Lekha Books

A+ A A-

வெள்ளப்பெருக்கு

vellaperukku

கிராமத்திலேயே சற்று மேடான இடம் கோவில் இருக்கும் இடம்தான். அங்கு கழுத்து வரை இருக்கும் நீருக்குள் கடவுள் நின்றிருந்தார். வெள்ளம்! கடவுளைச் சுற்றிலும் எங்கு பார்த்தாலும் நீர் மயம்! ஊரில் இருந்த ஒவ்வொருவரும் கரையைத் தேடிப் போய்விட்டார்கள். வீட்டுக் காவலுக்கு என்று ஒரு ஆளை வைத்துவிட்டுப் போய்விட்டார்கள். வீட்டில் படகு இருக்கிறதா என்றால் இருக்கிறது. கோவிலைச் சேர்ந்த மூன்று அறைகள் கொண்ட கட்டடத்தில் 67 குழந்தைகள் இருந்தார்கள். 356 ஆட்கள் இருந்தார்கள். நாய், பூனை, ஆடு, கோழி போன்ற வளர்ப்புப் பிராணிகளும்தான். எல்லாம் ஒற்றுமையாக இருந்தன. ஒரு சிறு சண்டைகூட இல்லை.

சேன்னப் பறையன் ஒரு இரவும் ஒரு பகலும் நீரிலேயே நின்றிருந்தான். அவனிடம் படகில்லை. அவன் முதலாளி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு முன்கூட்டியே கரையைத் தேடிப் போய்விட்டார். முதலில் வீட்டுக்குள் தண்ணீர் புகத் தொடங்கும் போதே தென்னங்கீற்றையும் கம்பையும் வைத்து அவன் பரண் உண்டாக்கினான். நீர் எப்படியும் இறங்கிவிடும் என்று நினைத்து இரண்டு நாட்கள் அதிலேயே உட்கார்ந்து நேரத்தைப் போக்கினான் அவன். போதாக்குறைக்கு, நான்கைந்து வாழைக்குலைகள் வேறு அங்கு இருந்தன. அங்கிருந்து அவன் போய்விட்டால் அவற்றை நிச்சயம் ஆட்கள் திருடிக்கொண்டு போய்விடுவார்கள்.

இப்போது பரணுக்கும் மேலே முழங்கால் வரை நீர் நிறைந்திருந்தது. உள்ளே இருந்தவாறு சேன்னன் அழைத்தான். அவன் அழைப்பதை யார் கேட்பது? கேட்பதற்குத்தான் பக்கத்தில் யார் இருக்கிறார்கள்? கர்ப்பமாக இருக்கும் ஒரு பறைச்சி, நான்கு குழந்தைகள், ஒரு பூனை, ஒரு நாய்- இத்தனை உயிர்களும் அவனை நம்பித்தான் இருந்தன. வீட்டுக்கு மேலே நீர் வர இன்னும் சிறிது நேரமே ஆகும் என்பதையும்  தன் குடும்பத்தின் இறுதி நிமிடம்  நெருங்கிவிட்டது என்பதையும் அவனால் உணர முடிந்தது. பலமாக மழை பெய்ய ஆரம்பித்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. கூரையின் ஓலையைப் பிரித்து கீழே இறங்கிய சேன்னன் சுற்றிலும் பார்த்தான். வடக்கு திசையில் ஒரு படகு போய்க் கொண்டிருந்தது. உரத்த குரலில் சேன்னன் பறையன் அழைத்தான். அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அவன் அழைத்தது படகில் இருந்தவர்களுக்குக் கேட்டது. அவர்கள் படகைக் குடிசை இருக்கும் பக்கம் திருப்பினார்கள். குழந்தைகளையும் மனைவி யையும் நாயையும் பூனையையும் வீட்டினுள்ளிருந்து ஒவ்வொருத் தராக சேன்னன் வெளியே இழுத்தான். அவர்கள் வெளியே வரவும் படகு வந்து சேரவும் சரியாக இருந்தது.

குழந்தைகள் படகில் ஏறிக் கொண்டிருந்தார்கள். “சேன்னச்சா... இங்க பாருங்க.'' மேற்குப் பக்கத்திலிருந்து யாரோ அழைத்தார்கள். சேன்னன் திரும்பிப் பார்த்தான். “இங்க வாங்களேன்.'' அழைத்தது மடியத்தரை குஞ்ஞேப்பன். அவன் தன்னுடைய வீட்டின் முன்னால் நின்று உரத்த குரலில் அழைத்தான். மிகவும் வேகமாகத் தன்னுடைய மனைவியைப் படகில் ஏற்றினான் சேன்னன். அதே நேரத்தில் பூனையும் படகுக்குள் தாவிக் குதித்தது. நாயை எல்லாருமே மறந்துவிட்டார்கள். அது வீட்டின் மேற்குப் பக்கம் இங்குமங்குமாய் முகர்ந்து பார்த்தவாறு நடந்து கொண்டிருந்தது.

படகு நகர்ந்து போய்க்கொண்டே இருந்தது.

நாய் குடிசையின் மேல் பகுதிக்கு வந்தது. சேன்னன் இருந்த படகு தூரத்தில் போய்க் கொண்டிருந்தது. அது படுவேகமாக நீங்கிக் கொண்டிருந்தது. மரண வேதனையுடன் அந்த அப்பிராணி நாய் ஊளையிட ஆரம்பித்தது. ஆதரவில்லாமல் அனாதையாக நின்று கொண்டிருக்கும் ஒரு மனிதனின் குரலையொட்டி ஒற்றுமை இருக்கக் கூடிய ஒருவித சத்தத்தை அந்த நாய் உண்டாக்கியது. அதைத் கேட்பதற்கு அங்கு யார் இருக்கிறார்கள்? வீட்டின் நான்கு பக்கங்களிலும் அது ஓடியது. ஆங்காங்கே முகர்ந்து பார்த்தது.

குடிசையின் மேல் பாதுகாப்பாக அமர்ந்திருந்த ஒரு தவளை சிறிதும் எதிர்பார்க்காமல் ஒலித்த இந்தச் சத்தத்தைக் கேட்டு பயந்துபோய் நாயின் முன்னால் நீரில் நகர்ந்தது. அதைப் பார்த்த நாய் பயந்துபோய் நடுங்கியவாறு பின்னோக்கி குதித்து நீரில் உண்டான சலனத்தையே பார்த்தவாறு சிறிது நேரம் நின்றிருந்தது.

உணவுக்காக அந்த நாய் அங்குமிங்குமாய் ஓடி பரிதவித்தது. ஒரு தவளை நாயின் மூக்கில் சிறுநீர் கழித்துவிட்டு, நீருக்குள் குதித்தது. தர்மசங்கடமான நிலைக்கு ஆளான நாய் ஒருவித சத்தத்தை உண்டாக்கியவாறு தும்மியது. தலையை ஆட்டியவாறு குரைத்தது. முன்னங்கால்களில் ஒன்றால் மூக்கைத் துடைத்தது.

பயங்கரமான பேய் மழை மீண்டும் பெய்யத் தொடங்கியது. ஒரு மூலையில் தன் உடலைச் சுருக்கிக்கொண்டு அமர்ந்திருந்தது அந்த நாய். அதன் எஜமானன் அம்பலப் புழையைச் சேர்ந்து விட்டிருந்தான்.

இரவு நேரம் வந்தது. பெரிய பாம்பொன்று நீருக்குள் பாதி மூழ்கிய நிலையில் இருக்கும் அந்தக் குடிசையையொட்டி மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. பயந்துபோன நாய் வாலைத் தாழ்த்திக் கொண்டு குரைத்தது. அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத பாம்பு ஊர்ந்து போய் மறைந்தது.

கூரையின்மேல் போய் அமர்ந்து கொண்ட அந்த ஆதரவற்ற நாய் சுற்றிலும் சூழ்ந்திருந்த இருட்டைப் பார்த்து ஊளையிட்டு அழுதது. அந்த நாயின் வேதனை நிறைந்த அழுகைச் சத்தம் தூரத்தில் இருந்த இடங்கள் வரை கேட்டது. அந்த நாயின் நிலையைப் பார்த்து பரிதாபப்பட்ட வாயு பகவான் அந்த ஊளைச் சத்தத்தை எல்லா பகுதிகளிலும் கேட்கும் வண்ணம் எடுத்துச் சென்றான். வீடுகளைக் காவல் காக்கும் காவலாளிகளில் இரக்க குணம் கொண்ட சிலர், “அய்யோ... வீட்டுமேல இருந்து நாய் ஊளையிடுது'' என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். கடற்பகுதியை அடைந் திருக்கும் நாயின் எஜமானன் இப்போது இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருப்பான். வழக்கம்போல சாப்பிடும்போது இன்றும் ஒரு உருண்டை சோற்றை அவன் அந்த நாய்க்காக உருட்டிக் கொண்டிருப்பான்.

உரத்த குரலில் சிறிதுகூட இடைவெளியின்றி சிறிது நேரம் அந்த நாய் ஊளையிட்டு அழுது கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் குறைந்து பின்னர் இல்லாமலே ஆனது. வடக்கில் எங்கோ ஒரு  வீட்டில் அமர்ந்து அந்த வீட்டின் காவல் காரன் இராமாயணம் படித்துக் கொண்டிருந்தான். அதைக் கேட்பது மாதிரி எந்தவித சத்தமும் எழுப்பாமல் நாய் வடக்கு நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தது. பிறகு  சிறிது நேரம் கழித்து தொண்டையே கிழிந்து விடுகிற மாதிரி நாய் மீண்டும் ஊளையிடத் தொடங்கியது.

அந்த அமைதியான இரவு நேரத்தைக் கிழித்துக் கொண்டு இராமாயணம் படிப்பது மீண்டும் காற்றில் தவழ்ந்து வந்து எல்லா பக்கங்களிலும் கேட்டது.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel