விடியலுக்கு முந்தைய இருட்டு
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
சுராவின் முன்னுரை
பிரபல மராத்தி நாடகாசிரியர், கதாசிரியர், திரைக்கதாசிரியர், பத்திரிகையாளர், நாடக இயக்குநர் விஜய் டெண்டுல்கர் (Vijay Tendulkar) 1975-ஆம் ஆண்டு எழுதிய ‘நிஷாந்த்’ (Nishanth) என்ற கதையை ‘விடியலுக்கு முந்தைய இருட்டு’ (Vidiyalukku Mundhaiya Iruttu) என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
1976-ஆம் ஆண்டு விஜய் டெண்டுல்கர் திரைக்கதை எழுத, இந்தக் கதை இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டீல், நஸ்ருதீன் ஷா, கிரிஷ்கர்னாட், அம்ரிஷ்புரி நடித்த அப்படத்தை பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் (Shyam Benegal) இயக்கினார். அந்த ஆண்டின் சிறந்த இந்திப் படத்திற்கான குடியரசுத் தலைவர் விருது அப்படத்திற்கு கிடைத்தது. கேன்ஸ் திரைப்பட விழா, மெல்போர்ன் திரைப்பட விழா, சிக்காகோ திரைப்பட விழா ஆகிய விழாக்களில் ‘நிஷாந்த்’ பங்கு பெற்றது.
1928-ஆம் ஆண்டு மஹாராஷ்டிரத்தில் உள்ள கோலாப்பூரில் பிறந்த விஜய் டெண்டுல்கர், சமுதாயக் கண்ணோட்டம் கொண்ட பல புகழ் பெற்ற நாடகங்களை மராத்தி மொழியில் எழுதியிருக்கிறார். ‘நிஷாந்த்’, ‘மாந்தன்’, ‘ஆக்ரோஷ்’, ‘அர்த் சத்ய’ போன்ற பல திரைப்படங்களுக்கு விஜய் டெண்டுல்கர் திரைக்கதை எழுதியிருக்கிறார். ‘மாந்தன்’ படத்திற்காக 1977-ஆம் ஆண்டு மத்திய அரசாங்கத்தின் சிறந்த திரைக்கதாசிரியருக்கான விருதைப் பெற்றிருக்கும் அவருக்கு, ‘ஆக்ரோஷ்’, ‘அர்த் சத்ய’ படங்களுக்காக சிறந்த திரைக்கதாசிரியர் விருதை ‘பிலிம்பேர்’ பத்திரிகை 1981, 1983-ஆம் ஆண்டுகளில் அளித்திருக்கிறது. மத்திய அரசாங்கத்தின் பத்மபூஷண் விருது, சரஸ்வதி சம்மான் விருது, சங்கீத நாடக அகாடமி ஃபெலோஷிப் ஆகியவற்றையும் விஜய் டெண்டுல்கர் பெற்றிருக்கிறார்.
ரவீந்திரநாத் தாகூர் பல்கலைக் கழகத்தின் டாக்டர் பட்டத்தையும், நேரு ஃபெலோஷிப், தேசிய சாகித்ய அகாடமி ஃபெலோஷிப் ஆகியவற்றையும் பெற்றிருக்கும் விஜய் டெண்டுல்கர், 2008-ஆம் ஆண்டு தன்னுடைய 80-ஆவது வயதில் புனேயில் மரணத்தைத் தழுவினார்.
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா(Sura)