இறுதி விருந்தாளி - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6790
பத்து மணி ஆகிவிட்டால் -ஒரு குழாயிலும் தண்ணீர் வராது. ஆடைகளை உலரப் போட்டு விட்டு, லிஸா குளியலறைக்குள் சரியாக எட்டு மணிக்கு நுழைவாள். பிறகு அவள் வெளியே வருவது எட்டரை மணிக்குத்தான். தொடர்ந்து முகத்தில் பவுடரும் சாயமும் தேய்த்து முடிக்க கால் மணி நேரம் ஆகும். மதிய நேரத்தில் சாப்பிடுவதற்காக சான்ட்விச், வறுத்த மீன் ஆகியவற்றை ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவுக்குள் போட்டு, அதை அவள் தன்னுடைய கருப்பு நிற பைக்குள் வைப்பாள். இவை அனைத்தும் முடியும் போது, ஸ்டேஷனுக்கு நடந்து செல்லக் கூடிய நேரம் வந்துவிடும். ஸ்டேஷன் வீட்டிலிருந்து ஒரு பர்லாங் தூரத்தில் இருக்கிறது. ஆனால், லிஸா உயரமான அடிப்பாகத்தைக் காலணிகளை அணிந்திருப்பாள். அதனால் அவளால் வேகமாக ஓட முடியாது.
"என்னுடைய தாகத்தை அடக்க முடியல"- ரோடரிக்ஸ் சொன்னான். யாரும் அதைக் காதலேயே வாங்கிக் கொள்ளவில்லை.
மூத்த மகன் அப்போதும் கட்டிலில் படுத்துக் கொண்டு குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய வலை பின்னிய பனியன் ஆங்காங்கே கிழிந்திருந்தது. ரோமங்கள் அடர்ந்திருந்த வயிற்றில் கண்ணாடியால் ரோடரிக்ஸ் எழுதினான்: 'பன்றி'
இரண்டாவது மகன் சிரில் சமையலறையிலிருந்து ஒரு பாத்திரத்தில் தேநீருடன் வெளியே வந்தான். ஆவி உயர்ந்து கொண்டிருந்த தேநீர். கிழவனின் வாயில் நீர் ஊறியது.
"அந்தத் தேநீரை எனக்குத் தா மகனே"- அவன் சொன்னான்.
அதைக் கேட்டு சிரில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். அவன் திண்ணை மீது உட்கார்ந்து கொண்டு ஊதி ஊதி தேநீரைக் குடிக்க ஆரம்பித்தான்.
"நான் அண்ணி கூட சேர்ந்து வேலை செய்ததால் எனக்குக் கிடைத்த சூடான தேநீர் இது"- அவன் கிழவனிடம் சொன்னான்: "அப்பா, இதை நான் உங்களுக்குன்னு இல்ல... கடவுளே கேட்டாலும் தர மாட்டேன்."
"எனக்கு எப்போ தேநீர் கிடைக்கும் என்று மரியாவிடம் கேள் மகனே"- ரோடரிக்ஸ் சொன்னான்: "தேநீர் குடித்தால் என் இருமல் கொஞ்சம் நிற்கும்."
"அப்பா, உங்க இருமல் நிற்பதால் அண்ணிக்கு என்ன கிடைக்கப் போகுது?" சிரில் கேட்டான். தொடர்ந்து அந்தக் கேள்வியில் மறைந்திருந்த அர்த்தத்தை ரசித்தவாறு அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.
கிழவன் சுவரைத் தடவியவாறு சமையலறைக்குள் சென்றான். அங்கு கூரையிலிருந்து ஒரு பல்ப் எரிந்தவாறு தொங்கிக் கொண்டிருந்தது. மரியா இரண்டு தட்டுகளில் சப்பாத்திகள் உண்டாக்கிக் வைத்திருந்தாள். ஒன்றில் வெண்ணெய் தேய்க்கப்பட்டிருந்தது. இன்னொன்றில் காய்ந்த சப்பாத்திகள் இருந்தன. கிழவனைப் பார்த்ததும் மரியா தன்னுடைய கைக்குட்டைய எடுத்து நல்ல சப்பாத்திகள் இருந்த தட்டினை முழுமையாக மூடினாள்.
"அப்பா, நீங்க எதற்கு சமையலறைக்குள் வர்றீங்க?"- அவள் கேட்டாள். "எது வேணும்னாலும் நானே அங்கு கொண்டு வந்த தருவேன்ல?"
கிழவன் தரையில் உட்கார்ந்து மெதுவாகச் சிரித்தான். "எது எப்படியோ... நான் வந்துட்டேன். எனக்குக் கொஞ்சம் தேநீரும் நான்கு வெண்ணெய் தேய்த்த சப்பாத்திகளும் தா... உன் புருஷனுக்கு மட்டுமல்ல- எங்களுக்கும் நல்ல உணவைச் சாப்பிடணும்னு ஆசை இருக்கும்."
"அய்யோ! அப்பா, நீங்க எதையோ மனசுல வச்சுக்கிட்டு சொல்றீங்க!"- மரியா சொன்னாள்: "நான் எந்த வேறுபாடும் பார்க்கிறவள் இல்லையே!"
