வளையல் அணிந்த கை - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7643
வீட்டுக்கு வந்த விருந்தினர் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுச் சொந்தக்காரி அவரின் கோட் பாக்கெட்டுக்குள் கை விட்டுக் கொண்டிருக்கிறாள். அதுவும் யாருக்குமே தெரியாமல் ஒளிந்து நின்று கொண்டு. இடுப்புப் பகுதியின் வெண்மையையும், விசாலமான மார்புப் பகுதியையும், கூந்தலின் ஒரு பகுதியையும், இங்கிருந்தே என் கண்களால் பார்க்க முடிந்தது. அப்படியே எழுந்து சென்று அந்தக் கையைப் பிடித்தால் என்ன? ஆனால், நான் எழவில்லை. படுத்தவாறே பார்த்துக் கொண்டிருந்தேன். கண் சிமிட்டுகிற நேரத்தில் அந்த வளையல் அணிந்திருந்த கை என் பர்ஸை எடுத்துக் கொண்டு மறைந்து விட்டது. அடடா... என்ன காட்சி! என் நண்பனின் தர்ம பத்தினி என் பர்ஸைப் பிக்பாக்கெட் அடிக்கிறாள்! இப்போது நான் என்ன செய்வது? நான் நினைத்தேன்- ஒருவேளை என் நண்பனே இப்படி ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லி இருப்பானோ? வேண்டு மென்றே விளையாட்டுக்காக இப்படிச் செய்து பார்க்கலாம் என்பது அவன் திட்டமாக இருக்குமோ?
"டேய்... பயலே! என் பொண்டாட்டியைப் பற்றி நீ என்ன நினைக்கிறே? நேர்ல நீயே பார்த்துட்ட இல்ல? இப்ப நீ என்ன சொல்றே?' என்று என் நண்பன் கேட்டால், "டேய், நீ ஒரு கவிதையே எழுதலாம். "பாக்கெட் அடித்தாயே' என்று'- இப்படி நான் பதில் சொல்லலாம். நான் இந்த மாதிரிச் சொன்னால் என் நண்பன் விழுந்து விழுந்து சிரிப்பான் என்பது எனக்குத் தெரியும். ஆனால்... காப்பி குடித்துக் கொண்டிருந்தபோதும், உலக அரசியல் நிலவரங்களை அலசி ஆராய்ந்து பேசிக் கொண்டிருந்தபோதும், என் பாக்கெட்டில் பணம் திருடுபோன விஷயத்தைப் பற்றி வாயே திறக்கவில்லை. சாயங்காலம் ஊருக்குப் புறப்படுவதற்காக நான் தயாரானபோதுகூட ஒன்றுமே நடக்காத மாதிரி அவன் என்னிடம் நடந்து கொண்டான். நான் உண்மையிலேயே குழம்பிப் போனேன். வேறு வழியில்லாமல் கையில் இருந்த குடையை அடமானம் வைத் துக் கிடைத்த ரூபாயை வைத்து பஸ் ஏறி ஊர் வந்து சேர்ந்தேன்.
"இந்த விஷயத்தை இதுவரை வேறு யார்கிட்டயும் நான் சொல்லல. மகாத்மாவே... உன்னோட மனைவி என்னோட பாக் கெட்ல கை விட்டுப் பணத்தை எடுத்த விஷயம் உனக்குத் தெரியுமா?” என்று ஒரு கடிதம் எழுதினால் என்ன என்று நினைத்தேன். பின் என்ன நினைத்தேனோ வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டேன். ஏனென்றால் அவனுக்குத் தெரிந்தே இந்தக் காரியம் நடந்திருந்தால்...? நகைச்சுவைக் கதைகள் எழுதிக் கிடைக்கிற பணத்தைவிட பிக் பாக்கெட் அடிப்பதில் கிடைக்கும் காசு அதிகமாயிற்றே! இதற்குப் பெரிய மூலதனம் எதுவும் தேவையில்லை. ஒரு மனைவி இருந்தால் போதும். ஆனால், அவளுக்கு விரல்கள் மிகவும் நீளமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு மனைவி மட்டும் எனக்குக் கிடைத்திருந்தால்...? ஆனால், கிடைக்கவில்லையே! என்னைத் திருமணம் செய்து கொள்வதற்காக வந்த இரண்டு பெண்களின் விரல்களை நான் பார்த்தேன். மனதிற்கு அவ்வளவாகத் திருப்தி ஏற்படவில்லை. ஒரு விரல்கூட சரியான நீளத்தில் இல்லை. வளையல் அணிந்த அந்தக் கையோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, அதன் பக்கத்திலேயே இந்தப் பெண்களின் கைகள் நிற்க முடியாது. அந்தக் கையை என்னால் அவ்வளவு எளிதில் ஏனோ மறக்கவே முடியவில்லை.
சாப்பிடும்போதும் உறங்கும்போதும்கூட நான் அந்தக் கையை நினைத்துப் பார்ப்பேன். பாம்பு பொந்துக்குள் நுழைவதுபோல என் கோட் பாக்கெட்டுக்குள் அவளின் கை விரல்கள்...! இருபத்து நான்கு மணி நேரமும் அந்தக் கைதான் என் மனதை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. கையின் ஆரம்பம் முதல் இறுதி வரை பசுமையாக மனதில் இருந்தது. அந்தக் கையை ஒருமுறை தொட்டுப் பார்க்க, அதை ஒரு நிமிடம் முத்தமிட நான் ஏங்கினேன். இந்த பிக்பாக்கெட் சம்பவம் நடந்து ஐந்து மாதம் சென்றிருக்கும்... நாளிதழில் நான் ஒரு செய்தியை வாசித்தேன். "பிரபல நகைச்சுவை எழுத்தாளரான திரு...க்கும் திருமதி...க்கும் இடையே உண்டான திருமண உறவு இருவரின் விருப்பத்திற்கேற்ப முறிவுக்கு வருகிறது.” என்ன காரணமாக இருக்கும்? தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நான் என் நண்பனின் வீட்டுக்கே சென்றுவிட்டேன்.
"கார்மேகத்திலிருந்து விடுதலை செய்யப்பட்ட முழு நிலவைப் போல” என்று சொல்வது மாதிரி மிகவும் மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்றான் என் நண்பன். "டேய்... என்னை ஏன்டா அடிக்கடி வந்து பார்க்கல? போக்கிரி...” என்று செல்லமாகக் கோபிக்கவும் செய்தான். முன்பு பல வருடங்களாக எங்களிடம் இருந்த நட்பும் நெருக்கமும் மகிழ்ச்சியும் மீண்டும் அரும்பிப் பூத்துக் குலுங்கியது. பல மணி நேரங்கள் உட்கார்ந்து எத்தனையோ விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். கடைசியில் பேச்சு விவாகரத்தைப் பற்றி வந்தது. அவன் சொன்னான்:
"நான் அவளை இலக்கியவாதியா மாத்தினேன். அவளைப் பிரபலமானவளா ஆக்கினேன். ஆனா, என்ன நடந்திருக்கு பாரு... என்னோட ரசிகரான அந்தப் பேங்க்காரரோட மகன்கூட அவள் ஓடிட்டா. ஒரு எழுத்தாளனான என்னைப் பாராட்டுறதுக்காக அவன் வர்றான்னு நினைச்சேன். ராஸ்கல்! அவன் வந்தது அவளைப் பாக்குறதுக்குன்னு இப்போதுதான் தெரியுது. கடைசியில அவங்க ரெண்டு பேரும் கல்யாணமே பண்ணிக்கிட்டாங்க...”
"அதுக்குப் பிறகுதானே விவாகரத்தே நடந்திருக்கு...”
"இல்ல... அதுக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி”
"காரணம் வேற ஏதாவது இருக்கா என்ன?”
"நான் ஒருநாள் அவளை சரியா அடிச்சுட்டேன். சொல்லப் போனால், என் கோபத்தை என்னாலேயே கட்டுப்படுத்த முடியல. அவளால் எனக்கு ஒண்ணும் பெரிசா நஷ்டம் கிடையாது. மணிபர்ஸ்கள், கடிகாரம், பவுண்டன் பேனாக்கள்னு நிறைய பொருட்களை எனக்குக் கொண்டு வந்து கொடுத்திருக்கா. வெளியே கொஞ்ச தூரம் நடந்து போயிட்டு வந்தா போதும். ஏதாவது பொருளோடதான் வருவா. ஒரு நாள்ல யாராவது ஒருத்தரோட பர்ஸை பிக்பாக்கெட் அடிக்கலைன்னா அவளுக்குத் தூக்கமே வராது. சின்ன வயசுல- படிக்கிற காலத்திலேயே அவளுக்கு இந்தப் பழக்கம் ஆரம்பமாயிடுச்சு. அவள் முதல்ல செஞ்சது என் இதயத்தைத் திருடியதுதான். அதுக்குப் பிறகு என் பாக்கெட்ல இருந்த பணத்தையும் பிக்பாக்கெட் அடிச்சுட்டா.
அவளோட சகோதரன் என் நெருங்கிய நண்பன்றதுனால நான் ஒருநாள் அவங்க வீட்டுக்குப் போனேன். சட்டையையும் வேஷ்டியையும் குளியலறையோட தகரக்கதவுல தொங்க விட்டுட்டு உள்ளே நான் குளிச்சிக்கிட்டு இருந்தேன். சாயங்காலம் முடிஞ்சு ராத்திரி வரப் போற நேரம். நான் தலையைத் துவட்டிக்கிட்டு இருந்தேன். அப்போ யாரோ வெளியே கதவைத் தட்டினாங்க. யார்னு கேட்டுக்கிட்டே நான் கதவைத் திறந்தேன். அவள்தான். கையில என் பாக்கெட்ல இருந்த பணக்கத்தையை வச்சிருக்கா...