ, அதைச் செய்திருக்கிறார்கள். அனுஷ்கா, சோனாக்ஷி இருவரும் தங்களுடைய பங்களிப்பை பாராட்டும்படி செய்திருக்கிறார்கள்.
ஆர்ட் டைரக்ஷன் செய்திருக்கும் அமரன், ப்ரொடக்ஷன் டிசைனராக பணியாற்றியிருக்கும் சாபு சிரில், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு- அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். நடன இயக்குநர்கள், ஸ்டண்ட் இயக்குநர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். வெல்டன்!
மாறுபட்ட ஒரு கதையை எழுதிய பொன். குமாருக்கு ஒரு பூச்செண்டு!
படம் முழுக்க ரஜினியின் புகழ் பாடும் வசனங்களும், தத்துவங்களும் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை எழுதிய கரங்களைப் பிடித்து குலுக்குகிறேன்.
மொத்த படமும் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது. படம் முழுக்க கூட்டம் கூட்டமாக ஆட்கள்!பாடல் காட்சிகளிலும்தான்.
அணை கட்டும் காட்சிகள் கைத்தட்ட வைக்கின்றன. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலம் திரைக்கதைக்கு வலு சேர்க்கிறது. ஆங்கிலேயர்களுடைய நடிப்பு, அவர்களின் ஆங்கில மற்றும் தமிழ் உரையாடல்கள் மனம் திறந்து பாராட்டக் கூடிய அளவிற்கு இருக்கின்றன. படத்தின் பாடல் காட்சிகளின் வெரைட்டி, சண்டைக் காட்சிகளில் கையாளப்பட்டிருக்கும் வியக்கத்தக்க உத்திகள் மனதில் ஆழமாக பதிந்து நிற்கின்றன.
மதுரை மாவட்டத்தில் மக்களுக்காக ஒரு அணையைக் கட்டிய ராஜா லிங்கேஸ்வரன் என்ற மன்னர் வம்சத்தைச் சேர்ந்த ஒரு மாமனிதனின் கதையை தொய்வில்லாத திரைக்கதையுடன் இயக்கிய கே. எஸ். ரவிகுமாரின் கடுமையான உழைப்பு படம் முழுக்க தெரிகிறது. உழைப்புக்கு கிடைக்க வேண்டிய முழு பலனும் அவருக்கு கிடைத்திருக்கிறது.
மொத்த படத்தையும் ரஜினிகாந்த் தன் தோளில் சுமந்திருக்கிறார். அவருடன் சேர்ந்து கே. எஸ். ரவிகுமாரும். அதனால் படம் முடிந்து வெளியே வரும்போது, அவர்கள் இருவரும் மனதில் பதிந்து நிற்கிறார்கள்.
ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல. . . பொது மக்களுக்கும் 'லிங்கா'வை நிச்சயம் பிடிக்கும்.