அனாதை பிணம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 3960
அனாதை பிணம்
தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில் : சுரா
ம
க்கார் அப்படித்தான் இறந்தான். இறப்பதற்குத்தான் ஊர்ந்து ... ஊர்ந்து அவன் மருத்துவமனைக்குச் சென்றான். அந்த பயணத்தில் அவன் நகரத்திலிருக்கும் பல முக்கிய வீடுகளின் வாசற்படிக்குச் சென்றான். அங்கு கிடந்து இறப்பதற்காக அல்ல... நாழி கஞ்சி நீருக்காக.... நான்கு விரல்கள் அளவிற்கு அகலம் கொண்ட துணிக்காக .... மழை நிற்கும் வரை அமர்ந்திருப்பதற்கு மட்டும் ... எல்லா இடங்களிலிருந்தும் அவன் விரட்டியடிக்கப்பட்டான். அப்படி விரட்டியடித்தவர்களை குறை கூற வேண்டிய அவசியமில்லை. வீட்டின் முன் பகுதியில் ஒரு அனாதை பிணம் கிடப்பது என்பது எந்த அளவிற்கு தொல்லை அளிக்கக் கூடிய ஒரு விஷயமாக இருக்கும்!
மக்காரை நகரத்தில் உள்ள எல்லோருக்கும் தெரியும். ஐந்து வயதில் அவன் அங்கு வந்து சேர்ந்தவன். அன்றிலிருந்து அவன் பிச்சை எடுக்கிறான். ஒரு பிடி சோறுக்கும், ஒரு சிறிய பழைய துணிக்கும் ... ஆனால், மக்கார் தோல்வியடைந்த ஒரு பிச்சைக்காரன். அவனால் இன்று வரை ஒரு ஆளின் இரக்கத்தைக் கூட சம்பாதிக்க முடியவில்லை. ஒரு பழைய துண்டுத் துணியோ ஒரு பிடி சோறோ கிடைத்திருந்தால், அது 'அய்யோ பாவம்... அவனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும்' என்று நினைத்து கொடுத்தது அல்ல. ஒரு தொந்தரவு இல்லாமற் போவதற்கு ... ஒரு மோசமான காட்சியிலிருந்து தப்பிப்பதற்கு.... ஒரு நாற்றமெடுத்த பொருளை விலக்குவதற்கு நாம் செய்யும் முயற்சி மட்டுமே. ஆனால், மக்கார் வாழ்ந்தான். உங்களிடம் ஒரு ஆக்கிரமிப்பு நடத்தி வாழ்ந்தான். உங்களிடமிருந்து ஒரு கரத்தைப் பெற்று வாழ்ந்தான். சந்தோஷத்துடன் உணவு சாப்பிட்டு முடித்து ஹபீப் முதலாளி தன் மாளிகையின் மாடியில் அவருடைய நான்காவது இளம் பெண்ணான மனைவியை மார்புடன் சேர்த்து வைத்து அவளுடைய உதட்டில் காதல் முத்திரையைப் பதிய வைத்துக் கொண்டிருந்தபோது, வெளியே மக்காரின் உரத்த சத்தம் கேட்கும். அது என்ன ஒரு தொந்தரவான விஷயம்! அவன் எதுவும் கிடைக்காமல் போகக் கூடியவன் அல்ல. தன்னுடைய ஆனந்தப் பெருவெள்ளத்தின் சந்தோஷக் கண்ணி தற்போதைக்கு அறுந்தாலும் பரவாயில்லை, அவனுக்கு ஏதாவது கொடுத்து அனுப்பும்படி முதலாளி தன் மனைவியைக் கீழே அனுப்பி வைப்பார். பூந்தோட்டத்தில் பூக்களின் அழகை விழுங்கியவாறு அந்த பழக்கமான கெட்ட நாற்றம் பரவும் போது, முதலாளிகள் தங்களுடைய பைகளுக்குள் கையை நுழைக்க ஆரம்பிப்பார்கள். வீடுகளில் மிகுந்த பசியுடன் இருக்கும் குழந்தைகள் வயிறு நிறைந்த பிறகும், அதற்குப் பிறகும் சோறு வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கும்போது, மக்கார் வருகிறான் என்று தாய்மார்கள் கூறுவார்கள். அந்த குழந்தை மூக்கை பொத்திக் கொள்ளும். பிறகு அந்த சோற்றை வாந்தி எடுக்காமலிருப்பதற்கான முயற்சி.... நல்ல காரியத்திற்கு யார் தயாராகி வெளியேறினாலும், முன்னால் அவர்கள் முதலில் பார்ப்பது மக்காரைத்தான்.
