புதிய புதிய முகங்கள் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6038
“அம்மா, நீங்க என்ன சொல்றீங்க?”
மறுநாள் சங்கு கேட்டான். ஒரு லுங்கியை மட்டும் அணிந்து கொண்டு, வாயில் டூத் பிரஷ்ஷை வைத்துக் கொண்டு, வாசலில் அவன் நடந்து கொண்டிருந்தான்.
“டேய், நீ சுய உணர்வோடதான் பேசுறீயா? ‘பங்க்’க்கு அடிமையாறது கட்டுப்பாடுகள்லயிருந்தும் சடங்குகள்லயிருந்தும் விடுதலை பெறச் செய்யும்னு நீ சமீபத்தில் சொன்னாயில்லையா? டேய், அந்த விஷயம் இப்போதே உனக்கு நடந்துட்டதா?”
“இல்லம்மா... எனக்கு சுய உணர்வு இருக்கு. அம்மா நீங்க என்ன தீர்மானிச்சீங்க?”
சங்கு வாசலில் நடந்துகொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, தன் தாயின் முகத்தையே பார்த்தான்.
சங்குவின் தாய் கல்லூரியிலிருந்து மேலும் ஒருமுறை விடுமுறை எடுத்தாள்- சங்குவையும் சாருவையும் அனுப்பி வைப்பதற்காக. ஸ்டேஷனில் கஃபூரும் சங்குவின் வேறு சில நண்பர்களும் வந்திருந்தார்கள். புத்தகக் கடையில் இறந்த உடலைப்போல நின்றிருந்தான் கோபி.
“அம்மாவுக்கு ஏற்ற மகன். மகனுக்கு ஏற்ற அம்மா.” ப்ளாட்ஃபாரத்தில் நின்று கொண்டிருந்த ஆட்கள் கூறினார்கள்.
“படிப்பும் விபரமும் உள்ளவர்கள். இல்லைன்னா, பைத்தியக்காரத்தனம்னுதான் சொல்லணும்.”
“டேய், இந்தக் காலத்தில் படிப்பும் விவரமும் இருப்பவங்களுக்குதான் பைத்தியமே பிடிச்சிருக்கு.”
சங்குவையும் சாருவையும் ஏற்றிக் கொண்டு வண்டி நகர்ந்தவுடன், சங்குவின் தாய் வெளியே வந்தாள். மாதவன் காரின் கதவைத் திறந்துவிட்டான். அவள் உள்ளே ஏறி அமர்ந்தாள்.
“உனக்கு விருப்பமான இடத்துக்கு மாதவா...”
நிறம் மங்கலாகிக் காணப்பட்ட உதடுகளிலும், பார்வை சக்தி குறைந்து கொண்டு வரும் கண்களிலும் ஒரு மலர்ச்சியுடன், இருக்கையில் கண்களை மூடிக் கொண்டு சாய்ந்து உட்கார்ந்தாள்.