கமலத்திற்கு ஒரு கதை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4525
கமலத்திற்கு ஒரு கதை
தகழி சிவசங்கரப்பிள்ளை
தமிழில்: சுரா
இது நான் முன்பு ஒருமுறை எழுதியது. பத்து... முப்பது வருடங்களுக்கு முன்பு. முதல் கதையைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன். அந்த வார இதழின் பெயர் ஞாபகத்தில் இல்லை. வார இதழை நடத்திக் கொண்டிருந்தவர் டி. என். கோபிநாதன் நாயரும் ராஸ்கோட் கிருஷ்ணபிள்ளையும். அடூர் பாஸியும் அவர்களுடன் இருந்தார் என்று நினைக்கிறேன். ஆமாம்... புகழ் பெற்ற திரைப்பட நட்சத்திரம் அடூர் பாஸிதான். அந்த கட்டுரை இப்போது என்னிடம் இல்லை. விஷயங்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். அவை மறக்கக் கூடியவை அல்ல.
நான் உயர்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பிலோ ஐந்தாம் வகுப்பிலோ படிக்கும்போதுதான் முதல் கதையை எழுதினேன். குறைந்த பட்சம் இரண்டு வருடங்களுக்கு முதல் கதையைப் பற்றிய கதை நீண்டு செல்கிறது.
முன்னுரை நீண்டு செல்கிறது. அப்படித்தானே?
கதையை ஆரம்பிக்கிறேன்.
நான் தகழியிலிருந்து தூரத்திலிருந்த ஓரிடத்தில் மூன்றாவது ஃபாரத்தில் தேர்ச்சி பெற்று, நான்காவது ஃபாரத்தில் சென்று சேர்ந்தேன். உயர்நிலைப் பள்ளியிலிருந்து நான்கைந்து மைல்கள் தூரத்திலிருந்த ஒரு இடத்தில் நான் தங்கியிருந்தேன். அங்கு என்னுடைய ஒரே ஒரு சகோதரி இருந்தாள். அக்கா, அக்காவின் கணவர் அங்கு எக்ஸைஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இடத்தின் பெயரை நான் கூற மாட்டேன்.
பள்ளிக் கூடத்திற்கு நடந்துதான் போவதும் வருவதும். நான் தங்கியிருந்த வீட்டின் அருகிலிருந்து இரண்டு சிறுமிகள் சேர்ந்து பள்ளிக் கூடத்திற்கு நடந்து போய், வந்து கொண்டிருந்தார்கள். என்னை விட சற்று அதிக வயது அவர்களுக்கு இருந்தது. அவர்கள் உயர் வகுப்புகளில் படிப்பவர்கள். அப்போது அந்த ஊரிலிருந்து ஏராளமான சிறுவர், சிறுமிகள் ஐந்து மைல்கள் நடந்து சென்று படித்துக் கொண்டிருந்தார்கள்.
என்னுடைய பக்கத்து வீட்டு சிறுமிகள் என்னை ஒரு சிறிய பையனாக மனதில் நினைத்திருப்பதைப் போல தோன்றியது. முல்லைப் பூக்களைப் பறிப்பதற்காக அவர்கள் என்னை பந்தலின் மீது ஏறச் சொல்வார்கள். அவர்களுக்கு பென்சில், மை, புத்தகம் ஆகியவற்றை வாங்கி வருவதற்காக கடைக்கு அனுப்புவார்கள். வெள்ளப் பெருக்கு காலத்தில் சாலையைத் தாண்டி பலமாக நீர் ஓடிக் கொண்டிருக்கும். அப்போது அவர்களைக் கையைப் பிடித்து அக்கரைக்குக் கொண்டு போய் சேர்ப்பது நான்தான். அவ்வாறு நான் கையைப் பிடிப்பதில் அவர்களுக்கு கூச்சமேயில்லை.
ஒரு சாயங்கால வேளையில் அல்லது புலர் காலைப் பொழுதில் நான் அவர்களில் யாரையாவது வலிய சென்று பிடித்திருந்தால், அவர்கள் எப்படி நடந்து கொண்டிருப்பார்கள்? சம்மதித்து நின்றிருப்பார்களா? எது எப்படியோ... அதற்குப் பிறகு என்னை சிறுவன் என்று நினைத்திருக்க மாட்டார்கள். ஒருவேளை, சம்மதிக்காமல் போயிருந்தாலும்....
நான் பல நேரங்களில் கண்களை மூடி சிந்தனையில் மூழ்கியிருக்கிறேன். எதைப் பற்றி என்று கேட்கிறீர்களா? நான் அதை கூற மாட்டேன்.
நான் அவர்களுடைய பார்வையில் சிறுவனாகவேதான் இருந்தேன்.
அப்படி நடந்து... நடந்து சிறிது தூரம் சென்றதும், ஒரு சிறுமி எதிர்பார்த்து நின்றிருப்பாள். என்னை அல்ல -- அவர்கள் இருவரையும். அவர்களுடன் சேர்ந்து அல்ல என்றாலும், அவர்களுடன் சேர்ந்துதான் என்று கூறும் வகையில் சற்று பின்னால், இல்லாவிட்டால் சற்று முன்னால் நடக்கக் கூடிய நானும் அந்த கூட்டத்தில் இருந்தேன்.
அந்த சிறுமிகளுக்கு முன்னாலோ இல்லாவிட்டால் பின்னாலோ எதற்காக நடந்தேன்?
இராமாயணம், பாரதம், பாகவதம் - அனைத்தையும் வீட்டில் என் தந்தை வாசித்துக் கேட்டு வளர்ந்தவன் நான். படிக்கும்போது, நான் வாசிப்பவனாக ஆகி விட்டேன். என் தந்தை தவறுகளைத் திருத்துவார். என் தந்தைக்கு பல துள்ளல் கதைகளையும் தெரியும். நம்பியாரின் துள்ளல் கதைகளை நான் வாசிப்பேன். அந்த வகையில் நான் பாடல்கள் கொண்ட புத்தகங்கள் பலவற்றையும் வாசித்தேன். நான் பாடல்கள் எழுதியிருக்கிறேன். கேக - நாத - அன்னநடை, வஞ்சிப்பாட்டு ஆகிய விருத்தங்களிலெல்லாம். சில இயற்கை வர்ணனைகள், புராண கதைகள் - இவை மட்டுமல்ல - வாழ்க்கைக் கதைகளையும் பாடல் வடிவில் எழுதியிருக்கிறேன். ராமசந்திர விலாசம், சாவித்திரி மாகாத்மியம் போன்ற மகாகாவியங்களை வாசித்த காலத்தில், அனைத்தையும் கூர்ந்து கவனித்து, சுலோகங்களை மனப்பாடமாக ஆக்கியிருக்கிறேன். வள்ளத்தோளையும் ஆசானையும் நான் அந்தச் சமயத்தில் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். நான்காவது ஃபாரத்தில் என்னுடைய ஒரு பாட புத்தகம் 'சிந்தனையில் மூழ்கிய சீதை.'
அப்போது சிறுகதைகளின் அறிமுகம் கிடைத்தது. இ.வி. என்று ஞாபகம். கதைகள் கொண்ட ஒரு மாத இதழைக் கொண்டு வந்திருந்தார். 'கதைமாலிக' என்றோ இல்லாவிட்டால் வேறு ஏதோ பெயர். தாகூர் கதைகளின் மொழி பெயர்ப்புகளும் கையில் இருந்தன. கண்ணன் ஜனார்த்தனின் தாகூர் கதைகளின் மொழி பெயர்ப்பை நான் பாட புத்தகத்தில் படித்திருக்கிறேன். இ.வி. யின் 'கேளீசவ்தம்' நான்கு பகுதிகளையும் மறக்கவே முடியாது. வீட்டிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்கு படிப்பதற்காகச் சென்றபோது, அதிகமாக வாசித்தது கதைகளையும் நாவல்களையும்தான்.
இடையில் வழியில் எங்களுடன் சேர்ந்து கொள்ளும் சிறுமி மெலிந்த தோற்றத்தைக் கொண்டிருந்தாள். மற்றவர்களுக்கு இருப்பதைப் போல வளர்ச்சியும், உடலில் சதைப் பிடிப்பும் இல்லை. நல்ல நிறம், சுருண்ட முடி, அதுவும் ஏராளமாக. நல்ல பற்களும், சிவந்த உதடும். அவள் என்னுடைய வகுப்பில் இருந்தாள்.
அவள் என்னை வெறும் சிறிய பையனாக நினைக்கவில்லை. பார்வையையும் புன்சிரிப்பையும் நடவடிக்கைகளையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இடையில் கூறுகிறேன் -- அவளுக்கு அழகான கண்கள் இருந்தன.
புடவை அணிந்திருந்தாலும், உள்ளே கோவணம் கட்டியிருந்தாள். பின்னாலிருந்து பார்த்தால், தெரிந்து கொள்ளலாம்.
நான் தனியாக வந்தேன். அது ஒரு தீர்மானம். அந்த இரண்டு சிறுமிகளும் இல்லாமல் அவள் எதிர்பார்த்து நின்றிருந்தாள்.
'அவங்க ஏன் வரல?'
'என்ன காரணமோ... எனக்கு தெரியாது.'
அந்த வார்த்தைகளில் குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு அவர்களைப் பற்றிய ஒரு அலட்சியம் இருந்திருக்க வேண்டும். நான் தொடர்ந்து கூறினேன்:
'நான் பார்க்கவில்லை.'
அவள் எனக்குப் பின்னால் நடந்தாள்.
'எனக்கு ஒரு இன்ஸ்ட்ரூமெண்ட் பாக்ஸ் வாங்கித் தர முடியுமா?'
பிறகு அவள் தொடர்ந்து சொன்னாள்: அவளுடைய இன்ஸ்ட்ரூமெண்ட் பாக்ஸில் ஏதோவொன்று கேடாகி விட்டது. அதுமட்டும் விலைக்கு கிடைக்காது. பணத்தைத் தந்தாள். நான் அடுத்த நிமிடம் நடந்தேன். மேற்கு திசையிலிருந்த கடைக்குச் சென்று இன்ஸ்ட்ரூமெண்ட் பாக்ஸ் வாங்கினேன். பாதை வளைந்து செல்லும் இடத்தில் அதை அவளிடம் கொடுத்தேன்.