விடியலுக்கு முந்தைய இருட்டு - Page 21
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6354
தொடர்ந்து தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி கல்லை தரையிலிருந்து தூக்கி அந்த உடலுக்கு அருகில் போய் நின்றார். ஏதோ இன்னொரு ஆணின் மனைவியுடன் உறங்கிய உடல் அது. பல முறைகள் தன்னுடைய சொந்த விருப்பத்திற்கு எதிராக மீண்டும் மீண்டும் அவள் பலாத்காரத்திற்கு இரையாகியிருப்பாள். ஆசிரியர் நினைத்தார்.
வானத்தைவிட உயர்ந்த மனக்கவலை, கோபம் ஆகியவை நிறைந்த ஒரு பிரம்மாண்டமான கனவு ஆசிரியரைச் சுற்றி வளைத்தது. பாவத்தின் சின்னமான அந்த மூளை துண்டு துண்டாகச் சிதறியே ஆக வேண்டும். அந்த மிருகம் இறந்தே ஆக வேண்டும். தூக்கிப் பிடித்த அந்தக் கல்லால் அதே இடத்தில் அந்தப் பாவி இறக்க வேண்டும். யாருக்கும் தெரியாது. யாரும் பார்க்கப் போவதில்லை. இதுதான் பொன்னான சந்தர்ப்பம்.
ஆசிரியர் பைத்தியம் பிடித்தவரைப்போல அண்ணாவின் தொப்பை விழுந்த வயிறு, பாதி திறந்த வாய், ஆங்காங்கே முடி வளர்ந்து நாற்றமெடுத்துக் கொண்டிருக்கும் தலை ஆகியவற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
திடீரென்று அவருடைய உள்மனதில் மேலும் ஒரு அலை எழும்பியது. பயம் நிறைந்த ஒரு அலை. கட்டுப்படுத்த முடியாத ஒரு அலை அது. மனதிலும் உடலிலும் அது மிகப் பெரிதாக எழுந்து நின்றது. எந்தவொரு காரணமும் இல்லாமல் வியர்வை வழிய ஆரம்பித்தது. நடுங்கிக் கொண்டிருந்த கைகள்... நீர்த் துளிகளைப்போல வியர்வை கழுத்திலிருந்து கீழ் நோக்கி வழிய ஆரம்பித்தது. இப்போது எதையும் பார்க்க முடியவில்லை. எந்த நிமிடமும் கல் கையிலிருந்து கீழே விழுந்துவிடும்.
ஆனால், கல் அந்த மோசமான மனிதரின் உடலின்மீது விழுவதற்கு முன்னால், ஆசிரியர் திடுக்கிட்டு எழுந்துவிட்டார். முழுமையாக வியர்வையில் குளித்துவிட்ட அவர் வாயால் கூற முடியாத அளவுக்கு பயந்து போய்விட்டிருந்தார். முழுமையான தாகத்தில் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவர் படுக்கையை விட்டு எழுந்து நீரைப் பருகினார். தாகம் தீர்ந்தவுடன் படிப்படியாக அவர் இயல்பு நிலைக்கு வர ஆரம்பித்தார். திரும்பி வந்த சுய உணர்வு பலவீனமான ஒரு கோபத்திற்கு பிறவி கொடுத்தது. தன்னுடைய சொந்த கோழைத்தனத்திலிருந்து உருவாகி தன்மீதே கொண்டிருந்த கோபம்... தான் எதற்கு இவ்வளவு பயப்பட வேண்டும்? கனவில்கூட பயப்படுவதா?
தன்னுடைய கேள்விகளுக்கான பதில் அவருக்குக் கிடைக்கவில்லை.
புலர்காலைப் பொழுதிலிருந்தே மாளிகையில் ஒரே ஆரவாரம்தான். சகோதரர்கள் நான்கு பேரும் தங்களை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். "உன்னுடைய மனைவியிடம் சீக்கிரம் தயாராகி நிற்கும்படி கூறு. இப்போ அவங்க இங்கே வந்திடுவாங்க.'' அண்ணா இடையில் அவ்வப்போது விஸ்வத்திடம் கூறிக் கொண்டிருந்தார்.
"அவர்கள்"... அதாவது கிராமத்து மனிதர்கள். கிராமத்தில் யாருடைய திருமணமாவது நடைபெற்றால், "ஊர்வலம்" முதலில் கோவிலுக்குச் செல்லும். சந்தோஷம் நிறைந்த ஒரு குடும்ப வாழ்க்கைக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்வார்கள். அது முடிந்தவுடன் நேராக ஜமீன்தார்களின் மாளிகையைத் தேடி எல்லாரும் வருவார்கள். கோவிலில் வேண்டிக் கொள்ளவில்லையென்றால்கூட, காரியம் நடக்கும். ஆனால், மாளிகையில் வந்து முகத்தைக் காட்டவில்லையென்றால், காரியம் குழப்பத்திற்குள்ளாகிவிடும். ஊர்வலம் மாளிகைக்கு மிகவும் அருகில் வந்துவிட்டிருந்தது. அண்ணா
மீண்டுமொருமுறை தன் தம்பிக்கு ஞாபகப்படுத்தினார்: "அவளிடம் சீக்கிரமா தயாராகச் சொல்லு.''
சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமாக இருக்கும் வண்ணம் ருக்மிணி ஆடைகள் அணிந்து கொண்டிருந்தாள். பட்டுப் புடவை அணிவதற்கும் ஒப்பனை செய்வதற்கும் உதவுவதற்கு போச்சம்மா அருகிலேயே இருந்தாள். அதற்குள் திருமணக் குழுவினர் மாளிகைக்கு முன்னால் வந்துவிட்டார்கள். "இதோ அவங்க வந்துட்டாங்க'' என்று ருக்மிணிக்கு அறிவித்துவிட்டு, அடுத்த நிமிடமே நான்கு பேரும் வாசல் கதவுக்கு அருகில் வந்துவிட்டார்கள். அவர்களுக்குப் பின்னால் மின்னிக் கொண்டிருந்த பட்டுப் புடவையை அணிந்துகொண்டு ருக்மிணி வாசல் கதவுக்கு அருகில் விஸ்வத்துடன் சேர்ந்து நின்று கொண்டிருந்தாள்.
மணமகனின் தந்தை ஜமீன்தார்களின் கால்களின் அருகில் கொஞ்சம் பணத்தையும் இனிப்பையும் வைத்தான். புதுமணத் தம்பதிகள் நான்கு சகோதரர்களையும் ருக்மிணியையும் பாதங்களைத் தொட்டு வணங்கினார்கள். மணமகனுக்கு ஒரு வேட்டியையும் மணப்பெண்ணுக்கு ஒரு புடவையையும் தந்து ருக்மிணி அவர்களை வாழ்த்தினாள். திருமணக் குழுவினர் ஜமீன்தார்களைப் பற்றிய "துதிப் பாடல்களை" பாடிக் கொண்டிருந்தார்கள்.
சுசீலா சாளரத்தின் வழியாக இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது ஊர்வலம் திரும்பிச் சென்று கொண்டிருந்தது. தனக்கு அங்கு எந்தவொரு ஸ்தானமும் இல்லை என்பதை திடீரென்று சுசீலா உணர்ந்தாள். துடித்துக் கொண்டிருந்த மனதுடன் கடந்து சென்ற சம்பவங்கள் ஒவ்வொன்றையும் அந்த அப்பாவிப் பெண் ஆதரவற்ற நிலையில் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
அவர் என்றைக்காவது வருவாரா? என்னை இங்கே இருந்து அழைத்துக் கொண்டு செல்வாரா? நான் இங்கு இப்படிப்பட்ட விஷயங்களைத்தான்
இனிமேலும் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமா? என் வாழ்க்கை இங்கேயே முடிந்து விடுமா? அல்லது இனியும் ஏதாவது நடக்குமா? அவர் இப்போது எங்கே இருப்பார்? இந்த ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றுவதற்காக அவர் என்ன செய்து கொண்டிருப்பார்?
தன்னுடைய சந்தேகங்களுக்கான எந்தவொரு பதிலும் சுசீலாவுக்கு தெரியவில்லை. திருமண ஊர்வலம் மாளிகையைவிட்டு சற்று தூரத்தில் போய்க் கொண்டிருந்தது. சுசீலாவும் தன்னுடைய உலகத்திலிருந்து தூரத்தில் போய்க் கொண்டிருந்தாள். நாட்கள் கடந்து செல்லச் செல்ல, மாளிகையின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்றபடி அவள் மாறிவிட்டிருந்தாள். அவமானம், துயரம், பலாத்காரம்- அனைத்தும் நிறைந்த மாளிகையின் வினோதமான வாழ்க்கை அவளுக்கு இப்போது நன்கு பழகிவிட்டிருந்தது.
அன்று மதியம் தன்னுடைய அறையில் இருந்துகொண்டு சுசீலா விஸ்வத்திடம் சொன்னாள்: "உங்களுடைய மனைவி என்னிடம் மோசமான முறையில் பழகுகிறாள். நீங்கள் என்னைத் தேடி வருவதால், அவள் என்னை வெறுக்கிறாள். நான் உங்களை எங்கே தட்டிப் பறித்துக் கொண்டு போய் விடுவேனோ என்று அவள் எண்ணுகிறாள் என்று நினைக்கிறேன். நீங்கள் ஏன் என்னைத் தேடி வர வேண்டும்? நீங்கள் ஏன் அவளை என்னுடைய எதிரியாக மாற்றுகிறீர்கள்?'' ஆவேசம் சற்று குறைந்தபோது சுசீலாவின் குரல் ஆணவத்துடன் ஒலித்தது:
"நானொன்றும் தரம் தாழ்ந்த பெண் இல்லை. என் விருப்பத்திற்கு எதிராக இங்கு வந்து சேர்வதற்கு முன்னால், நான் மதிப்புக்குரிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தேன். எனக்கென்று ஒரு கணவர் இருக்கிறார். வீடும் குழந்தைகளும் இருக்கிறார்கள். உங்களுடைய மனைவியைப் போலத்தான் மிகச் சிறந்த பிராமண குடும்பத்தில் பிறந்தவள் நான். எந்தக் காலத்திலும் பண்ணக்கூடாத ஒரு செயலை
நீங்கள் என்னிடம் செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தொடர்ந்து என்னிடம் வருவதை, நான் வரக்கூடாது என்று கூறியிருக்கிறேன் என்பதை அவளிடம்... உங்களுடைய மனைவியிடம் போய் கூறுங்கள்.''