Sura (சுரா)
சுரா... என்று திரையுலகத்தினரும் இலக்கிய வட்டத்திலும் அன்புடன் அழைக்கப்படும் இவரின் இயற்பெயர் சு.ராஜசேகர். ஆங்கிலத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றிருக்கும் இவர், கேரளத்தைச் சேர்ந்த மூணாரில் பிறந்த தமிழர்.
பத்திரிகை ஆசிரியர் திரு.சாவி அவர்களால் 1979ஆம் ஆண்டு சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, அவரின் 'சாவி' வார இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். தொடர்ந்து பல பிரபல பத்திரிகைகளில் பணியாற்றியிருக்கும் இவரின் படைப்புகள் தமிழகத்தின் அனைத்து முன்னணி பத்திரிகைகளிலும் பிரசுரமாகியிருக்கின்றன.
இவர் 180 திரைப்படங்களுக்கும் 60 தொலைக்காட்சித் தொடர்களுக்கும் மக்கள் தொடர்பாளராக பணியாற்றியிருக்கிறார். 100க்கும் மேற்பட்ட படவுலக சாதனையாளர்களுக்கு இவர் மக்கள் தொடர்பாளராக பணிபுரிந்துள்ளார். படவுலகைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் ஆகியோருடன் நெருக்கமான நட்பு கொண்டவர். அவர்களின் வாழ்க்கையின் உயர்வு தாழ்வுகளை நேரடியாக பார்த்து, பத்திரிகைகளில் பதிவு செய்தவர்.
திரையுலகம் குறித்து இவர் 500க்கும் மேற்பட்ட கட்டுரைகளை முன்னணி பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். குறிப்பாக இவர் எழுதிய நிர்வாண நிஜம், கனவு ராஜாக்கள் ஆகிய இவரின் நூல்கள் படவுலகில் அடியெடுத்து வைக்க ஆசைப்படும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியவை.
உலகப் புகழ் பெற்ற இலக்கிய மேதைகளான லியோ டால்ஸ்டாய், மாக்ஸிம் கார்க்கி, ஆன்டன் செக்காவ், தாஸ்தாயெவ்ஸ்கி, டி.எச்.லாரன்ஸ், எர்னெஸ்ட் ஹெமிங்வே, மாப்பசான், ஜோசஃப் ரோத், ஸ்டெஃபான் ஸ்வைக், தகழி சிவசங்கரப் பிள்ளை, வைக்கம் முஹம்மது பஷீர், பி.கேசவதேவ், எஸ்.கெ.பொற்றெக்காட், எம்.டி.வாசுதேவன் நாயர், மாதவிக்குட்டி, பி.பத்மராஜன், பாறப்புரத்து, உறூப், உண்ணி கிருஷ்ணன் புதூர், சக்கரியா, எம்.முகுந்தன், ரவீந்திரநாத் தாகூர், சரத்சந்திரர், பிரேம் சந்த், கிஷன் சந்தர், விஜய் டெண்டுல்கர், ஆன்ட்ரே ஜித், கிருஷ்ணா கட்வானி ஆகியோர் எழுதிய 150க்கும் மேற்பட்ட நாவல்களையும் 500க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் இவர் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.
ஆங்கிலம், மலையாளம், ரஷ்யன், ஜெர்மன், ஃப்ரெஞ்ச், வங்காளம், இந்தி, மராத்தி, சிந்தி, ஆஃப்ரிக்கன் ஆகிய மொழிகளிலிருந்து இவர் மேற்கண்ட படைப்புகளை மொழி பெயர்த்துள்ளார். இலக்கியத் துறையில் இவர் புரிந்தது இமாலய சாதனை.
உலக, இந்திய இலக்கியங்களின் மீதும் திரைப்படங்களின் மீதும் அளவற்ற ஈடுபாடு கொண்டிருக்கும் சுரா இந்த இரண்டு துறைகளிலும் இணையற்ற ஆர்வத்துடன் இப்போதும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.