விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6354
தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியையும் அவர் செய்யவில்லை. தன்னுடைய முழு கவலைகளையும் ஆசிரியர் வெளியேற்றிவிட விரும்பினார். கண்ணீருடன் சேர்ந்து அவையும் வெளியே வழிந்தோடின. அவமானமும் வெட்கமும்... ஆமாம்... அனைத்தும் தன்னைவிட்டு வெளியே செல்வதைப்போல அவருக்குத் தோன்றியது.
கிழவரான பூசாரி ஆசிரியர் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் எந்தவொரு வகையான ஆறுதல் வார்த்தைகளையும் கூறாமல் அவரையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
ஆசிரியர் பூசாரியைப் பார்த்ததும் முழுமையான தர்மசங்கட நிலையில் இருப்பதைப்போல உணர்ந்தார். அவர் உடனடியாக எழுந்தார். அப்போது பூசாரி கூறினார்: "மேலும் சிறிது நேரம் உட்கார்ந்திரு மகனே. இங்கு அமர்ந்திருந்தால், மனதிற்கு மேலும் குளிர்ச்சி கிடைக்கும்!''
ஆசிரியர் மீண்டும் அதே இடத்தில் உட்கார்ந்தார். பூசாரி அவரிடம் எதுவும் கேட்கவில்லை. இருவரும் அவரவரர்களுடைய கவலைகளில் மூழ்கிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். எனினும், அவர்களால் நீண்ட நேரம் அப்படி உட்கார்ந்திருக்க முடியவில்லை. பூசாரியிடம் ஏதாவது கூறினால் என்ன என்று ஆசிரியர் நினைத்தார். "நான் பள்ளிக்கூட ஆசிரியர். ராமகிருஷ்ண ரெட்டி...'' அவர் சொன்னார்.
"ஆமாம், மகனே... எனக்குத் தெரியும். நீ பள்ளிக்கூட ஆசிரியர். ஞானி... ஞானத்தைப் பிறருக்குப் பகிர்ந்து தரக்கூடிய மனிதர்... ஒரு இடத்தில் மலை இருந்தால், இன்னொரு இடத்தில் நதியும் இருக்கும். பலம் கொண்ட மனிதன் இருக்கும் அதே நேரத்தில் பலமில்லாதவனும்
இருப்பான்.'' பூசாரியின் வார்த்தைகளை ஆசிரியர் மிகவும் கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.
"மகனே... பலம் உள்ளவன் அந்தக் காலத்திலிருந்தே பலமில்லாதவனை அடக்கி ஆண்டு வந்திருக்கிறான். பலம் கொண்டவன் யாகக்குதிரையை அவிழ்த்து விட்டான். திறமையும் தைரியமும் உள்ளவன் போய் யாகக்குதிரையைக் கையில் பிடிக்கட்டும்... அல்லது அதை அவிழ்த்துவிட்ட மனிதனின் கால்களைப் பிடிக்கட்டும்...''
ஆசிரியர் பூசாரியிடம் எதையும் விவாதம் செய்வதற்காக நிற்கவில்லை. எனினும், தனக்கு கருத்து வேறுபாடு இருக்கிறது என்பதை ஆசிரியரின் முகம் வெளிப்படையாகக் காட்டியது. பூசாரியும் தார்மீகக் கண்ணோட்டத்துடன் சூழ்நிலையைப் புரிந்துகொள்வதற்கு மட்டும் முயற்சித்துக் கொண்டிருந்தார். "பலமற்றவர்களின் கவலைகளைப் போக்குவதற்கு, ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் கீழான நிலையில் உள்ளவர்களின் கஷ்டங்களைச் சரி செய்வதற்கு நான் முடிந்தவரையில் பாடுபட்டிருக்கிறேன்.'' பூசாரியின் மனதில் எப்போதும் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது. "ஆனால்... பல நூற்றாண்டுகளாக பலவீனர்கள் மட்டும் தன் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம்- பலம் கொண்ட மனிதனின் ஒவ்வொரு ஆசையும் நிறைவேறிக்கொண்டு இருக்கிறது. காரணம்?''
பூசாரி ஆசிரியருக்கு ஆறுதல் கூறுவதைப்போலவோ தன்னைத் தானே தேற்றிக் கொள்வதைப்போலவோ எதுவும் சொல்லவில்லை. அவர் தனக்காக, ஆமாம்... தனக்காக மட்டும் ஒரு பதிலைத் தேடிக்கொண்டிருந்தார். பலம் கொண்டவன் கடவுளைக் கொள்ளையடித்தான். தண்டனை கிடைத்ததோ பலவீனமானவரும் எந்தத் தவறும் செய்யாதவருமான ஒருவருக்கு. ஏன் அப்படி நடந்தது? பூசாரி சிந்தித்தார்.
ஆசிரியர் பூசாரியையே பார்த்துக்கொண்டிருந்தார். பூசாரி என்ன நினைக்கிறார் என்பதை ஆசிரியரால் புரிந்துகொள்ள முடியவில்லை. காரணம்- கோவிலில் நடைபெற்ற திருட்டைப் பற்றி அவருக்கு சிறிதும் தெரியாதே? ஆசிரியரோ பூசாரியிடம் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவும் இல்லை. எழுந்து நின்று கொண்டு ஆசிரியர் சொன்னார்: "பூசாரி, சாயங்கால நேரம் ஆகிவிட்டது... இனிமேல் நான் புறப்படட்டுமா?''
"உனக்கு தோன்றும்போதெல்லாம் இங்கே வந்துவிடு மகனே. மனதிற்கு அமைதி கிடைக்கும்.'' பூசாரி சொன்னார்.
ஜமீன்தார் சகோதரர்களின் மாளிகை இரவுக்கு முந்தைய இருட்டில் அரக்க வடிவத்தை அணிந்திருந்தது. அந்தப் பக்கம் பார்க்கக்கூட செய்யாமல் ஆசிரியர் வீட்டுக்குத் திரும்பினர்.
வீட்டை அடைந்த பிறகு, குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டு, தூங்குவதற்காகப் படுத்தும், ஆசிரியருக்குத் தூக்கம் வரவில்லை. இரவு முழுவதும் பூசாரி கூறிய விஷயங்களைப் பற்றியும் பிற விஷயங்களையும் அவர் சிந்தித்துக் கொண்டேயிருந்தார். "என்ன நியாயம்?" இந்த கேள்விக்கு பதில் கண்டு பிடிக்கக்கூடிய முயற்சியில் ஆசிரியர் இருந்தார். "நீதியை அடைந்த பிறகுதான் நான் அடங்குவேன்" என்பது- அவரைப் பொறுத்த வரையில் ஒரு வகையில் பார்க்கப் போனால் தன்னைத் தானே தேற்றிக் கொள்ளக்கூடிய ஒரு விஷயமாகக்கூட இருந்தது. ஒரு ஹெட் கான்ஸ்டபிள் நம்பிக்கைத் துரோகியாக இருக்கிறான் என்பதற்காக உலகம் முழுவதும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லையே? இந்த சிந்தனை அவருடைய மனதில் புதிய ஒரு திட்டம் உண்டாவதற்குக் காரணமாக அமைந்தது. பொழுது புலர்ந்தவுடன் குழந்தைகளை பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் வீட்டைவிட்டுக் கிளம்பினார். நேராக அவர் தாலுக்கா அலுவலகத்திற்குச் சென்றார்.
12
பொழுது புலரும் வேளையில் ஆசிரியர் எங்கோ போய்க் கொண்டிருப்பதை கிராமத்து மனிதர்கள் பார்த்தார்கள். அவர் எங்கு போகிறார் என்ற கேள்வி அவர்களுடைய கண்களில் நிழலாடியது. அவர்களிடம் அதிக ஆர்வம் உண்டானது. ஆசிரியர் இனிமேல் என்ன செய்வார்? பதில் எதுவும் தெரியவில்லை. அவரிடமே கேட்டுவிட வேண்டியதுதான். அடுத்த நிமிடமே கேட்கவும் செய்தார்கள்: "இனிமேல் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?" அத்துடன் இன்னொரு கேள்வியும் இருந்தது: "மீண்டும் திருமணம் செய்து கொள்வீர்களா?''
இதயத்தை வேதனைப்படச் செய்யும் கேள்விகளைக் கேட்டதும், ஆசிரியரின் கவலை மேலும் அதிகமானது. ஆனால், அவர்களுக்கு பதில் கூறாமல் இருக்க அவரால் முடியவில்லை. "என்னிடமும் என் மனைவியிடமும் காட்டிய கொடுமையான பாதகச் செயலுக்கான தண்டனை அந்த துரோகிகளுக்கு கட்டாயம் கிடைக்க வேண்டும். நான் அதற்காக தீவிரமாக முயற்சி செய்வேன்.'' அவர் சொன்னார்.
"ஆசிரியர் அய்யா, உங்களுடைய மனைவியிடம் இப்படியெல்லாம் ஜமீன்தார்கள் நடந்து கொண்ட பிறகு, நீங்கள் அவங்களை ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள்...''
கிராமத்து மனிதர்கள் இப்படிக் கேட்கும்போது ஆசிரியர் மாளிகையையும் அதன் அடைக்கப்பட்டிருக்கும் கதவுகளையும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். அடுத்த நிமிடம் அவர் அங்கேயிருந்த கண்களை எடுத்தார். ஆனால், என்ன பதில் கூறுவது? முன்னோக்கி நடக்கும்போது, எச்சிலை விழுங்கிக் கொண்டே அவர் உறுதியான குரலில் சொன்னார்: "ஆமாம்... நான் சுசீலாவைத் திரும்பவும் கொண்டு வருவேன். நிச்சயமாக...'' நடை தொடர்ந்து கொண்டிருக்க, அவர் வார்த்தையை முழுமை செய்தார்: "நான் அவளை மீண்டும் வீட்டுக்குக் கட்டாயம் கொண்டு வருவேன்.'' ஆனால், அதைக் கூறி முடித்தவுடன்,
அவர் முற்றிலும் அமைதியற்ற மனிதராகக் காணப்பட்டார். அதையும் தாண்டி செயலற்ற மனிதராகவும்...
மிகப் பெரிய மாளிகையின் ஒரு அறையில் முற்றிலும் மன அமைதியே இல்லாதவளாக சுசீலா இருந்தாள். பொழுது புலர்ந்தவுடன் அவள் எழுந்து சுற்றிலும் பார்த்தாள். அறையில் கண்ணாடி எதுவும் இல்லை.