இறுதி விருந்தாளி
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6788
அதிகாலையில் படுக்கையறையை விட்டு எழும் பழக்கம் இருந்ததால் அன்றும் ஐந்தரை மணி ஆன போது மிஸ்டர் மித்ரா கண்விழித்து விட்டார். வெளியே தெருவில் உயிரோட்டம் ஆரம்பித்திருந்தது. முதல் பேருந்து இருமியவாறு பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பியது. பைத்தியக்காரனும் எழுந்து விட்டான். "இரவில் வந்து என்னுடைய முழுப் பணத்தையும் திருடியது யார்?"- அவன் உரத்த குரலில் கத்தினான். மிஸ்டர் மித்ரா வேகமாக ஜன்னல் கதவுகளை மூடினார்.
பிறகு குளிர்சாதனப் பெட்டியின் பொத்தானை அழுத்தினார். அது ஒரு வழக்கமான சம்பவமாக இருந்தது. அவருடைய மனைவிக்கு குளிர்ச்சி நிறைந்த அறையில் படுத்திருப்பதுதான் பிடிக்கும். அவருக்கோ குளிர்ச்சி என்றால் தாங்க முடியாது. அதனால் அவள் தூங்கியவுடன், அவர் ஏர் கண்டிஷனரை நிறுத்திவிட்டு, ஒரு ஜன்னல் கதவைத் திறந்து விடுவார். பிறகு ஏர் கண்டிஷனரின் ஸ்விட்சை 'ஆன்' செய்வது, காலையில் அவர் படுக்கையை விட்டு எழும் போதுதான். இந்த சதிச் செயலைப் பற்றி அவளுக்குச் சிறிது கூட சந்தேகம் தோன்றாது. சந்தேகம் இருந்தால் கூட அவள் அதை ஒரு முறை கூட வெளிக்காட்டியதில்லை. அவள் எப்போதும் ஒரு குடும்பப் பெண்ணுக்குப் பொருத்தமான செயல்களை மட்டுமே செய்வாள். அவருக்குப் பல நேரங்களில் அவளுடைய மதிப்பு நிறைந்த நடத்தைக்கு முன்னால் ஒரு குற்ற உணர்வுடன் நின்றிருப்பதைப் போலவே தோன்றும்.
அவர் கட்டிலைப் பார்த்தார். சுருண்டு கிடந்த போர்வைகளுக்கு அடியில் அவள் இருப்பாள் என்ற நினைப்புடன் அவர் இருந்தார். அவள் அங்கு எங்கும் இல்லை என்பதுதான் உண்மை. அப்போது, முந்தின நாளின் விருந்து முடிந்து அவள் வரவேற்பறையிலோ வராந்தாவிலோ போய் படுத்திருக்க வேண்டும். தலைவலி இருக்கும் போது சாதாரணமாகவே அவள் வராந்தாவில் படுத்திருப்பது உண்டு. நிலவில் படுத்துத் தூங்க அவள் ஆசைப்பட்டாள்."நீ கவிதை எழுதும் பெண்ணாக இருப்பதால்தான் நிலவில் படுத்து உறங்க வேண்டுமென்று ஆசைப்படுறே!" என்று பல நேரங்களிலும் அவர் கூறியிருக்கிறார். அப்படி இல்லாதவர்களுக்கு நிலவு என்றால் பயம்தான். அது பைத்தியம் பிடிக்கச் செய்யும் என்று அவர் கேள்விப்பட்டிருக்கிறார்.
மனைவியைத் தேடி அவர் வரவேற்பறைக்குச் சென்றார். அங்கு சுத்தமே இல்லாமல் இருப்பதைப் போல் அவர் உணர்ந்தார். முந்தின நாள் குடித்து வைத்த கண்ணாடிக் குவளைகள் மேஜை மீதே இருந்தன. அவற்றில் மது அருந்துவதற்காக நுழைந்த பூச்சிகள் இறந்து கிடந்தன. தரையில் சிகரெட் துண்டுகள் சிதறிக் ககிடந்தன. ஆஷ்ட்ரே இருந்தும் அவர்கள் ஏன் தரையைப் பாழ் செய்ய வேண்டும்? அவர் தனக்கத்தானே கேட்டுக் கொண்டார். கவிஞர்கள், பத்திரிகைகளில் பணியாற்றுபவர்கள் ஆகியோர் முழுமையான காட்டு வாழ் மனிதர்களைப் போன்றவர்கள். அவர்களை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து உணவும் மதுவும் தந்து மரியாதை செய்யும் தன் மனைவியை முதலில் தண்டிக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். இந்த மாதிரியான விருந்துகளுக்கு அவள் எவ்வளவு பணத்தைச் செலவழிக்கிறாள்! அதை எதிர்த்துக் கூறியும் ஒரு பலனும் இல்லை. அவள் சம்பாதிக்கிற பணமாயிற்றே அது! அவளுடைய மிகப்பெரிய மனதைக் கொண்டுதானே தானும் தன்னுடைய ஒரே மகனான ரமேஷும் அங்கு பணக்காரர்களைப் போல வாழ முடிகிறது! அவ்வப்போது அதையெல்லாம் வேண்டாம் என்று உதறிவிட்டு, திரும்பவும் டாக்காவிற்குப் போக வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு உண்டாவதுண்டு. அங்கு, அவர் முன்பு வசித்திருந்த கிராமம்தான் இருக்கிறதே! அது மட்டுமல்ல- அவருடைய வீடும் அங்கு இருக்கிறது. ஒருவேளை ஏதாவதொரு முஸ்லிம் குடும்பம் இப்போது அங்கு வசித்துக் கொண்டு இருக்கலாம்.
சிகரெட் துண்டுகளை எடுத்து ஆஸ்ட்ரேயில் போட்ட அவர் சமையலறைப் பக்கம் பார்த்துச் சொன்னார்: "கொஞ்சம் தேநீர் வேணும்."
சமையலறையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்த வேலைக்காரி அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள். நீப்பா, மதுப்பர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். அழகான தோற்றத்தைக் கொண்டவள். முப்பத்தைந்து வயது இருக்கும். அவரை அவ்வப்போது காம எண்ணத்தில் மூழ்கச் செய்பவள். ஒரு நாள் அவளுடன் உடலுறவு கொள்ள தனக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகாது என்று அவர் நினைத்தார். தன்னுடைய மனைவி ஏதாவது சொற்பொழிவு நடக்கும் இடத்தில் இருக்கும் போது, தன் மகன் திரைப்படம் பார்க்கும் போது, சமையல்காரன் தன் மனைவியின் வீட்டிற்குச் சென்றிருக்கும் போது, தான் எல்லா ஜன்னல் கதவுகளையும் அடைத்துவிட்டு அந்த கறுப்புநிற பெண்ணை இறுகக் கட்டிப் பிடித்து அணைப்பதை அவர் கற்பனை பண்ணினார். தன்னை எப்போது பார்த்தாலும் புன்னகைப்பதற்குக் கிடைக்கக்கூடிய இனிய தண்டனையை அவள் அன்று அனுபவிப்பாள்.
அவர் சுற்றிலும் பார்த்தார். தன்னுடைய மனைவி எங்கே? வராந்தாவில் போடப்பட்டிருந்த கட்டில் காலியாகக் கிடந்தது.
"நீப்பா... அம்மா எங்கே?"- அவர் கேட்டார்.
"தூங்கிக்கிட்டு இருக்காங்கள்ல?"- அவள் சொன்னாள்: "நான் இன்னைக்குக் காலையில பார்க்கவே இல்லையே! நீங்களும் பார்க்கவே இல்லையா?"
அவர் தலையை மட்டும் ஆட்டினார். அதே நிமிடத்தில் வேலைக்காரி உரத்த குரலில் கத்தியவாறு தரையில் சாய்ந்து விழுந்தாள். அவள் பார்த்த காட்சியை அப்போது அவரும் பார்த்தார். பெரிய சோஃபாவிற்குப் பின்னால் அவள் கிடந்தாள். அந்த வீட்டின் தலைவி. வெள்ளை நிறப் புடவைக்கு மத்தியில் ரத்தக் கறைகள். மார்பில் கத்தி. அவளுடைய முகத்தைப் பார்ப்பதற்குக் கூட அவருக்கு தைரியம் வரவில்லை. ஆனால், அவர் அவளுடைய இடது கையைத் தூக்கி நாடித் துடிப்பை சோதித்துப் பார்த்தார். குளிர்ந்து போயிருந்த அந்தக் கையில் நாடித் துடிப்பு இல்லை.
வேலைக்காரி மயக்கமடைந்து விட்டிருந்தாள். இனி நான் என்ன செய்ய வேண்டும்? அவர் தன்னைத்தானே கேட்டுக் கொண்டார். போலீஸுக்குத் தெரிய வைக்க வேண்டுமா? இல்லாவிட்டால், மகனை எழுப்ப வேண்டுமா? ரமேஷ் அந்த மரணத்தைப் பார்த்து வருத்தப்பட மாட்டான். காரணம்- அவனுக்கும் அவளுக்குமிடையே நல்ல உறவு இல்லாமல் போய் இரண்டு வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டன. ரமேஷ், ரோடரிக்ஸின் மகளும் நகரத்திலிருக்கும் ஒரு அழகு நிலையத்தில் சிகை அலங்காரம் பண்ணுபவளுமான லிஸாவைக் காதலிக்க ஆரம்பித்தவுடன், அவர்களுக்கிடையே ஒரு பனிப்போர் உண்டாக ஆரம்பித்துவிட்டது. லிஸாவைத் திருமணம் செய்து அழைத்துக் கொண்டு வரும் எண்ணம் இருப்பதாக இருந்தால், முதலிலேயே பெட்டியையும் பொருட்களையும் எடுத்துக் கொண்டு தன் வீட்டை விட்டுக் கிளம்பிவிட வேண்டும் என்று ரமேஷிடம் அவனுடைய சித்தி கூறிவிட்டாள். "தாழ்ந்த தரத்தைச் சேர்ந்த பெண்கள் வசிக்கக்கூடிய இடம் அல்ல, தான் கஷ்டப்பட்டு உண்டாக்கிய அந்த மாளிகை" என்றாள் அவள்.