விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
"சரி... சரி...'' என்று கூறிக்கொண்டே விஸ்வம் நடையைத் தொடர்ந்தார். ஆனால், வயலின் வழியாக சுற்றி நடப்பதற்கு, உண்மையாகக் கூறுவதாக இருந்தால்- அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அவர் வயலிலேயே உண்டாக்கப்பட்டிருந்த பொருட்கள் வைக்கப்படும் அறையை நோக்கி நடந்தார்.
அஞ்சய்யாவைப் பொறுத்த வரையில் நகரத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது என்பது அந்த அளவுக்கு சிரமமான விஷயமாக இருக்கவில்லை. மோட்டார் சைக்கிளையோ, அதன் சத்தத்தையோ கேட்டு மக்களில் யாருக்கும் பயமில்லை. கடைவீதியாக இருந்தால், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அவர் மிகவும் கவனமாக ஒரு பொட்டலத்தை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டார். அதன் எடை கிட்டத்தட்ட எவ்வளவு வரும் என்று மனதில் கணக்குப் போட்டுக் கொண்டே அவர் தெருவில் எதிர் பக்கத்திலிருந்த ஆசாரியின் கடைக்குள் நுழைந்தார். மதிய நேரமாக இருந்ததால் அங்கு எப்போதும் இருக்கக் கூடியவர்கள் யாரும் இல்லை. அவர் தெருவைக் கடப்பதைப் பார்த்தவுடன் ஆசாரி எச்சரிக்கை உணர்வுடன் தன்னைத் தயார் பண்ணிக் கொண்டார். முகத்தில் கிடைக்கப்போகும் வரவை நினைத்து உண்டான சந்தோஷம் படர்ந்து விட்டிருந்தாலும், விலை கூற வேண்டும் என்பதைப்போல ஒரு வியாபாரியின் முகவெளிப்பாட்டை அவர் உடனடியாக எடுத்து அணிந்து கொண்டார். "எஜமான், உங்களைப் பார்த்து எவ்வளவோ நாட்கள் ஆயிடுச்சே!'' என்று கூறியவாறு அவர் அஞ்சய்யாவை வரவேற்றார். பிறகு அடுத்த நிமிடமே உள்ளே அறைக்குள் அழைத்துக் கொண்டு சென்றார். உள்ளே செல்லும்போது அவர் பணியாளிடம் சொன்னார்: "யாராவது வந்தால், நான் உள்ளே இல்லை என்று சொல்லுங்க.''
தலையை உயர்த்தாமலே பணியாள் "சரி'' என்று சொன்னான். அடுத்த நிமிடமே அவன் வேலையில் மூழ்கினான்.
வேலை செய்வதற்கு மத்தியில், அவ்வப்போது அடைக்கப்பட்ட கதவுக்கு உள்ளே இருந்து வரும் சத்தத்தை அவனால் கேட்க முடிந்தது.
"ஆயிரம்!''
"அதிகம் எஜமான்.''
"பொருளைப் பார்த்துட்டு சொல்லுங்க.''
"அது ஆபத்து எஜமான்.''
"கடை வீதியில் வேறு ஆசாரிகளும் இருக்காங்க.''
"எஜமான், உங்கள் விருப்பம்போல... அப்படின்னா சரி.''
5
"என் கணவரை விட்டுடுங்க, எஜமான். இரவு முழுவதும் அவர் எங்களுடன்தான் இருந்தார்.'' என்று கூறியவாறு கிஸ்தய்யாவின் மனைவி மாட்டு வண்டிக்குப் பின்னால் ஓடினாள். அவளுடன் அவளுடைய குழந்தைகளும் இருந்தார்கள்.
சூரியன் மறைந்து கொண்டிருந்தது. அஞ்சய்யா நகரத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் அவளுடைய சத்தத்தை கேட்காமல் செய்தது. மாடுகள் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டன. மோட்டார் சைக்கிள் அவளுக்கு அருகில் கடந்து சென்றது.
அஞ்சய்யா தலையைத் திருப்பி மாட்டு வண்டியைப் பார்த்தார். அவர் தலையைத் திருப்பியபோது, கொஞ்சம் ஆட்கள் வழியில் மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் நின்று கொண்டிருப்பதை அவர் பார்த்தார். அவர் உடனடியாக பதைபதைத்துப் போனதும் மோட்டார் சைக்கிள் தடுமாறியதும் ஒரே நேரத்தில் நடந்தன. ஒரு வழியாக அவர் வண்டியை நிறுத்தினார். அதற்குள் ஆட்கள் பாதையை விட்டு விலகிவிட்டிருந்தனர்.
"எஜமான், எங்களை மன்னிக்கணும்.'' அவர்கள் பணிவுடன் கேட்டுக் கொண்டார்கள்: "எஜமான், நீங்க வருவதை நாங்கள் பார்க்கவில்லை.'' முன்னோக்கி வந்து ஒரு ஆள் உதவுவதற்கு முயன்றபோது அஞ்சய்யா அவனுக்கு நல்ல ஒரு அடியைக் கொடுத்தார். கவனக்குறைவாக நடந்து
பாதையில் சிரமம் உண்டாக்கிய ஆட்களை வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு அஞ்சய்யா மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார்.
அஞ்சய்யாவின் மோட்டார் சைக்கிளின் சத்தம் பூசாரியின் காதுகளிலும் வந்து மோதியது. கோவிலின் கர்ப்பக் கிரகத்திற்கு அருகில் அவர் அப்போதும் நின்று கொண்டிருந்தார். கடவுளின் நகையை அங்குதான் வைப்பார்கள். வானத்தில் இருள் படர்ந்துவிட்டிருந்தது. இருட்டில் பூசாரியின் முகம் தெலுங்கானா மலைகளில் இருக்கும் பாறையை ஞாபகப்படுத்தியது.
அதிகரித்துக் கொண்டிருந்த இருள் மாளிகையை முழுமையாக மூடியது. போதையில் மூழ்கிய சத்தமும் குலுங்கல் சிரிப்புகளும் ருக்மிணியின் காதுகளில் விழுந்து பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தன. நான்கு சகோதரர்களும் முழுமையாக மது அருந்தியிருந்தார்கள். ஆனால், ஒரு மூலையிலாவது தான்தான் மூத்தவர் என்ற உண்மையை அண்ணா உணர்ந்துகொண்டுதான் இருந்தார். அவர் விஸ்வத்தை அறைக்குச் செல்லுமாறு கூறினார். "நீ இங்கே எதற்கு இப்போது இருக்கிறாய். போ...''
விஸ்வம் தன்னுடைய அறைக்குள் சென்றார். ஆனால், அவருடைய குடல் ரத்தத்தைக் கலக்கிக் கொண்டிருந்தது. அவர் வாந்தி எடுக்க ஆரம்பித்தார்.
ருக்மிணி முதுகைத் தடவிக்கொடுத்துக் கொண்டே என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அவள் மற்ற சகோதரர்களை மனதிற்குள் திட்டினாள். ஒருவிதமாக விஸ்வத்தைத் தாங்கிக் கொண்டு சென்று கட்டிலில் படுக்க வைத்தாள். எளிதில் உறங்க முடிகிற மாதிரி அவள் தன் கணவரின் தலையைத் தடவிக் கொண்டிருந்தாள்.
நாட்கள் மிகவும் வேகமாகக் கடந்து கொண்டிருந்தன. உதிர்ந்து விழுந்து கொண்டிருந்த நாட்களுடன் கடந்த கால விஷயங்களும் மறக்கப்பட்டுவிட்டிருந்தன. இதற்குள் கிராமமும் கோவிலில் நடைபெற்ற திருட்டுச் செயலை மறந்துவிட்டிருந்தது. உண்மையிலேயே கூறுவதாக இருந்தால், மனதிற்குள் பூகம்பம் உண்டாகிக் கொண்டிருந்தாலும், வெளியே பூசாரியும் அமைதியான மனிதராகவே தெரிந்தார். இரவுகளும் பகல்களும் கடந்து கொண்டேயிருந்தன. இன்று சங்கராந்தி. தெலுங்கானாவில் அந்த அளவிற்கு புகழ் பெற்ற ஒரு திருவிழாக் கொண்டாட்டம். கிராமத்தில் அங்கும் இங்கும் முழு திருவிழாக்கோலம் காணப்பட்டது. ஆனால், அங்கும் ஜமீன்தார்களின் நிழல் படிந்துவிட்டிருந்தது. மக்கள் மாளிகைக்குச் சென்று ஜமீன்தார்களுக்கு "புது தானியம்" கொடுத்தார்கள். சங்கராந்தி நாளன்று ஜமீன்தார்களை மதிக்கிற வகையில் புது தானியம் அளிப்பது என்பது பரம்பரை பரம்பரையாக நடைபெற்று வரும் ஒரு சடங்காக இருந்தது.
ஆசிரியர் இல்லாமல் வெறுமனே கிடந்த பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த சிறுவர்கள் திருவிழா நாளன்று ஒரு புதிய விளையாட்டில் ஈடுபட்டார்கள். "திருடனும் போலீஸும்" அல்ல; "திருடனும் ஜமீன்தாரும்".
ஒரு பையன் பெரிய ஜமீன்தாரின் வேடத்தை அணிந்தான். எஞ்சி இருப்பவர்கள் கிராமத்து மனிதர்களின் வேடங்களை. ஜமீன்தாரின் வேடம் பூண்ட சிறுவன் தன்னுடைய மெல்லிய குரலுக்கு சிறிது கரகரப்பை வரவழைத்துக் கொண்டு சொன்னான்: "நான் ஜமீன்தார்!''
அப்போது மற்றவர்கள் சொன்னார்கள்:
"சரி... எஜமான்.''
"எனக்கு உங்களுடைய ஆடு வேணும். கோழியும் பசுவும் வேணும்.''
"விருப்பம்போல... எஜமான்.''
"நான் ஜமீன்தார்! நீங்கள் மனைவியை மாளிகைக்கு அனுப்பி வைக்கணும்.''
ஒரு சிறுவன் எழுந்து நின்றான். அவன் குற்றச்சாட்டை வெளிப்படுத்துவதைப்போல ஜமீன்தார் வேடம் பூண்டிருந்த சிறுவனை விரலை நீட்டி சுட்டிக்காட்டிக் கொண்டே சொன்னான்: "உங்களுக்கு எதுவுமே கிடைக்காது. நீங்கள் ஜமீன்தார் அல்ல; திருடன். நீங்கள் கடவுளின் நகையைத் திருடிவிட்டீங்க. மிகப் பெரிய திருடன்!''