பாக்யராஜுடன் படுத்துக் கொண்டே உரையாடினேன்
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 3026
அழியாத கோலங்கள் - சுரா (Sura)
பாக்யராஜுடன் படுத்துக் கொண்டே உரையாடினேன்
இன்று 'லேகா புரொடக்ஷன்ஸ்' அலுவலகத்திற்கு பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் வந்திருந்தார். என் நண்பரும், 'லேகா புரொடக்ஷன்ஸ்' உரிமையாளருமான லேகா ரத்னகுமார் தான் இயக்க இருக்கும் 'காணவில்லை' என்ற படத்தைப் பற்றி கூற, இன்றைய திரையுலகின் போக்கு, வர்த்தக நிலவரம், வினியோக முறை ஆகியவை பற்றிய தன்னுடைய அனுபவங்களையும், ஆலோசனைகளையும் சுமார் ஒரு மணி நேரம் விளக்கி கூறினார் பாக்யராஜ்.
தொடர்ந்து அங்கிருந்த பின்னணி இசை ஒலிப்பதிவுக் கூடத்தையும், இந்திய திரைப்படங்களுக்கு தேவைப்படும் உலக இசை பொக்கிஷத்தையும் அவர் பார்த்தார். 'நம் நாட்டில் தயாராகும் படங்களுக்கு உண்மையிலேயே இது ஒரு வரப் பிரசாதம். இங்குள்ள இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்''என்றார் பாக்யராஜ். உரையாடலின்போது நானும் பாக்யராஜுக்கு அருகில் அமர்ந்திருந்தேன். கீழே வந்து லேகா ரத்னகுமாரும், நானும் அன்புடன் வழியனுப்பி வைக்க, புன்னகைத்தவாறு பாக்யராஜ் தன் காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது என் மனம் பின்னோக்கிச் சென்றது. 1979 ஆம் வருடம் 'சாவி' வார இதழின் துணை ஆசிரியராக பணி கிடைத்து, நான் சென்னைக்கு வருகிறேன். அப்போது ஈகா திரையரங்கில் 'புதிய வார்ப்புகள்' படத்தைப் பார்க்கிறேன். கிராமத்து பள்ளிக்கூட ஆசிரியராகவே அந்தப் படத்தில் வாழ்ந்திருந்தார் பாக்யராஜ். அதற்குப் பிறகு அவர் நடித்த 'பாமா ருக்மணி', அவர் நடித்து, இயக்கிய சுவரில்லாத சித்திரங்கள்,
ஒரு கை ஓசை ஆகிய படங்கள். அப்போது நான் 'ஃபிலிமாலயா'மாத இதழின் இணையாசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். மவுன கீதங்கள், இன்று போய் நாளை வா இரண்டும் தயாரிப்பில் இருக்கின்றன. 'இன்று போய் நாளை வா' படத்தின் படப்பிடிப்பு புரசைவாக்கம் ராமசாமி தெருவில் ஒரு ஞாயிற்றுக் கிழமை நடக்கிறது. நான் 'ஃபிலிமாலயா' மாத இதழுக்காக பாக்யராஜை பேட்டி எடுக்கச் சென்றிருக்கிறேன். பலமாக என்னை உபசரிக்கிறார் பாக்யராஜ். படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் மதிய உணவு அருந்த, ஒரு அறையில் நான் பாக்யராஜிடம் கேள்விகளைத் தொடுத்துக் கொண்டிருக்கிறேன். 'பாரதிராஜாவை விட்டு நான் வெளியே வந்தது அவருக்கு ஒரு இழப்புதான்' என்று கூறுகிறார் பாக்யராஜ். ஒரு கட்டிலில் அவர் சரிந்து படுத்திருக்க, நானும் சரிந்து படுத்துக் கொண்டே அவரிடம் கேள்விகள் கேட்கிறேன். பேட்டி முடிய உணவருந்த அழைக்கிறார். நான் மறுத்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறேன். அந்த நேரத்தில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட பரபரப்பான பேட்டி அது. 'மவுன கீதங்கள்' அவரை எங்கோ உயரத்திற்கு கொண்டு செல்கிறது. தொடர்ந்து வந்த 'முந்தானை முடிச்சு' அவரை வெற்றிச் சிகரத்தின் உச்சியில் உட்கார வைக்கிறது. 'தூறல் நின்னு போச்சு' அவரை மேலும் எங்கோ கொண்டு செல்கிறது. அந்த 7 நாட்கள், இது நம்ம ஆளு-வெற்றி தொடர்கிறது. 'டார்லிங் டார்லிங் டார்லிங்' ஒரு கவித்துவத் தன்மை நிறைந்த காதல் கதையுடன் வெளிவந்து இளம் தலைமுறையினரின் நெஞ்சங்களில் இடம் பிடிக்கிறது. 'பாக்யராஜ் என் கலையுலக வாரிசு'என்று கூறுகிறார் எம். ஜி. ஆர். 'நான் சிகப்பு மனிதன்'படத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கிறார் பாக்யராஜ். படம் பெரிய அளவில் வெற்றி பெறுகிறது.
ரஜினி'என்னை சூப்பர் ஸ்டார் என்று எல்லோரும் கூறுகிறார்கள். உண்மையிலேயே சூப்பர் ஸ்டார் பாக்யராஜ்தான்' என்று கூறுகிறார். சின்ன வீடு, பவுனு பவுனுதான்-பாக்யராஜின் முத்திரைகள் தொடர்கின்றன. 'எங்க சின்ன ராசா' பெரிய வெற்றிப்படமாக அமைகிறது. அமைதியாக எடுக்கப்பட்ட 'ருத்ரா'வில் கூட தன்னை எல்லோரும் பேசும்படி செய்கிறார். நடிகர் திலகத்துடன் இணைந்து வரலாறு படைக்கிறார். பாரதிராஜாவின்' ஒரு கைதியின் டைரி'க்கு கதை-வசனம் எழுதுகிறார்.
படம்100 நாட்கள் ஓடி சாதனை புரிகிறது. அதே படத்தை இந்தியில் 'ஆக்ரி ரஸ்தா'என்ற பெயரில் சில மாற்றங்களுடன் பாக்யராஜே இயக்குகிறார். கதாநாயகன்-அமிதாப் பச்சன். படம் மிகப் பெரிய வெற்றி. விஜயகாந்தை வைத்து 'சொக்கத் தங்கம்' இயக்கினார். அதுவும் பேசப்பட்டது. அவரின் கலையுலகப் பயணம் ஜெயம் ரவி, தனுஷைத் தாண்டியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவரின் மகன் சாந்தனு கதாநாயகனாக நடிக்க, அவர் இயக்கிய 'சித்து ப்ளஸ் டூ' படத்தின் பின்னணி இசை லேகா இசை நிறுவனத்தில்தான் அமைக்கப்பட்டது.
அப்போது தினந்தோறும் பாக்யராஜ் லேகா புரொடக்ஷன்ஸ் ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வருவார். தினமும் என்னை அவர் பார்ப்பார். நான் அவரைப் பார்ப்பேன். நான்'இனிய உதய'த்திற்காக கதைகளை மொழி பெயர்த்துக் கொண்டிருப்பேன். பாக்யராஜ் சிரித்துக் கொண்டே 'என்ன. . . பரீட்சை எழுத ஆரம்பிச்சிட்டீங்களா?' என்று கேட்பார். நானும் சிரித்துக் கொண்டே 'ஆமாம் சார்' என்பேன். பாக்யராஜின் கார் பார்வையிலிருந்து மறைந்து விட்டது. ஆனால், அவரைப் பற்றிய நினைவுகள் மனதில் திரும்பத் திரும்ப வலம் வந்து கொண்டேயிருக்கின்றன.