இறுதி விருந்தாளி - Page 6
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6790
அவங்களுக்கு நாற்பது வயது ஆகியிருக்கும். ஆனால், அவங்க உதித்து மேலே வந்து கொண்டிருக்கும் சூரியனைப் போல பிரகாசத்துடன் இருப்பாங்க. ஒருமுறை அவங்களைப் பார்த்த யாராலும் அவங்களை மறக்க முடியாது."
"நேற்று இரவு அங்கு இருந்த விருந்தாளிகள் எல்லோரையும் உங்களுக்கு ஞாபகத்துல இருக்குதா?"- இன்ஸ்பெக்டர் கேட்டார்.
"அய்யோ.. இல்லை... இல்லை..."- மேத்தா சொன்னார்: "பல புது முகங்களையும் நான் பார்த்தேன். அவங்களோட விருந்துகளில் எல்லா நேரங்களிலும் அறிமுகமில்லாத பலரும் இருப்பார்கள். நகரத்திற்கு வந்திருக்கும் எழுத்தாளர்களும் கலைத் தொடர்பு கொண்டவர்களும் அங்கு வந்து அவங்களைப் பார்க்காமல் நிச்சயம் திரும்பிப் போக மாட்டார்கள்."
"அனுசூயாதேவியின் நடவடிக்கைகளில் ஏதாவது மாறுபாடு இருந்ததை நீங்கள் பார்த்தீங்களா?"- இன்ஸ்பெக்டர் கேட்டார்.
"எதுவும் இல்லை. அவங்க மிகவும் மகிழ்ச்சியா இருப்பது மாதிரி தெரிஞ்சது. எல்லா விருந்தாளிகளியிடமும் சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தாங்க. வெள்ளைநிறப் புடவை அணிந்து, தலைமுடியில் வெற்றைநிற மாலை சூடி, சரஸ்வதி தேவியைப் போல... அந்தக் காட்சியை இனியொருமுறை என்னால் பார்க்க முடியாதே!"
மேத்தா தன் முகத்தைக் கை விரல்களால் மறைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்.
"அவங்களுக்கு யாராவது காதலர்கள் இருந்தார்களா?"- இன்ஸ்பெக்டர் கேட்டார்.
"நிச்சயமா இல்ல"- மேத்தா சொன்னார்: "அவங்க ஒரு பெண் சாமியாரின் வாழ்க்கையை வாழ்ந்தாங்க. திருமணமாகியும் பிரம்மசாரினி. அவங்களே அந்த விஷயத்தை என்னிடம் மனம் திறந்து சொல்லியிருக்காங்க. அவங்க விவாகரத்து வாங்கியிருக்கலாம். அந்தக் காட்டு மனிதனுடன் வாழ்க்கையைத் தொடர வேண்டிய தேவை எதுவும் அவங்களுக்கு இல்லை. ஆனால், அவங்க தன்னுடைய குடும்பத்திற்கென்று இருந்த நல்ல பெயரைப் பெரிதா நினைச்சாங்க. அதைக் களங்கப்படுத்த அவங்களுக்கு மனம் வரவில்லை."
இன்ஸ்பெக்டர் எழுந்தார். "நான் பிறகு பார்க்கிறேன். நீங்கள் அவங்களோட உண்மையான வடிவத்தை எனக்கு காட்டித் தந்தீர்கள்"- அவர் சொன்னார்.
"உண்மையான வடிவம் எனக்கு மட்டும்தான் தெரியும்"- மேத்தா சொன்னார்: "வேறு யாரிடமும் அவங்க மனதைத் திறந்து பேசியதில்லை."
"நீங்க அவங்களோட காதலனா இருந்தீங்களா?"- இன்ஸ்பெக்டர் கேட்டார்.
"இல்ல..." மேத்தா சொன்னார்: "அவங்க இன்னும் சிறிது காலம் உயிருடன் இருந்திருந்தால், நான் காதலனா ஆகியிருப்பேன். இந்த சனிக்கிழமை என்னுடன் கண்டாலைக்கு வர்றதா அவங்க எனக்கு வாக்குறுதி கொடுத்திருந்தாங்க. அந்தச் சுற்றுலா மையத்தில் இருக்குறப்போ, நான் அவங்களை என் காதலால் அடிமைப்படுத்த நினைத்திருந்தேன்..."
"என்ன செய்வது, உங்களுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது!"- இன்ஸ்பெக்டர் சொன்னார்: "உங்கள் திட்டத்தை வேறு யாரும் தெரிந்திருப்பார்களா? குறிப்பாக- இந்த அறைக்கு வெளியில் நான் பார்த்த இளம்பெண்...-?"
"அவள் என் டைரியை எடுத்துப் படிப்பதை ஒரு முறை நான் பார்த்துட்டேன். அதற்காக அவளைத் திட்டினேன். ஆனால், அவள் ஒரு வெறும் கிறுக்கு! ஜன்னல் வழியா குதிச்சுக்கூட அவள் என் அறைக்குள் நுழைவாள்."
"அவளுக்கு உங்கள்மீது ஆழமான காதல் இருக்குன்றதை நான் புரிஞ்சுக்கிட்டேன்"- இன்ஸ்பெக்டர் சொன்னார்.
"என்ன? அந்த அவலட்சணம் பிடிச்ச பொண்ணுக்கா? நான் கனவில் -கூட அவளை மனைவியா நினைக்க மாட்டேன்"- மேத்தா வெறுப்புடன் சொன்னார்.
"அழகற்ற பெண்களின் காதல் ஆபத்தானது"- இன்ஸ்பெக்டர் சொன்னார்: "அதை ஞாபகத்துல வச்சிக்கணும்."
5
நாக்படாவில் இருந்த ஒரு இரும்பு வியாபாரம் செய்பவன் அந்தக் கத்தியை அடையாளம் கண்டுபிடித்தான். "இது நம்ம அக்காராம் சொல்லி உண்டாக்கிய கத்தி ஆச்சே! அக்காராமைத் தெரியாதா? குழாய்களுக்குக் கேடு உண்டானால் அவற்றைச் சரி பண்ணித் தருபவன். அந்த வழுக்கைத் தலையன்... ஆமாம்... அவனேதான். அவன் பயங்கரமான ஆளு... எல்லாருக்கும் அவனைப் பார்த்து பயம்...ஐந்நூறு ரூபாய் கொடுத்தால் அவன் யாரை வேண்டுமானாலும் கொலை செய்வான்னு கேள்விப்பட்டிருக்கேன்."
அக்காராம் போலீஸ் வருவதை எதிர்பார்த்திருந்ததைப் போல தன்னுடைய வீட்டின் முன்பக்கம் இருந்த படியில் உட்கார்ந்திருந்தான். அவனுடைய கண்கள் கலங்கியிருந்தன.
"நீங்கதான் சர்ச் கேட்டில் நேற்று இரவு ஒரு கொலையைச் செய்ததா?"- இன்ஸ்பெக்டர் கேட்டார்.
"உங்களுக்கு தைரியம் இருக்கு ஸாப்..."- அக்காராம் தன் தேய்ந்து போன பற்களைக் காட்டியவாறு சொன்னான்.
"என்னைப் பார்ப்பதற்கு தனியாக, அதுவும் துப்பாக்கி எதுவும் இல்லாமல் இங்கே வர்றதுக்கு தைரியம் இருக்குதே! மகாராஷ்டிராவில் மிகவும் புகழ்பெற்ற கொலைகாரன் நான். நான் செய்த கொலைக்கான குற்றத்தை வேறு யாராவது ஒருத்தன் ஏற்றுக் கொள்வான். என்னைப் பிடிப்பதற்கான ஆதாரங்கள் எந்தச் சமயத்திலும் சட்டத்திற்குக் கிடைக்கவே கிடைக்காது."
"நீ தைரியத்துடன் பேசுறே அக்காராம்"- இன்ஸ்பெக்டர் சொன்னார். அவன் படியில் உட்கார்ந்தவாறு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்துத் தன் அருகில் அமர்ந்திருந்த மனிதனுக்குக் கொடுத்தான். இரண்டு பேரும் அமைதியாக இருந்தவாறு சிறிது நேரம் புகை பிடிப்பதில் மூழ்கிப் போய் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தார்கள்.
இறுதியில் அக்காராம் சொன்னான்:
"உண்மையைச் சொல்லணுமே ஸாப்! நான் கொஞ்சம் திகைத்துப் போனதென்னவோ உண்மை. காரணம்- கொலை செய்வதற்கான கட்டணமான இரண்டாயிரம் ரூபாயை முன்கூட்டியே அந்த நபர் எனக்குத் தந்தாச்சு. பொதுவாக ஒப்பந்தம் பண்ணிக்கிறப்போ பாதி பணத்தையும், மீதி பணத்தைக் கொலை செய்த பிறகும்தான் நான் வாங்குவேன். அந்தப் பெண்ணைக் கொலை செய்ய வேண்டுமென்று சொன்ன நபர் முதலிலேயே இரண்டாயிரம் ரூபாயை என்னிடம் தந்தாச்சு. பாதிப் பணத்தை பிறகு தந்தால் போதும் என்று நான் சொன்னேன். 'அது தேவையில்ல... முழு பணத்தையும் வாங்கிக் கொள்ளணும்' என்று அந்த நபர் சொல்லியாச்சு."
"நபர் யாரு?"- இன்ஸ்பெக்டர் கேட்டார். அவருடைய இதயம் பலமாக அடிக்க ஆரம்பித்தது.
"அதைச் சொல்ல முடியாது"- அக்காராம் சொன்னான்: "முஸ்லிம் அணியக் கூடிய அடர்த்தியான சில்க் புர்க்காவை அந்த நபர் அணிந்திருந்ததை மட்டும் சொல்ல முடியும்."
"இதைச் செய்யச் சொன்னது ஒரு பெண்ணா?"- இன்ஸ்பெக்டர் கேட்டார்.
"ஆமாம்... நான் கொலை செய்யச் சொன்ன நபரின் கையைப் பார்த்தேன். ஒரு பழைய நாணயத்தை வெள்ளியில் பதிய வைத்து மோதிரமாக அணிந்திருந்தது கண்ணில் பட்டது- நடு விரலில்...! வெள்ளை ஆடை அணிந்து, பூ மாலையைத் தலையில் சூடியிருக்கும் நடுத்தர வயதைக் கொண்ட பெண்ணைக் கொலை செய்யணும்னு என்கிட்ட சொன்னாங்க... எல்லா விருந்தாளிகளும் போன பிறகுதான் நான் அந்தப் பெண்ணைக் கொலை செய்தேன்.