விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6353
ஏதோ ஒரு சாதாரண தமாஷ் நிறைந்த காரியத்தைப் பார்ப்பதைப் போல அங்கு நின்று கொண்டிருந்த மனிதர்களைப் பார்த்தவாறு ஆசிரியர் சொன்னார். "நீங்கள் யாரும் எனக்கு சிறிய அளவில்கூட உதவி செய்யவில்லை. நீங்கள் ஏன் உதவவில்லை? கொஞ்சம் உதவி செய்யக்கூடாதா என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டும், ஒரு பொழுதுபோக்கான நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதைப்போல எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு, வெறும் கற்சிலைகளைப்போல நீங்கள் நின்று கொண்டிருந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்ததற்குக் காரணம் என்ன?''
அப்போது எல்லாரும் அவரையே பார்த்தார்கள். இந்த ஆளுக்கு பைத்தியம் பிடித்து எதையெதையோ புலம்பிக் கொண்டிருக்கிறார் என்ற உணர்ச்சி அவர்களின் கண்களில் தெரிந்தது.
"நீங்கள் ஏன் எதுவுமே செய்யவில்லை? நீங்கள் என்ன காரணத்திற்காக அவர்களைத் தடுக்கவில்லை?'' தாங்க முடியாத மன வேதனை ஆசிரியரை பேச விடாமல் செய்தது.
ஆனால், அவருடைய கேள்விகளுக்கு எந்தவொரு பதிலும் அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்த அதே சலனமற்ற தன்மை... நாசமாகிப் போன அதே மவுனம்...
"பாவம்...'' மக்கள் தங்களுக்குத் தாங்களே கூறிக்கொண்டார்கள்: "அப்படியே இல்லாவிட்டாலும், அவரால் என்ன செய்ய முடியும்?''
எல்லாருக்கும் முன்னால்... ஆமாம்... தன்னுடைய மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னால் தான் முழு நிர்வாணமாக ஆக்கப்பட்டு விட்டதைப்போல ஆசிரியர் உணர்ந்தார். அவமானத்திற்குரிய ஒரு வெட்கம் அவரைப் பிடித்து இறுக்கியது. மொத்தத்தில் வியர்வையில் நனைந்திருப்பதைப்போல அவருக்குத் தோன்றியது.
"பாவம் குழந்தைகள்!'' அங்கு கூடி நின்று கொண்டிருந்தவர்களில் யாரோ முணுமுணுத்தார்கள்.
9
ஆசிரியரின் கண்கள் வீட்டின் வாசலில் நின்று அழுது கொண்டிருந்த குழந்தைகளின்மீது சென்றன. அவர் அருகில் சென்று அவர்களை அள்ளி அணைத்துக் கொண்டார்.
"அம்மா... அம்மா எங்கே போயிட்டாங்க!'' மூத்த மகன் அழுதுகொண்டே கேட்டான்: "நம்ம அம்மாவை அவங்க எங்கே கொண்டு போனாங்க அப்பா?''
அவர்களிடம் என்ன கூற வேண்டுமென்றோ, என்ன செய்ய வேண்டுமென்றோ ஆசிரியருக்குத் தெரியவில்லை. குழந்தைகளைப் போல தானும் அழ ஆரம்பித்துவிடுவோமோ என்று அவர் நினைத்தார். திரண்டு நின்றிருந்த மனிதர்களுக்கு எந்தவொரு சந்தேகமும் வராத அளவுக்கு தன்னுடைய ஆண்மைத்தனம் என்ன என்பதை நிரூபித்துக் காட்டினால் என்ன என்று நினைத்தார். என்ன செய்ய வேண்டும்? அவர் சிந்தனையில் மூழ்கினார். குழந்தைகளை நோக்கி விரலை நீட்டியவாறு
அருகில் நின்று கொண்டிருந்த ஒரு கிழவியிடம் மெதுவான குரலில் அவர் சொன்னார்: "நான் திரும்பி வருவது வரை இவர்களைக் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள்.'' குழந்தைகளை மடியிலிருந்து இறக்கிவிட்டு, ஏதோ ஒரு உறுதியான தீர்மானத்துடன் ஆசிரியர் மாட்டு வண்டி சென்ற பாதையிலேயே மிகவும் வேகமாக நடந்தார்.
தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி ஆசிரியர் அப்போது ஓடிக்கொண்டிருந்தார். அவருடைய மனம் மிகவும் வெறுமையாகிவிட்டிருந்தது. தான் என்ன செய்வது? அவர்களுடைய மாளிகையை அடைந்தவுடன் என்ன செய்ய வேண்டும்? மாளிகையின் பிரம்மாண்டமான வெளிக்கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும். மிகவும் பத்திரமாக அவர்கள் எல்லாரும் மாளிகைக்கு உள்ளே இருப்பார்கள். அங்கு எதுவுமே செய்ய முடியாத நிலையில் சுசீலாவும் இருப்பாள். திடீரென்று அவர் ஓடுவதை நிறுத்தினார். ஏதோ சிந்தித்துக் கொண்டிருப்பதைப்போல ஆசிரியர் நடக்க ஆரம்பித்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு நடந்துகொண்டிருப்பதையும் நிறுத்தினார். இப்போது அவர் அமைதியாக நின்று கொண்டிருந்தார். மற்ற அனைவரும் தன்னையே கவனித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை ஆசிரியர் உணர்ந்தார். அவர் முழுமையாக வியர்வையில் நனைந்துவிட்டிருந்தார். முன்னால் தீர்மானித்து வைத்திருந்த விஷயத்தில் சிறிது மாற்றம் உண்டாகியிருக்கிறது என்பதைப்போல உறுதியான ஒரு முடிவை எடுத்துவிட்டு அவர் மண்டபத்தை நோக்கி நடந்தார்.
சிறுவர்களில் சிலர் சற்று விலகி அவரைப் பின்பற்றி நடந்து சென்றார்கள். அவர்கள் ஆசிரியரின் மாணவர்கள்தான்.
கிராமத்தின் மண்டபம். அங்குதான் ஹெட்கான்ஸ்டபிள் சம்சுதீனின் அலுவலகம் இருக்கிறது. அவர் அங்கேதான் வசிக்கவும் செய்கிறார். ஆசிரியர் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அங்கு சென்றிருந்தார்.
ஜமீன்தார்களின் சொந்த ஆளான ஹெட்கான்ஸ்டபிளைத் தேடி... ஆசிரியர் அங்கு சென்றார். இதுநாள் வரை நகரத்தில் தங்கி வேலை செய்து கொண்டிருந்த அவர் இறுதியில் போலீஸின் உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். கிராமத்து மக்களைப் போல கொள்ளையையும் கொலையையும் பொறுத்துக்கொள்வது என்ற விஷயம் அவருக்கு மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தது.
ஆனால், ஹெட் கான்ஸ்டபிளோ அவருக்குக் கீழே வேலை செய்யும் அதிகாரிகளோ யாருமே வேலை செய்யும் இடத்தில் இல்லை. மண்டபத்திற்கு வெளியே அமர்ந்தவாறு ஒரு வயதான கிழவன் மட்டும் தன்னுடைய வேட்டியைத் தைத்துக் கொண்டிருந்தான். ஆசிரியர் மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டே அவரிடம் சொன்னார்: "நான் ஒரு புகார் கொடுக்கணும்.''
ஆனால், கிழவன் தன்னுடைய வேலையிலேயே கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான். ஆசிரியர் கூறியது எதையும் அவன் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை அல்லது காதில் விழுந்தும் காதில் விழாததைப் போல அவன் நடித்துக் கொண்டிருக்க வேண்டும். ஒரு நிமிடம் ஆசிரியர் அமைதியாக நின்று கொண்டிருந்தார். கிழவனின் நடவடிக்கை அவரை மேலும் வெறுப்பு அடையச் செய்தது. அதை இல்லாமற் செய்ய வேண்டும் என்பதற்காக கிழவனுக்கு நன்கு காதில் விழுகிற மாதிரி மேலும் சற்று உரத்த குரலில் அவர் கேட்டார். "இங்கு ஹெட் கான்ஸ்டபிள் இல்லையா?''
அதற்குப் பிறகும், கிழவன் எந்தவொரு பதிலும் கூறவில்லை. வேட்டியைத் தைப்பதிலேயே மூழ்கியவாறு அவன் சொன்னான்: "ஹெட் கான்ஸ்டபிள்!'' என்னவோ சிந்தனையில் ஆழ்ந்துவிட்டு ஆசிரியரின் முகத்தையே பார்த்தவாறு கிழவன் அடுத்த நிமிடம் மண்டபத்தின் ஒரு பகுதியை நோக்கி விரலை நீட்டினான். "நீங்க அங்கே இருங்க. விஷயம் புரிகிறது அல்லவா?'' அவன் சொன்னான்.
ஆசிரியருக்குப் புரிந்தது. அனைத்தும்... அனைத்தும். யுகங்கள் கடந்து போய்க்கொண்டிருப்பதைப் போல அவருடைய ஒவ்வொரு நிமிடமும் கடந்து கொண்டிருந்தது. உள் மனம் ஒரே பதைபதைப்புடன் இருந்தது. கவலையை மறைத்து வைப்பது என்பது ஆசிரியருக்கு மிகவும் சிரமமான ஒரு விஷயமாக இருந்தது. ஆனால், ஹெட் கான்ஸ்டபிளை எதிர்பார்த்து அங்கு உட்கார்ந்திருப்பது என்பது அதைவிட மிகவும் வேதனை அளிக்கக்கூடிய விஷயமாக இருந்தது. அங்கு அமர்ந்துகொண்டு நேரத்தைக் கழிப்பது என்பது அவருக்கு மிகவும் கஷ்டமான ஒன்றாக இருந்தது.
சில நிமிடங்கள் எழுந்து நின்று கொண்டும் சில நிமிடங்கள் நடந்து கொண்டும் ஒருவிதமாக நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருந்தபோது, நன்கு ஆடைகள் அணிந்த கோலத்துடன் சம்சுதீன் அங்கு வந்து சேர்ந்தார். "ஹெட்" எங்கேயிருந்து வந்திருக்கிறார் என்ற விஷயம் யாருக்கும் தெரியாது.