ஒரு காதல் கதை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8210
ஒரு காதல் கதை
தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில் : சுரா
இது ஒரு சாதாரண காதல் கதை. அவளொரு கூலிவேலை பார்ப்பவனின் மகள். அவன் ஒரு பெரிய பணக்காரரின் மகன்.
அவன் படிப்பை முழுமை செய்துவிட்டு, தன் ஊருக்குவந்து சொந்தமாக சில வியாபாரங்களைச் செய்தவற்கு திட்டமிட்டிருக்கிறான். அதன் ஆரம்ப வேலைகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன. தன் தந்தையின் தோட்டத்தில் சில நாட்கள் ஓய்வெடுப்பதற்கும் சுற்றிப் பார்ப்பதற்கும் வந்தபோதுதான் அவன் அவளை முதல்முறையாகப் பார்த்தான்.
தோட்டத்திற்கு மிகவும் அருகிலிருந்த மலைச்சரிவில் அவளுடைய குடிசை இருந்தது. அவளுடைய தந்தை சாதாரண கூலிக்காரன். பாத்தி கட்டுவது, மரவள்ளிக் கிழங்கை நடுவதற்கு மண்ணைக் கிளறுவது இவைதாம் அவனுடைய வேலை. ஒரே மகள். தாயும் இருக்கிறாள்.
அந்த இளம்பெண் கிராமத்து லட்சுமியே உடலெடுத்து வந்ததைப்போல காட்சியளித்தாள். அவளைச் சுற்றி எப்போதும் ஒரு பிரகாச சூழ்நிலை நிலவிக்கொண்டிருந்தது. அந்த அழகு, பெண்மையின் அழகல்ல. சௌந்தர்யத்தின் அழகு. அந்த சிறப்புப் படைப்பில் வெறுக்கிற மாதிரி எதுவுமில்லை. மலர்ந்துகொண்டிருக்கும் ஒரு பன்னீர் மலர்! கொஞ்சுவதற்கென்றே இருப்பது. தொட்டால், அடுத்த நிமிடமே வாடிவிடும். முகர்ந்து பார்த்தால், அந்த மூச்சுக் காற்று பட்டே வாடிவிடும். உரக்க பேசினால் அவள் நடுங்கி விடுவாள். அவள் நடந்துபோகும்போது, பாதத்திற்குக் கீழிருக்கும் புற்களுக்குக்கூட அது ஒரு தொல்லையாக இருக்காது. அந்த அளவிற்கு மென்மையான ஒரு படைப்பு படைக்கப்பட்டதில்லை என்றே தோன்றுகிறது. அந்த இளம்பெண் இன்றுவரை சத்தம் போட்டுப் பேசியதில்லை. அவளுக்கு கோபம் என்பதே வராது.
அந்த ஏழைத் தாயும், தந்தையும் தங்களுக்குக் கிடைத்திருக்கும் பொக்கிஷத்தைப்பற்றி நன்கு புரிந்துவைத்திருந்தார்கள். அவர்கள் அவளைத் திட்டியதில்லை. அவளுக்கு முன்னால் இருக்கும்போது உரத்த குரலில் பேசியதுகூட இல்லை. அவளைப் பார்க்கும்போது, அவள் தன்னுடைய மகள்தானா என்று அந்த தந்தை ஆச்சரியப்படுவான். தன்னுடைய ரத்தம்தானா அது என்பதை அந்தத் தாயால் நம்பவே முடியவில்லை. வாழ்வின் அனைத்துமே அவள்தான் என்று நினைத்து அவர்கள் அவளை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், அவர்களுக்கு அவள் ஒரு பிரச்சினையாக இருந்தாள். குறிப்பிட்ட பருவத்தை அடையும்போது என்ன செய்வது?
மண்வெட்டி பிடித்துக் காய்த்துப்போன கரங்களில், இளந்தளிரைப் போல மென்மையாகவும், தாமரைக் கொடியைப் போன்ற மெதுமெதுவென்றிருக்கும் கையைப் பிடித்துக் கொடுப்பார்கள். அவளின் தந்தையைப்போன்ற ஒரு வேலைக்காரன்தானே அவளுக்கு கிடைப்பான்! அவளைக் காப்பாற்றக்கூடிய திறமை உள்ளவனாக இருக்க வேண்டுமென்றால், அவனுக்கு நல்ல ஆரோக்கியமும் உடல் பலமும் வேண்டும். அந்த தடிமாடனின் கைகளில் சிக்கி தன்னுடைய மகள் கசங்கிப் போய்விடுவாள் என்று அவன் பயந்தான். அவனுடைய அன்பைக்கூட அவளால் தாங்கிக்கொள்ள முடியாது.
அவன் பூவன்பழத்தையொத்த இளைஞர்களைப் பார்த்திருக்கிறான். அவர்கள் அனைவரும் வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கிடைப்பார்களா? வரதட்சணை கொடுக்க வேண்டுமே!
சில நேரங்களில் அந்த தந்தையின் மனம் பல விஷயங்களையும் அளவே இல்லாமல் சிந்தித்துக் கொண்டிருக்கும் இந்த ஆண்கள் அனைவரும் முரடர்கள். நல்ல உடல் பலத்தைக் கொண்டவர்கள்... அவன் வேலைக்காரனாக இருந்தாலும், பெரிய வீடுகளில் பிறந்தவனாக இருந்தாலும் அவளை கசக்கிப் பிழியக் கூடியவனாகத்தான் இருப்பான். இதுவரை தன் மகளுக்குப் பொருத்தமாக இருக்கும் ஒரு இளைஞனை அவன் பார்த்ததில்லை. அவளை யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
அப்போது அவனுடைய மனைவி மெதுவாக சிரித்துக்கொண்டே கூறுவாள் :
‘என்ன... பைத்தியக்காரத்தனமாக பேசிக்கொண்டிருக்கீங்க! பொண்ணை நெரிச்சு கொன்னுடுவாங்களா?’
