உறவுகள் பிரிவதில்லை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 4535
“நீ உட்காரும்மா நளினி. நான் சமையலை கவனிக்கறேன். நான் ஊர்ல இருந்து வந்திருக்கிற சமயத்துலதான் உனக்கு ஓய்வு. மத்த நாளில நீதான் எல்லா வேலையும் பார்க்கற, தள்ளு.”
லட்சுமி தன் மகளை நகரச் சொல்லிவிட்டு, தானே சமைக்க ஆரம்பித்தாள்.
“காய், வெங்காயமெல்லாம் நான் நறுக்கித் தர்றேம்மா. நீ சொல்ற மாதிரி எனக்கு ஒண்ணும் ரெஸ்ட் இல்லாம இல்லை. மத்த வேலைக்கெல்லாம் ஆளுங்க இருக்காங்க. சமையல் நான் பண்ணினாத்தான் உன் மருமகனுக்குப் பிடிக்கும்.”
வெங்காயத்தை அரிந்து கொண்டே பேசிய மகளைப் பார்த்தாள் லட்சுமி.
“என்னமோம்மா, நான் இருக்கற வரைக்கும் உனக்கு உதவியா இருக்க ஓடி வருவேன். எனக்கப்புறம் உன்னை யார் கவனிப்பா?”
அவள் கூறியதைக் கேட்ட நளினி சிரித்துக் கொண்டே, “ஏம்மா, அண்ணா என்னை கவனிக்க மாட்டானா என்ன?”
ரசத்தைத் தாளித்துக் கொண்டிருந்த லட்சுமி, “ஆமா, அவனுக்கு கல்யாணம் குடும்பம்னு ஆச்சுன்னா அண்ணன் – தங்கை உறவெல்லாம் அப்படி இப்பிடித்தான்” வெடித்தாள். “சரி.. சரி, வெங்காயத்தைக் கொடு. குழம்புக்குத் தாளிக்கணும். ஆமா, கேக்கணும்னு நினைச்சேன். காலையில யாரோ ஒரு பையன் வந்து மாப்பிள்ளைகிட்ட பணம் வாங்கிட்டு போனானே, அது யாரு? எதுக்காக அத்தனை பணம் கொடுத்தனுப்பினாரு?”
“அது இவரோட அக்கா பையன். ரொம்ப நாள் வேலை தேடி அலைஞ்சப்புறம், இப்பத்தான் ஒரு உத்தியோகம் கிடைச்சிருக்கு. ஆனா, அஞ்சாயிரம் டெபாஸிட் கட்டணும்னு சொல்லிட்டாங்களாம். ரொம்ப கஷ்டப்படற குடும்பம். அவ்வளவு பணத்துக்கு எங்கே போவாங்க?”
“அதான் இங்க வந்துட்டாங்களா? மாப்பிள்ளையும் உடனே எடுத்து கொடுத்துடுவாரே?”- லட்சுமி கடுகடுப்பாகப் பேசினாள்.
“ஏம்மா வெறுப்பா பேசறே? கடவுள் அருளாலே இவருக்கு பிசினஸ் நல்லா நடக்குது. நிறைய சம்பாதிக்கறாரு. அவரோட அக்கா குடும்பம் கஷ்டப்படறப்ப பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியுமா?” -பக்குவமாக நளினி பரிந்து பேசுவதைப் புரிந்துகொள்ளாத லட்சுமி முணுமுணுத்தபடி சமையலை முடித்தாள்.
மறுநாள் காலை டெலிபோன் கிணு கிணுக்க எடுத்துப் பேசிய நளினி பதற்றமானாள். அம்மா வந்து நிற்பதைப் பார்த்ததும் குரலை சற்று தாழ்த்திப் பேசினாள். “சரி, நான் இவர்கிட்ட சொல்லி பணத்துக்கு உடனே ஏற்பாடு பண்றேன்.
“சரி, நான் இவர்கிட்ட சொல்லி பணத்துக்கு ஏற்பாடு பண்றேன். நீ சொல்ற இடத்துக்கு நானே கொண்டு வந்து தர்றேன். கவலையே வேண்டாம். பத்தாயிரம் போதுமா? அப்படியா! சரி நான் இதோ வர்றேன்.”
ஃபோனை வைத்துவிட்டு வந்த நளினி, அவசர அவசரமாக மாடிக்கு சென்று கையில் கற்றை நோட்டுக்களுடன் வருவதை நோட்டமிட்ட லட்சுமி, “மாப்பிள்ளை அல்லும், பகலும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கற பணத்தை இப்படி தூக்கி குடுத்துட்டிருக்கியே, சொன்னாலும் கேட்க மாட்டேங்கற. உனக்கு கிடைச்சிருக்கற இந்த வசதியான வாழ்க்கை நிலைக்கணும்னா இப்படி ‘உதவி’ன்னு யார் கேட்டாலும் பணம் குடுக்கறதை நிறுத்து. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.”
சற்று கோபமாகவும், மனத் தாங்கலுடனும் பேசிய லட்சுமியை சிறிதும் பொருட்படுத்தாமல் பணத்தை ஒரு பையில் வைத்தபடி வெளியேறினாள் நளினி.
வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சப்தம் கேட்டு வெளியே வந்த லட்சுமி. “நளினி, நான் ஊருக்குக் கிளம்பறேம்மா” என்றபடி தன் பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டாள். திடுக்கிட்ட நளினி, “ஏம்மா? பத்து நாள் இருக்கணும்னுதானே வந்தே?” என்றாள்.
“இல்லை. நான் போகணும்” கோபமாக பேசிய அம்மாவை எத்தனையோ சமாதானம் செய்தும் அவள் பிடிவாதமாக புறப்படவே, நளினி அழுதுவிட்டாள்.
“அது… அது… வந்தும்மா… அப்பாவுக்கு திடீர்னு நெஞ்சு வலி வந்துருச்சாம். டாக்டருங்க அவருக்கு இதயத்துல ஆபரேஷன் பண்ணினா சரியாயிடும்னு சொல்றாங்களாம். அண்ணா என்கிட்ட சொன்னான்.
மகள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த லட்சுமி விக்கித்து நின்றாள். அம்மாவின் கைகளை ஆதரவாக பற்றிய நளினி, “உதவின்னு வந்தவங்க, அவரோட உறவா இருந்தாலும், என்னோட உறவா இருந்தாலும் பாகுபாடு இல்லாம உதவறதுதாம்மா நல்ல மனசுக்கு அடையாளம். காசு இருந்தா மட்டும் போதாது. நல்ல மனசும் வேணும்”
மகளின் பேச்சில் இருந்த உண்மை லட்சுமியைச் சுட்டது.