இடியன் பணிக்கர்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4785
இடியன் பணிக்கர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அவுட் போலீஸ் ஸ்டேஷனுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுப் போகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு லாக் அப்பில் இருக்கும் கைதிகள் ஒவ்வொருவரும் பெற்ற சந்தோஷத்தைப் பார்க்க வேண்டுமே! சந்தோஷம் அடைந்தார்கள் என்று கூறுவது ஒரு பக்கம் இருக்கட்டும். கைதிகளில் ஒருவனான டானியல் மனம் நொந்துபோய் தனக்குத்தானே கூறிக்கொண்ட வார்த்தைகள் இவை:
"உன்னோட கடைசி இடமாற்றம் இதுதாண்டா!"
இப்படி எல்லாம் ஒரு அரசாங்க உத்தியோகத்தில் இருக்கக்கூடிய ஒரு நபரைச் சபிக்கலாமா? ஆனால், டானியல் இடியன் பணிக்கர் வழியாக முழு அரசாங்கத்தையே பார்த்தான். அது சரியல்ல என்பது டானியலுக்குத் தெரியாது, அவன் பெரிதாகப் படித்தவன் இல்லை. எழுதவும் படிக்கவும் கொஞ்சம் தெரியும். மனைவியும், மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள். வயிற்றுப் பிழைப்பிற்கு ஒரு வேலையும் தெரியும். அவன் ஒரு அச்சுக் கோர்ப்பவன். மனைவி, குழந்தைகளை விட்டுப் பிரிந்து வேலை தேடி வெளியூர் புறப்பட்டான். வீட்டிலிருந்து அறுபது மைல் தூரத்தில் இருக்கிற பட்டணத்தை அடைந்து ஒவ்வொரு அச்சகமாக ஏறி வேலை கேட்டு அலைந்தான். வேலை தேடி இப்படி அலைந்து கொண்டிருந்தபோது தான் இடியன் பணிக்கர் எதிரில் வருகிறார். வேலையில்லாமல் அலைந்து கொண்டிருந்த அவன் மேல் ஒரு வழக்கைப் போட்டு லாக்-அப்பில் அடைக்கிறார் இடியன் பணிக்கர். உள்ளே இருக்கும் டானியலுக்கு இடியன் பணிக்கர் கொடுத்த இடியும் அடியும் எத்தனையோ!
அந்த இடியன் பணிக்கர்தான் இப்போது இடம் மாற்றம் செய்யப்பட்டுப் போகப் போகிறார். லாக்கப்பில் இருக்கும் கைதிகளைப் போலவே, அவருடன் பணியாற்றும் சக போலீஸ்காரர்களும் இந்தச் செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி கொள்ளவே செய்தார்கள்.
இடியன் பணிக்கரை யாருக்கும் பிடிக்காது. இன்ஸ்பெக்டரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக அந்த ஆள் என்ன வேண்டுமானாலும் செய்வார். எது வேண்டுமானாலும் சொல்வார். இன்ஸ்பெக்டர் என்ன சொன்னாலும் "உத்தரவு உத்தரவு" என்று பணிவுடன் கூறுவார் இடியன் பணிக்கர். அந்த இடியன் பணிக்கர் எல்லோரின் சாபத்தையும் பெற்று இதோ இடம் மாறி போகப்போகிறார்.
டானியலும், மற்ற கைதிகளும் கம்பிகளுக்கு இடையே இருந்த இடைவெளி மூலமாகப் பார்த்தார்கள். இனி கொஞ்ச நாட்களுக்கு சங்கிலிகளுக்கும் தடிகளுக்கும் இடையே ஒரே சண்டை மயமாகத்தான் இருக்கும். அதனால்தான் இடியன் பணிக்கர் எல்லோரையும் இடியோ இடி என்று இடிப்பதற்குக் காரணம்.
"போய் வரட்டா ரைட்டர் சார்?" - என்று கூறியவாறு இடியன் பணிக்கர் ரைட்டரின் மேஜை முன் வந்து நின்றார். நீண்டு மெலிந்த வெளுத்த உடம்பு, சுருள் முடி, அமைதியான கண்கள். புன்சிரிப்புடன் கைதிகளைப் பார்த்தார்.
ஸ்டேஷன் ரைட்டர் சிரித்தவாறு தலையை ஆட்டினார்.
வெள்ளைச் சட்டையும் வெள்ளை வேஷ்டியும் இடது கையில் ஆடை பார்சலுமாய் இடியன் பணிக்கர் ஸ்டேஷனை விட்டு வெளியே இறங்கினார்.
"கடைசியா போற வேலை" - டானியல் மீண்டும் மனதிற்குள் கூறினான்.
நாட்கள் படு வேகமாக கடந்து ஓடின. ஒரு நாள் அதிர்ச்சி தரக் கூடிய அந்தச் செய்தி வருகிறது - இடியன் பணிக்கர் அவுட் போஸ்ட் போலீஸ் ஸ்டேஷனில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்!
"எப்படி?" என்ற போது டானியலுக்கு கிடைத்த தகவல் இது. இன்ஸ்பெக்டரும் மற்றவர்களும் அவுட் போஸ்ட் ஸ்டேஷனுக்குப் போய் இடியன் பணிக்கரின் உடலைப் பார்த்திருக்கிறார்கள். ஸ்டேஷனுக்கு உள்ளே உத்திரத்தில் தூக்குப் போட்டு தொங்கி இருக்கிறார் இடியன் பணிக்கர். பக்கத்தில் இருந்தது ஒரு மேஜை. அதன் மேல் ஏறி உத்திரத்தில் கயிறு மாட்டி தொங்கி இருக்கிறார். இது தற்கொலைதான் என்று எல்லோரும் முடிவுக்கு வந்து, அதை அதிகாரபூர்வமாக எழுதியும் விட்டார்கள்.
ஆனால், டானியல் மிகவும் மன வருத்தம் அடைந்தான். இடியன் பணிக்கருக்கு மனைவியும், ஐந்து குழந்தைகளும் இருக்கிறார்கள். இனி அவர்கள் நிலை...? டானியல் சாபம் போட்டதால்தானே இடியன் பணிக்கர் மரணத்தைத் தழுவி இருக்கிறார்! மற்றவர்களும் இதே மாதிரி சாபமிட்டிருக்கிறார்களே!
டானியல் சில நேரங்களில் சமாதானப்படுத்திக் கொள்வான். கொடூரச் செயல் மனசாட்சியை அமுக்கி விடுகிறதே! இதற்கு ஆதாரமாக இடியன் பணிக்கரின் செயல்கள் பலவற்றையும் கைதிகளும் உடன் பணியாற்றிய போலீஸ்காரர்களும் கதை கதையாகச் சொன்னார்கள். மிளகாயை அரைத்துத் தேய்த்து நிரபராதியான ஒரு பெண்ணைக் கொடுமைப்படுத்தியது - ஆண் பிறப்பு உறுப்பில் பழைய துணி ஒன்றைச் சுற்றி எண்ணெய்யை ஊற்றித் தீ வைத்து, ஒரு அரசியல் கட்சி தொண்டனை அரசாங்கத்திடம் மன்னிப்புக் கேட்க வைத்தது... இப்படி எத்தனையோ கதைகள்! டானியல் எண்ணினான்: போலீஸ்காரர்கள் எல்லோருமே இடியன் பணிக்கர் போலத்தானா? ஆனால், அந்த ஆளை மாதிரி வேறு யாரும் அந்த அளவுக்கு கொடூர மனம் படைத்தவராக நடக்கவில்லையே! அப்படிப்பட்ட கொடூர
குணம் கொண்ட இடியன் பணிக்கரைக்கூட அவரின் மனைவி விரும்பத்தானே செய்திருக்கிறாள்! அன்புகாட்டத்தானே செய்திருக்கிறாள்! குழந்தைகளும் அந்த ஆளிடம் பாசத்துடன் இருந்திருக்கிறார்களே! மனைவி அந்த ஆளை "அத்தான்..." என்று அழைத்திருப்பாள். குழந்தைகள் "அப்பா" என்று பாசம் பொங்க அழைத்திருப்பார்கள். இந்தச் சம்பவத்தின் மூலம் ஒரு குடும்பம் நாதன் இல்லாமல் நிர்க்கதியாய் நிற்கிறது. அது டானியலின் சாபத்தால் மட்டுமா?
ஒரு முடிவுக்குமே டானியலால் வர முடியவில்லை. அதற்குப் பிறகும் அவனுக்கு எத்தனையோ அடியும் இடியும் கிடைக்கவே செய்தன. சொறியும் சிரங்கும் பிடித்தன. ஒரு வருடம் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. டானியல் மத்தியச் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டான்.
ஒரு நாள் இரவு. மீண்டும் இடியன் பணிக்கரைப் பற்றிய ஒரு புதிய செய்தியை டானியல் கேட்க நேர்ந்தது. ஒரு நாடகக்காரியைக் கொன்று, பணத்தைக் கொள்ளை அடித்ததற்காக ஆயுள் தண்டனை பெற்ற அம்மைத் தழும்பும் ஒற்றைக் கண்ணும் கொண்ட ஒரு தடியன், டானியலிடம் தன் வாழ்க்கைச் சரித்திரத்தைக் கூறிக் கொண்டிருந்தான். தன் வாழ்க்கைப் பயணத்தில் செய்த வீரச் செயல்களை விவரித்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் சொன்னான்:
"என்னை யாரெல்லாம் கொடுமைப்படுத்தி இருக்கிறாங்களோ, அவுங்களை நானும் பதிலுக்குக் கொடுமைப்படுத்தி இருக்கேன். ஒரு ஆளை ஒரு தடவைதானே கொல்ல முடியும்!"
டானியல் கேட்டான்?
"யாரையாவது ரெண்டு தடவை கொல்லணும்னு தோன்றியிருக்கா?"
"ஒருத்தனைக் கொன்னதில் மட்டும் எனக்குத் திருப்தியே உண்டாகல. துண்டு துண்டா நறுக்கிக் கொல்லப்பட வேண்டிய அயோக்கியன் அவன். ஒரே அடியில அவன் செத்துப் போனால், மனசுக்கு நிம்மதியா இருக்குமா? நான் அவனை இலேசா தொட்டேன். முகத்துல ஒரு அடி அடிச்சேன். செத்துப் போயிட்டான். வேறு யாருமே பக்கத்துல இல்ல. பக்கத்துல இருந்த மேஜையை இழுத்துச் சுவரோட சேர்த்துப் போட்டேன். ஒரு கயிறைக் கழுத்துல கட்டி இறுக்கினேன் உத்தரத்துல தொங்க விட்டேன்."
டானியல் கேட்டான்:
"ஆள் யார்னு சொல்லலியே!"
ஆயுள் தண்டனை கைதி சிரித்துக் கொண்டே சொன்னான்:
"ஒரு போலீஸ்காரன். பேரு... இடியன் பணிக்கர்!"