அன்னக்குட்டி
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7399
அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பிரிய முடியாத அளவுக்கு நெருங்கிய நண்பர்கள். அரண்மனையிலும்- குடிசையிலும், சொர்க்கத்திலும்- நரகத்திலும் பிறந்த வேற்றுமை என்றால் என்னவென்று அறியாத இரு உள்ளங்களின் சங்கமம். அதிகபட்சம் போனால் அன்னக்குட்டிக்கு பத்து வயது இருக்கும். ஜானுக்கு வேண்டுமானால் அவளை விட இரண்டு வயது அதிகமாக இருக்கும்.
அன்னக்குட்டியின் தந்தை அந்த ஊரிலேயே மிகப்பெரிய பணக்காரர். பெரிய எண்ணெய் ஆலையொன்றின் சொந்தக்காரர். பல நூறு ஏக்கர் தென்னந்தோப்புகளுக்கு உடைமையாளர்.
ஜானின் தந்தையோ அந்தப் பெரிய பணக்காரரின் எண்ணெய் ஆலையில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண தொழிலாளி. தென்னந்தோப்பைப் பராமரிக்கும் வேலையும் அவனுக்குத்தான். தோட்டத்தின் ஒரு மூலையிலேயே அவர்களின் குடிசையும் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. முதலாளி-வேலைக்காரன் என்ற பாகுபாடெல்லாம் தந்தைமார்களுக்கிடையில்தான். குழந்தைகளோ அதுபற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. எந்தவிதமான வேற்றுமை பற்றிய அறிவும் இல்லாத அவ்விருவரும் வெள்ளை மனதுடன் தோட்டத்தில் ஓடிப்பிடித்து விளையாடுவார்கள்.
நாலாபக்கமும் வியாபித்துக் கிடக்கும் பூந்தோட்டத்தின் ஒரு மூலையில் அடர்ந்து காற்றில் ஆடும் பூச்செடிகளின் மறைவில், இலவ மரத்தின், மாமரத்தின் நிழலில்தான் அவர்கள் தினமும் சந்திப்பார்கள். ஜான் பற்றிய நினைவோடு மனதிற்குள் ட்யூஷன் மாஸ்டரை வைத்தவாறு தினமும் மெத்தையிலிருந்து துயில் எழுவாள் அன்னக்குட்டி ட்யூஷன் மாஸ்டர் வருவது பற்றிக்கூட கொஞ்சமும் கவலைப்படாமல் முதன் முதலில் மாமரத்தின் நிழலைத் தேடித்தான் அவள் ஓடுவாள்.
ஜான், அன்னக்குட்டியின் வரவை எதிர்பார்த்து மதில் மேல் அமர்ந்து காத்திருப்பான். அன்னக்குட்டியின் காற்றில் பறக்கும் கூந்தலையும், காற்றோடு காற்றாய் கலந்து படபடக்கும் சில்க் பாவாடையையும் கண்டவுடன் மதிலிலிருந்து குதித்து அவளை நோக்கி ஓடிவருவான். அவனிடம் புதிது புதிதாகச் சொல்ல நிச்சயமாக ஏதாவது இருக்கும் அன்னக்குட்டியிடம் "ஜான், யுத்தம் வந்திருச்சின்னா ஆகாயத்தில இருந்து குண்டு போடுவாங்களாம், அப்பா சொன்னாரு..."
"போடி, போடி! ஆகாயத்துல இருந்து குண்டு போடுவாங்களாம்-குண்டு. ஒங்க அப்பாவுக்கு என்ன தெரியும்? அவரு சொன்னார்னு நீ நம்பிட்டியாக்கும்!" - அவன் அவளைக் கேலி செய்வான்.
தன் தந்தையை அவன் கேலி செய்கிறான் என்பதற்காக அன்னக்குட்டி கோபித்துக் கொண்டு விடமாட்டாள். அதற்குப் பதிலாக வேறு ஏதாவதொன்றைப் பற்றி பேச்சை ஆரம்பிப்பாள். "ஜான், நான் நேத்து தூங்குறப்போ ஒரு கனவு கண்டேன். அதில ஒரு ஆளு வந்தான். பெரிய ஆளு. அவனுக்கு எத்தன தலை இருந்துச்சு தெரியுமா? ரெண்டு தலை."
அதையும் ஜான் ஒப்புக்கொள்ளமாட்டான். அன்னக்குட்டி எது கூறினாலும் அதற்கு நேர் எதிராக ஏதாவது கூறுவது தான் அவன் சுபாவம். "உங்க அப்பாவும், நீயும்... ரெண்டு தலையோட இந்த உலகத்துல யாராவது இருப்பாங்களா?"
"அதுதான் நான் சொன்னேனே கனவுலன்னு!"
"ஆமா பெரிய கனவு கண்டுட்ட ஆகாயத்துல இருந்து என்ன போடுவாங்க? குண்டாம் குண்டு. நினைச்சா சிரிப்புத்தான் வருது. நீயும்... உன் அப்பாவும்..."
அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அன்னக்குட்டியால் என்ன செய்வது என்றே தெரியாமல் போய்விடும். தன்னை அவன் முட்டாள் என்று கூறினால் அவளால் சகித்துக் கொள்ள முடியும். தன் தந்தையை அவன் முட்டாள் என்று கூறும்போது அவளால் எப்படி சகித்துக்கொள்ள முடியும்? இருந்தாலும், ஜானுக்கெதிராக ஏதாவது கூறும் துணிவு அவளுக்கு இல்லை. மீண்டும் வேறு ஏதாவது விஷயம் குறித்துப் பேச்சை மாற்றுவாள். "ஜான், அந்த ரோஜாப் பூவை எனக்குப் பறிச்சுத் தர்றியா? எங்க சாருக்கு கொடுக்கணும்!"
அப்போதும் ஜான் அவளுக்கெதிராகத்தான் நிற்பான். "போடி நீயும் உன் சாரும்... உன் அப்பா, உன் சார் எல்லாருமே சரியான முட்டாளுங்க. பூமி உருண்டையின்னு சொல்லிக் கொடுத்த ஆளுல்ல உன் சாரு? பூமி பரந்ததுன்றது கூடவா அவருக்குத் தெரியல?"
அதற்கு மேல் அன்னக்குட்டியால் பொறுக்க முடியாது. தன் ஆசிரியர் முட்டாளா அல்லது அறிவாளியா என்பதல்ல அவளுடைய தற்போதைய பிரச்சினை. அவரை தனிப்பட்ட முறையில் அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்காது என்பது வேறு விஷயம். அதற்காக தன் ஆசிரியரை மூன்றாவது ஒரு மனிதன் கேலி செய்யும் போது, அவளால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? காரணம்- அவர் அவளுடைய சார். அவளுக்கு மட்டுமே சொந்தமானவர் அவர். தன் ஆசிரியரை கேலி செய்வது தன்னையே கேலி செய்வது மாதிரி உணர்ந்தாள் அவள்.
ஜானைப் பொறுத்தவரை அன்னக்குட்டியையும், அவள் தந்தையையும், அவள் ஆசிரியரையும் கேலி செய்ய வேண்டும் என்பதொன்றும் அவன் உத்தேசமல்ல. அவர்களை கேலி செய்தால் அன்னக்குட்டிக்குப் பிடிக்காது என்பதும் அவளுக்கு அதனால் கோபம் உண்டாகும் என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரிந்துதான் அப்படிச் செய்கிறான். அவளை எப்போதும் கிண்டல் செய்ய வேண்டும். இதன்மூலம் அவளை அழவைத்துப் பார்க்க வேண்டும். இதுதான் அவன் உத்தேசம். அவன் கூறுவான், "நீங்க எல்லாருமே முட்டாளுங்க! முட்டாளுங்க! முட்டாளுங்க!"
அதற்குமேல் அன்னக்குட்டியால் தாங்க முடியாது. "நீதான் முட்டாள்."
ஜான் எதிர்பார்த்ததும் அதுதான். அன்னக்குட்டி தன்னை எதிர்த்துப் பேச ஆரம்பித்தவுடன் அவனுடைய எதிர்ப்பு மேலும் வலுப்பெறும். "என்னையா முட்டாளுங்கிறே. இப்ப தெரியும் யாரு முட்டாளுன்னு. உன் சட்டித்தலை வாத்தியாரின் கதையை ஒவ்வொண்ணா வெளியே விட்றேன் பாரு."
அன்னக்குட்டிக்கு அழுகையே வந்துவிடும். தன் ஆசிரியரை 'சட்டித்தலையன்' என்று கேலி செய்யும் பொழுது அவளால் எப்படி அழாமல் இருக்க முடியும்? அடுத்த நிமிஷம் அவளுடைய கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து விடும். தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விடுவாள். அப்போதுதான் ஜானுக்கே திருப்தி ஏற்படும். ஆர்வம் மேலோங்க அவளைக் கட்டிப் பிடித்துக்கொள்வான். அவளின் கண்ணீரை சட்டைத் துணியால் துடைப்பான். அவளுக்கு ஆறுதல் கூறுவான். ரோஜா மலரைப் பறித்து அவளின் கூந்தலில் ஆசையுடன் சூட்டுவான். விளையாட்டுக் காட்டி அவளைச் சிரிக்க வைக்க முயல்வான். மீண்டும் அவ்விரு இளம் இதயங்களும் சங்கமமாகி மலரும்.
சில நேரங்களில் அன்னக்குட்டியின் பெற்றோர் அவளிடம் கூறுவதுண்டு- ஜானுடன் அவள் விளையாடப் போகக் கூடாதென்று. "மகளே- அந்த ஊர்சுத்திப் பய கூட இனி நீ விளையாடப் போகக்கூடாது தெரியுதா? அவன் அப்பன் யாரு? நம்ம வேலைக்காரன். அவன் கூடப் போயி விளையாண்டா நம்ப அந்தஸ்து என்ன ஆகிறது?"
அவளின் தம்பி அவளை கேலி செய்வான்.
"ஊர்சுத்திப் பயகூட விளையாடுறியா? சே... அசிங்கம். என்னைத் தொடாத."
"இனிமேல் அந்தப் பயகூட விளையாடி பார்த்தேன் அவ்வளவுதான்"- அவளின் தந்தை உறுமுவார்.