இதய நாயகி
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4576
ஞாபகங்களின் அடித்தட்டில் மூழ்கிப்போய்க்கிடந்த ஒரு விஷயம் அது. நிலவொளியில் மூழ்கியிருக்கும் தாஜ்மஹாலைப் போல அது இப்போது படிப்படியாகத் தெரிந்து கொண்டிருக்கிறது. அந்த காதல் கதை துக்கம் நிறைந்ததாக இருக்கலாம். இல்லாவிட்டால்... என்ன காரணத்தாலோ... அதன் உள்ளிருக்கும் விஷயத்தைப் பற்றி நான் அலசிப் பார்க்கவில்லை.
தாய்-தந்தையரை இழந்த குழந்தையைப்போல நான் அலைந்து கொண்டிருந்தேன். பிரம்மாண்டமான கட்டிடங்கள் நிறைந்த தெருக்கள் வழியாக, தங்களின் செயல்களில் கரைந்துபோன லட்சக்கணக்கான மனிதர்களை உரசிக்கொண்டு... விசாலமான நகரம் சத்தங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் அல்லவா? அது என்னை மிகவும் சிரமப்பட வைத்தது. எவ்வளவு முயற்சிகள் செய்தும் வேலை கிடைக்கவில்லை. எனக்கு மட்டும் ஒரு அபய இடம் இல்லை. உடலும் மனமும் மிகவும் சோர்வடைந்து போயின. அந்த மதிய வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக நான் சுற்றுலா மாளிகைக்குள் நுழைந்தேன் அங்குள்ள மக்கள் கூட்டத்தில் நான் நிற்கவில்லை. மரங்களின் நிழல் இருந்த பெஞ்சில் நான் உட்கார்ந்திருந்தேன். கிட்டத்தட்ட எனக்கு மிகவும் அருகில் ஒரு பெண் உருவம் இருந்தது. பளிங்குக் கல்லால் செய்யப்பட்டது அது. முழு நிலவு பெண் வடிவம் எடுத்ததைப்போல அது இருந்தது. உறுப்புகள் அனைத்தும் முழுமையான வளர்ச்சியில் இருந்தன. முந்திரி இலையால் நாணம் மறைக்கப் பட்டிருந்தது.
கலை நயமான அந்த அமைதியான அழகில் என்னுடைய கண்கள் பதிந்து விட்டிருந்தன. எனினும் சிந்தனைகள் முழுமையான கவலைகள் நிறைந்தனவாக இருந்தன. அது கிட்டத்தட்ட மூடுபனிக்கு நடுவில் தெரியும் நதியைப்போல எங்கு நோக்கியோ ஓடிக் கொண்டிருந்தது. நகரத்தின் இதயப் பகுதியில் இருக்கிறேன் என்ற நினைப்பே இல்லாமல் போனது. அப்போது இடி இடிப்பதைப் போன்ற குரலில் இந்தியில் அந்தக் கேள்வி:
“நீ யார்?”
சிவந்து வெளியே துருத்திக் கொண்டிருந்த இரண்டு கண்கள் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. செம்மண் படிந்த ஆடையை அணிந்திருந்த ஒரு பார்ஸி இளைஞன். தாங்க முடியாத வியர்வை நாற்றம்... அது மட்டுமல்ல -ஏதோ மோசமான மிருகத்தின் உடலில் இருந்து வரும் துர்நாற்றமும்... பயந்து, பதைபதைத்துப் போய், அதிர்ச்சியடைந்து நான் உட்கார்ந்திருந்தேன். ஒரு இடத்தில் நிற்காத அந்தக் கண்களில் ஒரு பிரகாசம் தெரிந்தது. கோபமாக இருந்த அந்த முகத்தில் ஒரு புன்னகை நிழலாடியது.
“ஓ... நீங்களா?”- சிரித்துக்கொண்டே அவன் எனக்குத் தன் கையைத் தந்தான். அந்த குண மாறுதலுக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று நினைத்து நான் ஆச்சரியப்பட்டேன். அந்த மனிதனை முதல் தடவையாக அப்போதுதான் நான் பார்க்கிறேன்.
“நான் அவன்னு நினைச்சிட்டேன்.”
“எவன்?”
தெரியாதா?”-ஆச்சரியத்துடன் அவன் என்னைப் பார்த்தான். உலகப் புகழ்பெற்ற அவனைப் பற்றி எனக்குத் தெரியாமல் இருப்பதை நினைத்துக் கிண்டல் செய்வதைப்போல அவன் சிரித்தான்.
“என் ஜட்கா வண்டிக்காரன்.”
“ஜட்கா வண்டிக்காரன்?”
“அவனேதான்... என் இதய நாயகியை...”
“இதய நாயகியை?”
அந்தக் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. அவன் எல்லாவற்றையும் மறந்து விட்டான் என்பதைப்போல எனக்குத் தோன்றியது. அவன் அந்த சிலையை நெருங்கிக் கொண்டிருந்தான். நாற்பது, ஐம்பது கண்களும் அவனைப் பின் தொடர்ந்தன. சில கண்கள் கேலியுடன் புன்னகைத்தன. வேறு சில கண்கள் எந்தவித உணர்ச்சிகளையும் காட்டாமல் இருந்தன.
அந்த பளிங்குச் சிலை புன்னகைக்க முயன்றது. ‘தில் பஹார்!’ -உணர்ச்சி பொங்க அவன் அழைத்தான். வேதனையுடன் அந்தக் கண்கள் மேலே பார்த்தன.
“நான் தாமதாக வந்துட்டேனா?” -மிகவும் பலவீனமான அந்தக் குரல்! நீரொழுகும் கண்களுடன் அந்த முகத்தையே பார்த்தவாறு அந்தப் பாதங்களில் அவன் தன் கன்னங்களை வைத்தான். பதில் கிடைக்காததால், அவன் மீண்டும் எழுந்து அந்த சிலையை மேலிருந்து கீழ்வரை மெதுவாகத் தடவினான். அதன் மார்பில் தன் முகத்தை வைத்து அவன் தேம்பித்தேம்பி அழுதான்:
“நாயகியே! இன்னைக்காவது என்னுடன் கொஞ்சம் பேசு...”