
சிறிது நேரத்திற்குப் பிறகு கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. இடைவெளி விட்டு விட்டு அந்த சத்தம் வந்தது.
“கதவைத் தட்டுவது யாராக இருக்கும்?” இதயத் துடிப்பு மேலும் அதிகமானது.
தட்டும் சத்தம் சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாததாக இருந்தது. மிகவும் கவனமாக அவள் கதவின் அருகில் சென்றாள். இப்போது சத்தம் மெதுவாகக் கேட்டது. அந்த போக்கிரிகளில் யாராவது ஒரு ஆளாகத்தான் இருக்கும் என்று கதவைத் தட்டும் சத்தத்தின் தாளத்திலிருந்து அவள் நினைத்தாள். நான்கு பேரில் ஒரு சகோதரர் மட்டும் கொஞ்சம் பரவாயில்லை. அவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள். "யாராக இருந்தாலும் சரி... நான் கதவைத் திறக்க மாட்டேன்." அவள் தனக்குள் கூறிக் கொண்டாள்.
"கதவைத் திற...'' அது போச்சம்மாவின் குரல்:
"தேநீர் கொண்டு வந்திருக்கிறேன்.''
சுசீலா கதவைத் திறந்து போச்சம்மாவிடமிருந்து தேநீரை வாங்கினாள். அத்துடன் சாப்பிடுவதற்கும் என்னவோ இருந்தது. பலகாரத்தைப் பார்த்ததும் அவளுக்குப் பசி உண்டானது. உண்மையிலேயே கூறுவதாக இருந்தால் நேற்று மதியத்திலிருந்து அவள் எதுவுமே சாப்பிடவில்லை. உள்ளே வந்து அமர்ந்து அவள் தேநீர் பருக ஆரம்பித்தாள். அத்துடன் பலகாரத்தையும். ஆனால், திடீரென்று ஏதோ தொண்டைக்குள் சிக்கிக் கொண்டதைப் போல உணர்ந்தாள். அவளுக்கு எல்லா விஷயங்களும் ஞாபகத்தில் வந்தன. குழந்தைகள், வீடு ஆகியவற்றிலிருந்து அனைத்து விஷயங்களும்... அவளுடைய கண்களில் ஈரம் உண்டானது. எதையும் சாப்பிட முடியாமல் அவள் நினைவுகளில் மூழ்கினாள்.
ஆசிரியரின் தனிமைக்கும் அமைதியற்ற நிலைக்கும் ஒரு முடிவு உண்டானது. நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவர் காவல் நிலையத்திற்குச் சென்றார். ஒரு உயர் காவல்துறை அதிகாரியை அங்கு பார்க்கவும் முடிந்தது. டெப்டி சூப்பிரண்டென்ட் ஆஃப் போலீஸ்.. ஆசிரியர் தன்னுடைய சோகக்கதை முழுவதையும் அவரிடம் கூறினார். பலவந்தப்படுத்தி தன்னுடைய மனைவியை இழுத்துக் கொண்டு போன சம்பவத்தைக் கூறினார். மிகவும் சுவாரசியமான ஒரு விஷயத்தை ரசிப்பதைப் போல காவல் நிலையத்தில் இருந்த மற்ற ஆட்கள் கதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். சூப்பிரண்டென்டும் முழு ஈடுபாட்டுடன் அந்தக் கதையைக் கேட்டார். ஜமீன்தார் சகோதரர்கள்தான் பலவந்தப்படுத்தி இழுத்துக் கொண்டு சென்றவர்கள் என்பதைக் கேட்டதுதான் தாமதம், அடுத்த நிமிடம் அவருடைய முக வெளிப்பாடு மாறிவிட்டது. அவருடைய மென்னையான நட்பிற்கு சிறிது குந்தகம் உண்டாகிவிட்டதைப் போல... அவருடைய மனதில் “ஆபீஸரின்”
ஆணவம் உண்டானது. முன்கோபக்காரரும் ஆணவம் பிடித்தவருமாக அவர் மாறினார். முழுமையான காவல்துறை அதிகாரியின் குரலில் அவர் சொன்னார்: "ராமகிருஷ்ணா, நான் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. நீங்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. உங்களின் மனைவி ஏதாவது காரணத்தால் உங்களைவிட்டுப் போயிருக்க வேண்டும். அது மட்டும் உண்மை. ஒரு வேளை நீங்கள் ஆண்மையற்றவராகவும், பலமற்றவராகவும் இருக்கலாம். இல்லாவிட்டால் எப்போதும் மனைவியைத் துன்பப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு மனிதராக இருக்கலாம். அப்படி இல்லை என்று உங்களால் நிரூபித்துக் காட்ட முடியுமா? இல்லாவிட்டால் உங்களுடைய அழகான மனைவி மாளிகை, நகைகள் ஆகியவற்றின்மீது ஆசைப்பட்டிருக்கலாம். இல்லாவிட்டால் தனக்கு ஒரு பலசாலியான கணவன் வேண்டும் என்பது அவங்களோட ஆசையாக இருக்கலாம். நீங்கள் ஒரு சாதாரண பள்ளிக்கூட ஆசிரியர். அவ்வளவுதான். அழகான ஒரு மனைவியை வைத்துக் காப்பாற்றும் அளவிற்கு உங்களால் எப்படி முடியும்? சகோதரா, அப்படிப்பட்ட ஒரு மனைவியிடமிருந்து விடுதலை பெற்றது ஏதோ ஒரு வகையில் நல்லதாகி விட்டது. உங்களை மதிக்கக் கூடிய ஒரு மனைவியை சீக்கிரம் தேடுங்க.''
காவல் நிலையத்தில் இருந்த மற்றவர்கள் மேலும் ரசிப்பதற்கு அது வாய்ப்பாக அமைந்தது. அவர்கள் சிரித்துக் கொண்டே ஆசிரியரை கிண்டல் பண்ணினார்கள். போலிஸ் சூப்பிரண்டென்ட் ஆசிரியரிடம் கூறினார்: "இப்போ நீங்க இங்கேயிருந்து போங்க... அதற்குப் பிறகு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் நல்ல ஒரு மணமகளைக் கண்டு பிடிங்க.''
போலிஸின் ஒரு தலைப்பட்சமானதாகவும் அவமானப்படக் கூடியதாகவும் இருந்த அந்த நடத்தைக்குப் பிறகு ஆசிரியர் சிந்தித்தார்:
“ஏதாவது அரசியல் கட்சியைச் சேர்ந்த மனிதர்களைச் சந்திப்பது இதை விட நல்லது. அவர்கள் ஜமீன்தார்களுக்கு பயப்பட மாட்டார்கள். அவர்களைப் போலீஸால் எதுவுமே செய்ய முடியாது.”
காவல் நிலையத்திலிந்து வெளியே வந்த அவர் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு நல்ல கூட்டம் இருந்தது. ஏதோ ஒரு பெரிய தலைவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளில் அலுவலகத்தில் உள்ளவர்கள் இருந்தார்கள். தன்னுடைய கதையை யாரிடமாவது கூற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆசிரியர் நினைத்தார். ஆனால், யாருக்கும் அதைக் கேட்கக் கூடிய சூழ்நிலை இல்லாமலிருந்தது. அங்கும் கிடைத்தது தோல்வி மட்டுமே! தன்னுடைய முயற்சி இன்னொரு முறை வீணாகிவிட்டதே என்ற கவலையுடன் அவர் அந்த அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தார்.
யாரும் தனக்காக எதுவும் செய்யவில்லையே? எல்லாரும் அவரவர்களுடைய வேலைகளில் மூழ்கியிருக்கிறார்கள். ஆனால், நீதிமன்றத்திற்குச் சென்றால், தனக்கு கட்டாயம் நீதி கிடைக்கும். அங்கு குற்றவாளி தப்பிக்கவே முடியாது. நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன்பு ஏதாவதொரு வக்கீலைப் போய் பார்க்க வேண்டும். இப்படி சிந்தித்தவாறு ஆசிரியர் ஒரு வக்கீலின் அலுவலகத்திற்குச் சென்றார். அவருடைய வார்த்தைகளை முதலில் மிகவும் கவனம் செலுத்தி வக்கீல் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், பலவந்தப்படுத்தி இழுத்துச் சென்றவர்கள் ஜமீன்தார்கள் என்பதைத் தெரிந்து கொண்டதுதான் தாமதம்- சட்ட புத்தகத்தை மூடிவைத்து விட்டு, அவர் எழுந்து நின்றார். ஆதாரங்களைப் பத்திரப்படுத்தி வைக்கக்கூடிய அலமாரியைப் பார்த்துக் கொண்டே அவர் சொன்னார்: "மன்னிச்சிடுங்க அய்யா. என்னால் இதை எடுத்துக் கொள்ள முடியாது!''
“வக்கீலும் என்னை கை கழுவி விட்டார். செய்தி பத்திரிகையும் என்னைக் கைவிட்டு விடுமா என்ன? இல்லை... பத்திரிகை என்பது பாரபட்சம் இல்லாத ஒன்றாயிற்றே! பத்திரிகை பரபரப்பான இந்த செய்தியைக் கட்டாயம் பிரசுரிக்கும். அப்போது ஜமீன்தார் சகோதரர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டில் உள்ள எல்லாரும் அவர்களுக்கு எதிராகக் கட்டாயம் குரல் எழுப்புவார்கள்.”ஆசிரியர் சிந்தித்தார்.
பத்திரிக்கை அலுவலகம் நகரத்தில் இருந்தது. தாலுக்காவில் இருந்து நகரத்திற்கு வந்த ஆசிரியர் நேராக “சப்தம் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு அவரை யாரும் அவமானப்படுத்தவில்லை. பத்திரிகை ஆசிரியருக்கு முன்னால் அவர் சென்று நின்றார். அங்கு இருந்தவாறு அச்சகம் முழுவதையும் அவர் ஒருமுறை பார்த்தார். ஜமீன்தார்களின் கதை முழுவதையும் அந்த வகையில் பிரசுரமாகும். அவர் மனதில் நினைத்தார்.”
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook