ஒரு ஒவியத்தின் கதை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6880
"தந்தை மகளின் கழுத்தில் கத்தி வைப்பதும், குருதி பெருக்கெடுத்து வழிவதும்..." என்ற வரிதான் கவரை உடைத்து கடிதத்தை எடுத்தவுடன் கண்ணில்பட்டது. அப்போது அந்தக் கடிதம் ஆயிரம் மைல்களுக்கும் அப்பால் இருக்கிற ஒரு இடத்திலிருந்து ஓவியரான என் நண்பர் அனுப்பியிருக்கும் கடிதம் என்று நினைக்கவில்லை. அடியில் எழுதப்பட்டிருந்த பெயரைப் பார்த்த பிறகுதான் நண்பர் எழுதிய கடிதம் என்பதே தெரியவந்தது.
கடிதத்தில் அவர் எழுதியிருந்த விஷயம் சமீபத்தில் அவர் வரைந்த ஒரு புதிய ஓவியத்தைப் பற்றியே இருந்தது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற ஒரு கொலை நிகழ்ச்சியைக் காட்டும் படமே அது. அந்த ஓவியத்தைப் பொதுமக்கள் எல்லாரும் பார்க்கும் வண்ணம் கண்காட்சியில் வைக்கவேண்டும் என்பது அவரின் விருப்பம். ஆனால், கொலை வழக்கின் தீர்ப்பு இன்னும் சொல்லப்படாததால், என்ன செய்வது என்று தெரியாமல் திரிசங்கு நிலைமையில் இருக்கிறார் என் நண்பர். தான் கஷ்டப்பட்டு வரைந்த ஓவியத்தை இன்னொருவர் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று ஒரு ஓவியன் ஆசைப்படுவது நியாயமான ஒன்றே. அவர் உணர்ச்சிவசப்பட்டு தன்னுடைய ஓவியத்தைப் பற்றி கடிதத்தில் இப்படி விவரிக்கிறார்.
"நடந்த காட்சிகள் ஒவ்வொன்றும் என் மனதில் ஆழமாகப் பதிந்துபோனதன் விளைவு, என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. நான் நன்கு உறங்கி எத்தனை நாட்கள் ஆகிவிட்டன தெரியுமா? என்னால் வெறுமனே இருக்க முடியவில்லை. அவ்வப்போது என்னை மீறி ஏதாவது நான் உளறுகிறேன். நான் கண்ணால் கண்ட காட்சிகள் என் முன்னால் மீண்டும் தோன்றுகின்றன. எனக்கு எங்கே பைத்தியம் பிடித்துவிடப் போகிறதோ என்று அந்தக் காட்சிகளை எல்லாம் ஓவியமாகத் தீட்டினேன். பிரகாசமான அடர் சிவப்பு வண்ணத்தில் என் இடது கையில் இருந்து நான் எடுத்த ரத்தத்தையும் கலந்து சேர்த்து உண்டாக்கிய புது ரத்தத்தில் நான்
வரைந்த ஓவியமே "மாதிரி தந்தை" என்ற இந்தப் படம்.'' தொடர்ந்து ஓவியம் வரைவதற்கு உதவியாக இருந்த விஷயங்களை கடிதத்தில் அவர் விவரிக்கிறார். "கல்லூரி பிரின்ஸிபாலும் டாக்டரும் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள். அவர்களின் பிள்ளைகள் நெருங்கிய நண்பர்கள். ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க முடியாத அளவிற்கு எப்போதும் ஒன்றாகவே இருப்பவர்கள். சிறு வயது முதல் அவர்கள் ஒன்றாகவே வளர்ந்தவர்கள். இப்படியே வளர்ந்து இருபது, இருபத்திரெண்டு வயது வாலிபர்களாக அவர்கள் ஆகிவிட்டார்கள். அவர்களுக்கு இரண்டு தந்தைகளும், இரண்டு தாய்களும் இருப்பதாகவே எல்லாரும் பொதுவாகக் கூறுவார்கள். அந்த அளவிற்கு- நட்புக்கு இலக்கணம் என்றால் இவர்கள்தான் என்கிற அளவிற்கு- வாழ்க்கையில் அவர்கள் ஒன்றுபட்டிருந்தார்கள். ஒவ்வொரு வருடக் கடைசியிலும் அந்த இரண்டு குடும்பத்தினரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுப்பார்கள். அப்படி ஒவ்வொரு வீட்டிலும் பதினான்கு புகைப்படங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு புகைப்படத்திலும் நடுவில் தோளில் கை போட்டு புன்சிரிப்பு தவழ நின்றிருப்பார்கள் அந்த இரண்டு நண்பர்களும். அவர்களைச் சுட்டிக்காட்டி அந்த இரண்டு அம்மாமார்களும் கூறுவார்கள்.
"எங்களோட நட்புச் சங்கிலியோட தொடர்ச்சிதான் இவங்க ரெண்டு பேரும்." எந்தக் காரணத்தை முன்னிட்டும் அந்த நட்புக்கு எந்தக் கேடும் வராது என்று திடமாக நம்பினார்கள் அவர்கள். என்ன இருந்தாலும், மனித வாழ்க்கை நடந்து கொண்டிருப்பதே இந்த மாதிரியான நல்ல எதிர்பார்ப்புகளை வைத்துத்தானே! சில நேரங்களில் சாதாரண காரணங்களால் கூட காலம் காலமாக இருந்து வருகிற உறவுகள் அறுந்து போவது உண்டு. இதை எல்லாம் ஞாபகத்தில் வைத்துக்கொண்டுதான் மனிதர்கள் உறவுகளைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. அந்த அளவிற்கு மிகவும் கவனத்துடன் யாரும்
இருப்பதாகவும் தெரியவில்லை. இருந்தாலும் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் நல்ல பகல் சமயத்தில், மக்களே ஆச்சரியப்படுகிற அளவிற்கு ஒரு மிகப்பெரிய இடியே நம்மேல் விழுந்ததுபோல், நகரத்தையே நடுங்க வைத்த அந்தச் சம்பவம் ஒரு நாள் நடந்தது. பிரின்ஸிபாலின் வீட்டில் வைத்து டாக்டரின் பெரிய அரிவாள் ஒன்றால் பிரின்ஸிபாலின் மகனைக் குத்திக் கொன்றுவிட்டான். இதுதான் அந்தச் சம்பவம்.
சம்பவத்தைக் கேட்டு நான் ஓடிச் சென்றபோது, பிரின்ஸிபாலின் மகன் செத்துப் போயிருந்தான். அவன் தலை டாக்டரின் மடியில் இருந்தது. அப்போது வெளியே நல்ல வெளிச்சம். சிவப்பு நிறத்தில் ரத்தம் அவனின் வெள்ளைச் சட்டையின் முன்பக்கம் முழுவதும் நெஞ்சில் உள்ளே இறங்கிய அரிவாளின் கைப்பிடி மட்டும் வெளியே தெரிகிறது. இரண்டு தாய்மார்களும், இரண்டு தந்தைகளும் அங்குதான் இருக்கிறார்கள். அவர்களைச் சுற்றி அவர்களின் மற்ற பிள்ளைகள். ஓவியத்தில் இருப்பதுபோல, சம்பவம் அதிர்ச்சி தரக்கூடிய ஒரு சம்பவம்தான். யாரும் ஒரு வார்த்தைகூட வாய்திறந்து பேசவில்லை. டாக்டரின் முகம் வெளிறிப் போய் இருந்தது. கண்கள் கோபத்தால் சிவப்பேறின. நெஞ்சில் இருந்த அரிவாளை உருவி எடுத்த டாக்டர் பைத்தியம் வந்த மனிதனைப்போல எழுந்து, தன்னுடைய மகன் அருகில் போய் நின்றார்.
"நீ ஏண்டா இப்படி ஒரு காரியத்தைச் செஞ்சே?..." டாக்டர் அலறினார். ஆனால், டாக்டரின் மகன் ஒரு வார்த்தைகூட பதில் சொல்லாமல், சிலை என நின்றிருந்தான்.
"அப்படின்னா நீ ஏன் உயிரோட இருக்கே? நீயும் செத்துப் போ..." என்று இதயம் நொறுங்க கத்தியவாறு மகனின் நெஞ்சை நோக்கி அரிவாளை ஓங்கினார் டாக்டர். அடுத்த வினாடி... பிரின்ஸிபால் ஓடி வந்து
டாக்டரின் கையைத் தடுத்தார். "வேண்டாம்...''- பிரின்ஸிபால் சொன்னார்.
அந்த நேரத்தில் என் நண்பரான போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கு வந்து சேர்ந்தார்.
அதற்குப் பிறகு நடந்தது என்ன? "இந்தக் காரணத்திற்காகத்தான் என் நண்பனை நான் கொன்றேன்" என்று கொலை செய்த குற்றவாளி விளக்கம் தரவில்லை. போலீஸ் இன்ஸ்பெக்டர் எல்லார் முன்னிலையிலும் விசாரணை செய்தார். தனியாக அழைத்துச் சென்று ஒரு அறைக்குள் வைத்தும் விசாரித்துப் பார்த்தார். எவ்வளவு நேரம் விசாரித்தும் உயிருக்குயிரான அந்த நண்பர்கள் எப்படி கொலை செய்கிற அளவிற்கு விரோதிகளாக மாறினார்கள் என்பதைக் கடைசிவரை போலீஸ் இன்ஸ்பெக்டரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. எந்தவித மறுப்பும் இல்லாமல், தான்தான் அந்தக் கொலையைச் செய்ததாக டாக்டரின் மகன் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒத்துக் கொண்டான். ஆனால், அவனுக்கு அவ்வளவு பெரிய தண்டனை கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அனேகமாக அவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்றுதான் மக்கள் எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், சட்டம் என்று வருகிறபோது எந்தவொரு பச்சாதாபமும் காட்டக் கூடாது என்றெண்ணிய நீதிபதி, வழக்காடு மன்றமே நடுங்குகிற அளவிற்கு கம்பீரமான குரலில், கொலை செய்த குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை அளிப்பதாகத் தீர்ப்பளித்தார்.