விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
பிரசாத்தின் கழுகுக் கண்கள் அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் பெண்மீது பதிந்து கொண்டிருந்தன. அவர் சொன்னார்:
"இல்லாவிட்டால், நாளைக்கே நாம் நல்ல கறவை உள்ளதா ஆக்கிடுவோம், அண்ணா.''
அஞ்சய்யாவின் கண்களும் அந்தப் பெண்ணின் மீதே விழுந்துவிட்டிருந்தன. அவர் சொன்னார்: ''இந்த புதிய பசுவின் மார்பகம் பார்ப்பதற்கு நல்ல சதைப் பிடிப்பா இருக்கு.''
அண்ணாவும் அங்கேதான் பார்த்துக் கொண்டிருந்தார்.
"பசுவின் மார்பகத்தின் அழகு மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருப்பதும், அது அதிகமாக பால் தருவதும் எப்போது என்ற விஷயம் உனக்கு எப்படித் தெரியும்? நான் திருமணமே செய்து
கொள்ளவில்லை.'' அவர் தொடர்ந்து சொன்னார்: "எனினும், ஒரு பசுவைப் பார்த்தால் போதும்... அது எந்த இனத்தைச் சேர்ந்தது என்பதை என்னால் சிரமமே இல்லாமல் கூற முடியும்.''
"துண்டப்பா!'' அங்கு அமர்ந்துகொண்டே அவர் அழைத்தார். தொடர்ந்து சகோதரரிடம் சொன்னார்: "நான் இப்போ உங்களுக்கு பசுவை வரவழைச்சுக் காட்டுறேன்.''
உடனடியாக வேலையை நிறுத்திவிட்டு நடுங்கிக் கொண்டே துண்டப்பா உள்ளே வந்தான். அண்ணா அவனிடம் கேட்டார்: "உன் மனைவி புதுசா கல்யாணம் பண்ணி வந்தவள்தானே?''
"ஆமாம் எஜமான்.'' அவன் சொன்னான்: "குடி வந்து பத்து நாட்கள்கூட ஆகவில்லை.''
"சரி... நீ போய் மனைவியை இங்கே வரச் சொல்லு.'' அண்ணா கட்டளையிட்டார்.
பழகிப்போன ஒரு கவலையுடன் துண்டப்பா தன்னுடைய புதிய மணப்பெண் கங்கம்மாவை அறைக்குள் செல்லும்படி கூறி அனுப்பி வைத்தான்.
ஊரில் நிலவும் வழக்கங்களைப் பற்றி சிறிதும் தெரியாதவளாக கங்கம்மா இருந்தாள். "அன்பளிப்பாக" ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவள் அடுத்த நிமிடம் எஜமான்களை நோக்கிச் சென்று அமைதியாக கதவுக்கு அருகில் நின்றிருந்தாள்.
எதுவும் பேசாமல் அவர்கள் அவளையே வெறித்துப் பார்த்தார்கள். ஜமீன்தார் சகோதரர்களின் கழுகுக் கண்கள் அந்த அப்பாவி ஏழைப் பெண்ணின் உடலைக் குத்தி உள்ளே ஆழமாக நுழைந்து கொண்டிருந்தன. எல்லா விஷயங்களும் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை வினோதமான அனுபவமாக கங்கம்மாவிற்கு இருந்தது.
எஜமான் உண்மையிலேயே தெய்வத்திற்கு நிகரானவர் என்று அவளுடைய தாய் அவளிடம் கூறியிருந்தாள். ஆனால், இந்த எஜமான்களுடைய கண்கள் கவலை நிறைந்த ஒரு பய உணர்வை அவளுக்குள் எழச்செய்தன. அதற்குள் அவர்கள் கங்கம்மாவிடம் ஒரு கேள்வியைக் கேட்டு முடித்திருந்தார்கள்: "உன்னுடைய கணவனுடன் வாழும் வாழ்க்கையில் உனக்கு சந்தோஷம் இருக்குதா?''
அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.
"பதிலும்" கிடைத்தது. "உனக்கு சந்தோஷம் கிடையாது. நீ எதற்கு வயலில் வேலை செய்ய வேண்டும்? நீ புதிய மணப்பெண்தானே? கங்கம்மா, ஓய்வுடன் இருக்கிற மாதிரி மனதிற்குப் பிடிக்கக்கூடிய வேலையைச் செய்யக்கூடாதா? துண்டப்பா...'' அண்ணா அழைத்தார்.
கதவுக்குப் பின்னால் சற்று தூரத்தில் தள்ளி நின்று கொண்டிருந்த துண்டப்பா உடனடியாக உள்ளே வந்தான்.
"துண்டப்பா... இனிமேல் நீ தினமும் கங்கம்மாவை மாளிகைக்கு அனுப்பி வச்சிடு. இவள் அங்கே வேலை செய்யட்டும்.''
துண்டப்பாவும் கங்கம்மாவும் எதுவுமே பேசாமல் வெளியேறினார்கள். ஜமீன்தார் சகோதரர்கள் மிகப் பெரிய சிரிப்பு சிரித்தார்கள்.
