புதிய புதிய முகங்கள்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6037
புதிய புதிய முகங்கள்
எம்.முகுந்தன்
தமிழில் : சுரா
கல்லூரி வேலைநாள் அது. எனவே ஸ்டேஷனுக்கு செல்வதற்காக விடுமுறை எடுக்க வேண்டிய சூழ்நிலை தேவகி டீச்சருக்கு உண்டானது. அதிகாலை வேளையிலேயே கண்விழித்து, குளித்துமுடித்து, பாதி நரைத்துவிட்டிருந்த கூந்தலை உலரவைத்தவாறு வண்டி வரும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். மங்களாபுரம் மெயில் பதினொரு மணிக்குத்தான் வரும். நேரம் முன்னோக்கி நகரவேயில்லை.
சமீபத்தில் வெளிவந்த அறிவியல் களஞ்சியத்தின் முதல் நூலைத் திறந்து, அதில் கண்களைப் பதித்துக் கொண்டிருந்தாள். இடையில் அவ்வப்போது கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் சீக்கிரமாக நகர்வதைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிற நேரத்தில், மெதுவாகவே நகர்ந்து கொண்டிருக்கும். இடையில் அவ்வப்போது கைக்கடிகாரத்தைப் பார்த்தால், நேரம் மெதுவாகத்தான் நகரும். கடிகாரத்தைப் பார்க்காமல் இருக்கும்போது, நேரம் பறந்து போய்க்கொண்டிருக்கும்.
இறுதியில் மாதவனின் வாடகைக் கார் வீட்டுக்கு முன்னால் வந்து நின்றது. முன்கூட்டியே காருக்கு சொல்லியிருந்தாள்.
“டீச்சர்... மணி பத்தரை.”
மாதவன் ஒரு தடிமனான பீடியை இழுத்துப் புகைத்துக் கொண்டிருந்தான். அந்த பீடிக்கு ஒரு விசேஷமான வாசனை இருந்தது. சங்கு கல்லூரியில் படித்த காலத்தில், இதே வாசனை அவனுடைய அறையில் தங்கிநிற்கும்.
“மாதவா, நீ என்ன பீடி புகைக்கிறே?”
மாதவன் சற்று புன்னகைத்தான். தொடர்ந்து குரலைத் தாழ்த்திக் கொண்டு டீச்சரின் காதில் சொன்னான்:
“இதற்குள்ளே மறந்திருக்கு...”
“என்ன மருந்து மாதவா?”
“வெளியே சொல்ல முடியாது. போலீஸ் பிடிச்சிடும். கஞ்சா டீச்சர்!”
“எனக்கு முன்பே அது புரிந்துவிட்டது. தெரியுதா மாதவா?”
“கஞ்சா புகைக்க எனக்கு கற்றுத் தந்தது யாரென்று தெரியுமா டீச்சர்?”
“சங்குதானே?”
“அவனேதான்...”
சங்குவின் தந்தைக்கு இருக்கக்கூடிய வயது மாதவனுக்கு. எனினும், அவனுக்கு கஞ்சா புகைப்பதற்கு கற்றுத்தந்திருக்கிறான் சங்கு. அவளுக்கு அந்த விஷயத்தில் ஆச்சரியம் உண்டாகவில்லை. மாதவனை மட்டுமல்ல; எவ்வளவு ஆண்களை அவன் கஞ்சா புகைக்க வைத்திருப்பானோ, யாருக்குத் தெரியும்?
“மங்களாபுரம் மெயிலில்தானே வர்றான்?”
காரை வாடகைக்கு ஓட்டலாமென்று மாதவன் சந்தேகத்துடன் கேட்டான்.
“அப்படித்தான் அவன் எழுதியிருக்கிறான்.”
“உறுதிதானே?”
மாதவன் மீண்டும் கேட்டான். கடந்த முறை சங்கு வந்த கதையை அவன் மறக்கவில்லை; டீச்சரும். சென்னையிலிருந்து ஒரு தந்தி. ‘நாளை மங்களாபுரம் மெயிலில் நான் ஊருக்கு வருவேன்’ அன்றும் கல்லூரியில் விடுமுறை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனுக்குச் சென்றாள். வண்டி வந்தபோது, ஆள் இல்லை.
‘இரவில் வரும் சூப்பரில் வரலாம்.’
மாதவன் சொன்னான். இரவில் மீண்டும் ஸ்டேஷனுக்குச் சென்றாள். நல்ல மழை. குளிர்காற்று வீசிக் கொண்டிருந்தது. புடவையைக் கொண்டு முழுமையாக மூடிக்கொண்டு பயணிகள் அறையில் காத்திருந்தாள். பதினொன்றரை மணிக்கு சூப்பர் வந்தது. சங்கு இல்லை. அப்படியே இரண்டு நாட்கள் எல்லா வண்டிகளுக்கும் சென்று பார்த்தாள். சங்கு இல்லை. மூன்றாவது நாள் ஸ்டேஷனுக்குச் செல்லவில்லை. எத்தனை நாள்தான் விடுமுறை எடுப்பது? அன்று கல்லூரியிலிருந்து திரும்ப வந்தபோது, ஒரு ஃப்ளானலாலான சட்டையை அணிந்து, சிகரெட்டைப் புகைத்தவாறு மழையைப் பார்த்தவாறு வாசலில் சங்கு அமர்ந்திருக்கிறான்.
“டீச்சர், நீங்க ஏன் சிரிக்கிறீங்க?”
“இல்லை மாதவா... கடந்த முறை சங்கு வந்த கதையை நினைச்சுப் பார்த்தேன்.”
“இந்த முறையும் அவன் நம்மை ஏமாற்றுவானோ?”
“ஒரு நிம்மதியிருக்கு... இப்போ மழையில்லையே!”
பிரகாசமான நாள். நிர்மலமான வானம். மலர்களை தூக்கத்திலிருந்து தட்டியெழுப்புவதற்காக மட்டுமே வீசிக் கொண்டிருந்த காற்று.
“டீச்சர், உங்ககிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி கேட்கணும் கேட்கணும்னு நினைச்சிட்டிருந்தேன்.”
“என்ன விஷயம் மாதவா?”
“டீச்சர், நீங்க எதுவும் நினைக்கமாட்டீங்களே?”
“நீ என்னிடம் எதைப்பற்றி வேணும்னாலும் கேட்கலாம் மாதவா.”
தன் தோளிலிருந்து நழுவி விழுந்த வெள்ளைநிற வாயில் புடவையை எடுத்த சரியாகப் போட்டாள் டீச்சர். மாதவன் விண்ட் ஸ்க்ரீனில் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் என்ன கேட்கப் போகிறான் என்று அவள் ஆச்சரிப்பட்டாள்.
“உங்க வீட்டிலிருந்த அந்த வேலைக்காரி கூட இல்லையா?”
“சாருவா?”
“அவ இப்போ எங்கே?”
டீச்சரின் கண்களிலிருந்த சந்தோஷம் உடனடியாக மறைந்துவிட்டது. அவளுடைய முகத்தில் இளம் வாழையிலையின் வெளிறிப்போன நிலை!
“அவ அவளுடைய வீட்டுக்குப் போயிட்டா.”
“அவ போனதுக்கு காரணமென்ன டீச்சர்? ஊர்ல இருக்கிறவங்க ஒவ்வொரு விதமா பேசிட்டிருக்காங்க.”
டீச்சர் கவலையுடன் தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தாள். அவளுடைய மனதில் சாரு ஒரு ஆச்சரியத்திற்குரியவளாக ஆகிவிட்டிருந்தாள். பன்னிரண்டு வயதில் அவளுடன் சேர்ந்து வசிக்க ஆரம்பித்தாள். ஒரு வேலைக்காரியாக அவளை அவள் நினைத்ததில்லை. தன்னுடைய சொந்த மகளைப் போலவே நடத்தினாள்.
சொந்த மகளைப்போல-
“ஊர்க்காரர்கள் கூறுவது உண்மைதான் மாதவா.”
மாதவன் திகைத்துப் போய்விட்டான். டீச்சர் இப்படி வெளிப்படையாக மனம்திறந்து கூறுவாளென்று அவன் நினைக்கவே இல்லை.
“உங்களுக்கு யார்மேல் சந்தேகம் டீச்சர்?”
எவ்வளவு கேட்டும் அவள் கூறவேயில்லை. பாவம்... பெண்...
டீச்சர் பெருமூச்சுவிட்டாள். அவளுடைய சந்தோஷமும் உற்சாகமும் ஆறிக் குளிர்ந்தன. மனதில் ஒரே வேதனை. அவள் வெறுமனே வெளியே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
‘எது எப்படியோ... சங்கு இங்க இல்லாமலிருந்தது நல்லதாப் போச்சு...?’
மாதவன் தனக்குள் தேற்றிக் கொண்டான்.
“சங்கு அப்படி செய்வான்னு நினைக்கிறியா மாதவா?”
“இல்லை, டீச்சர். இல்லை... ஆனா ஊர்க்காரங்க வாயை நம்மால அடைக்க முடியுமா?”
வாடகைக் கார் ஸ்டேஷனுக்கு முன்னால் நின்றது.
“நான் ஒரு அரை தேநீர் குடிச்சிட்டு வர்றேன். டீச்சர், வேணாம்ல?”
“வேணாம் மாதவா.”
மாதவன் இரு கைகளாலும் வேட்டியை உயர்த்திப் பிடித்தான். பக்கத்தில் தெரிந்த தேநீர்க்கடைக்குள் நுழைந்தான். இரு காதுகளிலும் பீடி. கஞ்சா நிறைக்கப்பட்ட பீடி. ‘அவற்றை இப்படி வெளிப்படையாகக் காட்டிக் கொண்டு நடக்கலாமா?’
டீச்சர் ப்ளாட்ஃபாரத்திலிருந்த புத்தகக் கடையிலிருந்து கோபி கூப்பிட்டு சொன்னான். போயி காட்டிய புத்தகங்களை டீச்சர் பார்த்தாள். வயலட் லெட்யுக், நபாக்கோவ், டெஸ்மண்ட் மோரீஸ்... கோபி விஷயங்களை தெரிந்தவன். வேறு எந்தவொரு புகை வண்டி நிலையத்திலும் பார்க்க முடியாத புத்தகங்கள் அவனுடைய கடையில் இருக்கும்.
“இதோ ‘பாஸ்டர்ட்’ எழுதிய ஆள் டீச்சர், நீங்க வாசிச்சிருப்பீங்க.”
வயலட் லெட்யுக்கின் புத்தகத்தைத் தொட்டுக் காட்டினான் கோபி.