அப்படியே மக்கார் சோற்றைச் சாப்பிட்டும் பழைய துணிகளைச் சம்பாதித்தும் அவற்றை ஒன்று சேர்த்து தைத்து அணிந்தும் முப்பத்தைந்து வருடங்கள் கடந்தோடி விட்டன. ஆனால், இதற்கிடையில் என்னென்னவோ அழுக்குகள் படிந்தவற்றையெல்லாம், ஒன்று சேர்த்து தைக்காத நீளமும் அகலமும் கொண்ட பெரிய வேட்டியையெல்லாம் போர்த்திக் கொண்டு நடந்து திரிந்த சந்தர்ப்பங்கள் இரண்டு மூன்று இருந்தன. அன்று அவனிடமிருந்து ஒரு அழுகிக் கெட்ட பிணத்தின் நாற்றம் வெளியே வந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் அருகிலிருந்த முஸ்லீம் பள்ளி வாசலின் சுடுகாட்டில் சிலரின் பிணக் குழிகளைத் தோண்டியதாகவும் தெரிந்தது.
திடீரென்று மக்காருக்கு ஒரு பேதி ஆரம்பித்தது, ஆரம்பித்த அன்றே மிகவும் சிரமப்பட்டு விட்டான். வாசற்படிகள் இருக்கட்டும் ... பாதையின் ஓரங்களில் கூட கிடப்பதற்கு அனுமதிக்கவில்லை. நடந்தும் அமர்ந்தும் தவழ்ந்தும் மருத்துவமனையை அடைந்தான். ஊர்ந்தே மருத்துவமனையை அடைந்தபோது, அவனுடைய இடுப்பில் சுற்றியிருந்த பழைய துணி அவிழ்ந்து விட்டிருந்தது. அது சில நாட்களுக்கு முன்பு ஒரு பிணத்தைச் சுற்றியிருந்த துணியின் எச்சம்தான்....
பிணவறைக்கு மக்காரை மாற்றியபோது, அவனுக்கு மருத்துவமனையிலிருந்து கிடைத்த துணியை தோட்டி எடுத்துக் கொண்டான். அந்த வகையில் அவன் மீண்டும் நிர்வாணமாக ஆனான்.
அன்று மருத்துவமனையில் நான்கு மரணங்கள் நடைபெற்றன. மற்ற மூன்று இறந்த உடல்களையும் சுடுகாட்டிற்கு கொண்டு சென்றார்கள். ஆனால், மக்காரை மட்டும் அங்கேயே வைத்து விட்டார்கள். அழுகி நாற்றமெடுத்தது போதாதா? இறந்த பிறகும் வேண்டுமா?
மதிய நேரம் தாண்டியதும் நகரத்திலிருந்த முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த முக்கிய மனிதர்களில் சிலர் ஒரு 'ஸந்துகு' வுடன் (பெட்டி) வந்தார்கள். அவர்கள் மக்காரை எடுத்துக் கொண்டு செல்வதற்காக வந்திருந்தார்கள். அவனுக்கு ஒரு பிண அடக்கத்தை நிறைவேற்றுவதற்காக வந்திருந்தார்கள்.
உயிருடன் இருந்த மக்காருக்கு தருவதற்கு தயங்கினார்கள். உயிருடன் இருந்த மக்கார் வாங்கினான். இறந்த மக்காருக்கு தருவதற்கு தயாராக இருக்கிறார்கள். ஒருவேளை.... ஒரு தொல்லை ஒழிந்ததே என்று நினைத்திருக்கலாம்.
அருகிலிருந்த ஒரு முஸ்லீம் கட்டிடத்திற்கு மக்காரைக் கொண்டு சென்றார்கள். வெட்டிவேர் போட்டு கொதிக்க வைத்த நீரில், வாசனை சோப்பால் தேய்த்து அவனை நகரத்தின் முக்கிய மனிதரான மோதீன் குளிப்பாட்டினார். முதல் தரமான ஆடையை அணிவித்தார். நல்ல வேட்டியை அணிவித்தார். முதல் தரம் உள்ள இருபத்தொரு முழம் மல்மல் துணி இறந்த மக்காருக்கு இருந்தது. அத்தரிலும் பன்னீரிலும் குளிப்பாட்டி, அந்த வெள்ளை நிறத்தில் மிகவும் மென்மையாக இருந்த துணியில் படுத்துக் கிடந்தது அந்த பிச்சைக்காரன் மக்கார்தான்.
உயிருடன் இருந்த மக்காரின் மன உயர்வுக்காக ஒரு கத்தீபும் முயற்சிக்கவில்லை. இறந்த மக்காரின் நிரந்தரமாக அடைக்கப்பட்டு விட்ட செவிக்குள் நகரத்தின் முக்கிய கத்தீப் 'யாஸின்' கூறினார்.
அலங்கரிக்கப்பட்ட ஸந்துகில் (பெட்டி) அவனுடைய உடல் பள்ளிவாசல் பகுதியிலிருந்த சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்த ஊர்வலத்தில் நகரத்தின் எல்லா முக்கிய மனிதர்களும் 'திக்கர்' கூறிக் கொண்டிருந்தார்கள். அனைத்து சிரமங்களிலிருந்தும் உண்மையான விடுதலை கிடைத்து, நிரந்தரமான அமைதியில் கலந்து விட்ட மக்காரை பிரம்மாண்ட கட்டிடத்தின் சாளரங்களின் வழியாக பெண்கள் பார்த்தார்கள். அவர்களின் பவழ உதடுகள் 'லா இலாஹ் இல்லல்லாஹ்' என்ற புனித மந்திரத்தின் உச்சரிப்பில் அசைந்து கொண்டிருந்தன.
அந்த வகையில் இறந்த மக்கார் இஸ்லாமின் பொதுச் சொத்தாக ஆனான். உயிருடன் இருந்தபோது மக்காரை உரிமை கொள்வதற்கு யாருமே இல்லாமல் போனதற்கு அவனுக்கு உயிர் என்ற தோஷம் இருந்ததுதான் காரணமாக இருந்திருக்க வேண்டும். அப்படியென்றால் முஸ்லீம் மதத்திலிருக்கும் எல்லா பிச்சைக்காரர்களும் அந்த தோஷத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு முயற்சிக்கக் கூடாதா? அவர்களுக்கு உரிமை கோருவதற்கு ஆட்கள் உண்டாவார்கள். பள்ளி வாசலில் கல்லறை தயாராகி விட்டிருந்தது. அந்த இருபத்தொரு முழம் துணியுடன் சேர்த்து மக்காரை பள்ளி வாசலின் குழிக்குள் வைத்தார்கள். முகத்தை மூடியிருந்த துணியை மாற்றினார்கள். ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு எங்கிருந்து புகழ் பெற்ற சகோதரத்துவத்தைப் பற்றிய புனிதச் செய்தி புறப்பட்டு வந்ததோ, அந்த புண்ணிய பூமிக்கு நேர் எதிரே மக்காரின் முகம் திருப்பி வைக்கப்பட்டது. உயிர் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் மனித இதயத்தின் ஆழத்திற்குள் நுழைவதற்கு எண்ணி புறப்பட்ட அந்த சகோதரத்துவம் நிறைந்த செய்தி, குளிர்ந்து உறைந்து போன பிணக் குழிக்கான ஒரு செய்தியாக ஆக்கப்பட்டு விட்டதைப் பார்த்து மனிதப் பிறவி முழுவதும் உரிமை கொண்டாடக் கூடிய தூதர் தேம்பித் தேம்பி அழுதிருப்பாரோ என்னவோ?
ஒரு பலகையால் பள்ளி வாசலின் குழியை மூடிய பிறகு, ரஹீம் சாஹிப்பும், ஹபீப் முதலாளியும் பிறரும் ஒவ்வொரு பிடி மண்ணை அள்ளி தூவினார்கள். சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் இன்னொரு அடையாளம் போலிருக்கிறது!