சித்திக்கி - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6873
சித்திக்கிக்கு சுகமான ஒரு இடம் கிடைத்திருக்கிறதே என்று நான் நிம்மதி அடைந்தேன்.
வண்டியில் இருக்கும் கறுப்பினப் பணியாள் உள்ளே வந்து, எங்களுடைய விரிப்புக்களை விரித்து தயார் பண்ணி விட்டு, கொசு வலையை விரித்துக் கட்டிவிட்டு, தூங்குவதற்கான ஏற்பாடுகளை முழுமை செய்து, கதவை அடைத்துவிட்டுச் சென்றான். நான் எனக்கென்று மேலே இருந்த பெர்த்தில் ஏறிப் படுத்து, ஒரு மாத இதழை விரித்து வாசிக்க ஆரம்பித்தேன்.
என்னுடைய அறையில் இருந்த சக பயணிகளில் இரண்டு பேர் எதுவும் பேசாத குஜராத்தி வியாபாரிகளாக இருந்தார்கள். மூன்றாவது மனிதர் மடகாஸ்கரைச் சேர்ந்த ஒரு வெளுத்த கறுப்பின மனிதர். பெரிய துரையைப் போல ஆடை அணிந்து எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் ஒரு வாயாடி. மடகாஸ்கரில் தனக்கென்று சொந்தமாக எஸ்டேட்டும் வீடும் இருக்கிறது என்றும்; ஒரு உல்லாசப் பயணத்திற்காக ஆப்ரிக்காவிற்கு வந்திருப்பதாகவும் அவர் என்னிடம் சொன்னார்.
அந்த மனிதர் மிகப் பெரிய தீனி சாப்பிடுபவராகவும் இருந்தார். பொறித்த கோழியையும், வேக வைத்த செம்மீனையும், ரொட்டியையும், பீர் புட்டிகளையும் அவர் கூடைக்குள் வைத்து கொண்டு வந்திருந்தார். அவை ஒவ்வொன்றையும் அவர் அவ்வப்போது ருசி பார்த்துக் கொண்டே நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தார். அதில் பங்கு பெறுவதற்கு இடையில் அவ்வப் போது எங்களையும் அழைத்துக் கொண்டிருந்தார். ஆனால், அந்த வேக வைத்த செம்மீனின் நாற்றத்தை உணர்ந்தவுடன், இரவு நேர உணவே வேண்டாம் என்ற நிலையை நான்
அடைந்து விட்டிருந்தேன். மீன், மாமிசம் போன்றவற்றிற்கு எதிரான அந்த குஜராத்திகள் சற்று முன்பே பெர்த்களில் ஏறிப் படுத்து உறங்கியவாறு "சாந்தம் பாவம்'' என்று மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்கள்.
அடுத்த அறைக்குள் இருந்து பாட்டும் கூப்பாடுகளும் ஆரவாரமும் கேட்டுக் கொண்டிருந்தன. கறுப்பின மனிதர்கள் அல்ல. அடுத்து பின்னாலிருந்த அறைக்குள்ளிருந்து அவை கேட்டன. மூக்கு முனை வரை மது அருந்தியிருந்த வெள்ளைக்காரர்களான போர்த்துக்கீசிய பயணிகள்தான் ஆரவாரம் செய்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். அவர்களில் இரண்டு பேர் பல வித்தைகளையும் காட்டிக் கொண்டு காரிடார் வழியாக உலாத்திக் கொண்டிருப்பதை நான் சற்று முன்பு பார்த்தேன்.
நம்முடைய மடகாஸ்கரைச் சேர்ந்த மனிதர் உணவுக் கூடையில் இருந்தவை அனைத்தையும் வயிற்றுக்குள் போகும்படி செய்துவிட்டு, மது புட்டிகளை காலி பண்ணிவிட்டு, தூங்குவதற்காக மேலே இருந்த பெர்த்தில் போய் படுத்தார். சிறிது நேரம் சென்றதும், யாரோ எங்களுடைய கதவைத் தொடர்ந்து தட்டிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. போர்த்துக்கீசிய குடிகாரர்களின் குறும்புச் செயலாக அது இருக்கும் என்பதை நான் புரிந்து கொண்டேன். நான் அசையவே இல்லை.
கதவைத் தட்டும் சத்தம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. மடகாஸ்கரைச் சேர்ந்த மனிதருக்கு அந்தத் தொல்லையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று தோன்றியது. "யார் இந்த போக்கிரிகள்?'' என்று கேட்டுக் கொண்டே, அவர் மெதுவாகக் கீழே இறங்கி வந்து கதவைத் திறந்து முகத்தைக் காட்டியதும், வெளியே இருந்து அந்த முகத்தில் முஷ்டியால் "ட்ரூம்” என்றொரு குத்து விழுந்ததும் ஒரே நேரத்தில் நடந்தன என்று கூறினால் போதுமே!
மடகாஸ்கரைச் சேர்ந்த மனிதர் மூக்கையும் வாயையும் அழுத்திப் பிடித்துக் கொண்டு மெதுவாக முனகியவாறு மேலே போய் படுத்துக்கொண்டார்.
காரிடார் வழியாக மிடுக்குடன் நடந்து கொண்டிருந்த போர்த்துக் கீசிய இளைஞர்களில் ஒருவன்தான் நம்முடைய மடகாஸ்கர்காரரின் மூக்கைச் சேதப்படுத்தி இருக்கிறான். வெறுமனே, கண்ணில் படும் கதவைப் போய் தட்டி அழைப்பது, கதவைத் திறந்து பார்க்கும் அதிர்ஷ்டமற்ற மனிதனின் மூக்கைக் குறி வைத்து முஷ்டியைச் சுருட்டி குத்திவிட்டு வேகமாக ஓடிவிடுவது... இப்படி புதிய ஒரு பொழுதுபோக்கில் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அறையின் கதவு திறந்து கிடப்பதைப் பார்த்தபோது, எப்படிப் பார்த்தாலும் அது பாதுகாப்பற்றது என்று நினைத்து நான் கீழே இறங்கி, கதவை அடைத்துத் தாழ்ப்பாள் போட்டு விட்டு, விளக்கை அணைத்து விட்டு, தூங்குவதற்காகப் படுத்தேன். மடகாஸ்கரைச் சேர்ந்த மனிதர் ""துப்... துப்...'' என்று துப்பிக் கொண்டிருந்தார்- ரத்தமாக இருக்க வேண்டும். இடையில் அவ்வப்போது பரிதாபத்தை வரவழைக்கிற மாதிரி ஒரு முனகல் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது.
கால்மணி நேரம் கடந்தது. கதவை மீண்டும் தட்டும் சத்தம். நான் அசையவில்லை. மடகாஸ்கர்காரர் அந்த முனகல் சத்தத்தைக்கூட அடக்கிக் கொண்டு, பிணத்தைப் போல படுத்துக் கிடந்தார்.
மீண்டும் கதவைத் தட்டும் சத்தம். கதவு கிடுகிடு என்று ஆடிக்கொண்டிருந்தது. நான் பொறுமையாக இருந்தேன். கதவைத் தட்டும் சத்தம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அடுத்தடுத்து தட்டும்
சத்தம். இதற்கொரு வழி கண்டு பிடிக்காமல் இருக்கக்கூடாது என்று எனக்குத் தோன்றியது. இல்லாவிட்டால் அன்று இரவு தூங்குவது என்பது நடக்காத விஷயம்.
நான் விளக்கைப் பற்ற வைத்து, மெதுவாகக் கீழே இறங்கி, மடகாஸ்கர்காரரின் கூடையில் காலியாக இருந்த பீர் புட்டிகளில் ஒன்றை கையில் எடுத்து, வலது கையில் அந்த புட்டியைப் பிடித்துக்கொண்டு கதவிற்கு அருகில் போய் நின்றேன். இன்னொரு கையால் மெதுவாகத் தாழ்ப்பாளை நீக்கி கதவைத் திறந்தேன். குத்துவதற்காக முஷ்டியைச் சுருட்டி வைத்துக்கொண்டு வெளியே காத்து நின்றுகொண்டிருந்த போர்த்துக்கீசிய மனிதன், அடிப்பதற்காக பீர் புட்டியைக் கையில் வைத்துக்கொண்டு நின்று கொண்டிருக்கும் புதிய ஒரு மனிதனைப் பார்த்ததும் திரும்பி ஒரு ஓட்டம் ஓடினான். சித்திக்கியின் பெட்டிகள் தட்டி, வித்துவானுக்கு நல்ல ஒரு வீழ்ச்சி கிடைத்தது. பிறகு எங்களுடைய அறைக்குள் அந்த தட்டும் வித்துவானின் தொந்தரவு உண்டாகவில்லை. அவன் வேறு அறைகளில் மூக்குகளைத் தேடிப் போயிருக்க வேண்டும். நாங்கள் நிம்மதி யாகப் படுத்து உறங்கினோம்.
இரவு ஒரு மணி தாண்டியிருக்கும். வண்டி மலைச்சரிவில் இருந்த ஒரு புகை வண்டி நிலையத்தில் திடீரென்று நின்றது. மெயில் வண்டி நிற்கக் கூடிய நிலையம் அல்ல அது. யாரோ சங்கிலியை இழுத்து நிறுத்தியிருக்கிறார்கள். ஆரவாரத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். எங்களுடைய அறைக்கு முன்னால் அந்த ஆரவாரம் கேட்டது.
நான் கீழே இறங்கி சாளரத்தைத் திறந்து வெளியே பார்த்தேன். வண்டியில் இருந்த வெள்ளைக்காரரான கார்டும் கண்டக்டரும் ஆர்வத்தால் உந்தப்பட்ட சில கறுப்பின மனிதர்களும் அவர்களுக்கு மத்தியிலிருந்து ஒரு மனிதனின் உரத்த குரலும்.