ஜெயகாந்தனுக்கு நிகர் யார்?
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 3033
அழியாத கோலங்கள் - சுரா (Sura)
ஜெயகாந்தனுக்கு நிகர் யார்?
நான் என் இதயத்தில் மிக உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கும் எழுத்தாளர் ஜெயகாந்தன். ஒரு எழுத்தாளர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று என் இளம் வயதிலேயே ஜெயகாந்தனுக்கு மிகவும் முக்கியமான இடத்தை நான் கொடுத்து வைத்திருந்தேன். இன்று வரை அந்த இடத்தை வேறு எந்த எழுத்தாளருக்கும் நான் தந்ததில்லை-தர தயாராகவுமில்லை என்பதே உண்மை.
என் ஏழு வயதிலிருந்தே நான் அவரின் எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்து விட்டேன். இன்னும் சொல்லப் போனால், நான் வாசித்த முதல் கதாசிரியரே ஜெயகாந்தன்தான். சாதாரண அடித்தட்டு மக்களின் வாழ்க்கைகளை தன் கதைகளில் உயிரோட்டத்துடன் எழுதியதன் காரணமாக அவர் ஒரு கதாநாயகனாகவே எனக்குள் வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் எழுதிய புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் -அனைத்தையும் இளம் வயதிலிருந்தே நான் விரும்பிப் படித்தேன். அவர் எழுதிய முதல் புதினமான'வாழ்க்கை அழைக்கிறது'இப்போதும் பசுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. பாரீசுக்குப் போ, சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஆகிய அவரின் மகத்தான படைப்புகளைப் பார்த்து வியந்து போய் நின்றிருக்கிறேன்.
அவர் எழுதிய 'யாருக்காக அழுதான்? நாவலைப் படித்து விட்டு கண்ணீர் வழிய அமர்ந்திருக்கிறேன். 'கை விலங்கு. புதினத்தைப் படித்து விட்டு பல நாட்கள் அதன் நினைவிலேயே உழன்றிருக்கிறேன். 'கருணையினால் அல்ல' புதினத்தைப் படித்து விட்டு ஜெயகாந்தனை ஆச்சரியத்துடன் நினைத்திருக்கிறேன். சிலுவை, சாளரம், போர்வை, ப்ரம்மோபதேசம், அக்னிப்பிரவேசம், நான் இன்னா செய்யட்டும் சொல்லுங்கோ, தவறுகள் குற்றங்கள் அல்ல, குருபீடம், நிக்கி, புது செருப்பு கடிக்கும், ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது, அக்ரஹாரத்துப் பூனை, கோடுகளைத் தாண்டாத கோலங்கள், புதிய வார்ப்புகள், அந்தரங்கம் புனிதமானது, ஒரு பகல் நேர பாசஞ்சர் வண்டியில் என்று ஜெயகாந்தன் எழுதி, நம் உள்ளங்களில் சாகா வரம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுகதைகளை கூறிக் கொண்டே போகலாம். 'சினிமாவுக்குப் போன சித்தாளு' என்றொரு புதினத்தை எழுதியிருப்பார். சினிமா வெறி பிடித்து அலையும், திரைப்பட கதாநாயகர்களை மனதிற்குள் கோவில் கட்டி வாழும் முட்டாள் தனமான தமிழக மக்களை இதற்கு மேல் யாராவது தோலுரித்துக் காட்டியிருக்கிறார்களா?
ஊருக்கு நூறு பேர், எங்கெங்கு காணினும், மூங்கில் காட்டு நிலா, ஒரே கூரைக்குக் கீழே, பாவம் இவள் ஒரு பாப்பாத்தி என்று அவர் எழுதிய முற்போக்கு சிந்தனை கொண்ட புரட்சிகர நாவல்களையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். யாருக்கும் தலை வணங்காத, யாரிடமும் குழையாத, எந்த இடத்திலும் சிங்கமென சிலிர்த்து நிற்கும் ஜெயகாந்தன்தான் என்னுடைய மானசீக கதாநாயகன். ஒரு எழுத்தாளன் என்றால் அவரைப் போல கம்பீரமாக இருக்க வேண்டுமென்று நான். நினைக்கிறேன். பணத்திற்காக விலை போகக் கூடாதென்று நினைக்கிறேன்.
தகுதியற்ற அரசியல்வாதிகளிடம் பல்லைக் காட்டக் கூடாதென்று நினைக்கிறேன். மனதில் தவறு என்று படக் கூடிய எதையும் துணிச்சலாக கூறக் கூடிய ஆண்மைத்தனம் உள்ளவராக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இவை எல்லாவற்றையும் தாண்டி நம் மக்களின் மீது அக்கறை கொண்டவராக ஒரு எழுத்தாளர் கட்டாயம் இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். அந்த எழுத்தாளர் எழுதக் கூடிய எழுத்து மக்களை கெடுக்கக் கூடியதாக இருக்கக் கூடாது, அவர்களை மேம்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இந்த குணங்கள் அத்தனையும் தன்னிடம் கொண்டிருக்கும் ஒரு ஆதர்ஷ புருஷனான ஜெயகாந்தனை அவரின் இந்த 80 ஆவது பிறந்த நாளன்று அவரின் பொற்பாதம் தொட்டு வணங்கி வாழ்த்துகிறேன்.