
தான் மட்டுமே குற்றவாளி அல்ல... அவள் ஒத்துழைக்காமல் இருந்திருந்தால், அது போதாதா? ஆண்கள் அப்படியெல்லாம் நடக்கத்தான் செய்வார்கள். பெண்கள் அல்லவா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்? அப்படியென்றால் அவளும், அவளுடைய தாயும் தந்தையும் வேண்டுமென்றே வலைவிரித்து ஒரு நல்ல பையனைப் பிடித்திருக்கிறார்கள் என்று நினைக்கக் கூடாதா என்ன?
இல்லை... அவள் காதலித்தாள். அவன் அவளையும். எல்லா விஷயங்களையும் சவாலாக எடுத்துக்கொண்டு அவளை ஏற்றுக்கொண்டால் என்ன? தந்தையிடமிருந்து எந்தவொரு சொத்தும் கிடைக்க வேண்டாம். சொந்தக் காலில் நின்று வாழ்க்கையை ஆரம்பித்தால் என்ன? அந்த வாழ்க்கைக்கு குறிப்பிட்டுக் கூறும்படியான இனிமை இருக்கிறது.
நகரத்தில் பலரையும் அவன் அணுகிப் பார்த்தான் பணத்திற்காக. யாரும் அவனுக்கு பணம் கொடுப்பதற்குத் தயாராக இல்லை. ஒரு ஆள பணம் இல்லை என்று கூறினார். இன்னொரு ஆள் அவனுடைய தந்தை சொன்னால் பணம் தருவதாகக் கூறினார். நான்காவதாக ஒரு ஆள் நேரடியாகவே கேட்டார் - தந்தை கைகழுவி விட்டார்... அவனுக்கு எந்த உறுதியை வைத்துக்கொண்டு பணம் கொடுப்பதென்று.
ஒரு நண்பன் அவனிடம் கூறினான் :
‘காரியம் நடக்க வேண்டுமென்றால், உன் அப்பா சொன்ன பெண்ணை திருமணம் செய்துகொள். பணத்தை வாங்கு. பிஸினஸ் செய். பணத்தை சம்பாதி...’
அந்தக் காதல் கதையை எப்படி மறப்பதென்று பேபிக்கு தெரியவில்லை. அவனுடைய நண்பன் அதற்கு வழி கூறினான்.
“திருமணம் செய்து கொள்கிறாய் என்பதற்காக அந்த காதலை விட்டெறிய வேண்டுமா என்ன?”
ஒரு துரும்பு கிடைத்ததைப்போல பேபி உணர்ந்தான்.
ஆமாம்... அந்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி, அவர்களுடைய நம்பிக்கைக்கு மோசம் உண்டாகாமல், அந்தக் காதல் உறவைக் கைவிடாமல் தொடர்ந்தால் என்ன? இன்னொரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிவிட்டோம் என்பதற்காக, அவளைக் காதலிக்கக் கூடாதா என்ன? அவனுக்குத் தெரிந்திருந்த எல்லாருக்கும் அதைவிட குற்றங்கள் நிறைந்த உறவுகள் இருந்தன.
இயந்திரப் பொருட்கள் வந்து சேர்ந்துவிட்டதாகத் தகவல் வந்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பேபி தன்னுடைய தந்தையை நேரில் சந்திக்கிறான். அவர் எதுவும் பேசவில்லை. மகனைப் பார்த்ததாகவே அவர் காட்டிக்கொள்ளவில்லை. என்ன கூறுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், தன் தந்தையிடம் அவன் பேசியாக வேண்டும்.
நிசப்தம் அந்த சூழலின் இறுக்கத்தை அதிகரித்துக் காட்டியது. பேபிக்கே தெரியாமல் அவனுடைய நாவில் இருந்து ஒரு வாக்கியம் வெளியே வந்து விழுந்தது.
“அந்த திருமணத்தை நிச்சயம் செய்யணும்.”
இயந்திரத்தனமாக அவனுடைய தந்தை சொன்னார்.
“போய் எல்லாவற்றையும் சரி செய்.”
அந்த அடர்ந்த காட்டில் எதிரொலித்த அழுகைச் சத்தம் இப்போது கேட்கவில்லை. பேபியின் காதுகளுக்குள் ஒரு சங்கொலி நிற்காமல் உரத்து ஒலித்துக் கொண்டேயிருந்தது. ஆரம்பிக்கப் போகிற தொழிற்சாலையின் சங்கொலியாக இருக்கலாம்.
தான் என்ன கூறினோம் என்பதை அவன் சிந்தித்துப் பார்த்தான். அவனுடைய தந்தையைத் தவிர வேறு யாரும் அதைக் கேட்கவில்லை.
பேபி தளர்ந்து போய்விட்டான். தனக்குப்ப பிரியமான ஏதோவொன்றை இழந்துவிட்டதைப்போல அவன் உணர்ந்தான். ஆனால், ஒரு தீர்மானத்திற்கு வந்த நிம்மதி இருந்தது. எனினும், நடைப்பிணத்தைப்போல அவன் விட்டிலிருந்து வெளியேறி நடந்தான்.
அந்த நினைவுகளை எப்படி புதைத்து மூடுவது?
அதற்குப் பிறகும் ஒருமுறை பேபி அந்த கிராமத்திற்குச் சென்றான். ஒருவேளை தன் நண்பன் கூறிய திட்டத்தை விளக்கிக் கூறுவதற்காக இருக்கலாம். அதற்குப் பிறகு பயனற்ற வாக்குறுதிகளையும் சபதங்களையும் கூறுவதற்காகவும் இருக்கலாம். அந்த சபதங்களை நிறைவேற்றுவதற்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருக்கிறதா என்ன? அவற்றிற்கு உண்மைத்தன்மை இருக்கிறதா? அந்த வகையில், அவனது ஜாதியின் புனிதத்தைக் காட்டும் முகத்தில் மிதிக்கும் குணத்தில் சிக்கி, அந்த நல்ல இளைஞன் மேலும் மேலும் கட்டப்பட்டுக் கிடக்கலாம். மனைவி இருக்க, வைப்பாட்டியாக வைத்துக் கொள்கிறேன் என்று! திருமணத்தின் புனிதத்தன்மையை இதைவிட கேலி செய்வதற்கு இருக்கிறதா என்ன? இல்லாவிட்டால், எல்லாவற்றையும் மனதிற்குள் மறைத்து வைத்துக்கொண்டு, அவளை மேலும் ஒருமுறை பயன்படுத்திக் கொள்வதற்காக சென்றிருக்கலாம். அதுவும் இல்லாவிட்டால், அவள்மீது குற்றம் சுமத்திவிட்டு, அவளை விலைமாது என்று கூறுவதற்காகச் சென்றிருக்கலாம்.
எது எப்படியோ, ஆன்மாவின் புனிதத்தன்மையை இழந்தவனாக அவன் திரும்பிவந்தான். அந்த முகத்தில் பிரகாசம் இல்லை.
முள்கிரீடம் அணிந்து சிலுவையில் தொங்க விடப்பட்டு நின்றுகொண்டிருக்கும் அந்த அன்பு நிறைந்த புனித உருவத்திற்கு முன்னால், ஒரு வாழ்க்கையை பலியிடும் ஆரம்ப வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாதிரியார் கேட்டார் :
“சாக்கோவின் மகன் பேபி என்று அழைக்கப்படும் ஜார்ஜ், உனக்கு யோகன்னாவின் மகள் க்ளாராவை திருமணம் செய்துகொள்வதற்கு சம்மதமா?”
கண்களில் நிறைந்து நின்றிருந்த நீரின் வழியாக அந்த வடிவத்தை பேபி பார்த்தான். அந்த உதடுகள் மவுனமாக இருந்தன. பாதிரியார் தன்னுடைய கேள்வியை திரும்பவும் கேட்டார். பேபியின் காதில் விழுந்தது ‘தேவஸ்யாவின் மகள் மரியாவைத் திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதமா? என்றுதான். உயிர் வந்ததைப்போல உணர்ந்த அவன் சொன்னான்:
“ஆமாம், ஃபாதர்...”
அந்த இளம்பெண்ணும் சம்மதம் சொன்னாள்.
அதே ஞாயிற்றுக்கிழமை அந்த கிராமத்திலிருந்த தேவாலயத்தில் இன்னொரு ‘சம்மதம் கேட்கும் நிகழ்ச்சி’ நடைபெற்றுக் கொண்டிருந்தது. மரியா, புனித மேரியின் முன்னால் அழைத்துக்கொண்டுபோய் நிறுத்தப்பட்டாள். அந்த அன்னையும் அவளுடன் சேர்ந்து தேம்பித் தேம்பி அழுவதைப்போல தோன்றியது. மணமகன் தூரத்திலுள்ள ஒரு சுற்றுலா மாளிகையில் வேலை பார்ப்பவன். ஒருமுறையல்ல; பலமுறை மரியாவிடம் கேட்கப்பட்டது. “பேபியைத் திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதமா?” என்று காதில் விழுந்ததைப்போல உணர்ந்திருக்க வேண்டும்... அவளும் ‘ஆமாம்... ஃபாதர்’ என்று கூறினாள்.
பல வருடங்கள் கடந்தோடின. மலைப்பகுதியில் ஒரு சுற்றுலா ஊரின் விருந்தினர் மாளிகையில், ஒரு பெரிய தொழிலதிபர் வந்து சேர்ந்திருந்ததன் ஆரவாரம் நிலவிக்கொண்டிருந்தது. இரவு நன்கு இருட்டிய பிறகு, ஒரு அறையின் வாசல் வழியாக தலையை முழுமையாக மூடி மறைந்திருந்த ஒரு உருவம் உள்ளே நுழைந்தது. அந்தக் கதவு மூடியது.
சிறிது நேரத்திற்குப் பிறகு மதுவில் மூழ்கிய ஒரு வெடிச்சிரிப்பு!
“டாலி...”
அவள் சிலையைப்போல நின்றுவிட்டாள். குடித்து குதித்துக் கொண்டு நின்றிருந்தவன் அவளுடைய பேபி!
அந்தப் பெண்ணின் அனைத்து அழகுகளும் போய்விட்டன.
ஆமாம்... அந்த அழகு... பிறகு ஏன் இல்லாமற் போனது?
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook