மகாலட்சுமி
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 4481
“வந்துட்டிங்களா? கற்றை கற்றையா பணத்தை அள்ளிக்கிட்டு வாரம் தவறாம இங்கே வந்துடறீங்களே, மனசு நிறைய அன்பை சுமந்துக்கிட்டு உங்க வீட்டுக்கு போகலாமில்ல?”
கொஞ்சமாய் சூடேறிய வார்த்தைகள். கேட்டுக் கொண்டிருந்த சங்கர் திகைப்புடன் நின்றான்.
“சொரணை இருந்தாத்தானே? நீங்க நூறு முகம் பார்த்து இன்பம் தேடி அலையறீங்க. வேறு முகம் பார்க்காம வீட்டில உங்க பொண்டாட்டி உங்களுக்காக காத்துக்கிடக்காளே! அந்த உணர்வு இல்லாம இங்கே ஓடி வர்றீங்களே, நீங்கள்ளாம் ஆம்பளைங்கதானா?”
வார்த்தைகளில் உஷ்ணத்தின் அளவு அதிகமாகியது. தாக்குதலால் மேலும் திகைத்துப் போனான் சங்கர்.
“மகாலட்சுமி, நீ உள்ளே வாம்மா. உனக்கு உடம்பு சரியில்லை. நீ இன்னிக்கு நல்லா ஓய்வு எடுத்துக்கோ. வாம்மா! மகாலட்சுமி!” வார்த்தை சவுக்குகளால் சங்கரின் இதயத்தை அடித்துக் கொண்டிருந்த மகாலட்சுமி என்ற அந்த பெண்ணை பலவந்தமாக உள்ளே அழைத்துச் செல்ல முற்பட்டாள் அந்த விலை மகளிர் விடுதித் தலைவி.
அங்குள்ள பெண்களிலேயே அதிக அழகு, கவர்ச்சி, மிக அதிகமாய் சம்பாதிப்பவள் மகாலட்சுமிதானே? எனவே, அவளிடம் எப்போதும் நயமாகவே பேசுவது அவளது வழக்கம்.
மகாலட்சுமி தலைவியின் கைகளை உதறினாள். “கல்யாணம் கட்டி, புள்ளைங்களைப் பெத்துட்டா மட்டும் ஆம்பளையாயிட முடியாதுய்யா. கட்டினவளையும், பெத்ததுங்களையும் கண் கலங்காம சந்தோஷமா வச்சுக் காப்பாத்தறவன் தான் உண்மையான ஆம்பளை.”
அவள் பேசப் பேச வலுக்கட்டாயமாக அவளை இழுத்துக் கொண்டு சென்றாள் தலைவி. மகாலட்சுமி முறையாக கல்யாணம் செய்துக் கொண்டவள்தான். உழைத்து சம்பாதிப்பதற்கு சோம்பேறித் தனப்பட்ட ஊதாரி கணவன் தவிக்க, விட்டு விட்டு வேறு மலருக்கு தாவி விட்டான்.
தகுந்த கல்வி இல்லாத இவள் வேறு வழியின்றி விடுதியில் (சிகப்பு) விளக்கேற்றும் மகாலட்சுமியாகிவிட்டாள்.
ஓடிப்போன கணவன் செய்த துரோகம் காரணமாக கோபம் தலைக்கு ஏறும் பொழுதெல்லாம் இப்படித்தான் ஹிஸ்டீரியா நோயாளி போல கத்துவாள். அந்நேரத்தில் மட்டும் அவளுக்கு ஓய்வு. இல்லாவிட்டால் வாடிக்கையாளர்களை வசைபாடியே விரட்டிவிடுவாள் என்ற பயம் தலைவிக்கு.
திகைத்து நின்ற சங்கர் மெதுவாக வெளியேறினான். ஸ்கூட்டரில் ஏறி பூங்காவில் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்து விட்டு வீடு சேர்ந்த போது நேரம் பின் இரவாகி இருந்தது.
அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தான். புவனா வந்து கதவைத் திறந்தாள். தூக்கக் கலக்கம் நிரம்பிய கண்களிலும், கணவனைப் பார்த்ததும் ஒரு ஒளி மின்னியது.
மவுனமாக சென்று லுங்கிக்கு மாறினான் சங்கர். “சாப்பிட வாங்க,” கூப்பிட்டாள் புவனா. இரவில், விஸ்கியுடன் மீன் வறுவல், சில்லி சிக்கன் சாப்பிட்டு விடுவதால் வீட்டில் சாப்பிடுவதே இல்லை என்றாலும் அலுக்காமல், சலிக்காமல் தினமும் நாள் தவறாமல் சாப்பிட அழைப்பாள். அவன் வேண்டாம் என்ற பின்னரே சாப்பாட்டிற்கு தண்ணீர் விடுவாள்.
அன்றும் சாப்பாடு வேண்டாம் என்ற மவுனமாக தலையை ஆட்டிவிட்டு தன் படுக்கையில் போய் ‘தொப்’பென்று விழுந்தான் சங்கர். அடுக்களையில் புவனா சாப்பாட்டிற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, சுத்தம் செய்யும் சப்தம் கேட்டது.
‘ஒரு நாள் கூட முகம் சுளிக்காது, தனக்கு பணிவிடை செய்கிறாளே… இத்தனைக்கும் நான் ஒரு வார்த்தை கூட அவளிடம் அன்பாக பேசுவதில்லை.’ எண்ணங்கள் இதயத்தை கனக்க வைத்தது.
புவனா மெல்ல நடந்து வரும் சப்தம் கேட்டது. அவனருகே வந்தாள். ‘தினமும் வெறும் வயித்தோட படுத்துக்கறது உடம்புக்கு நல்லதில்லீங்க’ சொல்லிவிட்டு குழந்தைகள் படுத்திருந்த கட்டிலுக்குச் சென்று அவர்களுடன் படுத்துக் கொண்டாள். திருமணமாகிய புதிதில் மனைவியிடம் மோகம் மட்டுமே கொண்டு அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் பிறந்த பிள்ளைகள். மனம் விட்டு அவளது உணர்வுகள், ஆசைகள் இவற்றைப் பற்றி ஒரு நாளாகிலும் கேட்டதில்லை. அவளது எண்ணங்களைத் தன்னுடன் பகிர்ந்து கொள்ள நினைத்ததுமில்லை. மனைவி என்பவள் குடும்பத்தைப் பேணும் இயந்திரம். வாரிசுகளை வளர்க்கும் கேந்திரம் என்ற எண்ணம் அவனுக்கு.
இன்று? மனைவியை ஒரு மனுஷியாக, பெண்ணாக, தாயாகப் பார்த்தான். மெதுவாக எழுந்து சென்று குழந்தைகளுடன் படுத்துக் கொண்டிருந்த புவனாவுடன் தானும் நெருங்கிப் படுத்து அவளை அணைத்துக் கொண்டான். அன்றைய அணைப்பில் ஆசை மட்டுமல்ல, புது அன்பையும் புவனாவின் பெண்மை உணர்ந்துக் கொண்டது. கண்மூடி கணவனின் அணைப்பில் லயித்தாள்.
அவளிடமிருந்து வந்த மஞ்சள் வாசனை மனதிற்கு ரம்மியமாக இருந்தது. இரவின் மங்கிய வெளிச்சத்தில் அவள் மூக்கில் அணிந்திருந்த சிறு வைர மூக்குத்தி மின்னியது. ‘மகாலட்சுமி போல இருக்கும் இவளை விட்டு வேறு மகளிரிடம் சென்றோமே’ என வெட்கினான்.
மகாலட்சுமி, தன் மனதிலும், உடலிலும் இருந்த அழுக்கை நீக்கிய அந்த விடுதிப் பெண்ணும் மகாலட்சுமிதானே! மானசீகமாக அவளுக்கு நன்றி செலுத்தினான்.