பிறகு ஒரு வசீகரமான சிரிப்பைக் கலந்துகொண்டே அவள் தொடர்ந்து கூறுவாள் : ‘அவளும் நெரிப்பாள். அதற்கான பலம் அவளிடமும் இருக்கு!’
எனினும், அந்த தந்தை தன் மனதிற்குள் சில நேரங்களில் சிந்திப்பதுண்டு - இந்த அளவிற்கு தன்னுடைய மகள் பேரழகு படைத்தவளாக இருந்திருக்க வேண்டியதில்லை என்று.
காட்டருவியைவிட்டு அவள் குளித்து முடித்து, படிகளில் ஏறிச் செல்வதை பேபி- அதுதான் அந்த இளைஞனின் பெயர் - பார்த்தான். அப்போது அவன் எதிர்கரையில் நின்றுகொண்டிருந்தான். அவள் வழியில் திரும்பி மறைந்துவிட்டாள். அந்த இளைஞனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.
அந்த வன தேவதை யாராக இருக்கும்?
சற்று முன்பு அங்கு வந்துசேராமல் போய்விட்டோமே என்று அவன் கவலைப்பட்டான். அங்கு சுற்றிலும் யாருமில்லை. அவள் குளித்துக்கொண்டிருந்தாள்.
அவனுடைய ஒழுக்கம் நிறைந்த உணர்வுகள் கிளர்ந்தெழுந்தன. கட்டுப்பாட்டைவிட்டு பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் மனதைப் பற்றிய புரிதல் அவனுக்கு இருந்தது. அந்த ஆளரவமற்ற இடத்தில் ஒரு இளம்பெண் குளித்துக்கொண்டு நின்றிருக்கும்போது, தான் எதற்கு அங்கு வரவேண்டும்? யாரோ மனதிற்குள் இருந்து கொண்டு அவனிடம் கேட்டார்கள். அப்படியென்றால், அவள் ஈரமான துணியை அணிந்து நின்றுகொண்டிருப்பதைப் பார்க்க வேண்டுமா?
எனினும், பேபியின் மனதிற்குள்ளிருந்து அந்தக் காட்சி மறையவேயில்லை. அந்த அழகுச் சிலை யார்? அதை சற்று கேட்டுத் தெரிந்துகொள்வதில் என்ன தவறியிருக்கிறது?
‘நீங்கள் யார்?’
இப்படி கேட்பது ஒழுக்கத்திலிருந்து தவறியதாகுமா என்ன?
தோட்டத்தின் ஒரு பக்கத்தில், கிளைகள் பரப்பி பரந்து நின்றுகொண்டிருந்த மாமரத்தின் ஒரு கிளையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு பேபி அமர்ந்திருந்தான். வாசிப்பதற்கு மனம் வரவில்லை. அந்த உருவம் மனதைவிட்டு மறையவே இல்லை. அது மட்டுமல்ல; அந்த இளைஞனின் மனம் கட்டுப்பாட்டைவிட்டு பல இடங்களுக்கும் போய்விட்டிருந்தது.
சிறிதும் எதிர்பாராமல் அங்கு... கீழே இருந்த சிறிய குடிசையின் பின்பகுதியில், அடர்த்தியாக வளர்ந்து நின்றிருந்த மிளகாய்ச் செடியிலிருந்து அவள் மிளகாயைப் பறித்துக்கொண்டிருப்பதை அவன் பார்த்தான். குதித்து கீழே இறங்கினான். அவளுடைய தாய் அழைக்க, அவள் போய்விட்டாள்.
மறுநாள் அந்த படித்துறையின் எதிர்கரையிலிருந்த புதருக்குள், முன்பே வந்து அவன் மறைந்திருந்தான். அவள் குளிப்பதற்காக வந்தாள். குளித்துவிட்டுத் திரும்பிச் சென்றாள்.
மிக உயர்ந்த விஷயங்களை மட்டுமே சிந்திக்கும் மனநிலையைக்கொண்ட ஒரு இளைஞன், ஒரு இளம்பெண் குளிப்பதை மறைந்து பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். எப்படிப்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அவனிடம் ஏற்பட்டிருக்கும்! வேறொரு ஆள் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தால், அந்தச் செயலும் தன்னையும் அறியாமல் அவன் வெளிப்படுத்திய சேட்டைகளும் எந்த அளவிற்கு கேலிக்குரியவையாக ஆகியிருக்கும்! மனிதன் மிருகமாக ஆவதைப் பார்க்கலாம்.
ஆனால், அதற்கு அவனைக் குறைசொல்ல வேண்டுமா என்ன?
பணக்காரரின் மகனாகப் பிறந்தான். தாராளமாகப் பணத்தை செலவு செய்தான். எனினும், எந்த கெட்ட வழிகளிலும் அவன் சென்றதில்லை. பணம் வரக்கூடிய மோசமான சூழ்நிலைகளிலிருந்து அவன் விலகியே வளர்ந்தான். உயர்ந்த ஒரு பண்பாட்டுடன் அவன் இருந்தான். பேபி ஒரு பிரம்மச்சாரியாகவே இருந்தான்.