பயணத்தின் ஆரம்பம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6056
பயணத்தின் ஆரம்பம்
டி.பத்மநாபன்
தமிழில் : சுரா
அவன் எந்த ஸ்டேஷனில் வண்டியில் ஏறியிருப்பானென்று நான் ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்த்தேன். நிச்சயம் அது காலை பரபரப்பு ஆரம்பமாவதற்கு முன்பாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் அவனுக்கு உட்கார இடம் கிடைத்திருக்கும் வாய்ப்பே இல்லையே! இடமென்று கூறும்போது அவனுக்கு ஒரு ஆளின் இடமல்ல- இரண்டு ஆட்களுக்கான இடம் தேவைப்படும். அதற்கேற்ற உயரமும் அவனுக்கிருந்தது. நின்றால், கிட்டத்தட்ட மேற்கூரையில் தட்டக்கூடிய அளவுக்கு இருக்கும்...
எனக்கு எதிரே இருந்த இருக்கையில்தான் அவன் அமர்ந்திருந்தான். இருக்கைக்கு அடியில் அவனுடைய ஃப்ளெக்ஸிபிள் சூட்கேஸ் இருந்தது. சூட்கேஸ் என்று கூறினால்- நான் அப்படிப்பட்ட ஒன்றை அதற்கு முன்பு எந்த சமயத்திலும் பார்த்ததே இல்லை. அது ஒரு சவப்பெட்டியை எனக்குள் ஞாபகப்படுத்தியது. பர்த்தின் ஒரு நுனியிலிருந்து இன்னொரு நுனி வரை இருக்கக் கூடிய...
என்னுடைய கண்கள் மாறிமாறி அந்த சூட்கேஸிலும் அவனுடைய முகத்திலும் பதிந்து கொண்டிருந்தன.
பொதுவாகவே அந்த அளவுக்குப் பெரிதாக இருக்கும் ஒரு மனிதனின் முகம் அப்படியொன்றும் அழகாக இருக்காது. ஆனால், எனக்கு முன்னால் அமர்ந்திருந்த பயணியின் முகம் அழகானதென்று கூற முடியாவிட்டாலும், அவலட்சணமாக இல்லை என்பது மட்டும் உண்மை. குறிப்பாக அவனுடைய அடர்த்தியான தலைமுடி அதற்கு நல்ல மினுமினுப்பும் கருப்பு நிறமும் இருந்தன. முடிச் சுருள்கள் நெற்றியில் விழும்போது, தங்கத்தாலான- கனமான ப்ரேஸ்லெட் அணிந்திருந்த கையால் அவன் இடையில் அவ்வப்போது அதை மேல்நோக்கி ஒதுக்கிவிட்டுக் கொண்டிருந்தான்.
சாம்பல் நிறத்திலிருந்த ஜீன்ஸும், அடர்த்தியான மஞ்சள் நிற டி-ஷர்ட்டும் அணிந்திருந்தான். இரண்டும் மிகவும் தரம் வாய்ந்தவையாக இருந்தன. அவனுடைய கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலி தொங்கிக் கொண்டிருந்தது. சட்டையின் இடைவெளி வழியாக அதைப் பார்க்க முடிந்தது. அவ்வளவு பெரிய ஒரு சங்கிலியை ஒரு ஆணின் கழுத்தில் அதற்கு முன்பு எந்த சமயத்திலும் நான் பார்த்ததே இல்லை. ஒரு தடிமனான காளையின் கழுத்தில் கட்டப்பட்ட சங்கிலியைப் போல அது இருந்தது.
அவன் அணிந்திருந்த கடிகாரமும் அவனுக்கு மிகப் பொருத்தமாக இருந்தது. தங்கக் கட்டியால் செய்யப்பட்ட ஒரு பெரிய கைக்கடிகாரம். அது அவனுடைய இடது கையில் கிடந்து பளபளத்துக் கொண்டிருந்தது.
அந்த பெரிய கைக்கடிகாரத்தின் ‘ப்ராண்ட்’ என்னவென்பதைத் தெரிந்து கொள்ள நான் விரும்பினேன். இடையில் அவ்வப்போது அதைக் கூர்மையாக கவனித்தேன் என்றாலும், என்னால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒமேகா, ராடோ, ரோலக்ஸ் போன்ற எனக்குத் தெரிந்த ப்ராண்ட்கள் எதுவுமில்லை. இறுதியில் ஏதோ மிகவும் விலைமதிப்புள்ள கடிகாரமாக இருக்கலாமென்று நினைத்தேன்.
கடிகாரத்தை நான் கூர்ந்து கவனிக்கிறேன் என்ற விஷயம் அவனுக்குத் தெரிந்துவிட்டதென்று நினைக்கிறேன். திடீரென்று அவனுடைய முக வெளிப்பாடுகள் மாற, மிகக் கூர்மையாக அவன் என்னைப் பார்த்தான். ஏனென்று தெரியவில்லை- காரணமே இல்லாமல் எனக்கு பயம் உண்டானது. திடீரென்று அவனிடமிருந்து நான்முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.
வண்டியில் இப்போது நல்ல கூட்டம் இருந்தது. நடந்து செல்லும் பாதையில் மட்டுமல்ல, இருக்கைகளுக்கு மத்தியிலும் ஆட்கள் நெருக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். அந்த கூட்டத்திற்கு மத்தியில் பிச்சைக்காரர்களும் வியாபாரிகளும் வழக்கம்போல சத்தத்தை உண்டாக்கியவாறு நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
வண்டியில் சிறிதுகூட காற்றில்லை. மேலே காற்றாடிகள் பலவும் செயல்படாமல் இருந்தன. யார் யாரோ பென்சிலையும் வேறுசில பொருட்களையும் வைத்து அவற்றின் இதழ்களை அசைப்பதற்கு முயற்சி செய்தும், அவை எதுவுமே வெற்றி பெறவில்லை. காற்றாடிகள் ஒரு பிடிவாதத்துடன் அசைவே இல்லாமலிருந்தன.
எனக்கு மிகவும் களைப்பாக இருந்தது. ஒரு கட்டத்தில் நிலை குலைந்து விழுந்துவிடுவேனோ என்ற பயம் உண்டானது. என்னால் எந்த சமயத்திலும் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியாது. அதனால்தான் கோடைகாலத்தில் முடிந்தவரை பகல் நேர வண்டிகளில் செல்லும் பயணத்தைத் தவிர்த்துவிடுவேன்.
ஆனால், இங்கு இப்போது வெப்பம் மட்டுமல்ல. தூசி, சத்தம், வியர்வை, சிறுநீர் ஆகியவற்றின் கெட்ட வாடை வேறு...
(கழிப்பறையின் கதவை யாரோ வழக்கம்போல திறந்து விட்டிடிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.)
என்னைச் சுற்றிலும் ஆட்கள் இருந்தார்கள். பக்கங்களில் ஆட்கள், முன்னாலிருந்த இருக்கையிலும் இருக்கைகளும் நடுவிலும் ஆட்கள்... இதைப் போலவே இருக்கைக்குப் பின்னால்... பிறகு நடைபாதையில்... எங்கும், எங்கும்...
இந்த ஆட்களின் கூட்டத்திற்கு மத்தியிலும் ஏதோவொரு தூண்டுதலில் மாட்டிக் கொண்டதைப் போல, களைத்துப்போன என் கண்கள் தங்கத்தாலான பெரிய சங்கிலியையும், கைக் கடிகாரமும் அணிந்திருந்த பயணியின் முகத்தில் பதிந்துகொண்டிருக்க, அந்தச் சமயத்தில் அவன் என்னையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதைப் பார்த்து, இனம்புரியாத பயத்துடன் என் கண்களை பின்னோக்கி இழுத்துக் கொண்டேன்.
இதற்கு முன்பு அறிமுகமே இல்லாத அந்த ஆள் என்னையே எதற்காக கூர்ந்து பார்க்க வேண்டும் என்பதை நினைத்தபோது, என்னுடைய களைப்பும் பதைபதைப்பும் அதிகமாயின.
அப்போது திடீரென்று இன்னொரு அனுபவம் ஞாபகத்தில் வந்தது. சில வருடங்களுக்கு முன்பு நடந்தது அது. நான் கயாவிலிருந்து காசிக்குச் சென்றபோது, அன்று வண்டியில் இருந்தவர்கள் அனைவரும் ஒரு வகையான முரட்டுத்தனம் கொண்டவர்களாக இருந்தார்கள். எல்லாரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள். நான் மட்டுமே அவர்களின் கூட்டத்தைச் சேராதவனாக இருந்தேன். முதலில் நான் அதைப் பற்றி சிறிதுகூட நினைத்துப் பார்க்கவில்லை.
மாலை நேரம் ஆனபோது, எல்லாரும் பையிலிருந்தும் தலைப்பாகைக்கு மத்தியிலிருந்தும் எதையோ எடுத்து உள்ளங்களையில் வைத்து அழுத்திக் கசக்க ஆரம்பித்தார்கள். கசக்கும் செயல் முடிந்ததும், அவர்கள் அதை வாய்க்குள் போட்டார்கள். பிறகு போராட்டம் வாய்க்குள் என்றானது அந்த சமயத்தில் யாரும் எதுவும் பேசவே இல்லை. மோசமான விளைவுகள் உள்ளதும், பயங்கரத்தன்மை கொண்டதுமான ஒரு சம்பவத்திற்கு முன்னோடிதான் அதுவென்று உடனடியாக எனக்குத் தோன்றியது. அப்போது எனக்கு மிகுந்த பயம் உண்டானது. அவர்களைச் சேர்ந்திராதவன் என்ற வகையில் வண்டியிலிருந்தவன் நான் மட்டும்தானே. எனினும் அவர்களின் முகங்களிலிருந்து கண்களை எடுக்காமல் ஒரு சிலையைப்போல நான் அமர்ந்திருந்தேன்.
திடீரென்று அவர்களுக்கு மத்தியிலிருந்து ஒருவன் உரத்த குரலில் என்னிடம் கேட்டான்-
“வேணுமா?”
‘வேண்டும்’ என்றோ ‘வேண்டாம்’ என்றோ எதுவும் கூறமுடியாமல் நான் விழித்துக் கொண்டிருந்தேன்.
உண்மையிலேயே அந்தக் கேள்வி என்னை முழுமையாக அதிர்ச்சியடையச் செய்தது.
எனக்கு அவர்களின் மொழியைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவர்கள் என்னிடம் தங்களுக்கிடையேயும் பலவற்றையும் உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தார்கள். மரணத்தின் அருகில் உறைந்து போய் நின்று கொண்டிருப்பதைப் போல நான் இருந்தேன். காசியை அடையும்வரை நான் வாயைத் திறக்கவேயில்லை.