ஆனால், விஸ்வம் மட்டும் சிரிக்கவில்லை. அவர் தன் சகோதரர்களின் உரையாடலில் பங்கெடுத்துக் கொள்ளவும் இல்லை. தன்னுடைய கையில் ராணியின் படத்துடன் இருந்த சீட்டையே அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.
7
வெயில் நன்கு பரவாமல் இருந்தாலும், அதிகாலைப் பொழுதின் பிரகாசம் பரவிவிட்டிருந்தது. ராமகிருஷ்ணா அதிகாலை தூக்கத்தில் மூழ்கியவாறு கட்டிலில் படுத்திருந்தார். அவருக்கு அருகில் சுசீலா கண் விழித்தவாறு படுத்திருந்தாள். அவர்கள் இருவருக்குமிடையே ஒரு
குழந்தை உறங்கிக்கொண்டிருந்தது. தாயின் இன்னொரு பக்கத்தில் இரண்டாவது குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ராமகிருஷ்ணாவை சுசீலா வாஞ்சையுடன் வருடிக்கொண்டிருந்தாள். அவரை கண் விழிக்கச் செய்ய வேண்டும் என்று அவள் நினைத்தாள். மெல்லிய தொடல் மூலம் கண் விழித்து விட்டாலும், கண்களை மூடிக்கொண்டே அவர் கேட்டார்: "ம்... என்ன? என்ன விஷயம்? இன்னும் சிறிது நேரம் நான் தூங்குறேனே!''
சுசீலா கொஞ்சுகிற குரலில் சொன்னாள்: "கிளிகளின் கலகலவென்ற சத்தத்தை நீங்கள் கேட்கவில்லையா? ஆஹா...! சத்தம் எவ்வளவு இனிமையா இருக்கு!''
உடனடியாக அவர் திரும்பிப் படுத்துக்கொண்டே அலட்சியமான குரலில் கூறினார்: "நீயும் ஒரு கலகல சத்தமும்!'' அவர் திரும்பவும் தூக்கத்தில் மூழ்கினார்.
திறந்த கண்களுடன் சுசீலா கிளிகளின் கலகல சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள். சூரியனின் ஒளிக்கதிர்கள் சாளரத்தின் வழியாக அறைக்குள் நுழைந்தபோது, சுசீலா படுக்கையை விட்டு கட்டாயம் எழுந்திருக்க வேண்டியதாகிவிட்டது. அதிகாலைப் பொழுதின் அழகைப் பார்ப்பது என்பதுடன் வேறு பணிகளும் அவளுக்கு செய்வதற்கு இருந்தன. குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, காலை உணவு தயார் பண்ணுவது ஆகிய விஷயங்கள். வேகமாக எழுந்து அவள் தன்னுடைய வேலையில் மூழ்கினாள்.
மதியம் சுசீலாவைப் பார்ப்பதற்காக ஒரு பக்கத்து வீட்டுப் பெண் வந்தாள். அவர்கள் இருவரும் கோவிலுக்குச் செல்வதற்கு திட்டமிட்டார்கள். அப்போது ஆசிரியர் பள்ளிக்கூடத்தில் இருந்தார்.
சுசீலா குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் சேர்ந்து கோவிலுக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு கிளம்பினாள். வழியில் அவர்கள் கிராமத்தைப் பற்றி பேசும்போது, பக்கத்து வீட்டுப் பெண் திடீரென்று மூடு துணியை இறக்கிவிட்டுக் கொண்டாள். அதைப் பார்த்து சுசீலா நடுங்கிவிட்டாள். முன்னால் கண்களால் பார்த்தபோது, நான்கு பேர் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் உடலை நடுங்கச் செய்யும் அந்தப் "பார்வை"யைப் பார்த்து ஒரு குழந்தை அழ ஆரம்பித்தது. குழந்தையைத் தேற்றும் முயற்சியில் ஈடுபட்டாள் என்றாலும், அவளுடைய உள் மனம் முற்றிலும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது.
"வெட்கம் கெட்டவர்கள்!" இப்படிப்பட்ட கூர்மையான பார்வையை அவள் எந்தச் சமயத்திலும் விரும்பியதில்லை. தாங்கிக்கொள்ள முடியாத கோபமும் கவலையும் சுசீலாவின் முகத்தில் பரவிவிட்டிருந்தன. "வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்" அதற்குள் அங்கிருந்து போய்விட்டிருந்தார்கள். அவள் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் கேட்டாள்:
"அவங்க யார்?"
"இந்த நான்கு பேரும் கிராமத்தின் ஜமீன்தார்கள். அந்த அளவிற்கு முரட்டுத்தனமும் செல்வாக்கும் உள்ளவர்கள். கிராமம் முழுவதும் அவங்களுக்கு பயந்துதான் வாழ்ந்து கொண்டிருக்கு...'' பக்கத்து வீட்டுப் பெண் சொன்னாள்.
"இருக்கலாம்... எது எப்படியோ... வெட்கம்னு ஒண்ணு கொஞ்சம் கூட கிடையாது.'' முகத்தைக் கோணலாக வைத்துக் கொண்டு அவள் குழந்தையைத் தூக்கினாள். கோவிலுக்குச் செல்லும் பயணத்திற்கு மத்தியில், அவர்கள் அதிகமாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை.