பிசாசு
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6692
ஒருவேளை? எதையாவது பார்த்துவிட்டுதான் நாய்கள் இப்படி ஊளையிடுகின்றன. மையைப்போல கறுத்து, இருண்டு கிடக்கும் இந்த நள்ளிரவு வேளையிலும் நாய்களால் பார்க்கமுடியும். அதனால் தான் வாசனை பிடித்துக்கொண்டு, ஒவ்வொன்றையும் தேடி இங்குமங்குமாக அது ஓடித்திரிந்து கொண்டிருக்கிறது! என்ன? பிசாசு என்ற ஒன்று இருக்கிறதா? சரிதான்... பிசாசும் பூதமும் யானை மருதாயும்,
அறுகொலையும் கருங்காளியும் சாத்தானும்- சகல வித ஷைத்தானும் இருக்கத்தான் செய்கின்றன. சரியான நள்ளிரவு வேளையில் நெருப்பைப் போன்ற கண்களை ஜொலிக்க வைத்துக்கொண்டு, உடுக்கையால் ஓசை உண்டாக்கியவாறு வரும் யானை மருதாய்...? நிச்சயமாக உண்டு. ஆனால் நான் பார்த்ததில்லை. எனக்கு ஒரு ஆளைத் தெரியும். நெருப்புருண்டைகளை வைத்துப் பந்தாடும் எலும்புக்கூடுகளின் ஊர்வலத்தைப் பார்த்தவர் அவர்! ஒரு வெள்ளிக்கிழமை. நள்ளிரவு வேளையில், ஒரு வயலின் நடுவில் அவர் பார்த்தார்- ஒரு பெரிய நெருப்பு. எரிந்து எரிந்து அது அப்படியே வானத்தின் உயரத்திற்கு உயர்ந்தது. திடீரென்று இடி முழங்கியதைப் போல ஒரு அட்டகாசம்! சிறிது சிறிதாக ஆன அந்த நெருப்பு அப்படியே அணைந்துவிட்டது. அதற்குப் பிறகும் இரைச்சலுடன் அது மலைபோல எரிந்து உயர்ந்தது- லட்சம் குரவ மலர்கள் ஒரே நேரத்தில் எரிவதைப் போல. திடீரென்று இதயத்தை நடுங்கச் செய்கிற அளவிற்கு ஒரு சிரிப்பு வெடித்துச் சிதறி வானத்தின் விளிம்பை அடைந்தது. அத்துடன் ஆயிரக்கணக்கில் அந்த நெருப்பு பிரிந்தது. கழுத்தில் தீப்பந்தத்தைச் சொருகிக் கொண்டு, ரத்தத்தில் குளித்த தலையில்லா சரீரங்களுடன்... தொடர்ந்து அவை அனைத்தும் அந்த ஆளைச் சுற்றி நடனமாடுகின்றன! ஆமாம்... ஆள் பயங்கரமான தைரியசாலிதான். வீட்டிற்குள் சென்று நுழைந்தவுடன், அவருடைய சுய உணர்வு இல்லாமல் போனது. மூன்று மாத காலத்திற்கு எந்தவொரு ஞாபகமும் இல்லை. வெறும் முனகல்களும் உளறல்களும். என்னவெல்லாம் நடந்தன தெரியுமா? அவர் ஒரு சமுதாய சீர்திருத்தவாதியாக இருந்தார். அவருக்கு சில எதிரிகள் இருந்தார்கள்.
அவர்களை அவர் அழித்துவிட்டார். எப்படித் தெரியுமா? தேநீர்க்கடைக்காரனுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தார். தனக்கு எதிராக இருக்கும் நண்பர்களுக்குத் தரும் தேநீரில் ஒரு வகையான ‘ஆஸிட்'டை கலந்து கொடுப்பதற்காக. அந்த வகையில் ஒரு ஆறு மாதங்கள் கடந்தோடி விட்டன. அவர்கள் யாரும் இறக்கவில்லை! ஆனால், அவர்களுடைய ஆண்மைத்தனம், மதிப்பு எல்லாம் இல்லாமற்போயின. அவர்கள் எல்லாரும் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த ஆள் மட்டும் மரணமடைந்துவிட்டார். தன்னைத் தானே கழுத்தை அறுத்துக்கொண்டு அவர் இறந்துவிட்டார். ங்ஹா... இதைப் போன்ற பயங்கரமான சம்பவங்கள் தினமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நம் அனைவரது கண்களுக்கும் முன்னால்தான்! ஆமாம்... ஆமாம். உணவில் ‘ஆஸிட்'டைக் கலந்துகொடுத்து எதிரிகளை அழிப்பதென்ற விஷயம் அந்தக் காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்து வந்திருக்கும் ஒரு செயல்தான். ங்ஹா... பிசாசுகள்தான்! நண்பரே! மனிதர்கள் மட்டுமே பிசாசுகளாக இருக்கிறார்கள். ஒரு ஆன்ம பரிசோதனை நடத்தப்பட்டால், மனசாட்சிக்கு முன்னால் அனைவரும் அவலட்சண உருவம் கொண்டவர்களாக மாறி விடுவார்கள். அவ்வளவுதான்... ...பிசாசுகள்!
அந்த விளக்கை அணைத்துவிடு. பொருட்களுக்கு அதிகமான விலையிருக்கும் இந்த போர்க்காலத்தில் எண்ணெய்யை வெறுமனே வீணாக்க வேண்டாம். கை பட்டு சிம்னி விளக்கு உடைந்து விடாத இடத்தில் அதை வைக்கவேண்டும். ங்ஹா... சரிதான். உண்மையிலேயே இருட்டு ஒரு சுகம்தான். மறைந்துபோன காரியங்கள், அனுபவங்கள் அனைத்தும் இருளின் பேரமைதியில்தான் முகத்தைக் காட்டுகின்றன. என்ன? மேலே ‘கிருகிரா' என்ற சத்தம் கேட்கிறதோ? ஓ... அது ஏதாவது பூனையாக இருக்கவேண்டும். நாய்கள் இங்குமங்குமாக ஓடிக் கொண்டிருப்பதையும் ஊளையிடுவதையும் பார்த்து பயந்துபோய் வீட்டின் மேலே இருந்தபடி பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த தீப்பெட்டியை இங்கே கொடு. தீக்குச்சிகள் மிகவும் மெல்லியவையாக இருக்கின்றவே! நான் அதை ‘ப்ளேடை' பயன்படுத்தி நான்கு துண்டுகளாக்கி வைத்திருக்கிறேன். விலை அரை அணாதானே? (மூன்று பைசா). எப்படி தவறு செய்ய முடியும்? ஓஹோ! ஆறு, எட்டு துண்டுகளாகக்கூட ஒரு தீக்குச்சியை ஆக்கலாம். ஆனால், அதற்கு மிகுந்த அனுபவம் வேண்டும். இதோ... தலையணைக்கு அடியில் வைத்திருக்கிறேன். இரவு வேளைகளில் என்னிடம் ஏதாவது இருக்க வேண்டும். ஒரு தீப்பெட்டியோ டார்ச் விளக்கோ... ஆமாம்... ஒரு கட்டாயமாக அது ஆகிவிட்டது. 1933-ஆம் ஆண்டில் டும்கூரில் நடைபெற்ற ஒரு அனுபவம்தான் காரணம்.
அதுவா? பயங்கரம்! நினைத்துப் பார்க்கும்போது என் இதயம் ‘கிடுகிடு' என்று நடுங்குகிறது. கதையல்ல- உண்மையாகவே நடைபெற்ற சம்பவம்! ஆமாம்... கதையென்று கூறுவதாக இருந்தால், அது நடக்காத சம்பவமாக இருக்கவேண்டும் என்று என் காதலி கூறுகிறாள்.
ஆமாம்- நானும் காதலிக்கிறேன். அளவற்ற காதலின் -சுவாரசியத்தை நானும் தெரிந்துகொண்டுவிட்டேன். காதல்! அது என்னை மூச்சை அடைக்கச் செய்கிறது. என் இதயத்தை அது நூறு இடங்களில் காயப்படுத்தி விட்டது. ஆமாம்... இப்போதும் நான் காதலின் நெருப்பு அடுப்பில்தான் இருக்கிறேன். என்னை அது சாம்பலாக்கட்டும். நான் வெந்து நீறாக ஆகட்டும்.
அதற்குப் பிறகும்... அதற்குப் பிறகும்... நான் யுகங்களின் தீவிரத்தன்மையுடன் காதலிக்கிறேன். தாகம்-அடங்காத தாகம் என்னை வாட்டுகிறது. காதலின் அந்த அமிர்தம் எனக்கு வேண்டும். நான் அதை நிறைய... நிறைய... பருகி... நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? ங்ஹா... அது பிடித்துக் கொண்டது. எல்லையற்ற காலத்திலிருந்தே கற்பனையில் வலம்வந்து கொண்டிருக்கும் அந்தப் பிசாசு! நரகத்தின் ஆழத்திற்குள்ளிருந்து சொர்க்கத்தின் தளத்திற்கு வாழ்க்கையை அப்படியே பந்தாடும் அந்த கோபம் கொண்ட, கெட்ட எண்ணம் நிறைந்த பூதம்! காதல் என்னைப் பிடித்துக்கொண்டிருக்கிறது.