ஒரு காதல் கதை - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8213
எல்லாவற்றையும் இழந்துவிட்ட ஒருவனைப்போல பேபி திரும்பி வந்தான். அவன் தன்னையே வெறுத்தான். எந்த அளவிற்கு கேவலமான முறையில் அவன் நடந்திருக்கிறான்? அதைச் செய்வதற்கு எப்படி மனம் வந்தது? சாத்தானின் வெறி இந்த அளவுக்கு தனக்குள் இருப்பதை உணர்ந்த ஒரு மனிதனைப் பார்க்கவே முடியாது. அவன் தன்னையே ஆராய்ந்தான். அந்த செயலைச் செய்வதற்கு தனக்கு எப்படி மனம் வந்ததென்று அவனுக்கே தெரியவில்லை. குரங்கைப்போல பற்களை இளித்துக்கொண்டு, வலிய நின்றுகொண்டு வெறித்துப் பார்ப்பது ! என்ன ஒரு கேவலமான செயல்! அதைச் செய்வதற்கும் தயாராக இருந்தானே!
அப்படியென்றால் சட்டபடி அவளை நீ உனக்குச் சொந்தமானவளாக ஏன் ஆக்கிக்கொள்ளக்கூடாது என்று யாரோ மனதிற்குள்ளிருந்து கேட்டார்கள்: ‘நீ எல்லாவற்றையும் ஒளிந்திருந்து பார்த்தவன்தானே? அவ்வாறு பார்த்த நீ அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?
எனினும், பரந்து கிடந்த அந்த மாமரத்தின் கிளையில், ஒரு புத்தகத்துடன் அவன் எப்போதும் உட்கார்ந்திருப்பான். படித்துறைக்குச் செல்வதற்கான நேரம் வரும் போது, மனதிற்குள் ஒரு பெரிய போராட்டமே நடக்கும். ‘ஒரு முறை பார்த்துவிட்டாய் அல்லவா? நீ திருமணம் செய்துகொள்வதற்கு கடமைப்பட்டவன் அல்லவா?’ என்ற ஒரு கேள்வி. சாத்தானிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் தீவிரமான முயற்சி இன்னொரு பக்கம்... அவன் போகமாட்டான்.
ஆனால், அவன் அந்த மரக்கிளையில் அமர்ந்திருக்கும் போது, அவன் பார்க்கமுடியாத ஒரு இடத்தில், மிளகுக் கொடிக்குக் கீழே... களை எடுப்பதைப்போலவோ, இஞ்சிக்கு உரம் போடுவதைப்போலவோ நடித்தபடி ஒருத்தி நின்றுகொண்டு, அவனை இலைகள் கொண்ட கிளைகளின் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“மரியா...” என்று அவளுடைய அன்னை அழைத்த போது, அவள் அதைக் கேட்டாள். அப்போதுதான் பேபி பார்த்தான்... ஒரே இடத்தில்... பல நாட்களாக அதே நிலையில் அவளை அவன் பார்த்தான்.
தனக்கு விருப்பமான ஆயிரம் நினைவுகளை அசை போட்டவாறு அவன் அங்கிருந்து கிளம்பினான். போவதற்கு அவனுக்கு சிறிதும் மனம் வரவில்லை. ஆனால், போகாமல் இருக்க முடியாது. அவன் தொழிலைத் தொடங்கி, வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகிறான். அனைத்திற்கும் பணம் வேண்டும் என்ற விஷயம் அவனுக்குத் தெரியும். பணம் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது. பணம் சம்பாதிப்பதுதான் எல்லா காரியங்களையும்விட முக்கியமான பிரச்சினை. அவன் இளம் வயதிலிருந்தே படித்த பாடம் அது. பணம் உண்டாக்குவதற்கு சில கணக்குகளும், முறைகளும், உறுதியான முயற்சிகளும் கட்டாயம் வேண்டும். அந்த வகையில் அவன் வந்தபோதே, எப்போது திரும்பிச் செல்ல வேண்டும் என்று மனதிற்குள் தீர்மானம் செய்துவைத்திருந்தானோ, அதே நாளிலும் நேரத்திலும் அவன் திரும்பிச் சென்றான்.
ஆனால், போகும் வழியில் அவனனுடைய மனதில் வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களல்ல நிறைந்து நின்றிருந்தவை. அவளுடைய அழகான சிரிப்பு காதுகளுக்குள் கேட்டுக்கொண்டே இருந்தது. அந்தக் கிளியின் கொஞ்சல்களை எத்தனை முறை கேட்டாலும், அவனுக்கு போதும், போதும் என்றே தோன்றவில்லை. அவன் அவளைத் தொட்டான். இல்லை... முந்தைய நாள் அவள் கன்னத்தில் கொடுத்த முத்தம் தந்த சுகம் இப்போதுகூட மறையாமலே இருந்தது. அதன் மயக்கவைக்கும் உஷ்ணம் உண்டாக்கிய உணர்வு இப்போதும் கன்னத்தில் அப்படியே இருக்கிறது.
ஆமாம்... அவர்கள் மறைவிடத்தில் சந்தித்தார்கள். காதல் வயப்பட்ட இளம்பெண்ணும் இளைஞனும் சந்திப்பார்கள். எப்படியும் அது நடக்கும். அது விபச்சாரமல்ல. அவளுக்கு அவன் ஒரு செல்லப் பெயர் வைத்தான்... ‘டாலி’ என்று.
அந்த வேலைக்காரனான தந்தை - பாவம் அவன் அந்த இளைஞனை நம்பினான். ஒன்றிரண்டு வார்த்தைகளை மறக்க முடியாது.
‘நீங்கள் உயர்ந்தவர்கள்... நீங்க நினைச்சாலும், சில விஷயங்கள் நடக்காது.’
இன்னொரு வார்த்தை:
‘என் தங்க மகளை சிரமப்படுத்திவிடக்கூடாது, குழந்தை!’
எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சிந்தித்துப் பார்த்த போது அவனுக்குத் தோன்றியது - பணம் உள்ளதால் இருக்கக்கூடிய வசதிகள் - அது படைத்துவிடக்கூடிய சூழ்நிலைகள்தாமே இதுவெல்லாம் என்று- ஆனால், அவள் காதலித்தாள்! பணம் இல்லாவிட்டாலும், அவள் காதலிப்பாள்!
அவனும் அவளைக் காதலித்தான். அவள் இல்லாமலிருக்கும் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை நினைத்துப் பார்ப்பதற்குக்கூட அவனால் முடியாது. அது எதுவுமே இல்லாமல் வெறுமையாக இருக்கும். இல்லை... வாழ்க்கையை முழுமையாக வாழவேண்டுமென்று அவன் நினைத்தான். வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும். அதற்கு அவன் ஒரு திட்டமே வகுத்தான்.
ஒரு மிகப்பெரிய தொழிற்சாலையை உருவாக்குவதற்கு அவன் முயற்சி செய்தான். ஆரம்ப நிலையில் கொஞ்சம் பணத்தையும் தயார் பண்ணினான். நகரத்திற்கு வந்து அவன் அதற்கான முயற்சியில் மூழ்கினான். அந்த ஏராளமான வேலைகளுக்கு மத்தியில் ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும்போது, அந்த அழகான வடிவத்தைப் பற்றி அவன் நினைப்பான். இயந்திரப் பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்தான். ஆரம்ப நிலையில் கொஞ்சம் பணத்தையும் தயார் பண்ணினான். நகரத்திற்கு வந்து அவன் அதற்கான முயற்சியில் மூழ்கினான். அந்த ஏராளமான வேலைகளுக்கு மத்தியில் - ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும்போது, அந்த அழகான வடிவத்தைப் பற்றி அவன் நினைப்பான். அவனை நினைத்துக் கொண்டு அவள் அமர்ந்திருப்பாள். அவளை மனதில் நினைத்துக்கொண்டு கண்கள் மூடியவாறு, மூச்சை அடக்கிக் கொண்டு அவன் அமர்ந்திருப்பான்.
அந்த இளைஞனின் முதல் அனுபவம்... அதற்கு பலம் இல்லாமல் போகுமா? பல நேரங்களில், யாருக்கும் தெரியாமல் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கிகொண்டு அங்கு போய்வந்தாலென்ன வென்று அவன் நினைப்பான். ஆனால், அவன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்வான். தான் ஈடுபட்டிருக்கும் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று அவன் நினைப்பான்.
அடிக்கடி அவன் கடிதங்கள் எழுதுவதுண்டு ஆனால், எந்தவொரு கடிதம் எழுதியும், அவனுக்கு சந்தோஷமே உண்டாகவில்லை என்ன காரணம்? அவளுடைய தந்தைக்குதான் அவன் கடிதமே எழுதினான். அதில் ஒரேயொரு வாக்கியம்தான் அவளைப்பற்றி எழுத முடியும். ‘டாலி நலமாக இருக்கிறாள் என்று நம்புகிறேன்’ என்பதே அது. அவளுக்கு எழுத முடிந்தால் எழுதியிருப்பான் - ஒரு முத்தத்தை அனுப்பி வைத்திருப்பான்.
எங்கோ தூரத்திலிருக்கும் ஒரு கிராமப் பகுதியில், அன்பும் மோகங்களும் நிறைந்த உணர்வுகளைக் கொண்ட நினைவுகளை மனதில் வைத்துக்கொண்டு அவள் இருந்தாள். பரந்து கிடக்கும் உலகில் அவளுடைய காதலன் அப்படி நடந்துகொண்டிருப்பதை அவள் பார்க்கிறாள். அந்த காதல் காட்சிகள் நடைபெற்ற இடங்களுக்குச் செல்லும்போது, அவளுடைய இதயம் மெதுவாக கேட்கும்: