இறுதி விருந்தாளி - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6790
"நீங்கள் உண்மையிலேயே என் தாயாக இருந்திருந்தால், இப்படிச் சொல்லியிருக்க மாட்டீங்க..."- ரமேஷ் சொன்னான்.
ரமேஷின் தாய், அவனுக்குப் பத்து வயது நடக்கும் போது இறந்துவிட்டாள். பிறகு குழந்தையுடன் அவர் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த அனுசூயா தேவியின் அருகில் வீடெடுத்து வசிக்க ஆரம்பித்தார். முதலில் அவள் குழந்தையிடம்தான் ஈடுபாட்டுடன் பழகினாள். அவனுக்கு இனிப்புப் பலகாரங்களைக் கொண்டு வந்து தருவது, அவனைத் திரைப்படம், சர்க்கஸ் ஆகியவற்றிற்கு அழைத்துச் சென்று பார்க்கச் செய்வது... இப்படி அந்த உறவு வளர்ந்து... அது இந்தத் திருமணத்தில் வந்து முடிந்தது. அது அவருடைய அதிர்ஷ்டமாக இருக்கலாம். இல்லாவிட்டால் அவர் இப்போதும் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவ்வாக மட்டுமே இருந்து கொண்டிருப்பார். இப்போது அவர் பணக்காரர் வாழ்வதற்காக ஏதாவதொரு வேலையைப் பார்க்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.
"அய்யோ... அய்யோ..."- வேலைக்காரி கூப்பாடு போட்டாள். அவள் மயக்கத்திலிருந்து எழுந்திருந்தாள். "யார் இந்தக் கொடுமையைச் செய்தது? அவன் தலையில் இடிதான் விழணும்..."-அவள் சொன்னாள்.
சிந்தனைகளில் இருந்து விடுபட்ட மித்ரா குனிந்து கொண்டு தன் மனைவியின் இறந்த உடலைச் சோதித்துப் பார்த்தார். கண்கள் திறந்திருந்தன. ஆனால், திகைப்பின் அடையாளம் எதுவும் அந்த முகத்தில் தெரியவில்லை. ஒரு கை அப்போதும் தரையில்தான் இருந்தது. ஔரங்கசீப்பின் உருவம் இருந்த அந்தப் பெரிய வெள்ளைநிற மோதிரம் அந்தக் கையில் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
"நான் ரமேஷை அழைக்கட்டுமா?"- அவர் கேட்டார். தன் மகனுடைய அறைக்குள் நுழைந்த பிறகு, இந்த விஷயத்தை போலீஸிடம் அறிவிக்க வேண்டும் என்பதையும், தான் சட்டங்களை முற்றிலும் மறந்துவிட்டதாகவும் அவர் நினைத்தார்.
"ரமேஷ், எழுந்திரு. ஒரு நடக்கக்கூடாத சம்பவம் நடந்திருக்கு."- அவர் சொன்னார்.
ரமேஷ் எந்த ஆர்வமும் காட்டிக் கொள்ளவில்லை. "நான் ஆடை அணிஞ்சிட்டு வர்றேன். எனக்கு ஐந்து நிமிடங்கள் தரணும்"- ரமேஷ் சொன்னான்.
மித்ரா மீண்டும் தன்னுடைய மனைவியின் இறந்த உடலுக்கு அருகில் வந்தார். வேலைக்காரி அப்போதும் தன் நெஞ்சில் அடித்துக் கொண்டிருந்தாள். "இன்னும் கொஞ்ச நேரத்துக்கு உன் அழுகையை நிறுத்து"- அவர் மெதுவான குரலில் சொன்னார்: "இனி போலீஸ்காரர்கள் வர்றப்போ அழலாம்."
நடு இரவு நேரத்திற்குப் பிறகு தான் ஒருமுறை எழுந்த போது வரவேற்பறையில் அவளுடைய உரையாடல் கேட்டதாக மித்ரா நினைத்துப் பார்த்தார். பிறகு எப்போது உரையாடல் நின்றது? இறுதி விருந்தாளி அங்கிருந்து கிளம்பியது எப்போது? இறுதி விருந்தாளிதான் கொலையைச் செய்ததா? பல கேள்விகளும் அவருடைய மனதைப் போட்டு அலட்டிக் கொண்டிருந்தன. அவளுடைய காதுகளில் கிடக்கும் வைரக் கம்மல்களையோ கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியையோ கொலை செய்த நபர் எடுக்கவில்லை. அப்படியென்றால் கொலை செய்த நபர் திருடனல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. பிறகு அவளைக் கொலை செய்ததால், அந்த நபருக்குக் கிடைத்தது என்ன? அவளுக்கு எதிரிகள் இருந்தார்களா? அவள் மீது ஒரு பொய் வழக்கு தொடுத்து, ஒரு வருடமாக அவளுக்குத் தொல்லை கொடுத்து வரும் அந்தப் பத்திரிகை ஆசிரியராக இருக்குமோ கொலையைச் செய்த நபர்? வழக்கைத் திரும்பப் பெறும்படி அமைச்சர்வரை அவரைக் கேட்டுக் கொண்டார்கள். வழக்கைத் திரும்பப் பெற்றால் தனக்கு அவமானம் என்று நினைத்து அந்த மனிதர் அவளைக் கொலை செய்திருப்பாரோ? இல்லாவிட்டால் ரமேஷ் காதலித்த பெண்ணின் சகோதரர்கள் செய்த வேலையாக இருக்குமோ இது? அவர்கள் எந்தவொரு தொழிலும் இல்லாதவர்கள். அவ்வப்போது கள்ளச் சாராயம் காய்ச்சுவதில் ஈடுபட்டோ, கள்ளக் கடத்தல் எதிலாவது பங்கு பெற்றோ கொஞ்சம் பணம் சம்பாதிப்பார்கள். அந்த நேரங்களில் நல்ல பளபளப்பான ஆடைகளை அணிந்து கொண்டு தெருக்களில் ஏதாவது பாட்டுகளை முணுமுணுத்துக் கொண்டு அவர்கள் நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அப்படி இல்லாத நேரங்களில் அழுக்கடைந்த ஆடைகளுடன் தங்களின் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து கொண்டு வழியில் போய்க் கொண்டிருப்பவர்களைப் பார்த்து ஏதாவது வாய்க்கு வந்ததைக் கூறிக் கொண்டிருப்பார்கள். ஒருநாள் அவர்களில் ஒருவன் அனுசூயாவிற்கு ஃபோன் செய்தான். "என் தங்கச்சியின் கற்பை ரமேஷ் கெடுத்து விட்டான். அவன் உடனடியா அவளைத் திருமணம் செய்யணும். நீங்கதான் அதற்குத் தடையா இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். கவனமா இருந்துக்கோங்க. நான் உங்களைக் குத்தி கொன்று, என் தங்கச்சியின் எதிர்காலம் நல்லா இருக்குறது மாதிரி பார்த்துக்குவேன்."
உண்மையான கொலைகாரன் அவனாக இருப்பானா?
"இதைச் செய்தது யாராக இருக்கும்?"- ரமேஷ் கேட்டான். அவனுடைய முகத்தில் எந்தவொரு கவலையும் இல்லை. உதட்டில் ஒரு புன்சிரிப்பு மலர்ந்ததோ என்று கூட மித்ரா சந்தேகப்பட்டார்.
"என்னிடம் கேட்டு என்ன பிரயோஜனம்?"- மித்ரா கேட்டார்: "நான் தூங்கிக் கொண்டிருந்தேன். எனக்கு எதுவும் தெரியாது."
"அந்த விஷயங்களை நீங்கள் போலீஸ்காரர்களிடம் சொல்லுங்க"- ரமேஷ் சொன்னான். தொடர்ந்து தொலைபேசி மூலம் போலீஸுக்கு நடந்த சம்பவத்தைச் சொன்னான்.
மித்ரா பதைபதைப்படைந்து வியர்வையில் நனைந்து போய் காணப்பட்டார்.
"நீ என் மீது சந்தேகப்படுறியா?"- அவர் தன் மகனிடம் கேட்டார்: "நான் அந்த அளவுக்கு மோசமானவன் என்று நீ நினைக்கிறியா? அது மட்டுமல்ல- நான் அவளை எப்போதும் அளவுக்கு மீறி வழிபாடு செய்தவனாயிற்றே!"
"அப்பா, நீங்க பணத்தையும் வழிபட்டீங்க"- ரமேஷ் சொன்னான்.
"மகா பாவி..."- மித்ரா உரத்த குரலில் கத்தினார்: "உனக்கு எப்படி தைரியம் வந்தது இப்படியொரு குற்றச்சாட்டைக் கூறுவதற்கு? நீ அந்தப் பொண்ணுடன் கொண்ட நட்பால் முழுமையாக மாறிப் போயிட்டேன்னு அனுசூயா சொன்னப்போ நான் அதை நம்பாமல் இருந்தேன். இப்போத்தான் அது உண்மைன்றதை நானே தெரிஞ்சிட்டேன்."
"உண்மை தெரிஞ்சும் பிரயோஜனம் இல்லையே!"- ரமேஷ் சொன்னான்.
"இப்படிச் சொல்றதுக்கு என்ன அர்த்தம்?"- மித்ரா கேட்டார்.
"அது இப்போதே உங்களுக்குப் புரியும்"- ரமேஷ் புன்னகைத்துக் கொண்டே சொன்னான்: "போலீஸ்காரர்கள் வரட்டும்."
வேலைக்காரி சத்தம் போட்டு அழுதாள்.
2
நேரம் எட்டரை மணி ஆனது. எனினும் நான்கு மணி நேரத்திற்கு முன்பே படுக்கையை விட்டு எழுந்து வாசலில் வந்து உட்கார்ந்திருக்கும் ரோடரிக்ஸ் என்ற கிழவனுக்கு ஒரு கோப்பைத் தேநீரோ காப்பியோ தர யாரும் முயற்சிக்கவில்லை. வீட்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் கடுமையான வேலைகள் இருந்தன. லிஸா குளித்து முடித்து ஆடைகள் அணிந்து நகரத்திற்குச் செல்லும் ஒன்பது மணிக்கான மின்சார வண்டியைப் பிடிக்க வேண்டும். குளிப்பதற்கு முன்னால் முந்தின நாள் அணிந்திருந்த உடுப்புகளையும் உள்ளாடைகளையும் சோப்புத் தூள் கலக்கப்பட்ட நீரில் மூழ்க வைத்து அலசிப் போட வேண்டும்.