Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

ரகசியம்

rahasiyam

யநாட்டிலிருக்கும் 'க' எஸ்டேட்டிலிருந்து நிறைய காப்பி மூட்டைகள் ஏற்றப்பட்டிருந்த லாரியுடன் குஞ்ஞிராமன் டிரைவர் வைத்திரி பஜாருக்கு வந்தபோது நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. அவர் லாரியை நிறுத்திவிட்டு, அப்பு நாயரின் தேநீர்க் கடைக்குள் நுழைந்தார். அப்பு நாயரின் மனைவி டிரைவருக்கு ஒரு கோப்பை தேநீரைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

"வேலுக்குட்டி வரவில்லையே?" டிரைவர் தேநீரை ஊதிக் குடித்துக் கொண்டே கேட்டார்.

"இல்லை. அவன் இன்று வரலைன்னு சொல்லி அனுப்பியிருக்கான். அவனுடைய அம்மாவிற்கு கடுமையான காய்ச்சலாம்."

குஞ்ஞிராமன் டிரைவர் சற்று அமைதியற்ற மனதுடன் தேநீர் குவளையைக் கையில் பிடித்தவாறு நான்கு பக்கங்களிலும் பார்த்தார். வேலுக்குட்டியின் தாய்- 'காட்டி' என்ற கிண்டலான பெயரைக் கொண்டிருக்கும் ஒரு வதவை- சில வருடங்களுக்கு முன்னால் குஞ்ஞிராமன் டிரைவரின் கள்ளக் காதலியாக இருந்தாள். அவளுக்கு கடுமையான காய்ச்சலாம். அந்த பழைய காதல் காட்சிகளில் அவருடைய சிந்தனைகள் சிறிது நேரம் மூழ்கிவிட்டன. அவ்வளவுதான். அவரை அதிகமாகக் கவலை கொள்ளச் செய்தது. காட்டியின் எதிர்பார்த்திருக்கும் மரணம் அல்ல. அவளுடைய மகன் வேலுக்குட்டி வராமல் போனதுதான். வேலுக்குட்டிதான் லாரியின் க்ளீனர். அவன் இல்லாவிட்டால் டிரைவர் தனியாக மலையிலிருந்து கீழே இறங்க வேண்டியதிருக்கும்.

தேநீர்க் கடையை ஒட்டியிருந்த அறையிலிருந்து ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது. அது மாதவியின் குழந்தையின் அழுகைச் சத்தம் என்பது குஞ்ஞிராமன் டிரைவருக்குப் புரிந்தது. அப்பு நாயரின் மகள் மாதவியும் டிரைவருக்கு மிகவும் பிடித்த ஒருத்தியாக இருந்தாள். இரண்டு வருடங்களுக்கு முன்னால். இப்போது அவள் மலேரியா ஒழிப்பு சங்கத்தில் க்ளார்க்காக பணியாற்றும் குமாரன் நாயரின் மனைவி. ஆனால், தன்னுடைய பழைய காதல் விஷயங்களைப் பற்றி நினைத்துப் பார்க்க அவர் விரும்புவதில்லை. மிருணாளினி அவருடைய வாழ்க்கையில் அந்த அளவிற்கு ஒட்டிச் சேர்ந்து விட்டிருந்தாள்.

குஞ்ஞிராமன் டிரைவரின் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள்கூட முடிவடையவில்லை. ‘‘அது ஒரு காதல் திருமணம்.’’ உதட்டை இடது பக்கமாக சாய்த்தவாறு, ஒரு மெல்லிய புன்சிரிப்பை மேலோட்டமாக தவழ விட்டவாறு டிரைவர் கூறுவதுண்டு. அது உண்மைதான். மிருணாளினி டீச்சர் நகரத்திலிருந்து அந்த கிராமத்தின் உட்பகுதியில் இருந்த உயர்நிலைப் பள்ளிக் கூடத்திற்குச் செல்லும்போது பெரும்பாலும் அவர் ஓட்டக் கூடிய பேருந்தில்தான் பயணம் செய்வாள். பேருந்தில் இடம் இல்லாமல் பலநேரங்களிலும் அவள் நடந்து செல்வதையும் அவர் பார்த்திருக்கிறார். வெயில் பட்டு டீச்சரின் முகம் வாடி கருமை படர்ந்து விட்டிருப்பதைப் பார்த்து அவர் பரிதாப்பட்டிருக்கிறார். ‘‘டீச்சர்களுக்கு வடீடின் கிழக்கு திசையில்தான் பள்ளிக்கூடம் இருக்கிறது என்றால் பெரிய சங்கடம்தான். காலையில்  பாகும்போது கிழக்கு திசையிலிருந்து முகத்தில் வெயில் விழும். சாயங்காலம் திரும்பி வரும்போது, மாலை வெயில் மேற்கு திசையிலிருந்து அடித்துக் கொண்டிருக்கும். முகம் வறுத்த சேனைக் கிழங்கைப் போல ஆகிவிடும்’’ இப்படி ஒருநாள் அவர் டீச்சரின் வாடிய முகத்தைப் பார்த்தபோது, தனக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த மனிதனிடம் அனுதாபத்துடனும் தமாஷாகவும் கூறியதை பேருந்தில் உட்கார்ந்திருந்த இன்னொரு ஆசிரியை கூர்ந்து கேட்டு, அதை மிருணாளினி டீச்சரின் காதுகளில் கொண்டு போய் சேர்த்தாள்.

மிருணாளினி டீச்சர் இளம்பெண்ணாக இல்லையென்றாலும், நல்ல ழகும் சுறுசுறுப்பும் உள்ள ஒரு நாகரீகப் பெண்ணாக இருந்தாள். வெள்ளக்காரியின் நிறம். கருத்து சுருண்ட தலைமுடி. கண்கள் சற்று நரைத்திருந்தன. ஆனால் எப்போதும் கண் மை பூசப்பட்டு அந்த பூனைக் கண்கள் ‘காமோ ஃப்ளாஷ்’ செய்யப்பட்டிருக்கும். பற்கள் சற்று நீல நிறத்தில் இருப்பவை என்ற குறை மட்டுமே அவளுடைய அழகிற்கு இருந்தது. கோவைப் பழம் போன்ற உதடுகள் அந்தப் பற்களின் ரகசியத்தை காத்து காப்பாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தன.

பிரகாசமான வர்ணத்தைக் கொண்ட மெல்லிய புடவையை அணிந்து, தலைக்குப் பின்னால் ஒரு சிவப்புநிற ரோஜாப்பூவை வைத்துக் கொண்டு, யாரிடம் என்றில்லாமல் வெட்கப்பட்டவாறு, வளைவில் திரும்பி சாலையோரத்தில் இருக்கும் மரத்திற்குக் கீழே பேருந்திற்காகக் காத்து நின்றிருக்கும் அந்த ஆசிரியையை குஞ்ஞிராமன் நாயர் தன் மனதில் வைத்து வழிபட ஆரம்பித்தார். ‘‘இடம் இருக்கிறதா?’’ என்று பின்னால் இருக்கும் கண்டக்டரிடம் கேட்காமலேயே, அவர் மிருணாளினியின் புடவைத் தலைப்பு கண்களில் பட்ட அந்தக் கணத்திலேயே பேருந்திற்கு ப்ரேக் போட ஆரம்பித்தார். ஆசிரியையை பேருந்தில் ஏற்றுவது என்பது தனக்கும் ஆர்வமான விஷயம்தான் என்றாலும், டிரைவர் தன் விருப்பப்படி முந்திக் கொண்டு செயல்படுவதை கண்டக்டர் குமாரன் எதிர்த்தான். ஒன்றிரண்டு முறை, ‘‘இடமில்லை போகலாம் பீ..பீ...’’ என்று அதிகார தொனியில  விசில் சத்தத்தை எழுப்பி, அவன் பேருந்தை ஓட்டும்படி டிரைவரிடம் கூறவும் செய்தான். பிறகு, பேருந்து புறப்படும் நேரத்தில் ஒரு ஆளுக்கு இடம்போட்டு வைக்கும்படி டிரைவர் கண்டக்டரிடம் கூறினார். அந்த இடம் டிரைவருக்கு அருகிலிருந்த இருக்கைதான் என்று ஆக ஆரம்பித்தது. அந்த வகையில் குஞ்ஞிராமன் நாயரின் பரிதாப உணர்ச்சி நெருக்கமானது... காதலானது... பக்தியானது. இறுதியில் திருமணத்தில் போய் முடியவும் செய்தது.

குஞ்ஞிராமன் டிரைவரைப் பொறுத்தவரையில் அந்தத் திருமணம் ஒரு மிகப் பெரிய விஷயம்தான். நான்காவது வகுப்பு வரை படித்திருந்த ஒரு கிராமத்து மனிதருக்கு ஒரு செக்கன்டரி பயிற்சி பெற்ற டீச்சர் மனைவியாகக் கிடைக்கிறாள் என்பது பெரிய விஷயம்தானே? மிருணாளினி டீச்சரைப் பொறுத்தவரையில் அதையே தான் கூற வேண்டும். தான் போவதையும் வருவதையும் பார்த்துக் கொண்டிருப்பதற்கு தரிசிப்பதற்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து புன்சிரிப்பு பெட்டகத்தைவெளியே எடுப்பதற்கும், வாய் வலிக்கப் பேசுவதற்கம், இடையில் காதல் கடிதங்களை அனுப்புவதற்கும் ஏராளமான பேர் இருந்தாலும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒருவன்கூடஅவளை அணுகியதில்லை. தனக்குத் தெரிந்த பல பெண்களையும் போல தானும் முதிர்கன்னியாகவே இருக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடுமோ என்ற கவலை மிருளாளினியை பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்தான் குஞ்ஞிராமன் நாயரின் திருமண வேண்டுகோள் வந்து சேர்ந்தது. அவள் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டாள்- சிறிய அளவில் அதை ஒரு காதல் இல்லை, என்று கூறிவிட முடியாது. இளைஞனாக இல்லையென்றாலும் டிரைவர் பார்ப்பதற்கு ஒரு கம்பீரமான மனிதராக இருந்தார். கன்னத்தில் ஒரு நீண்ட தழும்பு இருந்தது. அந்தத் தழும்பைப் பார்த்தால், மிகப் பெரிய போரில் பெற்ற விழுப்புண் என்பதைப் போல் தோன்றும்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version