மக்கள் நலனுக்காக பாடுபடும் திரைப்பட இயக்குநர்!
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 3026
அழியாத கோலங்கள் - சுரா (Sura)
மக்கள் நலனுக்காக பாடுபடும் திரைப்பட இயக்குநர்!
நான் என் வாழ்க்கையில் சந்தித்த மிகவும் அருமையான மனிதர்-சுரேஷ் மேனன். 'புதிய முகம்' படத்தின்போது இவர் எனக்கு அறிமுகமானார். முதல் நாளன்றே அவரை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. என்னை அவருக்கும். சுரேஷ் மேனன் கதாநாயகனாக நடிக்க, ரேவதி கதாநாயகியாக நடித்தார். வினீத், கஸ்தூரி ஆகியோரும் நடித்தார்கள்.
சுரேஷ் மேனன் இயக்கி, தயாரித்த அப்படத்திற்கு உரையாடல் எழுதியவர் கே. எஸ். அதியமான். இசை :ஏ. ஆர். ரஹ்மான். பாடல்கள்:வைரமுத்து. நான் அந்த படத்திற்கு மக்கள் தொடர்பாளர். அப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது. நானும் அங்கு சென்றிருந்தேன். சுரேஷ் மேனன், ரேவதி, நாசர், சின்னி ஜெயந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.
ஒருநாள் படப்பிடிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த வித்தியாசமான பொருட்களைப் பார்த்து சுரேஷ் மேனனிடம் 'இந்த படத்தின் ஆர்ட் டைரக்டர் யார்?மாறுபட்ட ரசனை கொண்டவராக இருப்பார் போலிருக்கிறதே!'என்றேன். சுரேஷ் மேனன் புன்னகைக்கும் முகத்துடன் இருந்த ஒரு இளைஞரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்தான் இன்று தேசிய விருதுகள் வாங்கி சாதனை புரிந்து கொண்டிருக்கும் சாபு சிரில். பிரியதர்ஷனின் மலையாள, ஹிந்தி படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக பணியாற்றியிருக்கும் சாபுவிற்கு முதல் தமிழ் படமே 'புதிய முகம்'தான்.
அடுத்து 'புதிய முகம்' சென்னையிலும், இலங்கையிலும் வளர்ந்தது. ரகுவரன், ராதாரவி, ரவிச்சந்திரன்,
ராக்கி ஆகியோரும் நடித்தார்கள். 'புதிய முகம்'திரைக்கு வந்து மிகச் சிறப்பாக ஓடியது. ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான நேற்று இல்லாத மாற்றம், கண்ணுக்கு மை அழகு ஆகிய பாடல்களை மறக்கத்தான் முடியுமா?
தொடர்ந்து சுரேஷ் மேனன் 'பாச மலர்கள்' என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். அரவிந்த்சாமி, ரேவதி,
ரகுவரன் ஆகியோர் இணைந்து நடித்தார்கள். இரண்டே இரண்டு காட்சிகளில் அஜீத் நடித்தார். அப்படத்திற்கு இசை:வீ. எஸ். நரசிம்மன். பாடல்கள்:வைரமுத்து. நான் மக்கள் தொடர்பாளர். நல்ல படம். ஆனால், திரைக்கு வந்தபோது, எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. எனினும், அதில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த காயத்ரி, துர்கா, தீபா வெங்கட் ஆகியோர் பின்னர் வளர்ந்து தொலைக்காட்சித் தொடர்களில் முத்திரை பதித்தார்கள்.
அடுத்து சுரேஷ் மேனன் சன் தொலைக் காட்சியில் நிறைய தொடர்களைத் தயாரித்தார். ரேவதி, டாக்டர்ஸ், நிறங்கள், நிஜங்கள், கங்கை, சின்னச் சின்ன ஆசை, பூம் பூம் ஷக்கலக்கா என்று பல வெற்றித் தொடர்கள். இவை தவிர, 'யுத்தம்'என்ற டெலி ஃபிலிம். இவை அனைத்திற்கும் நான்தான் பி. ஆர். ஓ.
அடுத்து ரேவதி தென் சென்னை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நாடாளுமன்ற தேர்தலில் நின்றார். சுரேஷ் மேனன் அவரை ஊக்கப்படுத்தினார். நான் ரேவதியுடன் தொகுதி முழுக்க ஒரு மாத காலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். ரேவதி கணிசமான வாக்குகளைப் பெற்றார்.
அடுத்து வாஜ்பாய் பிரதம அமைச்சராக ஆக வேண்டும் என்பதற்காக ரேவதி தமிழகம் முழுக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருடன் தமிழகம் முழுவதும் சுரேஷ் மேனனும், நானும் சென்றோம். வாஜ்பாய் பிரதமராக வந்து விட்டார்.
