பட்டாளத்துக்காரன்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6496
காவல் நிலையத்தில் ஆட்கள் கூட்டமாக நின்றிருப்பதைப் பார்த்து அவன் அங்கு சென்றான். அங்கு ஒவ்வொருவரின் உயரத்தையும் எடையையும் பார்த்தார்கள். வீட்டின் பெயர்களைக் கேட்டார்கள். அதற்கு அவன் எந்த பதிலும் கூறவில்லை. அன்று நூற்றைம்பது பேரை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில் அவனும் இருந்தான்.
அன்றே அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றார்கள். உற்சாகமான பயணமாக இருந்தது அது. மூன்று நேரமும் நல்ல உணவு கிடைத்தது. பழகுவதற்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.
புகைவண்டி பல புதுப்புது இடங்களையும் தாண்டி சென்று கொண்டிருந்தது. பல பெரிய நகரங்களையும் அவன் பார்த்தான். எட்டு நாட்கள் கடந்த பிறகு அவர்களை ஒரு இடத்தில் கொண்டு போய்விட்டார்கள்.
பயிற்சிக்காலம் சிறிது சிரமம் உள்ளதாகவே இருந்தது. எனினும், மூன்று நேரமும் உணவு கிடைக்கிறது என்பது எவ்வளவு பெரிய நிம்மதியான ஒரு விஷயம்! அது மட்டுமல்ல- வாழ்க்கை படிப்படியாக விசாலமடைந்து கொண்டும் புதிய புதிய அனுபவங்கள் அதை முழுமையாக்கிக் கொண்டும் இருந்தன. ஆதரவற்ற அனாதை என்ற எண்ணம் முழுமையாகப் போய்விட்டிருந்தது. பாய் விரித்துப் படுத்தால்தான் தூக்கமே வந்தது. தலைக்கு கட்டாயம் தலையணை வேண்டும். நாக்கிற்கு ருசி என்றால் என்னவென்பது தெரிந்தது.
செய்வதற்கு என்னவோ இருக்கிறது என்ற எண்ணத்தால் வாழ்க்கை மீது ஒரு பிடிப்பும் கனமும் அவனுக்கு உண்டானது. அவனுக்கும் சில கடமைகள் இருந்தன; உரிமைகள் இருந்தன.
அந்தப் படையை இரண்டாயிரம் மைல் தூரத்தில் இருக்கும் ஒரு இடத்திற்கு மாற்றினார்கள். பிறகு இன்னொரு இடத்திற்குப் போனான். மூன்றாவதொரு இடத்திலும் சிறிது நாட்கள் இருந்தான். இப்போது அவனுக்கு இந்தி நன்றாகத் தெரியும். இந்தியாவில் இருக்கும் எல்லா பெரிய நகரங்களையும் அவன் பார்த்துவிட்டான். வாழ்வது எப்படி என்பதையும் தெரிந்துகொண்டான். கையில் பணம் இருக்கிறது. அரசாங்கத்திடமிருந்து வரவேண்டியதும் இருக்கிறது.
ஒருநாள் உயர் அதிகாரிகள் அறிவித்தார்கள்- விருப்பப்படுபவர்கள் ஒரு மாத விடுமுறையில் தங்களின் வீடுகளுக்குச் சென்று பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டு வரலாமென்று. அப்படிப் போகப் பிரியப்படுபவர்கள் உடனடியாக அதைத் தெரிவிக்க வேண்டுமென்று அவர்கள் சொன்னார்கள். அந்தப் படை இருந்த இடத்தில் அன்று உண்டான உற்சாகத்தை வார்த்தையால் விவரித்துச் சொல்ல முடியாது. அவனும் அந்த உற்சாகத்தில் பங்கு கொண்டான். ஆனால், அவனுடைய உற்சாகத்தில் ஏதோ ஒரு குறை இருக்கவே செய்தது. அவனுடைய உற்சாகம் வெறுமனே ஒரு மேலோட்டமானது என்பதே உண்மை.
அவனும் ஒரு மனுவைப் பூர்த்தி செய்து அனுப்பி வைத்தான்.
அன்று இரவு உணவு சாப்பிட்டு முடித்தவுடன் நான்கைந்து பேர்களாக கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு மைசூர்க்காரன் திருநெல்வேலிக்காரனைப் பார்த்துக் கேட்டான்: “நாம ஒண்ணா போகலாமே!”
“ஆனா, நான் நாளைக்கு சாயங்காலம்தான் போகணும்.”
“நானும் அப்படித்தான் நினைச்சிருக்கேன். பரவாயில்ல... என் மகளைப் பார்த்து எவ்வளவு நாட்களாச்சு!”
அந்த மைசூர்க்காரன் சிறிது நேரம் எதையோ நினைத்தவாறு உட்கார்ந்திருந்தான். மகளைக் கண் முன்னால் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல அவனுடைய முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது.
திருநெல்வேலிக்காரன் சொன்னான்: “என்னோட வயசான அம்மா... அவங்களுக்குத் தெரியாமத்தான் நான் இங்கே வந்தேன். நான் அவங்களுக்கு ஒரே ஒரு பிள்ளை...”
அவனுக்கும் நினைத்துப் பார்க்க எவ்வளவோ இருந்தன. தனக்குத்தானே அவன் சொல்லிக் கொண்டான்.
‘பாவம்! அந்தச் சின்ன கட்டில்ல மகன் வருவான்னு எதிர்பார்த்து அம்மா தனியா படுத்திருப்பாங்க!’
பாலக்காட்டைச் சேர்ந்த ஒருவன் அப்போது ராமனிடம் கேட்டான்: “நீங்க எப்போ போறீங்க? நாம ஒண்ணா சேர்ந்து போகலாமே?”
ராமன் நாயர் இயந்திரத்தனமாக பதில் சொன்னான்: “போகலாமே!”
சென்னையைச் சேர்ந்த மற்றொருவன் எல்லாரிடமும் ஒரு பதிலை எதிர்பார்த்து மெதுவான குரலில் கேட்டான்:
“முப்பது நாட்களுக்கு மேலாகத் தங்கியிருக்கறதுக்கு ஏதாவது வழி இருக்கா?”
அதற்கு பாலக்காட்டுக்காரன் பதில் சொன்னான்: "உடம்புக்கு சரியில்லைன்னு சொல்லி தந்தி அடிக்க வேண்டியதுதான். அப்படிச் செய்ய நானும் திட்டம் போட்டிருக்கேன். வீட்டுக்குப் போயிட்டா ஆயிரம் வேலைகள் இருக்கு செய்யறதுக்கு..."
மற்றொரு ஆள் அப்போது சொன்னான் : “அதெல்லாம் நடக்கும்ன்ற நம்பிக்கை எனக்கு இல்ல. இப்போ எதுக்கு நமக்கு இந்த விடுமுறை தர்றாங்க தெரியுமா? வீட்டைப் பார்த்துட்டு திரும்பி வரணும். இதுக்கு மேலும் நமக்கு அதிர்ஷ்டம்னு ஒண்ணு இருந்தாத்தான் நம்ம தாயையும் பிள்ளைகளையும் நாம பார்க்க முடியும். நம்மளைப் போருக்கு அனுப்பப் போறாங்க.”
அதற்கு யாரும் எந்த பதிலும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். அந்தச் சூழ்நிலையே திடீரென்று ஒளி குறைந்ததாக ஆனது. ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு மைசூர்க்காரன் சொன்னான்: “என் மகளுக்கு ஆயிரம் ரூபா கிடைக்கும். அதுபோதும்.”
திருநெல்வேலிக்காரன் தொடர்ந்தான்: “ஆயிரம் ரூபா கிடைக்கிறதால என் தாயைக் கடைசி காலத்துல பாத்துக்கறதுக்கு யாராவது கிடைப்பாங்க.”
நீண்ட பெருமூச்சுகள் காரணமாக இறுக்கமாகிப் போன அந்த இரவில் யாருக்கும் தூக்கம் வரவில்லை. அந்த முப்பது நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டிய வேலைகளையெல்லாம் அவர்கள் செய்தாக வேண்டும்.
விடுமுறையின்போது தான் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஒரு திட்டம் தீட்ட ராமன் நாயரும் முயற்சித்தான். ஆனால், செய்வதற்கு எதுவுமே இல்லாததால் அவனால் எந்தச் செயலைப் பற்றியும் தெளிவாக எண்ண முடியவில்லை. முக்கிய செயல்கள் என்று எதுவுமே இல்லாமல் வெறுமனே அவன் முன்னால் முப்பது நாட்கள் விரிந்து கிடந்தன.
பக்கத்தில் படுத்திருந்த பாலக்காட்டுக்காரன் ராமன் நாயரைப் பார்த்துக் கேட்டான்: “உங்க வீட்டுல யாரெல்லாம் இருக்காங்க!”
“யாருமில்ல...”
“அப்படின்னா விடுமுறையப்போ எங்கே போவீங்க?”
அதற்கு அவன் எந்த பதிலும் கூறவில்லை.
மீண்டும் அந்த ஆள் கேட்டான்: “உங்க ஊரு திருவனந்தபுரம்தானே?”
ராமன்நாயருக்கு மீண்டும் குழப்பம். அதனால் இந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை.
“என்னை திருவனந்தபுரத்துலதான் எடுத்தாங்க.”
“அப்போ ஊரு?”
“நான் போறதா இல்ல. எனக்கு விடுமுறை எதுவும் வேண்டாம்.” -ராமன் நாயர் கோபத்துடன் கூறுவதைப்போல் இருந்தது.
பாலக்காட்டுக்காரன் கேட்டான்: “இதுக்கு எதுக்கு கோபிக்கணும்? நீங்க வீட்டுல இருந்து கோபப்பட்டு இங்கே வந்திருந்தா, அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?”
அவர்களுக்கிடையே நடந்த உரையாடல் அத்துடன் முடிவுக்கு வந்தது.