"அடியே மரியா! ஒரு விஷயத்தை நீ நினைச்சுப் பார்க்கணும்"- கிழவன் விரலை நீட்டியவாறு சொன்னான்: "இங்கே இருப்பவர்களில் பணம் சம்பாதிப்பது ஒரே ஒரு ஆள்தான். அது என்னுடைய மகள் லிஸா. அவள் ஒவ்வொரு மாதமும் நாநூறு ரூபாய் இந்த வீட்டிற்குக் கொண்டு வர்றா. அதில் முந்நூறு ரூபாயை அவள் உன்னிடம் தர்றா. எங்கள் எல்லாருக்கும் சமையல் செய்து தர்றதுக்காக..."
"போதும்... போதும்... எனக்கு எல்லாம் தெரியும்"- மரியா சொன்னாள்: "இதையெல்லாம் எனக்கு ஞாபகப்படுத்த வேண்டாம். நான் ஒண்ணும் மறைச்சு வச்சு தின்னுறவள் இல்ல. எடுத்துக்கோங்க... எல்லாத்தையும் தின்னுங்க."
அவள் இரண்டு தட்டுகளையும் கிழவனுக்கு அருகில் எடுத்து வைத்தாள். பிறகு ஒரு குவளையில் தேநீரையும் ஊற்றிக் கொடுத்தாள். கிழவன் இடது பக்கமோ வலது பக்கமோ பார்க்காமல் எல்லாவற்றையும் சாப்பிட்டான். தட்டுகள் காலியானவுடன், அவன் எழுந்து மீண்டும் வாசலை நோக்கி நடந்தான்.
மரியா பலமாக அழுதவாறு தன்னுடைய கணவனின் கட்டிலை நோக்கிச் சென்றாள்.
"என்னைக் கொன்னுடுங்க"- அவள் சொன்னாள்: "என்னால முடியாது. இப்படி திட்டுகளைக் கேட்டு ஒரு அடிமையைப் போல வாழ..."
அவளுடைய கணவன் கண் விழித்தான். ஆனால், அவன் பேசவில்லை. மொத்தத்தில் வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது என்பது மாதிரி தன் முகத்தை அவன் வைத்துக் கொண்டிருந்தான்.
மரியா உரத்த குரலில் அழுதாள்.
"என்ன அண்ணி? இந்தக் கவலைக்குக் காரணம் என்ன?"- லிஸா கேட்டாள். அவள் குளித்து முடித்து தலைமுடியைக் கட்டியவாறு அங்கு வந்தாள். அவள் கறுத்தவளாக இருந்தாலும் நல்ல அழகான தோற்றத்தைக் கொண்டிருந்தாள்.
"அப்பா சமையலறையில் இருந்த எல்லா உணவையும் சாப்பிட்டு தீர்த்துட்டாரு"- மரியா சொன்னாள்: "லிஸா, இனி நான் உனக்கு எதைத் தருவேன்? இந்த எதற்குமே லாயக்கு இல்லாத மனிதனுக்கு நான் எதைத் தருவேன்?"
சிரில் அவளுடைய வார்த்தைகளைக் கேட்டு அறைக்குள் வந்தான். "அப்பா எங்களைப் பட்டினியா இருக்கும்படி செய்துட்டாரா?"- அவன் கேட்டான்.
"மொத்தத்தில் ஒரு எலும்புக்கூடு... ஆனால் இந்த உலகம் முழுவதையும் தட்டில் போட்டுக் கொடுத்தால் கூட தின்னும் இந்தக் கிழவன்"- சிரில் சொன்னான்.
கிழவன் அதைக் கேட்டான். அவனுக்குக் கோபம் வந்தது.
"எனக்கு இவள் தந்ததை மட்டும் தான் நான் சாப்பிட்டேன். அபகரித்து சாப்பிட்டுப் பழகினவன் நான் இல்லை"- அவன் சொன்னனன்.
"இந்த வறுமை நிலைமையிலிருந்து சீக்கிரமா தப்பிக்க நமக்கு முடியாதா லிஸா?"- சிரில் கேட்டான்: "உன் திருமணம் எப்போது நடக்கும்? தேவைப்பட்டால், உனக்காக ஒரு கொலை செய்யக்கூட நான் தயாரா இருக்கேன்."
சிரில் சிரித்தான்.
"சிரிப்பு வேறயா?"- லிஸா சொன்னாள்: "அண்ணா, நீங்க இப்படிப்பட்ட பேச்சுக்களால்தான் என் நிலைமையை மோசமாக்கியதே. இப்போ ரமேஷின் சித்தி இந்தத் திருமணம் நடக்கவே நடக்காதுன்னு சொல்றாங்க. அவங்க உயர்ந்த அந்தஸ்துல இருப்பவங்க. பணம் உள்ளவங்க. அவங்ககூட பழகும் போது கொஞ்சம் பணிவாக இருப்பது மாதிரி காட்டிக் கொள்ள வேண்டாமா?"
"போடி... உன்னுடைய உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள்!"- சிரில் சொன்னான்: