வளையல் அணிந்த கை - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7643
ஏதோ விளையாட்டுக்காகச் செஞ்சிருக்கான்னு நினைச்சு நான் ஒண்ணும் பேசல. அவள் சிரிச்சிக்கிட்டே சொல்றா, "நான் உங்களோட பாக்கெட்ல திருடிட்டேனே!” "நீ என்னோட இதயத்தைத் திருடினே! திருடி... இப்போ என் பாக்கெட்ல இருந்தும் திருடி இருக்கே!” என்று கூறியவாறு நானும் சிரிச்சேன். அடுத்த நாள் நான் அங்கே இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி அதைக் கொண்டு வந்து என்கிட்டே கொடுத்தா. "வழிச் செலவுக்கு வச்சுக்கோங்க”ன்னு சொல்லிட்டு ஒரே ஓட்டமா ஓடிட்டா. நான் பர்ஸைத் திறந்து பார்த்தப்போ, நான் வச்சிருந்த ரூபாய்க்குமேல ரெண்டு ரூபா அதிகம் இருந்துச்சு. அந்த ரெண்டு ரூபா அவளுக்கு எங்கே இருந்து கிடைச்சதுன்னு நான் நெனைச்சிட்டு இருக்க முடியுமா என்ன? இருந்தாலும் எங்களுக்கு கல்யாணம் நடந்த பிறகு நடந்த சில சம்பவங்களை வச்சுச் சிந்திக்க ஆரம்பிச்சேன். ஒரு நிகழ்ச்சியைச் சொல்றேனே! பஸ்ல போய்க் கிட்டிருக்கோம். என் பாக்கெட்ல இருந்த பவுண்டன் பேனாவைப் பார்த்துட்டு இதை என்ன விலைக்கு வாங்கினீங்கன்னு பக்கத்துல உட்கார்ந்திருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கேட்டாரு. ஒரு நண்பன் பரிசாத் தந்ததுன்னு நான் சொன்னேன். "யார் அந்த நண்பர்?”னு அந்த ஆள் கேட்டாரு. ஏன் அவர் அப்படித் துருவித் துருவிக் கேட்டார்னா, அந்தப் பேனா அவரோட பேனாதான்! பேனாவோட மூடியில ரெண்டு எழுத்துகள் பொறிச்சிருக்கு. பேனா காணாமப் போயி பல நாட்கள் ஆயிருச்சு. எனக்கு அதைப் பரிசாகத் தந்த நண்பனோட பேரைச் சொல்லல. அதுக்குப் பதிலா பேனாவையே அவர் கையில கொடுத்திட்டேன். அவர் எனக்கு நல்லா தெரிஞ்ச ஆளுன்றதுனால, பெரிசா பிரச்சினை எதுவும் வரல. இது விஷயமா வீட்டுக்கு வந்ததும் அவள்கிட்ட கேட்டேன். அவள் அதைப் பெரிசா எடுத்ததாகவே தெரியல. தன் தப்பை விட்டுட்டு, எனக்கு புத்திசாலித்தனமே இல்லைன்னு சத்தம் போட்டா. பேனாவோட மூடியில இருந்த ரெண்டு இங்கிலீஷ் எழுத்துகள் என் பேருக்கும் சரியா இருக்கும். என்னோட பேனாதான் அதுன்னு சொல்லியிருந்தா போதும். ஒரு பிரச்சினையும் உண்டாகி இருக்காதுன்னு சொன்னாள் அவள். ஒரு விதத்தில் பார்த்தால் அது நியாயமாகவே பட்டது. ஆனால், அவள் சொன்னபோதுதான் என் பேரே எனக்கு ஞாபகத்துல வந்திச்சு. இருந்தாலும் எனக்குக் கோபம் வந்திடுச்சு. ஜன்னல் கம்பியில் கட்டி வச்சுப் புளியங்கொம்பால அவளை அடிச்சேன். அதுக்குப் பிறகு எங்களுக்குள்ளே ஒட்டோ உறவோ இல்லாமப் போச்சு. அந்தச் சமயத்துலதான் நீ வந்தது.”
இப்படிப் பல கதைகளை அவன் சொன்னான். நான் ஊரை விட்டுப் புறப்படுவதற்கு முன்னால் அவளையும் போய் பார்த்தேன். என்னைப் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்ததோடு நிற்காமல், வயிறு நிறைய தேநீர் கொடுத்து உபசரித்தாள். என்னை ஒரு கைரேகை பார்க்கும் ஆள் என்று அவள் நினைத்திருந்ததே காரணம்.
நான் போனது ஒரு மாலை நேரத்தில். அவளின் தற்போதைய கணவன் வீட்டில் இல்லை என்ற விஷயத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டுதான் வீட்டுக்கே போனேன். நான் போனபோது அவள் பிரமாதமாக ட்ரஸ் பண்ணி முகத்துக்குப் பவுடர் போட்டு, கூந்தலில் பூ செருகி கையில் பந்தாவாக ஒரு பேகைத் தூக்கிக் கொண்டு பஜாருக்குப் போவதற்காகத் தயாராக இருந்தாள். நான் சொன்னேன்:
"பார்க்கலாம்னு வந்தேன்.”
"அவரைத்தானே? வெளியே போயிருக்கார். உள்ளே வாங்க. எங்கே இருந்து வர்றீங்க? சரியா தெரியலியே!”
"நான் வந்தது... உங்க கையைப் பார்க்கலாம்னுதான். ரொம்ப தூரத்துல இருந்து வர்றேன். உங்க முகத்தைப் பார்த்தவுடனே தோணிச்சு, கை அதிர்ஷ்டமுள்ள கையின்னு....”
"அப்படியா?” சிவந்த வாயை ஒய்யாரமாகப் பிளந்து கூறினாள். மெல்லிய புன்னகையுடன் என் பாக்கெட்டை கண்களால் அளந்தவாறு கூறினாள்: "கைரேகையில எனக்கு அவ்வளவா நம்பிக்கை கிடையாது. இருந்தாலும்...” வரவேற்பறையில் போடப்பட்டிருந்த சிறிய வட்ட மேஜைமுன் இருந்த நாற்காலியில் அவள் அமர்ந்தாள். எதிரில் இருந்த நாற்காலியில் நான். வலது கையை அவள் நீட்டினாள். இடது கையும் வேண்டும் என்றேன் நான். "இப்போ என்ன வயசு நடக்குது?” -நான் கேட்டேன்.
"எவ்வளவு இருக்கும்னு நீங்களே சொல்லுங்க.” நான் யோசித்தேன். சுமார் இருபத்து ஏழு வயது இருக்கும். இருந்தாலும் நான் சொன்னேன்:
"பத்தொன்பது வயசு இருக்கும்.”
"ஓ...” அவளின் இதயம் குளிர்ந்து போனது தெரிந்தது. கிளியின் குரலில் கொஞ்சியவாறு அவள் சொன்னாள்: "சரியா சொன்னீங்க. இருபதாவது வயது பிறக்கப் போவுது.”
கோடி ரூபாய்க்கு இன்சூர் செய்யப்பட வேண்டிய அந்த இரண்டு கைகளும் என் கைக்குள் இருந்தன. அழகான நீளமான விரல்கள்... பிக்பாக்கெட் அடிப்பதற்கென்றே கடவுள் படைத்திருப்பார் போலிருக்கிறது. அதோடு நிற்குமா அந்த விரல்களின் வேலைகள்? பீரோக்களை உடைப்பதற்கும் வங்கிகளைத் தகர்ப்பதற்கும்... இப்படி இன்னும் எத்தனையோ சாகசச் செயல்களுக்கும்கூட அந்த விரல்கள் படைக்கப்பட்டிருக்கலாம்! நான் சொன்னேன்:
"இவ்வளவு அழகான கைகளை நான் இதுவரை வாழ்க்கையில பார்த்தே இல்ல. இந்தக் கைகளை ரொம்பக் கவனமாப் பாதுகாக்க ணும். செங்கோல் பிடிக்கக் கூடிய பாக்கியம்கூட உங்களுக்கு இருக்கு. உங்களோட முதல் கல்யாணம் அவ்வளவு சரியா அமையல!”
"அது முடிஞ்சு போன விஷயம்.' அவளுக்குப் புளியங்கொம்பின் ஞாபகம் வந்திருக்கலாம். "அந்த ஆள் மிகமிக மோசமானவன். எனக்குச் சின்ன பூச்சிக்கு இருக்கிற மூளைகூடக் கிடையாதுன்னு அந்த ஆளு சொல்லிட்டான்.”
"அவர் ஒரு இலக்கியவாதியா இருக்கணும்.”
"ஆமா... நகைச்சுவை எழுத்தாளர். தப்பு இல்லாம ஒரு வார்த்தை கூட எழுதத் தெரியாத ஆளு...”
"அது எனக்குத் தெரியும். இலக்கியவாதிகளான பெண்களோட கணவன்களும் நாளடைவில் இலக்கியவாதிகளா மாறிடுறாங்க. கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி ஒரு எழுத்துகூட எழுதத் தெரியாத ஆளுகூட கல்யாணம் ஆயிட்டா, பெரிய எழுத்தாளனா வடிவமெடுக்கிற சமாச்சாரம் நாம் சர்வ சாதாரணமாப் பார்க்கக் கூடிய ஒண்ணுதான். ஆனா, மனைவிகள்தான் எழுதித் தர்றாங் கன்றதை எந்தக் கணவனும் ஒத்துக்கிறதே இல்ல...”
"நீங்க சொல்றது சரி. என்னோட வாழ்க்கையே இதற்கு உதாரணம்.”
"உங்களோட ரெண்டாவது திருமண வாழ்க்கை ரொம்பவும் நல்லாவே இருக்கும். உங்களோட இப்போதைய வாழ்க்கைக்குப் பின்னாடி பணப் பெட்டி இருக்கு...”
"அவர் பேங்க்ல இருக்காரு.”
"அதைச் சொல்லத்தான் நான் வந்தேன்.” இப்படிப் பல விஷயங்களை அவளிடம் நான் சொன்னேன். எல்லாமே சரியாகவே இருந்தன. "இனி வரக்கூடிய நாட்களும் நன்றாகவே இருக்கும்” என்று கூறியவாறு அவளின் இரண்டு கைகளையும் எடுத்து என் முகத்துக்குப் பக்கத்தில் வைத்து ஆசையோடு முத்தமிட்டேன். அவளின் கையில் குட்டிக்குரோ பவுடரின் மணம் கமழ்ந்தது. எனக்கு அந்த வாசனையை மிகவும் பிடித்தது.
"கை "கமகம”ன்னு மணக்குதே!”
அவள் வளையல் அணிந்த கைகளைப் பார்த்தவாறு சொன்னாள்:
"என் கையில இயற்கையாகவே அந்த மணம் இருக்கு.”