பயணத்தின் ஆரம்பம் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6059
என்னை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக யாரும் வந்திருக்கவில்லை.
ப்ளாட்ஃபாரத்தின் முடிவுவரை என்னுடைய களைத்துப்போன கண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நகர்ந்து போய்க் கொண்டிருந்தன. எங்கேயாவது...
இல்லை... யாருமில்லை...
ஆனால், நான் எனக்குள் கூறிக் கொண்டேன்.
'வருவார்கள்... வராமலிருக்க மாட்டார்கள். கட்டாயம் வருவார்கள். ஒருவேளை, இப்போது... இந்த நிமிடத்தில்... ஏதாவது ட்ராஃபிக் ஜாமில் சிக்கி, ஸ்டேஷனுக்கு...'
மனைவியின் கவலை நிறைந்த முகம் அப்போது மனதில் தோன்றியது.
மனைவி சொல்வாள்- 'நான் முதலிலேயே சொன்னேன்ல?'
யாருமில்லாத ஒரு பெஞ்ச்சில், அவர்கள் வருவதை எதிர்பார்த்துக் கொண்டு கண்களை மூடி நான் அமர்ந்திருந்தேன்.
வரட்டும்... அதுவரை...
வண்டி சாரல் மழைக்கு மத்தியில் முன்னோக்கி வேகமாகப் பாய்ந்து போய்க் கொண்டிருந்தது.
கம்பார்ட்மெண்ட்டில் சுகமான குளிர்ச்சி இருந்தது. ஆட்களும் மிகவும் குறைவாகவே இருந்தார்கள். சிறிய வாய்க்கால்களாக வழிந்து கொண்டிருந்த நீரை, கண்ணாடி சாளரத்தின் வழியாக நான் வெளியே பார்த்தேன். கலங்கிக் காணப்பட்ட குளத்து நீரில் பத்து பன்னிரண்டு வயதுள்ள சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உற்சாகத்திற்கும் சந்தோஷத்திற்கும் அளவே இல்லாமலிருந்தது. இவ்வளவு காலமும் அவர்கள் காத்திருந்தது மழைக்குத்தான் என்று தோன்றியது. அவர்களுடன் நீரில், அவர்களுடைய எருமைகளும் இருந்தன. தலையை மட்டும் வெளியே காட்டியவாறு எருமைகள் சமாதி நிலையில் இருப்பதைப்போல கிடந்தன...
அடர்த்தியான பச்சை நிறத்திலிருந்த நெற்கதிர்கள், மழையில் கீழேயிருந்து உச்சி வரை சிலிர்ப்படைந்து நின்றிருந்தன. தொடர்ந்து சிறிது சிறிதாக வயலிலிருந்த கதிர்கள் முழுதும் ஆடியசைய ஆரம்பித்தன. அழகான ஒரு நடனத்தில் இருப்பதைப் போல...
தூரத்தில் மலைகள் இருந்தன. ஒன்றுக்குப் பின்னால் இன்னொன்றாக மலைகள்... மலைகளின் சரிவுகளில் கருத்த காடுகள்...
மலைகளுக்கு மேலே நீர் நிறைந்த மேகங்கள் தங்கி நின்றிருந்தன.
வண்டி மழைக்கு நடுவில் முன்னோக்கிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது.