ஒரு ஒவியத்தின் கதை - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6881
"நீங்க என்னை இப்போ கைது பண்ணலாம்"- என்று கூறியவாறு நீதிபதி அறைக்குள் நுழைந்தார். பின்பக்கம் திரும்பி வேலைக்காரனிடம் உரத்த குரலில் அதிகாரத் தொனியில் கட்டளையிட்டார்.
"அதை மேஜைமேல் வை."
ஆச்சரியமான கண்களுடன் எதுவுமே பேச முடியாமல் விக்கித்துப் போய் உட்கார்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர். அவரால் மூச்சு விடக்கூட முடியவில்லை. வேலைக்காரன் கையில் வைத்திருந்த அந்தத் துணிப் பொட்டலத்தை மேஜை மேல் வைத்தான். கத்தியின் நுனியால் நீதிபதி துணியை நீக்கினார். இன்ஸ்பெக்டர் அது என்னவென்று ஆர்வத்துடன் பார்த்தார்... உள்ளே ஒரு பெண்ணின் தலை மட்டும். உடல் இல்லாமல் தனியாக... நடுஉச்சி எடுத்து வாரப்பட்ட சுருண்ட முடி... வெளுப்பான ஒளி வீசும் நெற்றி... இன்னும் மூடாமல் திறந்திருக்கும் விழிகள்... திறந்த வாய்.
பயங்கரமான அமைதி ஒரு நிமிடம் அங்கு நிலவியது. ஆனால், பல நிமிடங்கள் ஓடி மறைந்ததுபோல் இருந்தது இன்ஸ்பெக்டருக்கு. அவர் அசையவே இல்லை. உலகமே ஒரு நிமிடம் தன் இயக்கத்தை நிறுத்தி விட்டதுபோல் இருந்தது அவருக்கு. சிறிது நேரம் கழித்துத்தான் அவரால் சுய உணர்வுக்கே வர முடிந்தது. சுவரில் கடிகாரம் ஓடிக் கொண்டிருந்தது. காலடி ஓசை ஏதோ கேட்கிறது. கேட்டைத் திறந்து விட்டதற்காக ஸ்டேஷன் பாரா பார்க்கும் ஆள் யாரையோ திட்டுகிறார்.
இன்ஸ்பெக்டர் மெல்ல எழுந்து வெளியே வந்தார். அப்போது குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. ஸ்டேஷன் பாரா கொண்டு வந்த காப்பியை வராந்தாவில் இருந்தவாறு குடித்த இன்ஸ்பெக்டர் ஒர சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்தார். இப்படிப்பட்ட ஒரு கொடுமையான- அதே நேரத்தில் கடுமையான காரியத்தை நீதிமானான ஒரு நீதிபதி எப்படிச் செய்தார்? அவரை இந்த அளவிற்குச் செய்யத் தூண்டிய காரியம் என்னவாக இருக்க முடியும்? நீதிபதிக்கு ஒருவேளை மூளை ஏதாவது குழம்பிப் போய்விட்டதா? வீட்டு வேலைக்காரனை எதற்கு இங்கு அழைத்து வரவேண்டும்? இப்படிப் பல விஷயங்களையும் அலசிப் பார்த்த இன்ஸ்பெக்டர் மீண்டும் அறைக்குள்
வந்தார். நீதிபதி எதிரில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். கண்களைக் கூட சிமிட்டாமல் அமைதியாக இருந்தார். அவரின் புருவத்தில் இருந்த வெள்ளை ரோமங்கள் வெள்ளிக் கம்பிகளைப்போல் மின்னின. அவரின் வேலைக்காரன் எதுவுமே பேசாமல் திண்ணையில் உட்கார்ந்திருந்தான். உடலில்லாத அந்தத் தலை கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு... உறைந்து கிடக்கும் ரத்தத்தில் முடி மூழ்கிப் போயிருந்தது.
பயங்கரமான அந்த அமைதியை நீதிபதிதான் கலைத்தார். மெதுவான- அதே சமயம் கம்பீரமான தன் குரலில் அவர் பேசினார்: "இந்தத் தலையோட உடல் அவளோட படுக்கை அறையில் கிடக்கு. நான் ஒரு "மாதிரி நீதிபதி"யாகவும் ஒரு "மாதிரி தந்தை"யாகவும் இருந்தவன், இருப்பவன். இப்போ எனக்கு நாற்பத்தேழு வயசு நடக்குது. இவளோட அம்மா சாகுறப்போ இவளுக்கு வயசு ஏழு. இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் நினைக்கவே இல்லை. ஏன்னா... அப்படி நான் கல்யாணம் பண்ற ரெண்டாவது மனைவி என் மகளை சரியாகக் கவனிக்கலைன்னா...? மொத்தத்தில்- நான் இவளுக்குத் தந்தையாக மட்டுமில்ல... தாயாகவும் இருந்தேன்.
"ஆமா..." நீதிபதி தொடர்ந்தார்: "ஒரு பொண்ணை எப்படி வளர்க்கணுமோ அப்படி நான் இவளை வளர்த்தேன். காலங்கள் படுவேகமாக ஓடிடுச்சு. என் மகளோட ஒவ்வொரு வாக்கும், பார்வையும் எனக்கு அத்துப்படி. இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை கண்ணை வச்சே நான் கண்டுபிடிச்சிடுவேன். உண்மையாகவே அதுதான் என்னோட பெரிய திறமைன்னு நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
ஆனா... முந்தாநாள்தான் எனக்கே தெரியவந்தது முகம் இதயத்தோட கண்ணாடி இல்லைன்றதே. விபச்சாரம் வறுமையின் கொடுமையால் இல்லைன்றதே எனக்கே இப்பத்தான் புரிஞ்சது. விஞ்ஞானத்தோட வெளிச்சம் கடந்து செல்ல முடியாத ஒரு இருண்ட உலகம்தான் மனித
இதயம். அங்கே என்ன நடக்குதுன்றதை இன்னொருத்தரால கண்டு பிடிக்கவே முடியாது. நல்ல சுத்தமான இதயத்தின் கண்ணாடி அழகான முகமாக இருக்குமா? இப்போது நான் இந்த விஷயத்தில் சந்தேகப்படுகிறேன்.
நான் எத்தனையோ ஆட்களை ஜெயிலுக்கு அனுப்பியிருக்கிறேன். எத்தனையோ பேரை தூக்குமரத்திற்கு அனுப்பியிருக்கிறேன். இதெல்லாம் எதற்காக? மனித சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டும்ன்ற ஒரே எண்ணத்துல. தீமையை அழிக்க வேண்டும்ன்ற ஒரே வெறியில. இப்போ என்னோட கொள்கைகள், லட்சியங்கள், ஆசைகள், நம்பிக்கைகள் எல்லாமே தரை மட்டமாக கீழே விழுந்திருச்சு. இப்போ எனக்கு எதிலயுமே நம்பிக்கை இல்ல... நன்மைன்னா என்ன...? தீமைன்னா என்ன?
ஒரு நாளென்றால் அதற்கு எப்படி இரவு, பகல்னு இருக்கோ அதே மாதிரி ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வெளிச்சம், இருள்னு ரெண்டு பக்கங்கள் இருக்கு. இப்படி இல்லாம உலகத்துல யார் இருக்கிறது? ஆனால், அறிவு வேலை செய்யிறதே எல்லாம் முடிஞ்சுபோன பிறகுதான். எனக்கு அறிவுன்றது சரியா வேலை செய்ய ஆரம்பிச்சதே முந்தா நாள் சாயங்காலம்தான். நான் அப்போ தோட்டத்துல நின்னுக்கிட்டு இருந்தேன். இவளோட அறையின் ஜன்னல் இடைவெளி வழியா பாக்குறப்போ இவள் அறைக்குள் இருக்குறது தெரிஞ்சது. அப்போது எனக்கு ஒரே ஆச்சரியம். இவள் மகளிர் சங்கத்தோட கூட்டத்துல பேசுறதுக்காகப் போயிருக்கிறாளே... ராத்திரி எட்டு மணிக்குத்தானே இவள் திரும்பி வர்றதாச் சொல்லியிருக்கா... ஆனால், பக்கத்துல போன பிறகுதான் என்னோட தவறு என்னன்னு எனக்கே தெரிய வந்துச்சு. நான் பார்த்தது இவளோட ஓவியத்தை. அந்த ஓவியத்தோட கலைத் திறமையை நான் உண்மையிலேயே பாராட்டி ஆகணும். அந்த ஓவியத்தையே சில மணி
நேரங்கள் உற்றுப் பார்த்தவாறு அந்த இடத்திலேயே நின்னுட்டேன். அந்த நிமிடத்தில் என் மனசுல உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. இப்படிப்பட்ட அழகான- பண்பாடுள்ள பொண்ணை எனக்கு மகளா படைச்சதற்காக நான் கடவுளுக்கு மனப்பூர்வமாக நன்றி சொன்னேன். என்னோட மகளின் பிரகாசமான எதிர்காலத்தைப் பற்றி நான் கனவு காணத் தொடங்கினேன். அவள் மேற்படிப்பு படித்து பாசாகி, அழகான கணவனோடு சேர்ந்து வாழ்ந்து குழந்தைகளுக்குத் தாயாகி...
என் மகளைப் பற்றி ஆனந்தமயமான நினைவுகளை அசை போட்டவாறு நான் ஜன்னலை அடைச்சிட்டு திரும்ப நடந்தேன். அப்போ திடீர்னு நான் நின்னேன். என் காலடியில ஒரு பழைய பேப்பர் துண்டு. டாக்டரின் மகன் பெயருக்கு என்னோட மகள் எழுதிய காதல் கடிதத்தோட ஒரு நகல் அது.''
தான் சொல்லி வந்ததை நிறுத்திய நீதிபதி கையில் இருந்த கடிதக்கட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து இன்ஸ்பெக்டர் கையில் கொடுத்தார்.