சமையலறை... நெருப்பு பிடித்த இரவு
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4565
அன்று இரவு தூக்கத்திலிருந்து எழுப்பிய அம்மா, என்னை மிகவும் வேகமாக படிகளில் இறங்கச் செய்து தெற்குப் பக்கமாக அழைத்துக் கொண்டு சென்றாள். பாட்டியின் குரல் நடுங்கிக் கொண்டே ஒலித்தது. “உண்ணி, திண்ணைக்குப் போக வேண்டாம். ஆபி... இங்கேயே இரு. சமையலறையின் கூரையில நெருப்பு பிடிச்சிடுச்சு.'' பாட்டி உரத்த குரலில் சொன்னாள்.
என் அண்ணன் உடனே வடக்குப் பக்க வாசலுக்கு ஓடினான். “உண்ணி... உண்ணி... சொன்னால் கேட்க மாட்டே... அப்படித்தானே?'' என்று கேட்டவாறு பாட்டி என் அண்ணனைப் பின்தொடர்ந்தாள்.
வடமேற்கு மூலையில் நெருப்பு படர்ந்து பிடித்துக் கொண்டிருந்தது.
“ஓலையைக் காய வச்சிருந்தேன். நார், விறகு எல்லாம் இருந்தன. காலையில் குளிப்பதற்கு செம்பில் நீர் வைத்தேன். அப்போ நெருப்பு பிடிச்சிடுச்சு.'' கலி நாராயணன் நாயர் கூறினான். அவன் வாசலில் ஐந்தடி விலகி நின்றுகொண்டு நெருப்புக் கொழுந்துகளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நான் எத்தனை முறை சொல்லியிருக்கேன்- சாயங்காலம் அடுப்பில் நெருப்பை அணைச்சிடணும்னு. நான் சொன்னால் யாரும் கேட்பதே இல்லை.'' பாட்டி சொன்னாள்.
“இனிமேல் கேட்கிறோம். சரியா?'' நாராயணன் நாயர் சொன்னான். அவனுடைய சிறிய பற்கள் சிவந்த வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தன. அவன் சிறிதும் கவலைப்படாமல் சிரித்துக் கொண்டேயிருந்தான். தென்மேற்குப் பகுதியில் இருந்த நிலத்திலிருந்து வள்ளியும் கிருஷ்ணனும் பிள்ளைகளும் வந்து சேர்ந்திருந் தார்கள். மூக்கில் விரல் வைத்துக்கொண்டு வள்ளி நின்றிருந்தாள். அவளுடைய மகன் அஞ்சக்காளன் நெருப்பை அணைப்பதற்கு மரக் கிளைகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தான். சிலர் வாழையை அறுத்து நெருப்பை அணைத்துக் கொண்டிருந்தனர்.
“சமையலறையில் இனி எதுவும் பாக்கி இல்லை.'' தேவகி உரத்த குரலில் கூறினாள்.
“நான் பார்க்க மரக்கரண்டி எரியுது.'' லட்சுமி சொன்னாள்.
“நம்ப சம்பார் பரிமாறும் மரக்கரண்டியா?'' தேவகி கேட்டாள்.
“தேங்காய்த் துருவி எரிஞ்சிடக்கூடாது. அது எனக்கு மிகவும் முக்கியம். இங்க இருக்குற தேங்காய்த் துருவியைப்போல ஒரு தேங்காய்த் துருவியை இந்த நாட்டுல எங்கேயும் பார்க்க முடியாது.'' கலி நாராயணன் நாயர் கூறினான்.
“உண்ணி, கொஞ்சம் தள்ளி நில்லு. தலையில நெருப்புப் பொறி விழுந்துட்டா?'' பாட்டி சொன்னாள்.
நெருப்பு உத்தரத்தைக் கடித்துத் தின்று கொண்டிருக்கும் சடபடா என்ற சத்தம் என்னையும் அண்ணனையும் திகைக்கச் செய்தது. நெருப்புப் பொறி பறந்து கொண்டேயிருந்தது.
“இங்கே உள்ளே வந்து நில்லுங்க பிள்ளைகளே... சொன்னால் கேட்க மாட்டீங்களா?'' பாட்டி உரத்த குரலில் கேட்டாள். மாமாவும் அம்மாவும் மிகவும் தாமதமாகத்தான் நெருப்பு பற்றியிருக்கும் விஷயத்தையே தெரிந்து கீழே வந்தார்கள். மாமாவின் மிதியடியின் சத்தத்தைக் கேட்டதும், குழந்தைகளான நாங்கள் திண்ணைக்கு வந்தோம்.
“அணைக்கிறோம் அய்யா. பயப்பட வேண்டாம். சமையலறை யின் கூரை கொஞ்சம் எரிஞ்சிடுச்சு. அவ்வளவுதான். கலி இதைக் கண்டுபிடிக்காம விட்டிருந்தால், வீடு முழுவதும் நெருப்பு பிடிச்சிருக்கும்.'' கிருஷ்ணன் சொன்னான்.
“குருவாயூரப்பா... காப்பாற்றணும்.'' பாட்டி சொன்னாள்.
“அதோ நாராயணன் நாயர் சமையலறைக்குள் போய்க் கொண்டிருக்கிறான். சமையலறையில் அந்த அளவிற்கு புகை... அவன் மூச்சடைச்சு செத்துவிடப் போகிறான்!'' ரேவதி தன்னுடைய தலையில் அடித்துக்கொண்டு சொன்னாள்.
“கலி... இங்கே வா... சும்மா தேவையில்லாம சாக வேண்டாம்...'' நெருப்பை அணைக்க வந்த பக்கத்து வீட்டுக்காரர்களில் ஒருவன் உரத்த குரலில் சொன்னான்.
“நீங்க இறந்துவிட்டால், உங்களுடைய குழந்தை பட்டினியா கிடக்கும்ல?'' வள்ளி கேட்டாள்.
“சமையலறையில் இருக்குற எல்லாம் பற்றி எரியட்டும். ஆளுக்கு ஆபத்து எதுவும் உண்டாகாமல் இருக்கணும்னு நான் நினைக் கிறேன்.'' பாட்டி சொன்னாள்.
கலி நாராயணன் நாயர் புகைப்படலத்திற்குள் இருந்து கொண்டு சத்தமாக இருமினான். “கலிக்கு மூச்சுவிட முடியவில்லை...'' அண்ணன் சொன்னான்.
“அய்யோ.... இதோ... நாராயணன் நாயர் மூச்சு மூட்டி செத்துக் கொண்டிருக்கிறான்.'' தேவகி உரத்த குரலில் கத்தினாள்.
“சாகணும்னா சாகட்டும். சமையலறைக்குள் போகணும்னு யாரும் சொல்லலையே!'' கிருஷ்ணன் சொன்னான்.
“நாராயணன் நாயர்... வெளியே வா... இந்த நிமிடமே வெளியே வந்தாகணும்.'' பாட்டி கோபத்துடன் கத்தினாள்.
“நாராயணா... வெளியே வா...'' மாமாவும் கோபமான குரலில் கத்தினார்.
தன்னுடைய கோவணத்தை மட்டும் அணிந்தவாறு சமையலறைக் குள்ளிருந்து கலி வெளியே வந்தான். “வேட்டி விழுந்திடுச்சு. எனக்கு பார்க்கவே முடியல... அந்த அளவுக்கு புகை...'' கலி சிரித்துக் கொண்டே சொன்னான்.
அவன் நாலப்பாட்டு குடும்பத்திற்குச் சொந்தமான தேங்காய்த் துருவியை தன் நெஞ்சோடு சேர்த்துப் பிடித்திருந்தான். “இது குஞ்சு ஆசாரி செய்தது. இனி இந்த மாதிரி ஒண்ணு வேணும்னா, தேவலோகத்துக்குத்தான் போகணும்.'' கலி எங்களிடம் கூறினான்.