சித்திக்கி
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6870
என்னுடைய ஆப்ரிக்க பயணத்திற்கு மத்தியில் உண்டான சில சுவாரசியமான அனுபவங்களுக்குள் அடங்கிய ஒரு கதை இது.
தெற்கு ரொடேஸியாவில் இருக்கும் "புலாவாயோ”வில் இருந்து போர்த்துக்கீசிய கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் "பைரா”விற்கு திரும்பிச் சென்ற பயணத்தின்போது, புகைவண்டியில் நான் மிஸ்டர் சித்திக்கியுடன் அறிமுகமானேன். வழியில் ஏதோ ஒரு மலைச்சரிவில் இருந்து புகைவண்டி நிலையத்திலிருந்து சற்று கரடுமுரடாக குள்ளமாக இருந்த மனிதர், தனக்குப் பின்னால் ஒரு கறுப்பின மனிதன் ஆறு பெட்டிகளையும் தூக்கிக் கொண்டு வர, என்னுடைய அறைக்குள் நுழைந்தார்.
ஒரே பார்வையில் அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிந்துகொண்டேன்.
நீண்ட ஆப்ரிக்க புகைவண்டிப் பயணங்களில் சக பயணியாக ஒரு இந்தியாவைச் சேர்ந்த மனிதரைச் சந்திப்பது என்பது நல்ல ஒரு விஷயமாகப்பட்டது. பெரும்பாலும் அப்படி வழியில் இருக்கும் புகை வண்டி நிலையங்களில் ஏறக்கூடிய இந்தியர்கள் ஆங்கிலத்தில் உரையாடவோ நாகரீகமான முறையில் நடக்கவோ செய்யாத குஜராத்தி வர்த்தகர்களாக இருப்பார்கள். ஒரு மூலையில் தனியாக உட்கார்ந்து கொண்டு தாளையும் பென்சிலையும் வைத்துக்கொண்டு கணக்கு கூட்டிக் கொண்டிருப்பார்களே தவிர, உடன் பயணம் செய்யும் பயணிகளுடன் உரையாட வேண்டும் என்று அப்படிப்பட்டவர்கள் விரும்புவதில்லை. ஆனால், உள்ளே நுழைந்த மனிதரோ நல்ல உயர்தரமான சூட்டும் தொப்பியும் அணிந்து, சுறுசுறுப்பாக ஒரு
பாடலை விஸிலடித்தவாறு நுழைந்தார். என்னைப் பார்த்ததும் அவர் சலாம் செய்து புன்னகைத்தார். சிறிய அளவில் இருந்த சில பற்களே அவருடைய வாயில் இருந்தன.
தன்னுடைய பெட்டிகள் அனைத்தையும் மேலே இருந்த சுமைகளை வைக்கக் கூடிய பலகையில் வைத்த அவர் எனக்கு அருகில் வந்து அமர்ந்தார்.
"என்ன ஒரு வெப்பம்!'' அவர் கழுத்தில் கட்டப்பட்டிருந்த டையை சற்று அவிழ்த்து தளர்த்திவிட்டு, கோட்டைக் கழற்றி ஆணியில் மாட்டிவிட்டு, பேன்ட் பாக்கெட்டிற்குள்ளிருந்து பிரகாசித்துக் கொண்டிருந்த ஒரு சிகரெட் பாக்கெட்டை வெளியே எடுத்துத் திறந்து, அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுக்கும்படி சைகை செய்து கேட்டுக் கொண்டார். நான் ஒரு சிகரெட்டை தொட்டு எடுத்தேன். இன்னொரு சிகரெட்டை அவர் எடுத்தார்.
"நீங்கள் எங்கே போகிறீர்கள்?'' தீக்குச்சியை எடுத்து உரசி, என்னுடைய சிகரெட்டிற்கு நெருப்பு பற்ற வைத்துக் கொண்டே அவர் இந்தியில் உரையாடலை ஆரம்பித்தார்.
"நான் பைராவிற்குச் செல்கிறேன்.''
"பைராவிற்கா? பூ! மிகவும் மகிழ்ச்சி. நானும் அங்குதான் போகிறேன். எனக்கு புகைவண்டி நிலையத்திற்கு வருவதற்கு, சற்று தூரம் ஓடிவர வேண்டியதிருந்தது. வண்டி எங்கே கிடைக்காமல் போய் விடுமோ என்று நான் பயந்தேன். இந்தப் பெட்டிகள் என்னுடன் இருந்ததுதான் சிரமமே.''
அவர் தன்னுடைய பெட்டிகளை வைத்திருந்த இடத்தைப் பார்த்து, எல்லாம் சரியாக வந்து சேர்ந்திருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக விரலை நீட்டி எண்ண ஆரம்பித்தார்.
நானும் அவருடைய பெட்டிகளை நோக்கி கண்களைச் செலுத்தினேன். பல அளவுகளிலும் நிறங்களிலும் இருந்த ஆறு பெட்டிகள். மூன்று பெட்டிகள் உறுதியான தோலால் செய்யப் பட்டவை. இரண்டு பெட்டிகள் உருக்கு கொண்டு உண்டாக்கப் பட்டவை. ஒரு பெட்டி ஃபைபரை வைத்து செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.
அவர் ஒரு பெட்டி வியாபாரியாக இருப்பாரோ?
"சலூனில் பார் பூட்டப்பட்டு விட்டதா?'' அவர் சற்று பெரிய ஒரு சிரிப்புடன் என்னிடம் விசாரித்தார். அந்த சிரிப்பில் அவருடைய முகத்தில் இருந்த அவலட்சணம் முழுவதும் தெளிவாகத் தெரிந்தது. ஓரமும் மூலையும் தகர்ந்து அசிங்கமாக இருந்த சிறிய பற்கள் அவருடைய ஈறுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. வாய்க்கு மேலே இருந்த பகுதி அசிங்கமாக இருந்தது. இப்போது பிதுங்கி விழப் போகின்றன என்று தோன்றுகிற மாதிரி இருந்த வெறித்துக் கொண்டிருந்த தவளைக் கண்களும் அவற்றுக்கு நடுவில் அசிங்கமாக இருந்த ஒரு மூக்கும். அந்த மூக்கிற்கும் சப்பிப் போன உதட்டிற்கும் நடுவில் ஒரு துண்டு மீசையையும் அவர் வைத்திருந்தார்.
"பார் பூட்டப்பட்டிருக்குமா?'' அவர் குழப்பமான மனதுடன் கேள்வியைத் திரும்பவும் கேட்டார்.
"பூட்டப்பட்டிருக்கும். மணி பத்தரை ஆகிவிட்டதே?'' நான் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே பதில் சொன்னேன்.
"இன்று மொத்தத்தில் மிகவும் மோசமான நாளாகிவிட்டது.'' அவர் ஏமாற்றத்துடன் தனக்குத் தானே கூறிக்கொண்டார்: "இனி நாளை காலையில் பைராவை அடைந்த பிறகுதான் ஏதாவது சாப்பிடுவதற்கு கிடைக்கும்.''
"உங்களுக்கு வியாபாரம் பைராவிலா?'' அவர் என்னை நோக்கி திரும்பி உட்கார்ந்து கொண்டே கேட்டார்.
"நான் வியாபாரி அல்ல. ஆப்ரிக்காவைச் சற்று சுற்றிப் பார்க்கலாம் என்று வந்திருக்கும் ஒரு சாதாரண மனிதன்.''
"சுற்றிப் பார்ப்பதற்காக மட்டுமா?''
"ஆமாம்.''
"அப்படியென்றால் அது ஒரு புதிய செய்தி ஆயிற்றே? இந்தியாவிலிருந்து புறப்பட்டு வந்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு மனிதரை நான் ஆப்ரிக்காவில் முதல் தடவையாகப் பார்க்கிறேன். அப்படியென்றால் மிஸ்டர்... நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா? போர்த்துக்கீசிய ஆப்பிரிக்காவின் இந்த மலைச்சரிவில் உங்களுக்கு பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? காட்சிகளைப் பார்க்க வேண்டுமென்றால், நீங்கள் என்னுடைய "ஜோனாஸ்பர்க்”கிற்கு வர வேண்டும்.''
"நீங்கள் அங்குதான் வசிக்கிறீர்களா?''
"தங்குமிடமும் என்னுடைய தொழில்களுக்கான மையமும் ஜோனாஸ்பர்க்தான்.''
"என்ன வியாபாரம்?''
"பல வியாபாரங்கள் இருக்கின்றன. முக்கியமாக துணி இனங்கள். ஜோனாஸ்பர்க்கில் மட்டுமல்ல. கிழக்கு ஆப்ரிக்காவில் இருக்கும் பல நகரங்களிலும் எனக்குச் சொந்தமான கடைகள் இருக்கின்றன. நான் அவற்றையெல்லாம் மேற்பார்வை பார்ப்பதற்காகப் புறப்பட்டிருக்கிறேன்.''
"பைராவிலும் உங்களுக்குச் சொந்தமான கடை இருக்கும். இல்லையா?''
"தற்போதைக்கு பைராவில் இல்லை. பைராவிற்கு சில நாட்கள் ஓய்வு எடுக்கலாம் என்பதற்காகச் செல்கிறேன். சற்று பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவதற்காகவும். பைராவில் குளிர்ந்த நீரை விட பீருக்கு விலை குறைவு என்று கூறிக்கொள்கிறார்களே? பிறகு... நல்ல வெள்ளைக்கார இளம் பெண்களை இறுகப் பிடித்துக் கொண்டு தெருக்களின் வழியாக எந்தவித தயக்கமும் இல்லாமல் நடந்து போகலாம்.''
அவர் கூர்மையான வாளைப் போல இருந்த வாயைத் திறந்து சிரித்தார்.
"அப்படியென்றால்... மிஸ்டர், உங்களுடைய பெயர்?''
"சித்திக்கி''.
"அப்படின்னா... மிஸ்டர், சித்திக்கி... நீங்கள் பைராவிற்குப் போவது "மஜா அடிப்பதற்கு”த்தான். அப்படித்தானே?'' நானும் உரையாடலுக்கு சுவாரசியம் சேர்த்துக்கொண்டு கேட்டேன்.
"மஜாவும்... மஜாவுடன் சேர்ந்து சிறிது வியாபாரமும். இதே... இதை தனிப்பட்ட முறையில் உங்களிடம் மட்டும் கூறுகிறேன். துணி வியாபாரத்தில் நினைத்த அளவிற்கு லாபம் கிடைக்கவில்லை. அதனால் பைராவிற்குச் சென்று யானைத் தந்தங்களின் மொத்த வியாபாரத்தை ஆரம்பிக்கலாம் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது.''