நாவலாசிரியரான பத்திரிகையாளர்!
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 3025
அழியாத கோலங்கள் - சுரா (Sura)
நாவலாசிரியரான பத்திரிகையாளர்!
என்னுடன் நின்று கொண்டிருப்பவர் சி. என். கிருஷ்ணன் குட்டி. என்னுடைய 34 வருட நண்பர். கடந்த 40 வருடங்களாக மலையாள திரைப்பட பத்திரிகையாளராக பணியாற்றி வருபவர். பத்து வருடங்களாக மலையாளத்தில் எழுத்தாளராக மாறி, நாவல்கள், குறு நாவல்கள் என்று நிறைய எழுதியிருக்கிறார். இதுவரை இவருடைய 12 நூல்கள் மலையாளத்தில் வெளிவந்திருக்கின்றன.
கிருஷ்ணன் குட்டி எனக்கு அறிமுகமானது 1980 ஆம் ஆண்டில். அப்போது நான் ' பிலிமாலயா' திரைப்பட மாத இதழின் இணை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஆசிரியர்: எம். ஜி.வல்லபன். வல்லபன், கிருஷ்ணன் குட்டிக்கு நெருங்கிய நண்பர். அந்தச் சமயத்தில் வல்லபன் ' தைப் பொங்கல்' என்ற படத்தை முதல் தடவையாக இயக்கிக் கொண்டிருந்தார். வல்லபனை மலையாளத்தில் அப்போது வந்து கொண்டிருந்த ' சித்ர கார்த்திக' என்ற பத்திரிகைக்காக பேட்டி எடுப்பதற்காக ' பிலிமாலயா' அலுவலகத்திற்கு வந்திருந்தார் கிருஷ்ணன் குட்டி. முதல் சந்திப்பிலேயே நானும், கிருஷ்ணன் குட்டியும் நெருங்கிய நண்பர்கள் ஆகி விட்டோம். அந்த நேரத்தில் நான் மலையாளத்திலிருந்து நாவல்கள், குறு நாவல்கள், சிறுகதைகள் ஆகியற்றை நிறைய தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தேன். அவை பல பத்திரிகைகளிலும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. எங்கள் இருவருக்குமிடையே நெருங்கிய நட்பு உண்டானதற்கு இதுவும் ஒரு காரணம்.
அதற்குப் பிறகு, கிருஷ்ணன் குட்டியை அவ்வப்போது பல இடங்களிலும் சந்திப்பேன். எப்போது சந்தித்தாலும், இருவரும் தேநீர் அருந்திக் கொண்டே நேரம் போவதே தெரியாமல் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்போம். மலையாள இலக்கியம், திரைப்படங்கள் ஆகியவற்றைப் பற்றி மிகுந்த ஈடுபாட்டுடன் உரையாடுவோம். தகழி, பஷீர், கேசவ தேவ், பொற்றெக்காட், எம். டி. வாசுதேவன் நாயர், எம். முகுந்தன், சக்கரியா,
காக்கநாடன், அடூர் கோபாலகிருஷ்ணன், கெ. ஜி. ஜார்ஜ்,
பரதன், பத்மராஜன் என்று பலரைப் பற்றியும் நாங்கள் பேசுவோம்.
ஒருமுறை பிரபல மலையாள திரைப்பட கதாநாயகனாக இருந்த ராகவனிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் கிருஷ்ணன் குட்டி. அப்போது ஒரு திரைப்படத்தை இயக்குவதாக இருந்தார் ராகவன். அவர் வைத்திருந்த கதையை நான் கேட்டு, என்னுடைய கருத்தைக் கூற வேண்டும். அதற்காகத்தான் நான் ராகவனின் வீட்டிற்கு அழைக்கப் பட்டிருந்தேன். சென்னை ட்ரஸ்ட் புரத்திலிருந்த ராகவனின் வீட்டிற்கு நான் சென்றபோது, அவருக்கு அருகில் கிருஷ்ணன் குட்டி இருந்தார். ராகவன் கதையைக் கூறினார். கதை நன்றாகவே இருந்தது. ' கதை மிகவும் அருமையாக இருக்கிறது. மாறுபட்ட கதைக் கரு. நிச்சயம் நன்றாக வரும். நீங்கள் இயக்கினால், உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்' என்றேன் நான். அதைக் கேட்டு ராகவன் மிகவும் சந்தோஷப்பட்டார். ' நல்ல ஒரு நண்பரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்கள்' என்று கிருஷ்ணன் குட்டியைப் பார்த்து கூறினார். அதற்குப் பிறகு ராகவனின் மனைவி உணவு பரிமாற, ராகவனுடன் அமர்ந்து நானும், கிருஷ்ணன் குட்டியும் உணவருந்தினோம். பின்னர் ஏதோ சில காரணங்களால் அந்த பட முயற்சி கைவிடப்பட்டு விட்டது. அது வேறு விஷயம். எனினும், அந்தச் சம்பவங்கள் இப்போதும் என் மனதில் பசுமையாக நின்று கொண்டிருக்கின்றன.
நீண்ட காலமாக கிருஷ்ணன் குட்டி மலையாளத்தில் வெளிவரும் ' சினிமா மங்களம்' என்ற திரைப்பட வார இதழுக்கு தமிழகத்தின் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். தொடர்ந்து தமிழ் திரைப்படங்களைப் பற்றியும், இங்குள்ள நடிகர்-நடிகைகளைப் பற்றியும், தொழில் நுட்ப கலைஞர்களைப் பற்றியும் அதில் இவர் எழுதி வருகிறார்.
பத்து வருடங்களுக்கு முன்பு, கிருஷ்ணன் குட்டி சிறிதும் எதிர் பாராமல், புதிய ஒரு அவதாரத்தை எடுத்தார். நாவல் எழுதும் முயற்சியே அது. இவர் எழுதிய நாவல்களை கேரளத்தின் முன்னணி பதிப்பகங்களில் ஒன்றான ' ஹரிதம் புக்ஸ்' தொடர்ந்து வெளியிட்டன. இப்போதும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.
நான் கிருஷ்ணன் குட்டி எழுதிய ஒரு நாவலை முதலில் தமிழில் மொழி பெயர்த்தேன். நாவலின் பெயர் ' மரணத்தின் சிறகுகள்' . இவர் எழுதியிருந்த அந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முற்றிலும் ஒரு மாறுபட்ட கதைக் கருவை வைத்து, அந்நாவலை எழுதியிருந்தார் கிருஷ்ணன் குட்டி. கதையைப் படித்து முடித்தவுடன் கிருஷ்ணன் குட்டிக்கு ஃபோன் பண்ணினேன். 'உங்களிடம் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளரிடம் இருக்க வேண்டிய அத்தனைத் திறமைகளும் இருக்கின்றன. உங்களுக்கு நாவல் எழுத்து நன்றாக வருகிறது. அருமையான எழுத்து நடை உங்களுக்கு வரம்போல கிடைத்திருக்கிறது. எப்போதோ நாவல் எழுத ஆரம்பித்திருக்கலாமே!ஏன் இவ்வளவு தாமதம்? இப்போது கூட ஒன்றுமில்லை. இனி ஆரம்பித்தால் கூட, நிறைய எழுத முடியும்' என்றேன் நான். அதைக் கேட்டு கிருஷ்ணன் குட்டி மிகவும் சந்தோஷப்பட்டார். நான் மொழி பெயர்த்த கிருஷ்ணன் குட்டியின் ' மரணத்தின் சிறகுகள்' புதினத்திற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து கிருஷ்ணன் குட்டி எழுதிய இன்னொரு புதினமான ' வேதகிரி' யையும் நான் தமிழில் மொழி பெயர்த்தேன். அதற்கும் வாசகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது.
கிருஷ்ணன் குட்டி மூத்த திரைப்பட பத்திரிகையாளராகவும், வரவேற்பு பெற்ற நாவலாசிரியராகவும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நீண்ட கால நண்பன் என்ற முறையில் அதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பெருமையாகவும். . .