ரேவதியின் இயக்கத்தில் 'மித்ர்-மை ஃப்ரண்ட்' என்ற ஆங்கில படத்தை சுரேஷ் மேனன் தயாரித்தார். அப்படத்திற்கு நான் பி. ஆர். ஓ. அமெரிக்காவில் படமாக்கப்பட்ட அப்படத்திற்கு குடியரசுத் தலைவரின் விருது கிடைத்தது. தொடர்ந்து சுரேஷ் மேனன் ரேவதி இயக்கத்தில் 'ஃபிர் மிலேங்கே'என்ற பெயரில் ஹிந்திப் படத்தைத் தயாரித்தார். அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்தார். அதற்கடுத்து சுரேஷ் மேனன், பிரியதர்ஷனின் இயக்கத்தில் இரண்டு ஹிந்திப் படங்களைத் தயாரித்தார்.
பின்னர் படத் துறையிலிருந்து விலகி, இரண்டு ஹை-டெக் ஹோட்டல்களை நடத்தினார். பிறகு அவற்றை விற்று விட்டார். அவர் அவற்றை நடத்தும்போது, நான் அங்கு சென்று சாப்பிட்டிருக்கிறேன். அதற்கு பி. ஆர். ஓ. வாகவும் பணியாற்றியிருக்கிறேன்.
அதற்கடுத்து சுரேஷ் மேனன் ஆலப்புழை வேம்பநாட்டு காயலில் படகு வீடு கட்டி சில மாதங்கள் ஓட விட்டார். பின்னர் அதையும் விற்று விட்டார்.
கடந்த சில வருடங்களாக என் நண்பர் சுரேஷ் மேனன் பொது சேவையில் இறங்கி விட்டார். சென்னையில் பல இடங்களில் சுரேஷ் மேனனின் திட்டப்படி செயல்பட்டு, போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக கூற வேண்டுமானால்-கிண்டி, சைதாப்பேட்டை, ராஜ் பவன் பகுதி. சுரேஷ் மேனனின் திட்டப்படி எத்தனை சிக்னல்கள் விலக்கப்பட்டிருக்கின்றன!இதன் மூலம் எவ்வளவு நிமிடங்கள் மிச்சப்படுத்தப்பட்டிருக்கின்றன!போக்குவரத்து காவல்துறை செயல்படுத்தியதுதான் தெரியும். அது சுரேஷ் மேனனின் மூளையில் உதித்த திட்டம் என்பது யாருக்காவது தெரியுமா?இதைப்போல சென்னை நகரத்தில் பல இடங்களிலும் சுரேஷ் மேனனின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், அவர் போட்ட ப்ளான் என்று மக்களுக்கு தெரியாது. சுரேஷ் மேனனும் அதைப் பற்றி கவலைப்படவில்லை. இன்னும் கைவசம் ஏகப்பட்ட திட்டங்களை வைத்திருக்கிறார். அரசாங்கம் காது கொடுத்து கேட்டால், தமிழகம் முன்னேறும்.
முல்லை பெரியார் பிரச்னையை தீர்க்க சுரேஷ். மேனனிடம் அருமையான திட்டம் இருக்கிறது. காது கொடுத்து கேட்க போவது யார்?
சுரேஷ் மேனனின் கனவு திட்டம் -ஹை-டெக் டாய்லெட்கள். எங்கு வேண்டுமானாலும் அதை அமைக்கலாம். . . இடம் மாற்றலாம். , நகர்த்திச் செல்லலாம். தமிழகத்தையே மிக. . மிக. . . சுத்தமான தமிழகமாக ஆக்கலாம். 'இந்த திட்டத்தை கட்டாயம் நிறைவேற்றியே ஆவேன்'என்று கூறுகிறார் சுரேஷ் மேனன்-உறுதியான குரலில். செயல்படுத்துவோரின் செவிகளில் அவரின் குரல் விழுமா?விழ வேண்டும். தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டும்.
ஆனால், ஒன்றை மட்டும் என்னால் உரத்த குரலில் கூற முடியும்-நான் அன்பு வைத்திருக்கும் என் இனிய நண்பர் சுரேஷ் மேனன் பலன் கருதாமல், மக்கள் நலனுக்காக தீட்டி வைத்திருக்கும் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தா விட்டால், இந்திய அரசு செயல்படுத்தும். அப்படி நடக்கப் போவதை நீங்கள் எல்லோரும் பார்க்கத்தான் போகிறீர்கள்!