உட்கார்ந்த இடத்தில் உலகத்தை கணிப்பவர்!
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 3156
அழியாத கோலங்கள் - சுரா (Sura)
உட்கார்ந்த இடத்தில் உலகத்தை கணிப்பவர்!
எனக்கு அருகில் அமர்ந்திருப்பவர் மகேஷ்வர்மா. இவரின் முன்னோர்களின் ஊர் ராஜஸ்தானில் இருக்கிறது. ஆனால், இவரின் தாத்தா காலத்திலிருந்தே இவரின் குடும்பம் சென்னையில்தான். மகேஷ் வர்மா படித்தது கூட முழுக்க முழுக்க சென்னையில்தான். இவரின் மகனும், மகளும் கூட சென்னையில்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மகேஷ் வர்மாவை எனக்கு 10 வருடங்களாக தெரியும். என்னுடைய நெருங்கிய நண்பராக இவர் ஆகிவிட்டார். ஜோதிடம், வாஸ்து, ஆன்மீகம், ஜெம்மாலஜி எல்லாவற்றிலும் கரை கடந்த நிபுணர் இவர். இவருடைய முன்னோர்கள் ஜோதிடர்கள் அல்ல. ஆனால், யாரும் சிறிதும் எதிர்பார்க்காமல், இவர் ஜோதிடராகவும், வாஸ்து நிபுணராகவும் ஆகி விட்டார். கேட்டால், 'கடவுளின் அருள்'என்று கூறுகிறார்-சிரித்துக் கொண்டே. நக்கீரன் அலுவலகத்திலிருந்து வெளிவரும் 'பால ஜோதிடம்'வார இதழில் ஜோதிடம், வாஸ்து, நவரத்தினங்கள் ஆகியவை சம்பந்தமாக இவர் ஒவ்வொரு வாரமும் எழுதும் கட்டுரைகள் சில வருடங்களாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.
இது தவிர, அதே நிறுவனத்திலிருந்து வெளிவரும் 'ஓம் சரவண பவ' என்ற ஆன்மீக மாத இதழில் கடந்த பல வருடங்களாக மகேஷ் வர்மா எழுதும் ஆலயங்கள் பற்றிய தொடர் வந்து கொண்டிருக்கிறது. பொதுவாக தமிழகத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் ஆன்மீக பத்திரிகைகளில் தென் இந்தியாவில் இருக்கும் ஆலயங்களைப் பற்றியோ அல்லது இந்தியா அளவில் பிரபலமாக இருக்கும் காசி, கேதார்நாத், பத்ரிநாத், மதுரா போன்ற ஆலயங்களைப் பற்றியோதான் கட்டுரைகள் வரும். ஆனால், மகேஷ் வர்மா எழுதும் ஆலயங்கள் இதற்கு முன்பு நாம் கேள்விப்படாதவை. அதே நேரத்தில்-வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்தியாவின் வட மாநிலங்களில் இருக்கும் பெரும்பாலான கோவில்களுக்கு மகேஷ் வர்மா பல தடவைகள் சென்றிருக்கிறார். தான் போய் வந்த ஆலயங்களின் பூர்விக வரலாற்றுடன் இவர் கட்டுரையைப் படிக்கும்போது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். அறிவியல் ஒரு பக்கம் வளர்ந்து, நினைத்துப் பார்க்க முடியாத அற்புதங்களைச் செய்து கொண்டிருக்க, இந்திய ஆலயங்களில் நடைபெறும் வியக்கத்தக்க சம்பவங்களையும், இதற்கு முன்பு நடைபெற்ற அற்புதச் செயல்களையும் மகேஷ் வர்மா கூறும்போது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். 'இவையெல்லாம் உண்மையிலேயே நடைபெற்ற சம்பவங்கள். கட்டுக்கதைகள் அல்ல. இவற்றிற்கெல்லாம் என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. முழுமையாக நம்புங்கள், சார்'என்பார் என்னிடம் மகேஷ் வர்மா. மகாராஷ்ட்ரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், பீஹார், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஒரிஸா, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் என்று பல மாநிலங்களிலும் இருக்கும் ஆலயங்களைப் பற்றி மகேஷ் வர்மா எழுதி வருகிறார். இவரின் ஆலயங்கள் பற்றிய கட்டுரைகளுக்கு ஆன்மீக அன்பர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு.
மகேஷ் வர்மாவின் ஜோதிடம் சம்பந்தமான கணிப்புகளை முன்னணி ஆங்கில நாளிதழ்களே கேட்டு வாங்கி, பிரசுரித்திருக்கின்றன.
தொலைக் காட்சி உலகத்திலும் மகேஷ் வர்மாவின் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. ஜீ-தமிழ் சேனலில் கடந்த 4 வருடங்களாக மகேஷ் வர்மாவின் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 'ஒளிமயமான எதிர்காலம்'என்ற இவரின் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் காலை வேளைகளில் ஒளிபரப்பாகிறது. அதில் வாஸ்து, ஜோதிடம், சிரமங்களிலிருந்து விடுதலையாகும் வழி, கஷ்டங்களை நீக்க, செய்ய வேண்டிய பரிகாரங்கள், ராசிக்கும் மற்றும் லக்னத்திற்கும் அணிய வேண்டிய ரத்தினங்கள், நஷ்டத்தில் இயங்கும் தொழிற்சாலையை லாபத்துடன் நடத்துவதற்கான வழிமுறைகள், சீர் கெட்டுப் போன குடும்ப உறவுகளைச் சரி செய்வதற்கான வழிகள் என்று பல விஷயங்களைப் பற்றியும் மகேஷ் வர்மாவே நேரில் தோன்றி, எல்லோருக்கும் புரியக் கூடிய வகையில் ஒரு பள்ளி ஆசிரியரைப் போல மக்களுக்கு தெளிவாக விளக்கி கூறுவார்.
சென்னை யானை கவுனி பகுதியில் இருக்கும் மகேஷ் வர்மாவின் அலுவலகத்தில் இவரை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நான் சந்தித்து பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பேன். அறிவியல் உண்மைகள் பலவற்றையும் நான் அவரிடம் கூறி, 'ஜோதிடம் இதற்கு நேர் முரணாக இருக்கிறதே!இது எப்படி?' என்று கேட்பேன். அதற்கு மகேஷ் வர்மா 'நீங்கள் கூறும் அறிவியல் தகவல்கள் உண்மையாக இருக்கலாம். ஆனால், ஜோதிடமும், ஆன்மீகமும் மிகப் பெரிய கடல். இதை காலப் போக்கில் நீங்களே உணர்வீர்கள், சார்'என்பார் சிரித்துக் கொண்டே.