கமலத்திற்கு ஒரு கதை - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4529
நான் ஆர்வத்துடன் கேட்டேன்:
'எந்த நாய் கடிச்சது? எங்கே கடிச்சது?'
மணியோசையைப் போல ஒரு சிரிப்பு!
அவளுடைய ஓரக் கண் என் இதயத்தைத் தோண்டி எடுத்தது. அந்த மாதிரி கமலம் எந்தச் சமயத்திலும் ஓரக் கண்களால் பார்த்ததில்லை.
என் மனதிற்குள் ஒரு போராட்டம் உண்டானது. என்ன கேட்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. அவள் முன்னால் நடந்தாள். அவள் உள்ளே துணியை அணிந்திருப்பாள். பின் பகுதிக்கு வனப்பு வந்திருந்தது. அவை குலுங்கின.
என் நெஞ்சு பலமாக அடித்துக் கொண்டிருந்தது.
அவள் மெதுவான குரலில் சொன்னாள்:
'நான் வயசுக்கு வந்துட்டேன்.'
இவையெல்லாம் உண்மை. நான் இப்போதும் நினைத்துப் பார்க்கக் கூடிய விஷயங்கள்....
நான் கண்களை மூடி சிந்தனையில் மூழ்கினேன். இரவில் தூங்குவதற்காக படுக்கும்போது, நடக்கும்போது, வகுப்பில் அமர்ந்திருக்கும்போது! என்ன சிந்தித்தேன் என்று கேட்கிறீர்களா? நான் கூற மாட்டேன்.
அதைத் தொடர்ந்து நான் ஒரு கதை எழுதினேன். ஒரே இரவில்.... பாதி இரவு தாண்டிய பிறகும் என்னுடைய அறையில் வெளிச்சம் இருப்பதைப் பார்த்து, அக்கா கண் விழித்து வந்தாள்.
'என்ன குழந்தை! நீ தூங்கலையா?'
'இல்ல.... கொஞ்சம் எழுத வேண்டியதிருக்கு.'
புலர் காலைப் பொழுதில் அக்கா கண் விழிப்பாள். எனக்கு மதியத்திற்குத் தேவையான சோற்றைத் தயார் பண்ண வேண்டும். அப்போதும் அக்கா பதைபதைப்புடன் சொன்னாள்:
'அய்யோ, குழந்தை, நீ கொஞ்சம் கூட கண்ணை மூடலையேடா!'
அதற்கு பின்னால் இருந்த வேலை - அதை பிரதி எடுப்பது. நல்ல தாளில் அழகான எழுத்தில் சீரானது.
கதைக்கு என்ன பெயரை வைப்பது? இறுதியில் கமலம் என்று நான் எழுதி விட்டேன். அந்த வகையில் பெயர் வைத்தேன். இந்துலேகா, சாரதா என்றெல்லாம் கதைகளுக்குப் பெயர் இருக்கின்றனவே!
வகுப்பில் நன்கு கவனிக்கக் கூடிய ஒரு மாணவனாக நான் இருந்தேன். தினமும் காலையிலும், மாலையிலும் ஐந்து மைல்கள் நடந்தேன். வழியில் கற்பித்ததை ஞாபகப் படுத்திப் பார்ப்பேன். வாசித்ததையும் நினைவுபடுத்திப் பார்ப்பேன். அது ஒரு பயிற்சி அல்லவா? நல்ல பயிற்சி. பாட புத்தகங்களை அந்த அளவிற்கு தீவிரமாக வீட்டில் இருக்கும்போது வாசிப்பதில்லை. நோட்டுகளும் இல்லை. நடந்து மிகவும் சோர்வடைந்த நிலையில்தான் வீட்டிற்கு வருவேன். பிறகு எப்படி வாசிப்பது? தளர்ந்து போய் விட்டிருப்பேனே!
'கமலம்' என்ற கதையை எழுதியதிலிருந்து காலையில் செல்லும்போதும், வரும்போதும், வந்த பிறகும் கதையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பேன். கதைக்கு வடிவம் வரும். உள்ளடக்கம் உண்டாகும். எழுதிய கதையை பல தடவைகள் திருத்தி எழுதி, புதிய புதிய கதைகள் வடிவமெடுத்தன. கழிவறையில் இருக்கும்போது கூட கதையை உருவாக்கிக் கொண்டிருந்தேன். வகுப்பில் கண்களைத் திறந்துகொண்டு அமர்ந்திருப்பேன். ஆனால், கதையை உருவாக்கிக் கொண்டிருப்பேன்.
நான் கதையைப் படைக்கும் உலகத்தில் இருப்பேன். எழுத்துடன் எழுத்து... எத்தனை கதைகள் எழுதினேன் என்று கூற இயலாது. தினமும் ஒன்றோ இரண்டோ நோட்டு புத்தகங்களின் தாள்கள் தீர்ந்தன.
என்னுடைய முதல் கதையை கமலம் வாசிக்க வேண்டும். அவ்வாறு தோன்றியது. நேரில் கொடுக்க முடியாது. ஏன் முடியாது? முடியுமோ என்னவோ? அங்கு போய் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் பலமாக இருந்தது. எப்படி கொண்டு போய் கொடுப்பேன்? அவள் அதை திரும்ப கொடுத்து விட்டால் என்ன செய்வது?
முடியாது... பயமா? கூச்சமா? நிச்சயமாக தெரியவில்லை.
வாடகைக் கணக்கை எழுதுவதைப் போல கமலத்தின் ஏதோ ஒரு நோட்டு புத்தகத்தை - அறிவியல் நோட்டு புத்தகம் என்று ஞாபகம் -- வாங்கினேன். அது இரண்டு.... மூன்று நாட்கள் என் கையிலிருந்தது. ஒரு வாடகையையும் எழுதவில்லை. சிந்தனையில் மூழ்கினேன்.
ஒருநாள் அந்த கதையை அந்த புத்தகத்திற்குள் வைத்தேன். எப்போதும் சந்திக்கும் இடத்தில் வைத்து அந்த நோட்டைக் கொடுத்தேன். வேகமாக நடந்து சென்றேன். அவள் அந்த நடையை கவனித்திருக்க வேண்டும். மறுநாள் எப்போதும் சந்திக்கக் கூடிய நேரத்திற்கு முன்பே நான் அவளைப் பார்க்கக் கூடிய இடத்தைக் கடந்து சென்றேன். வகுப்பில் நான் கமலத்தைப் பார்க்கவேயில்லை. கமலம் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு தெரியும்.
பயம்!
காதல் கதையைக் கொடுத்த பயம்!
நேரில் கதையைக் கொடுக்காமல் இருந்ததற்குக் காரணம் என்ன என்பது தெளிவாக தெரிந்து விட்டது. பயம்!
அவள் தலைமை ஆசிரியரின் கையில் கதையைக் கொடுத்து விட்டு, புகார் கூறி விட்டால்....?
நான் கூறுவேன்:
நான் ஒரு கதை எழுதினேன். அவளுடைய நோட்டு புத்தகத்திற்குள் அதை வைத்தேன். நோட்டு புத்தகத்தை திருப்பித் தந்தபோது, அதை எடுப்பதற்கு மறந்து போய் விட்டேன்.
கதை எழுதுவது குற்றமல்லவே!
அந்த கதையின் உள்ளடக்கம் என்ன என்று எனக்கு தெரியாது. அப்படி பயப்படக் கூடிய அளவிற்கு அது தரம் தாழ்ந்ததாக இருந்ததா? நான் தேவையில்லாமல் எதையாவது எழுதி விட்டேனா? ஒரு பெண்ணிடம் தரமற்ற முறையில் நடந்து கொள்வதைப் போல.....
நான் நான்கு நாட்கள் கமலத்தைப் பார்க்காமலே நடந்தேன். ஒவ்வொரு நாள் முடியும்போதும் எனக்கு நிம்மதியாக இருந்தது. தலைமையாசிரியரின் நோட்டீஸ் வரவில்லை.
ஐந்தாவது நாள் நான் போய் சேர்வதற்கு முன்பே, நாங்கள் சந்திக்கக் கூடிய இடத்தில் கமலம் எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
அழகான ஒரு புன்னகையுடன் கதையை என்னை நோக்கி நீட்டினாள். நான் தட்டி பறிப்பதைப் போல அதை கையில் வாங்கினேன். கமலம் கேட்டாள்:
'என்ன... பயந்துட்டியா? சரிதான்...'
நான் எதுவும் கூறவில்லை.
நன்கு உருண்ட, அழகான கையெழுத்தில் கதைக்கு மேலே எழுதப்பட்டிருந்தது:
'A very Good Story. Congratulations'
எனக்கு முதல் தடவையாக கிடைத்த பாராட்டு.