வளையல் அணிந்த கை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7641
“வளையல் அணிந்த கைகளைப் பார்த்தாலே என்னையும் அறியாமல் நான் சிரிச்சிடுவேன்'' என்று கூறிச் சிரித்தவாறு அந்த திருமணமாகாத நண்பர் தொடர்ந்தார்: “என் மனசு வெளுப்பான நீண்ட விரல்களை உடைய ஒரு வளையல் அணிஞ்ச கையையே நினைச்சுக்கிட்டு இருக்கு. அதை நினைக்கிறப்போ மனசுல இனம் புரியாத ஒரு உணர்வு உண்டாகுது. பாயில் படுத்துத் தூங்குறப்போ கூட அதை நினைச்சா சிரிப்புத்தான் வருது.
நான் சிரிக்கிறதைப் பாத்துவிட்டு ஒருநாள் அம்மாவும் மத்தவங்களும், "ஏன்டா சிரிக்கிறே”ன்னு கேட்டதுக்குக் கனவு கண்டதா சொன்னேன் நான். காரணம் இல்லாமலே நான் சிரிக்கிறேன்னு நண்பர்களே பல முறை கேலி செஞ்சிருக்காங்க. என்னோட ஸ்க்ரூ, லூஸ் ஆகிப் போச்சுன்னு அவங்க சொல்றாங்க. என்னைப் பார்த்து அவங்க எல்லாரும் கேட்டாங்க- "எதை நினைச்சுடா இப்படிச் சிரிக்கிறே?”ன்னு. நான் ஒருத்தர்கிட்டகூட உண்மையைச் சொல்லல. ஏன்னா, இந்தச் சம்பவத்தில வர்ற கதாபாத்திரங்கள் எல்லாருக்கும் தெரிஞ்சவங்க. பிரபலமான அந்த நகைச்சுவை எழுத்தாளரைத் தெரியாதவங்க இங்கே யார் இருக்காங்க? அந்த ஆளோட முன்னாள் மனைவி யையும் அந்த அம்மாவோட இப்போதைய கணவனான பேங்க ரோட மகனையும் அறியாதவங்க யார்? போதாக் குறைக்கு, நகைச் சுவை எழுத்தாளர் என்னோட உயிர் நண்பன் வேற. அதாவது... நானும் அவனும் சேர்ந்து செய்யக்கூடாத பல செயல்களைக்கூட செஞ்சிருக்கோம். பார்க்கிறதுக்கு அழகா இருக்கிற பெண்கள் இருக்கிற வீடா பார்த்து உள்ளே போவோம். பொண்ணு பார்க்கு றதுக்காக வந்திருக்கோம்னு சொல்லுவோம். காப்பி குடிச்சிட்டுப் பொண்ணைப் பற்றி ஏதாவது ஒரு குறையைச் சொல்லிட்டுத் திரும்பி வந்திடுவோம்.
இதெல்லாம் பழைய கதை. நான் இப்போ சொல்லப் போறது அவனோட திருமணத்துக்குப் பிறகு நடந்த ஒரு விஷயத்தை. அவனோட பொண்டாட்டிய நான் பார்த்ததே இல்லை. ஊர்ல இருந்த எல்லாப் பெண்களையும் குறை சொல்லிக்கிட்டுத் திரிஞ்ச அவனுக்கு எப்படிப்பட்ட பெண் மனைவியா வந்திருக்கான்னு நானும் தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன். அவனை நான் நேரில் பார்த்தே ஏகப்பட்ட நாட்களாயிடுச்சு. ஒருநாள் மதிய நேரத்துல பஸ்ல ஏறி அவனைத் தேடிக் கிளம்பிட்டேன். நான் கறுத்த கோட் போட்டிருந்தேன். பாக்கெட்ல அஞ்சு ரூபா வச்சிருந்தேன்.
"இந்தப் பிணம்தான் என்னோட மனைவி. இனி சாகுறது வரை இந்தப் பூச்சிகூடத்தான் வாழ்ந்து ஆகணும். டேய் தம்பி... நீயாவது இந்த மாதிரி தற்கொலையில் மாட்டிக்கிடாம தப்பிச்சிடு. தெரியுதா? என் விஷயத்துலதான் தப்பு நடந்திருச்சு. நீயாவது கவனமா இருந் துக்கோ. இங்க பார்... சவம் எப்படி நிக்கிறாள்”னு! போடி அந்தப் பக்கம்...”என்று என் நண்பன் தன் மனைவியை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிற காட்சியை இப்போதே கற்பனை பண்ணிப் பார்த் தேன். ஆனால், என்னை வரவேற்றபோது என் நண்பனின் முகத்தில் முழு விரக்திதான் தெரிந்தது. முன்பு பல வருடங்களாக அவனிடம் நான் கண்ட சிரிப்பும் தமாஷும் அவனை விட்டு முழுமையாக நீங்கி இருந்தன. மொத்தத்தில் துக்கத்தில் மூழ்கிப்போன ஒரு கவிஞன் மாதிரி இருந்தான் அவன். நகைச்சுவை ஊற்றே அவனிடம் வற்றிப் போயிருந்தது. அவன் வார்த்தைகளில் கண்ணீர் இருப்பதைத் தான் என்னால் காண முடிந்தது. இருந்தாலும், நான் சிரித்தவாறு அவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டாவது அவன் மனைவி இந்தப் பக்கம் வருவாள் என்று எதிர்பார்த்தேன். அடிக்கொருதரம் அவள் வருகிறாளா என்றுகூடப் பார்த்தேன். ஆனால், என் நண்பனின் மனைவி வருவ தாகத் தெரியவில்லை. அடுக்களையில் சில உத்தரவுகள் பிறப்பிக்கும் சத்தம் மட்டும் கேட்டது. ஆனால், எங்களுக்கு சோறு பரிமாறியது வேலைக்காரன்தான். நண்பனின் மனைவி எங்கிருக்கிறாள் என்பதே தெரியவில்லை. ஒருவேளை உடல்நலம் எதுவும் சரியில்லாமல் இருக்குமோ? அப்படி என்றால் அந்த விஷயத்தை என் நண்பனே என்னிடம் கூறலாமே! இந்த மனிதன் இந்த அளவுக்கு எப்படி மாறிப் போனான்? இருந்தாலும் நான் ஒன்றுமே பேசவில்லை.
சாப்பிட்டு முடிந்ததும் கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கச் சொல்லி பாயும் தலையணையும் கொண்டு வந்து கொடுத்தான் என் நண்பன். தெற்குப் பக்கம் இருந்த கதவுக்குப் பக்கத்தில் தலையை வைத்து நான் படுத்தேன். என் நண்பன் வெற்றிலை, பாக்கு போட்டு முடித்து வராந்தாவில் சாய்வு நாற்காலியைப் போட்டுச் சாய்ந்தான். நான் படுத்திருந்த அறைக்குக் கிழக்குப் பக்கத்தில் இருந்த அறையின் கதவு அடைக்கப்பட்டிருந்தது. அந்த அறையின் ஒரு பக்க ஜன்னல் பலகை யில்தான் என் கோட் தொங்கிக் கொண்டிருந்தது. அந்த ஜன்னல் கம்பிகள் வழியாக அடுத்த அறையில் தொங்கிக் கொண்டிருந்த புடவைகள் தெரிந்தன. அந்த அறையில்தான் என் நண்பனின் மனைவி இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டேன். அரை மணி நேரம் இப்படி அந்த அறையையே நோக்கியவாறு படுத்திருந்தேன். எனக்குச் சொல்லப் போனால் ஒருவித எரிச்சலே வந்துவிட்டது. அந்த அறையிலாவது அவள் வந்து நிற்கக் கூடாதா? நானே அவள் இருப்பதைப் பார்த்து விட்டால் என்ன? சே... என்ன இருந்தாலும் அவன் என் நண்பனாயிற்றே! அவன் எந்தவிதக் கவலையும் இல்லா மல் சாய்வு நாற்காலியில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அவனால் நிம்மதியாக உறங்க முடிகிறது! திருமணம் முடிந்து விட்டால் மனிதர்கள் யாருமே இந்த அளவுக்கு தளர்ந்து போவதற்குக் காரணம் என்ன? நான் யோசித்துப் பார்த்தேன். திருமணம் செய்துகொண்ட என் நண்பர்கள் எல்லாரைப் பற்றியும் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தேன். அப்பாவிகள்! அவர்கள் வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள். கணவர்கள் என்று சொல்லப்படும் பரிதாப உயிர்களைப் பற்றி இப்போது நினைத்துப் பார்த்து என்ன பிரயோஜனம்? நான் கண்களை மூடிக்கொண்டேன். பயணம் செய்த களைப்பாலும் வயிறு நிறையச் சாப்பிட்டதாலும் சுகமான ஒரு நித்திரை என்னை வா வா என்று அழைத்தது. நான் என்னை மறந்து சில நிமிடங்கள் கண்களை மூடியிருப்பேன். திடீரென்று திடுக்கிட்டு எழுந்தேன். காரணம்- காதில் விழுந்த வளையல் ஓசை! அவளாகத் தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பாதிக் கண்களைத் திறந்து பார்த்தேன். எனக்கு வாய் வறண்டு போனது மாதிரி இருந்தது. மூச்சு விடக்கூட முடியாமல் நான் படுத்துக் கிடந்தேன்.
ஏனென்றால், கிழக்குப் பக்கம் இருந்த அறையில் இருந்து ஜன்னல் கம்பிகளுக்கு மத்தியில் இருந்த இடைவெளியில் பாம்பு தலையை நீட்டுவதுபோல வளையல் அணிந்த ஒரு கை என் கோட் பாக்கெட்டைத் தேடிக் கொண்டிருந்தது.